தருமபுரிமாவட்டம், நாய்க்கன் கொட்டாய் ஊராட்சியில் உள்ள நத்தம், கொண்டாம்பட்டி, அண்ணா நகர் ஆகிய கிராமங்களில் உள்ள தலித் வீடு-கள் அனைத்தும் (அரசுக்கணக்குப் படியே 268 வீடுகள்) சாதிய சக்திகளால் சூறையாடப்பட்டுள்ளன. இக்கிராமங்களில் உள்ள தலித்து-கள் பெங்களூர், திருப்பூர் போன்ற நகரங்களில் கட்டுமானம், பனியன், ஆட்டோ போன்ற தொழில்களில் பணியாற்றும் தொழிலாளர்களாவர். இவர்களது குறைந்தபட்ச வருமானத்தில் சிறுகச் சிறுகச் சேமித்து உருவாக்கிய உடைமைகள் அனைத்தும் கொள்ளையிடப்பட்டும், சேதப்படுத்தப்பட்டும், தீயிடப்பட்டும் உள்ளன. அனைத்து வீடுகளும் தீக்கிரையாகி வாழ முடியாதபடி சேதமடைந்துள்ளன. தங்களது வாழ்க்கை 50 ஆண்டுகளுக்கு பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டதாக ஒரு தலித் பெரியவர் எங்களிடம் கண்ணீர் மல்க கூறினார். இவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு பல பத்து கோடிகளைத் தாண்டும்.
இத்தகைய அட்டூழியங்களுக்குக் காரணம் என்ன? இளவரசன் என்ற தலித் இளைஞன் திவ்யா என்ற சாதி இந்துப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதை சாதிய சக்திகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஊர் சாதிப் பஞ்சாயத்தைக் கூட்டி திவ்யாவின் தந்தை நாகராஜிடம் பெண்ணை ஊர்ப் பஞ்சாயத்தில் ஆஜர் படுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால் தம்பதிகள் தாங்கள் இணைந்து வாழ விரும்புவதாக உறுதிபடக் கூறி வர மறுத்து விட்டனர். நாகராஜ் அதோடு இப்பிரச்னையை விட்டு விட்டார். ஆனால் சாதி வெறியர்கள் விட்டுவிடத் தயாராக சில்லை. நாகராஜை கடுமையாக அவதூறு செய்து துன்புறுத்தினர். பெண்ணை வளர்க்கத் தெரியாதவன் என்றும், சாதிப் பெருமையைக் கெடுத்து விட்டதாகவும் சாடினர். இத்தகைய கொடுமையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் நாகராஜ் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் நாகராஜ் மரணத்திற்கான பழியும், தலித்துகள் மீது சுமத்தப்படுகிறது. அவரது பெண் தலித் இளைஞனை திருமணம் செய்து கொண்டதாலும், தலித் மக்கள் துன்புறுத்தியதாலும் அவர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சுமத்தி அவரது சடலத்தை பிரதான சாலையில் போட்டு மறியல் செய்திருக்கின்றனர். சாதி உணர்வை வெறியாக மாற்றி 2000 பேர் வரை திரட்டப்பட்டனர். இக்கும்பலைப் பயன்படுத்தி சாதிய சக்திகள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி தலித் குடியிருப்புகளுக்குள் நுழைந்து மேலே சொன்ன கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனர். ஏராளமான பெட்ரோல் நிரம்பிய பாட்டில்களையும், கேன்களையும் தீவைப்புக்கு பயன்படுத்தியுள்ளனர்.
சாதி மறுப்புத் திருமணங்கள் தமிழகத்திலும், இந்தியாவிலும் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. உண்மையில் இவை வரவேற்கத்தக்க நல்ல முன்னேற்றமாகும். சாதியமைப்பை தகர்ப்பதில், சாதி மறுப்புத் திருமணங்-களுக்கு முக்கிய பங்கு உண்டு. எனவே தான் சாதியத் தலைவர்கள் ஆத்திர-மடைந்துள்ளனர். அந்த ஆத்திரத்தின் வெளிப்பாடே சமீப காலங்களில் நடைபெற்ற பல “கௌரவக் கொலைகளும்“ தருமபுரிச் சம்பவங்களும் ஆகும். இத்தகைய மிரட்டல்களுக்கும், தாக்குதல்களுக்கும் எதிராக ஜனநாயக சக்திகளும், முற்போக்கு சக்திகளும் கிளர்ந்து எழுவது அவசியம்.
மதுரை, திருப்பூர் மாவட்டங்களில் நேர்மையாக செயல்பட்டவர்தான் தற்போதைய தர்மபுரிமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். ஆனால் அவர் மதுரை மாவட்டப் பணிக்கு அனுப்பப்பட்டிருந்த நேரத்தில் சாதிய சக்திகள் இத்தகைய செயலை நடத்தியுள்ளனர். அவர் தருமபுரி திரும்பியதும் உண்மையான குற்றவாளிகள் பலர் கைது செய்யப்பட்டதும் தவறிழைத்த சில காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியது. ஆனால் இந்த வழக்குகளை தமிழக அரசு சிபிசி ஐடி விசாரணைக்கு மாற்றி-யுள்ளது. இந்த விசாரணை மக்களின் எதிர்-பார்ப்பை நிறைவேற்றாது தற்போதைய சூழலில் இந்த வழக்குகள் அனைத்-தையும் சிபிஐ விசாரணைக்கு உத்தர-விடுவதே பொருத்தமானதாக இருக்கும். குற்றவாளிகள் அனை--வரும் கைது செய்யப்படுவதும், இச்சம்பவத்தின் போது தலையிடாமல் இருந்த காவல்துறை அதிகாரிகள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பதும் முன்தேவையாகும்.
அனைத்திலும் முக்கியமானது பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதாகும். அவர்-களது வீடுகள், அனைத்தையும் புனரமைத்துத் தர வேண்டும். அவர்-களது இழப்புகளுக்கு முழு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். கல்விச் சான்றிதழ், ரேஷன் கார்டுகள், உடைமை-களுக்கான ஆவணங்கள் என அனைத்து ஆவணங்களும் நெருப்பில் பொசுங்கியுள்ளன. இவை முழுவதும் இவர்களுக்கு துரிதமாக திரும்ப வழங்கப் பட வேண்டும். தமிழக அரசு வழங்கவுள்ள ரூ.50 ஆயிரம் என்பது நிச்சயமாக போதுமானதல்ல. முழு நிவாரணமும் முழு நியாயமும் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு கிடைத்திட தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். இது பாதிக்கப்-பட்ட மக்கள் மட்டுமல்ல, ஜனநாயக எண்ணம் கொண்ட அனைவரது எதிர்பார்ப்புமாகும்.
(தமிழ்க்கனலிடம் கூறியதிலிருந்து)
டிசம்பர், 2012.