நான் போகின்ற பாதையெல்லாம் உன் பூ முகம் கூட வரும்

திருவனந்தபுரம் – தென்காசி
திருவனந்தபுரம் தென்காசி சாலை
திருவனந்தபுரம் தென்காசி சாலை
Published on

பிற்காலத்தில் அடிக்கடிச் செல்ல, பார்க்கப் போகிற இடங்களுக்கு ஒரு முன்னோட்டமாக சிறு வயதிலேயே சென்று வந்தோமா என்று சில சமயம் தோன்றுவதுண்டு. அந்த நினைவுகள் அவ்வளவு பசுமையாக மனதில் தங்கி விடுவதுமுண்டு. அக்காவுக்கு தலைப்பொங்கல் படி கொடுப்பதற்காக தென்காசிக்கு அப்பா அழைத்த போது வர விரும்பவில்லை நான். பொங்கல் லீவு விட்டாச்சு, தெருவில் விளையாட்டுகள் கொண்டாட்டமாக இருந்தன. பெரிய விளக்கு வெண்கலப்பானைகள் என்று சீர்களை அப்பா நிறையக் கடன் பட்டு வாங்கி வைத்திருந்தார். அக்காக்களின் கல்யாணங்களே ‘கடன்வாங்கிக் கல்யாணங்கள்’ தான். அப்பாவின் நண்பர்கள் அவரை அதற்காகக் கிண்டல் பண்ணுவார்கள்,”அண்ணாச்சி உங்களை வச்சுத்தான் ரெட்டியார் ‘கடன் வாங்கிக் கல்யாணம்’ன்னு படம் எடுத்திருக்காரு போலிருக்கு,” என்று. அப்பாவுக்கு அந்தக் காலத்திய சினிமாக்காரர்களை நன்றாகவே தெரியும். சீர்கள் போக அக்கா ஒரு குடை வாங்கி வரும்படி எழுதியிருந்தாள்.

     திருநெல்வேலி வடக்கு ரதவீதியில் அப்போது ஒரு தொப்பிக் கடை உண்டு. ஜவுளி வியாபாரிகள் மகமைக் கட்டிடத்தில், மணிமாளிகை ‘ஆயத்த அணிகல அங்காடி’க்கு எதிரில் இருந்தது.. ஒரு இஸ்லாமிய பாய் நடத்தி வந்தார். அங்கே குல்லாக்கள் போக, போலீஸ் இன்ஸ்பெக்டர் தொப்பி,வேட்டைக்காரர் தொப்பி உட்பட விதவிதமான தொப்பிகளும் உண்டு. தொப்பி அணியும் நாகரிகம் மறைந்து கொண்டிருந்த நேரம்.  அங்கே குடையும் கிடைக்கும், இதுதான் விஷயம். குடை வாங்க அப்பாவுடன் நானும் போனேன்

     குடையின் கைப்பிடியில், சாவித்ரி, பத்மினி, வைஜயந்தி போன்ற நடிகைகள். நேரு, காந்தி போன்ற தலைவர்கள் படங்கள் பதிந்து வருவது அப்போதைய ஃபேஷன். 1960ல் இதிலெல்லாம் திராவிட இயக்கம் பரவியிருக்கவில்லை போலும். நான் காந்தி படம் போட்ட குடை தேர்வு செய்தேன். எனக்கு அதை நானே வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை. அப்பாவிடம் சொன்னேன்.“நீ தென்காசிக்கு வர்ரேன்னா வச்சுக்கோ..” என்றார். சரியென்று மறுநாள் கிளம்பி விட்டேன். இப்போது யோசித்தால் புரிகிறது, என்னைப் போல, அப்பாவுக்கும் உறவுக்காரர்கள் வீடென்றால் இருப்புக் கொள்ளாது, கால் தரிக்காது. உடனே கிளம்பி விடுவார். ஆனால் அன்று ஏதோ தங்கி விட்டு மாலையில் போக வேண்டிய சூழல். அதனால் காலைச் சாப்பாடு முடிந்து என்னையும் அழைத்துக் கொண்டு அப்படியே வெளியே கிளம்பினார். நான், விடாமல் குடையைக் கையிலிடுக்கிக் கொண்டே கூட நடந்தேன். தென்காசி ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் அலுவலகத்தில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். “நீ டன்னல்...அதாம்வே குகை பாத்திருக்கியா” என்றார் என்னிடம் அந்த நண்பர். இல்லையென்றதும், “அண்ணாச்சி அப்படியே ஆரியங்காவு வரை போய்ட்டு வாங்களேன் ட்ரெய்ன்ல....ஒரு டனல் காட்டலாம் மைனருக்கு” என்றார். திரும்பும் ட்ரெயினை உத்தேசித்து அவரே அங்கே ‘சந்திரவிலாஸ்’ ஸ்டாலில் ஒரு தயிர் சாதப் பொட்டலம் வாங்கித் தந்தார்.

     கரி எஞ்சினில் ரயில் போகும் திசையில் உட்கார விட மாட்டார் அப்பா, கண்ணில் கரித் துகள் விழுந்து விடுமென்று. ஆனால் அன்று உட்கார்ந்து கொள், புகை அதிகமாகும்போது கண்ணை மூடிக் கொள் என்றார். புகை அதிகமாகும் போது ஒரு வித வாசனையே சொல்லி விடும். அது சிறிய தூரம்தான்.ஆனாலும் பசிய பாறைகளுக்கிடையே ரயில் ஊர்வது மகிழ்ச்சியாய் இருந்தது. இதையெல்லாம் யாராவது நண்பர்களிடம் உண்மையும் கற்பனையுமாய் சொல்ல வேண்டும் என்று வழக்கம் போல் தோன்றியது. ஏற்கெனவே ரயில் டிக்கெட்டை வாங்கி வைத்துக் கொண்டிருந்தேன். திடீரென்று ரயிலில் விளக்குகளைப் போட்டார்கள்,   தொடர்ந்து விசில் சத்தமாக ஒலித்தது. நான் சிரித்துக் கொண்டே காதைப் பொத்தினேன். “யானை அல்லது ஏதாவது மிருகங்கள்,உள்ளே இருந்தால் விலகிக் கொள்ளும்,அப்படியும் விலகவில்லை என்றால் வெண்ணீர், அதான், ஸ்டீமைத் திறந்து விடுவாங்க,”  என்றார் பக்கத்திலிருந்த ஒருவர்..  அப்பா,“டேய் ட(ன்)னல் வரப் போகுதுடா என்றார். திடீரென்று இருள் சூழ்ந்தது. ரயிலுக்குள் மஞ்சள் விளக்குகள் அதிகப் பளீரென்று எரிந்தது. அப்போதுதான் வெளிச்சத்திலேயே விளக்குகள் போட்டதன் காரணம் புரிந்தது. அது சின்ன குகை தான். இரண்டு அல்லது மூன்று நிமிடத்தில் கடந்து விட்டது. குகை முடிந்ததும் ஸ்டேஷன் வந்துவிட்டது. இறங்கி ஊருக்குள் நடந்தோம். ஊர் என்ன, நாலைந்து குடிசைகள் ஒரு டீக்கடை. கொஞ்சம் தள்ளி அய்யப்பன் கோயில். அது அய்யப்பன் கோயில் என்று அப்போது தெரியாது. டீக்கடையினுள் போய் உட்கார்ந்து தயிர் சாதத்தைச் சாப்பிடலாமா என்று கேட்டு வந்தேன். அங்கே இருந்த ஒரு பெண்ணும் என் வயதொத்த சிறுவனும் சம்மதித்தார்கள். பெண் முண்டும் ஜம்பரும், கொஞ்சம் வெட்கமும் அணிந்திருந்தாள். அதே வெட்கத்துடன்

சாப்பிட்டு முடித்ததும் ஒரு உண்டியலைச் சிறுவனிடம் கொடுத்து கோயில் காரியமோ என்னவோ சொல்லிக் காசு கேட்டாள். அப்பா எட்டணா (ஐம்பது காசு) போட்டார். அதற்கே கண்கள் அப்படி சந்தோஷமாய் விரிந்தன. பத்து வயதில் பார்த்த அந்த சந்தோஷ வெட்கத்தை அதே புரிதலுடன் இப்போதும் உணர முடிகிறது. இப்போ பஸ் வரும் அதில் போகலாம். ரயிலுக்கு நேரம் நிறைய இருக்கிறது என்று சொன்னாள்.

கோயிலுக்கு எதிரே பஸ்ஸுக்கு காத்திருந்தோம். அன்று கோயில் திறந்திருக்கவில்லை அதனால் போகவுமில்லை. கேரளா அரசு பஸ் வந்தது. ஏறியதும் அப்படியொரு வேகமும் லாவகமுமாய்ப் போனது. எனக்கு ஆச்சரியம். ஆய் ஊய் என்று அப்பாவிடம் கத்திக் கொண்டு வந்தேன்.  நம்ம ஊரு டி.வி.எஸ் பஸ் 15 மைல் வேகத்தில போனாலே அதிசயம். அந்த டிக்கெட்டையும் வாங்கி பத்திரப் படுத்திக் கொண்டேன். ஆனால் 54 வருஷத்துக்கு முன்னால் பார்த்த அதே சிகப்பும் மஞ்சளுமான கலர், அதே பச்சை  சீட்,  அதே சிடு சிடு கண்டக்டர்கள்.....மாறவே இல்லை. அதற்குப் பிறகு அந்த வழியே திருவனந்தபுரத்திலிருந்து வந்தது, 13 வருடங்கள் கழித்து. நாகர் கோயில் சென்று சுந்தர ராம சாமியைச் சந்தித்து விட்டு, கசடதபற பதிப்பாசிரியரான மஹாகணபதி என்கிற ‘பதி’ யுடன்,  திருவனந்தபுரம் சென்றேன்.

சுந்தர ராமசாமியுடனான முதல் சந்திப்பு அதுதான்,  நாகர் கோவிலில் அவரைப் பார்த்துவிட்டு, மார்த்தாண்டம் தக்கலை வழியாக திருவனந்தபுரம் போனோம். அன்று கேரளாவில் ஏதோ திடீர் ஹர்த்தால். எனக்குப் பயம் எங்கே திருவனந்தபுரம் வாய்ப்பு நழுவி விடுமோ என்று. “இங்கே இடவப்பாதி மழை பெய்யாமலிருந்தாலும் இருக்கும் ஹர்த்தாலும், ஸ்ட்ரைக்கும்  நடக்காமலிருக்காது.” என்று மஹாகணபதியின் நண்பர் காரோட்டிக் கொண்டே சொன்னார். அவரது காரில்தான் போனோம். கேரளா எல்லைக்குள் சென்றதும் ஒரு டுட்டோரியல் கல்லூரி மாணவர்கள் பத்துப் பேர் போல காரைத் தட்டி, “பதுக்க போ, பதுக்க போ”என்று பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள்.. “சரி, ஏதோ இந்த மட்டுக்கும் காரையாவது விடறாங்களே”என்று நினைத்துக் கொண்டேன். நெய்யாற்றின் கரையில் கார் ஊர்ந்து ஊர்ந்து போனது. வழியில் ஒரு தியேட்டரில் மலையாள எழுத்துகளுடன் ‘காரைக்கால் அம்மையார்’ பட போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். நான் பார்த்துச் சொன்னேன்,“இது காரைக்கால் அம்மையார்’ போஸ்டர்தானே,” என்று. “இங்க இந்தப் பக்கம் பாரும் சோம்ஸ், எத்தனை அம்மையார்கள் நிக்காங்கன்னு..., எங்க வந்து எதைப் பாக்கறீர்..”என்று சிரித்தார் மஹா கணபதி. பஸ்கள் ஓடாததால், ஸ்டாப்பில் ஏகக் கூட்டமாய் பெண்கள்.. சிந்து நதிக் கரைக்கு படகில் அழைத்துப் போக வேண்டிய சேர நன்னாட்டிளம் பெண்கள்.

‘அந்தப்பக்கம்’ கண்கள் நிலைக் குத்தி நின்றன. காரோட்டி நண்பர்,“நீங்க திருநெவேலிதான ஸ்தலம்ன்னு சொன்னாப்ல, நீங்க போகும்போது அந்த ரூட்ல, செங்கோட்டை வழியாப் போங்கோ...,எல்லா சீனரீஸும் பார்க்கலாம்..” என்றார். சுந்தர ராமசாமியும் சொல்லியிருந்தார், “அது ரொம்ப அழகான பயணமாயிருக்கும்”என்று. கையில் இருப்பது ஐந்தே ஐந்து ரூபாய். எவ்வளவு பஸ் கட்டணம் ஆகுமோ தெரியலையே...என்று நினைத்துக் கொண்டேன். மஹாகணபதி நான் பார்த்துக் கொள்கிறேன் வாரும் என்று சொல்லித்தான் இருந்தார். தென்காசி வரை போனால் கூட போதும். அதற்குப் பின் அங்கே அக்கா வீட்டில் வாங்கிக் கொள்ளலாம், திருநெல்வேலி போக. கொஞ்சம் என்ன ஏது என்று நச்சரிப்பாள். ஆனால் அதற்கெல்லாம் தேவையிருக்கவில்லை. பதி, பத்து ரூபாய் தந்தார், திருவனந்தபுரத்தில் இறங்கியதும். கொஞ்சம் கேட்டுக் கேட்டு வாங்கினேன். “என்ன அவ்வளவு பயப்படுறீர், அப்படில்லாம் விட்ருவனா,” என்றார்.

மறுநாள்  காலையில் எழுந்ததும் கிளம்பி விட்டேன்.இரண்டு பேரும் ஒரு டீ சாப்பிட்டிருந்தோம்.

செங்கோட்டைக்கு ஐந்து ரூபாய் கட்டணம் என்று விசாரித்ததும், பஸ் நிலையத்திலிருந்த ஓட்டலில் ஏதோ சாப்பிடலாமே என்று தோன்றியது. அங்கே ஊழியர்களுக்குள் ஒரே சண்டையாகக் கிடந்தது. அது கூட்டுறவுத் துறையோ அரசோ நடத்துகிற கேண்டீன். உள்ளங்கை அளவு ரெண்டு தோசையை வைத்துவிட்டு, கொஞ்சம் காரமும் தண்ணீருமாக எதையோ (பிற்காலத்தில் அதன் பெயர் ’சம்மந்தி’ என்று தெரிய வந்தது) அதன் மேல் விட்டு விட்டு, சப்ளையர் மறுபடி சண்டை போடப் போய் விட்டார். வயிற்றுக்கு கண்டும் காணாமலும் அதை விழுங்கி விட்டு எழுந்து காசு கொடுக்க ‘கல்லா’ பக்கம் வரவும், சண்டையும் அங்கே நகர்ந்து வந்தது. ஏற்கெனவே காசு தர  நின்று சலித்த ஒருவர், “வரூ” என்று என்னையும் அழைத்தபடி கிளம்பினார். பஸ் அவசரம், நானும் காசு தராமலே கிளம்பினேன். இரண்டு ரூபாய் போனஸாக்கும் என்றார் அவர்.எனக்குப் பயம், எங்கே பின்னாலேயே வந்து பிடறியைப் பிடித்து விடுவார்களோ என்று பஸ், தலைநகரின் சுமாரான நெருக்கடிகளை விட்டு சீக்கிரமே சாலை மரங்களுக்கிடையே விரைய ஆரம்பித்தது. கவ்டியார் பக்கமாக வந்த நினைவு.. அது வழியாகச் சென்று தான் முந்தின நாள் நகுலனைப் பார்த்து வந்தேன். விடியற்காலச் சூரியன் அவ்வளவு சீக்கிரமாக மேற்கு மலையின் மேல்புறத்தினை எட்டுவதில்லை போலும். குளுமையாக இருந்தது. காலையில் குளித்து, விரிந்து கிடக்கும் தலை முடியும்,லேசான சந்தனக் கீற்றும்,கண்ணை உறுத்தாத வர்ணங்களில் சேலையும் அணிந்து பெண்கள் அங்கங்கே நின்று கொண்டும், நடந்து கொண்டும். என்னுடைய நண்பரும் பிரபலமான ஜவுளிக்கடை அதிபருமான ஒருவர் சொல்லுவார்., ”கேரளா மார்க்கெட்டுக்கான சேலைகளின் வர்ணங்கள் பிரத்யேகமாக உருவாக்கப் படுபவை, அவை பொதுவாக இந்தியாவில் வேறெங்கும் விற்பனையாவதில்லை” என்று. பிற்காலத்தில்  ஒரு முறை அழகான செண்பகப்பூக் கலரில்,‘பொடீ’க்கரையுடன் ஒரு சேலையை அவரது கடையில் தெரிவு செய்த போது, “இது கேரளாவிலிருந்து எங்கள் கடைக்கு வருபவர்களுக்காக கொள்முதல் செய்தவை, அண்ணாச்சிக்கு பிடித்ததில் ஆச்சரியமில்லை,” என்று விளையாட்டாகச் சொன்னார்.

நெடுமங்காடு பஸ் நிலையத்தில் நுழைந்து வெளிவந்தபோது பஸ் நிரம்பி வழிந்தது. அதுவரை வெளியே மலைச் சரிவுகளிலும் உயர உயரமான மரங்களிலும் இள வெயிலும் நிழலும் விரித்திருந்த பொன் பச்சையில் கொள்ளை போயிருந்த மனது பஸ்ஸிற்குள் நெருக்கி நிற்கும், ‘ஒரு நதியைப் பார்ப்பது போல், ஒரு பூவைப் பார்ப்பது போல் என்னையும் பார்க்கிறாய் அவ்வளவுதானே என்கிற மாதிரி’ எந்த அலட்டலுமில்லாத பெண் முகங்களில் லயித்தது. இந்த பிம்பமும் பதிவும் அதற்குப்பின் பலமுறை இதே தடத்தில் சென்ற போதும் தொடர்ந்து மாறாமலிருந்தது. ஆட்கள் இறங்கும் போதெல்லாம் அவர்கள் இறங்குமிடத்தில் காடுதான் இருந்தது. ஏதோ பள்ளங்களுக்குள் ஒன்றிரண்டு வீடுகள் தெரிந்தன. ஒரு பஸ் நிறுத்தம் அல்லது ஊர் என்பது அதிகம் போனால் பத்து குடிசைகளுடன் மட்டுமே இருந்தது. குளத்துப் புழை, தென்மலை, ஆரியங்காவு, கோட்டைவாசல் என்று தமிழ் நாடு நெருங்கி மேற்கு மலைச்சரிவு மறைய மறைய வெக்கை ஆரம்பித்தது. இரண்டு கையகலத் தோசை எப்போதோ செரித்துப் போய், கண்கள் தின்ற பச்சையத்தால் மறந்திருந்த பசி மெல்லத் தலை காட்டியது. ஆனாலும் செங் கோட்டையில், திருநெல்வேலிக்கு பஸ் ரெடியாக நின்றதால், சாப்பிடாமலே எறி விட்டேன். மதியம் மூன்று மணிவாக்கில் வீட்டிற்கு வந்து சாப்பிட்டேன். அன்றைக்குத் தெரியாது நான் ஆண்டு தோறும் 33 வருடங்கள் அந்தப் பாதை வழியாகப் போய் வரப்போகிறேன் என்று.

ஆரியங்காவு கணவாய் வழியாக வீசும் தென்மேற்குப் பருவக் காற்றுதான் குற்றாலத்துக்கு சாரலையும் சீஸனையும் கொண்டு வருகிறது.

ஆரியங்காவுக்கு முன் கேரள எல்லை ஆரம்பிக்கும் இடத்தின் பெயர் கோட்டை வாசல். அங்கே  கருப்பசாமி கோயில் ஒன்று இருக்கிறது. ஆண்டு தோறும் நாங்கள் சபரி மலைக்குப் போகிற போது அங்கே போய் ஒரு தேங்காய் விடலை போட்டு சூடன் எற்றி விட்டுப்போவோம். சூடனை ஏற்ற முடியாதபடி காற்று வீசும். ஆரியங்காவிலிருந்து தென்மலை போனதும் திருவனந்தபுரத்திற்கும் புனலூர் வழியே சபரிமலைக்கும் பாதைகள் பிரியும். ஆரியங்காவில் கேரள அரசின் போக்குவரத்துத் துறை செக்போஸ்ட் ஒன்று உண்டு. ஒரு நண்பர் விளையாட்டாகச் சொன்னார், “ யோவ் ஐயப்பன் கோயிலை விட உண்டியல் வருமானம் கொழிப்பது இந்த செக்போஸ்டிலதான்யா...,” என்று. வருடா வருடம் சபரிமலை சீஸனில் இதைக் கடக்கிற லட்சக் கணக்கான வேற்று மாநில வண்டிகள் இங்கே அளக்கும் ‘படி’ கணக்கில் அடங்காதது. இதைக் கேட்டதும் எனக்கு பத்து வயதில், டீக்கடை சேச்சிக்கு உண்டியல் போட்ட ஞாபகம் வந்தது.

சபரிமலைப் பாதையின் அழகும் தனிதான். அதுவும் லாஹா எஸ்டேட் பலாப்பள்ளி, நிலாக்கல் தாண்டியதும் மேற்கு மலை பூண்டிருக்கும் அழகு அபாரமாயிருக்கும். கேரள அரசு பஸ்களில் இந்தப் பாதையில் ஏறுவது கூடுதல் த்ரில்லும் மகிழ்ச்சியும் தரக்கூடியது. மலைக்குப் போகும் போதெல்லாம். பாதையில் அழகான குடில்கள் தள்ளித் தள்ளியே இருக்கும். ஒவ்வொரு குடிசைக் கும் கிணறு, அதற்கு மேல், இலைகள் விழுந்து அழுகாமலிருக்க வலைகள்...கொடியில் காயும் ரப்பர் ஷீட்டுகள்,ஒரு மரத்தைச் சுற்றி அடையப்பட்ட வைக்கோல், என்று அமைதியும் தனிமையும் வாவாவென்று அழைக்கும். ஆனால் தமிழ்நாட்டைப் போல பூக்களும் கிடையாது, விதவிதமான மாலைகள் கட்டுவதும் கிடையாது.. அங்கே வேறு விதமான பூக்கள். செடியெங்கும் முகம் முகமாய்ப் பூத்திருக்கும் செம்பருத்திப் பூக்கள்.

அவை குட்டிப் பெண்களாக வழிதோறும் நின்று சாமிகள் செல்லும் பஸ்கள் கடக்கும் போதெல்லாம் கை  நீட்டி “ சாமி பூ தாராமோ “  என்று கேட்கும் அழகே தனி. முதன் முறையாக நான் பார்த்த இந்தப் பூ முகங்களில் ஒன்றின் ஜாடை, யாரை வேண்டி அந்தக் கோயிலுக்கு வந்து ஏமாந்து கொண்டிருக்கிறேனோ, அந்த முகத்தை ஞாபகப்படுத்தியது.  32 வருடமும் போகிற போதெல்லாம், அந்தப் பூமுகம் நினைவில் தவறாமல் வந்தது. அப்போதெல்லாம் கண்ணதாசனின் பாடலொன்று பஸ்ஸின் சரண கோஷங்களை மீறி நினைவில் கேலியான சிரிப்புக்கிடையே கூடவே கேட்கும், “நான் போகின்ற பாதையெல்லாம் உன் பூ முகம்கூட வரும்....”

ஜூலை, 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com