நான் உயிரோடு இருக்கிறேன்! - இமையம்

நான் உயிரோடு இருக்கிறேன்! - இமையம்
Published on

கோவேறு கழுதைகள் நாவலுடன் தமிழ் இலக்கிய உலகில் இமையம் நுழைந்து இப்போது 25 ஆண்டுகள் ஆகிவிட்டன.  அதையொட்டி அவரிடம் சிலகேள்விகளை முன்வைத்தோம்.

கோவேறு கழுதைகள் நாவலை எப்போது எழுதினீர்கள்? எப்படி வெளியாயிற்று?

1985 - 86 காலக்கட்டத்தில் கோவேறு கழுதைகள் நாவலை எழுதினேன். அதை படித்து பார்க்க பேரா.எஸ்.ஆல்பர்ட்டிடம் கொடுத்தேன். அவர் ஓர் ஆண்டுவரை வைத்திருந்துவிட்டு படிக்காமலே திருப்பிதந்தார். பிறகு பேரா.க.பூர்ணச்சந்திரனிடம் படித்து பார்க்க கொடுத்தேன். அவர் ஒரு வாரத்திலேயே படித்துவிட்டு போட வேண்டிய நாவல்தான் என்றாõர். அவர் பல பதிப்பகங்களின் பெயர்களை சொல்லி கேட்டுப் பார்க்கலாம் என்று சொன்னார். நான் க்ரியாவிடம் கேட்டு பார்க்கலாம் என்று சொன்னேன். க.பூர்ணச்சந்திரன் சுந்தர ராமசாமியை சந்தித்தபோது  ‘‘எனக்கு தெரிந்த பையன் ஒருவன் நாவல் ஒன்றை எழுதிருக்கிறான். அவன் க்ரியாவில்தான் போட வேண்டும் என்று விரும்புகிறான். அதற்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா?'' என்று கேட்க, அதற்கு சுந்தர ராமசாமி நான் க்ரியா ராமகிருஷ்ணனிடம்

சொல்கிறேன். போய் பாருங்கள் என்றிருக்கிறார்.  நானும் க.பூர்ணச்சந்திரனும் சென்னை சென்று க்ரியா ராமகிருஷ்ணனை சந்தித்து நாவலின் பிரதியை தந்தோம். அப்போது அவர் ‘‘படித்து பார்க்கிறேன்'' என்று ஒரு வார்த்தை மட்டும் சொன்னார். 1994ல் நாவலை க்ரியா வெளியிட்டது.

இமையம்
இமையம்

25 ஆண்டுகள் ஆன பிறகும் கோவேறு கழுதைகள் நாவல் உங்களுடைய அடையாளமாக இருப்பது எப்படி?

நாவல் வெளிவந்ததும் அன்றைய தமிழ் இலக்கிய சூழலில், அறிவு சூழலில், அரசியல் சூழலில் பெரிய விவாதத்தையும், விமர்சனத்தையும் எதிர்கொண்டது. அதே நேரத்தில் கொண்டாடவும்பட்டது.

கோவேறு கழுதைகள் நாவல் வெளிவந்து இப்போது இருபத்தி ஐந்து ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும் நாவல் குறித்த பேச்சு, விவாதம் இன்றும் தொடர்ந்தபடிதான் இருக்கிறது. விற்பனையும் குறையவில்லை. ‘கோவேறு கழுதைகள்' நாவலுக்குப் பிறகு ‘ஆறுமுகம்'(1999), ‘செடல்'(2006), ‘எங் கதெ'(2015), ‘செல்லாத பணம்'(2018) என்று நான்கு நாவல்களையும், மண்பாரம்(2002), வீடியோ மாரியம்மன்(2008), ‘கொலைச்சேவல்'(2013), சாவுசோறு(2014), ‘நறுமணம்'(2016) என்று ஐந்து சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதிவிட்டேன். ஆனாலும் கோவேறு கழுதைகள் நாவல் வெளிவந்ததிலிருந்து இன்றுவரை எந்த மேடையில் யார் என்னை அறிமுகப்படுத்தினாலும் ‘கோவேறு கழுதைகள்' நாவலை எழுதியவர்'' என்றுதான் அறிமுகம் செய்கிறார்கள். அதே மாதிரி என்னிடம் வந்து அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறவர்களும் ‘‘நான் உங்களுடைய கோவேறு கழுதைகள் நாவலை படித்திருக்கிறேன்'' என்று சொல்லித்தான் அறிமுகம் செய்துகொள்கிறார்கள். கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக என்னுடைய எழுத்தின் அடையாளமாகவும், என்னுடைய அடையாளமாகவும் இருப்பது - கோவேறு கழுதைகள் - நாவல்தான்.

இப்போது கோவேறு கழுதைகள் நாவலை எழுதினால் எப்படி இருக்கும்?

நிச்சயம் வேறுபாடு இருக்கும். 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கிராமமும், வாழ்க்கை முறையும் இப்போது இல்லை. 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இமையம் இப்போது இல்லை. படிப்பு கூடியிருக்கிறது. எழுத்து பயிற்சியும் கூடியிருக்கிறது. மொழி சார்ந்த அறிவும் கூடியிருக்கிறது. இப்போது கோவேறு கழுதைகள் நாவலை எழுதினால் எப்படி இருக்கும் என்று எனக்கே சொல்ல தெரியவில்லை.

Indian writings in English பற்றி என்ன நினைக்கீறீர்கள்?

எது தேவையோ அதை மட்டும் எழுதுவது. வெளிநாட்டில் எது விற்பனையாகுமோ அதை மட்டுமே எழுதுவது. கற்பனையான ஒரு இந்தியாவை உருவாக்கிக்காட்டுவது. வெளிநாட்டினரின் அனுதாபத்தை பெறுவதற்காக எழுதப்படுவது.

உங்களுடைய சிறுகதைகளின், நாவல்களின் கதை கருவை, கதைக்கான மனிதர்களை எங்கிருந்து பெருகிறீர்கள்?

என் வீட்டில், தெருவில், ஊரில், பேருந்து நிலையங்களில், ரயில் பயணங்களில், நண்பர்கள் பேசும்போது, புத்தகங்கள் படிக்கும்போது.

இப்போது என்ன நாவல் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?

இப்போது நான் உயிரோடிருக்கிறேன்.

நாவலைப்பற்றி சொல்கிறீர்களா? உங்களை பற்றி சொல்கிறீர்களா?

இரண்டும்தான்.

நவம்பர், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com