நானும் ஒரு துளியாக...

நானும் ஒரு துளியாக...
Published on

என்ன முயன்றும் எண்களை, தேதியை, மாதங்களை, வருடங்களை நினைவில் இருத்திக்கொள்ள முடிந்ததில்லை என்னால்.

பருவநிலைகளே என் ஞாபக இருத்தல். மழைக்காலம், பனிக்காலம் வெய்யிலேறிய பகல்கள் என எப்போதும் நினைவிலிருக்கும். என் சொந்த நிலப்பரப்பில் அப்போது என்ன பயிர் விளைந்திருந்தது என்பதிலிருந்து என் நினைவை மீட்டெடுத்துவிட முடிகிறது.

த.செ.ஞானவேலும், கிருத்திகாவும் என் வீட்டிற்கு வந்த பருவம் ஒரு வெயில்காலம். நிலமெல்லாம் அறுவடைக்கு காத்திருந்த காலமது.

ஞானவேலுவோடு எனக்கு இருபது வருட நட்பெனினும், இப்படி மூன்று முழுநாட்கள் உட்கார்ந்து ஒரு திரைப்படைப்பாக்கம் பற்றி உரையாடினது புதுசாகவும், பெருமிதமாகவுமாயிருந்தது.

நான் ஒரு வகையில் சதா ஓடிக்கொண்டிருப்பவன். தரையில் என் கால் தங்காது என்ற அம்மாவின் சொல் எப்போதும் பொய்த்ததில்லை.

தான் ஒரு திரைப்படம் எடுக்கப் போவதாகவும், அதனுடைய முழு ஸ்கிரிப்ட் இதுவெனவும் அவர் ஸ்பைரல் பைண்ட் செய்யப்பட்ட தாள்களை நீட்டியபோது, கிருத்திகா புன்னகைத்துக் கொண்டது மட்டும் நினைவிலிருக்கிறது.

மாடியில் உட்கார்ந்து அப்படைப்பை வரிவரியாய் உள்வாங்கிக் கொண்டேன். என் வட்டார வழக்கில் அதில் திருத்தம் செய்ய பெரிதாய் ஒன்றுமில்லை. அவரே எங்கள் நிலப்பரப்பைச் சேர்ந்தவர்தான் என்பதால், கதையும் உரையாடல்களும் எங்கள் நிலத்தோடு பொருந்துவதாகவும், மழையில் முளைத்த மல்லாட்டை நெற்றுகளின் துளிரைப் போல உயிர்ப்போடுமிருந்தன.

ராஜாக்கண்ணு, செங்கேணி, சந்துரு, கல்யாணி, பாலகிருஷ்ணன் என்ற பெயர்கள் எழுத்துருவை மீறி என்னில் நிலைகொண்டன.

திரைக்காட்சிகள் கொடுத்த கலக்கத்தையும் உறைதலையும் எந்த எழுத்தும் தந்துவிடாது என்ற உண்மையை மீறி, நடந்த இக்கதையின் வலி மிகுந்த வாழ்வு என்னவாய் காட்சிப்படுத்தப்படப்போகிறது என்ற எதிர்கால எதிர்பார்ப்பு ஒவ்வொரு மணித்தியாலமும் எனக்குள் கூடிக்கொண்டேயிருந்தது.

எந்த திட்டமிடுதலுமின்றி, டீ குடிக்கையில், உணவு மேசையில், தெருவில் நடக்கையில் என கொஞ்சம் கொஞ்சமாக அக்கதை மனிதர்களின் நடமாட்டத்தை, அல்லது உயிரோடு நடக்கும் பிணங்களை நான் ஞானவேலிடமிருந்தும், அதற்கு சற்றும் குறைவில்லாத கிருத்திகாவிடமிருந்தும் என்னில் நிலைநிறுத்த முயன்றுகொண்டேயிருந்தேன்.

அப்பா, பழங்குடி உண்டு உறைவிடப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும், விடுதிக்காப்பாளராகவும் தன் வாழ்வை ஆரம்பித்தவர். அப்பள்ளியில் படித்த பெரும்பாலானோர் இருளர் என்ற சமவெளியில் வாழும் பழங்குடிப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

அவர்களோடு சிலகாலம் என் வகுப்பறை பகிர்தல்களும், அவர்கள் வாழ்வியலோடு கலக்கமுயன்ற என் பால்ய நாட்களும், எலிப்பிடித்தல், பாம்பு தேடுதல், கள்ளிப்பழம் பறித்து முள்படாமல் சாப்பிடுதல், பால் சுரக்கும் கள்ளிச்செடி உடலின் மீது காதலியின் பெயரை கருவேலம் முள் கொண்டெழுதுதல் என என் நினைவுகள் அந்நாட்களில் அலைக்கழிந்தன.

என் பால்யத்தில் என் பாலுணர்வை சீண்டிப்பார்த்த ராஜாம்பாள் என்ற இருளப்பெண்ணின் மீதிருந்த வாசத்தை என் நடுத்தர வயதில் கொஞ்சம் மீட்டெடுத்து சுவாசித்துக் கொண்டேன்.

செங்கேணியின் நியாயம் வேண்டும் நீண்ட நடையை என்னுள் அப்படியே ஸ்திரப்படுத்திக் கொண்டேன்.

நான்தான் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன் பாத்திரத்தில் நடிக்க வேண்டுமென ஞானவேல் கேட்டபோது மனம் துள்ளியது.

ஜோக்கரில் அந்த செக்யூரிட்டி கார்ட் தந்த துள்ளலுக்கு நிகரானது அது. இன்னும் வெளிவராத கௌதம் வாசுதேவமேனனின் ‘வெந்து தணிந்தது காடு' படத்தில் சேமதுரை என்ற என் பாத்திரமும் அப்படியே.

மற்றவை கடந்து போனவை அல்லது அத்திரைப்படங்களை நான் கடந்திருக்கிறேன். அவ்வளவுதான்.

ஒரு படைப்பு முயற்சி எதன் பொருட்டோ ஸ்திரப்பட போராடிக் கொண்டிருக்கையில் இவ்வாழ்வு நம்மை வேறெதன் பக்கமோ இழுத்துப் போய்விடுமே அப்படி நான் வேறெதிலோ இழுத்துச் செல்லப்பட்டதொரு மழைக்காலத்தில் செஞ்சிக் கருகில், ஒரு மலைப் பொந்திலிருந்த அந்த இருளர் குடியிருப்புக்கு நான் அழைக்கப்பட்டேன்.

எனக்கு ஏற்கெனவே அத்துப்படியான மலைக்குன்றுகளும், சிறு குட்டைகளும், வயல்வரப்புகளும், அதனூடேத் தெரியும் பத்து, பதினைந்து குடிசைகளும் கொண்ட அம்மண் மீது என் கால்கள் நின்றபோது ஞானவேலுவை சக படைப்பாளியாக இக்கண்டடைதலின்பொருட்டு பெருமிதத்தோடு பார்த்தேன். ஒரு தேர்ந்த படைப்பாளி மட்டுமே, தனக்கான இந்நிலப்பரப்பை அடையமுடியும் என்ற பெருமிதம் அது.

புஜத்தில் சிவப்புக்கயிறு தாயத்தும், காவிக்கரையேறிய பற்களும், ஏற்றி செருகப்பட்ட அழுக்கேறிய கிழிந்த லுங்கியுமாய் அவர்களோடிருந்த ஓர் இளைஞனைக்காட்டி ‘இவர் மணிகண்டன்' என அறிமுகப் படுத்திய போது நான் முதலில் நம்பவில்லை. சில நேரங்களில் புனைவு உண்மையைவிட வலுவேறியிருக்குமே அப்படி!.

வயிறுப் பெருத்து, மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க தன் இடுப்புக்கு கை கொண்டு பலம் கொடுத்து எங்களை நோக்கி வந்த ஒரு பெண்ணை ‘இவங்க லிஜோமோள்ஜோஸ் மலையாள நடிகை எனச்  சுட்டியதும் அவள் மேலேழுந்த வாசனையிலிருந்து என் ராஜாம்பாளை கண்டடைய முயன்று தோற்றேன்.

அத்தேங்கிய நீர்க்குட்டைக்கருகில் நாலு மூங்கில் கம்பு நட்டு நிலைநிறுத்தியிருந்த கூரைக்குள்ளிருந்து சில மனிதர்கள் வெளியே வந்தார்கள்.

இவ்வாழ்வு குறித்தோ, டாம்பீகம் குறித்தோ, அதன் அகங்காரம் குறித்தோ யாதொரு புகாரும் அந்த இனக்குழுவில் எவருக்குமில்லை.

மகிழ்ச்சியின் ஒவ்வொரு துளியையும் மலைத்தேன் போல தங்கள் நடு நாவில் சொட்டிக்கொண்டு அந்த வயல்களில் அவர்கள் துள்ளிக் கொண்டிருந்தார்கள்.

மழைத்துளிகளை ஏற்கும் மகிழ்ச்சியில்  வெளிச்சிக் கெண்டைகள் நீரின் மேலேறி ஒரு அடி துள்ளி விழுமே! அதற்கு சற்றும் குறைவில்லாத துள்ளல் அது. அதைத்தான் படத்தின் ஆரம்பக்காட்சிகளில் அறுத்து முடித்த வயல்களைத் தோண்டி, புகை போட்டு எலி பிடிப்பது, பாறையைச் சூடேற்றி கறி சுடுவது, கிடைத்த கறியை வீடு தவறாமல் சம பங்குப்போட்டுக் கொள்வது என பெரும் கொண்டாட்டமாய் கழிகிறது அவர்களின் நாட்கள்.

கடும் உழைப்பிலிருந்தே தங்களுக்கான திருவிழாக்களையும், கொண்டாட்டங்களையும் மிச்சப்படுத்திக்கொள்ளும் அவர்களின் வாழ்வியலை செங்கல் சூளைகளோடும், மகாபலிபுரம் கடற்கரைத் திருவிழாவுமாய் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இத்திரைப்பட உருவாக்குதலில் பெரும் உழைப்பைத் தந்த அதன் கலை இயக்குநர் கதிரும், ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிரும் என் தீவிர வாசகர்கள் என்பதை நாங்கள்

செட்டில் பதுங்கி நின்று சிகரெட் புகைக்கும் நெருக்கத்தை வைத்து யாரும் அளவிட்டுக் கொள்ளலாம்இப்படப்பிடிப்பின் நாட்கள் எனக்கு மிகப்பெரிய மன விசாலத்தைத் தந்தது ஏற்கெனவே இவர்களின் வாழ்வியலை, பெருமிதத்தை எழுத்தில் கொண்டுவந்திருந்த எனக்கு அது காட்சிகளாக கண் முன்னே விரிகிற போது இன்னும் கூடுதலான உவகையை அளித்தது. இலவு வெடித்து காற்றில் மிதக்குமே அப்படி ஒரு விசாலமது.

படபிடிப்புத் தளத்தில் நான் பாலகிருஷ்ணனாக உருமாற்றப்பட்டேன். மேக்கப்மேன் கையில் செல்ஃபோன் திரையிலிருந்த ஒருவரைப் பார்த்துக் கொண்டே எனக்கு நடு வகிடெடுத்து இரண்டு பாக்கெட் வைத்த வெள்ளைச் சட்டைப்போட்டு  சதுரபிரேம் போட்ட கண்ணாடி போட்டு அப்புகைப்படத்தோடு ஒப்பிட்டு தனக்குத்தானே அவர் திருப்தியடைந்த போது நான் ஆர்வத்தால் உந்தித்தள்ளப்பட்டேன்.

அந்தப் போட்டோவிலிருப்பது யாருண்ணே?

அதுவரை என் பக்கத்தில் பூனைக்குட்டி மாதிரி நின்றிருந்த ஒரு பையன் எனக்கு பதில் சொன்னான்.

‘வி.பி.குணசேகரன்'

 பத்தாயத்தில் அவர் பேசினபோது எடுத்த புகைப்படம், இப்படத்தில் அவர்தான் உங்க மாடல். நான் உறைதலுக்கு முந்தின நிமிடத்திலிருந்தேன். ஒரே நேரத்தில் நான் கருத்தியலில் பாலகிருஷ்ணனாகவும், உருவத்தில் வி.பி.ஜி யாகவும் மாற்றமடைந்தேன்.

 திரைப்படம் என்ற ஒரு மகத்தான கலைவடிவம் மட்டுமே இதை சாத்தியபடுத்தமுடியும் என்ற நிறைவோடு அப்பையனைப் பார்த்து, ‘நீங்க'?

‘செந்தில்ஜெகநாதன். ரைட்டர், இப்படத்தின் உதவி இயக்குநர்களில் ஒருவன்'.

சமீபத்தில் நான் வாசித்திருந்த ‘அன்பின் நிழல்' கதைக்காக செந்தில் ஜெகநாதனை என் தோளில் கிடந்த சிகப்புத்துண்டோடு அணைத்துக் கொண்டபோது அது கீழே விழுந்துவிடக்கூடாது என்பதற்காக அவனும் அதைத் தன் கைகளால் பிடித்துக் கொண்டிருப்பதை உடலால் உணரமுடிந்தது.

 என் நண்பர் கலை இயக்குநர் கதிரின் அசாத்திய உழைப்பில் இருபத்தைந்து நாட்கள், நூற்றுப்பத்து பேரின் கடும் உழைப்பில் உருவாக்கியிருந்த சென்னை ஹைகோர்ட்டுக்குள் நுழைந்த போது என் இடதுபுறம் போலீஸ் ட்ரெஸ்சில் பிரகாஷ்ராஜும் என் வலப்பக்கம் ஒரு ஜோல்னாப் பை தோளில் தொங்க பேரா. காளீஸ்வரனும் உடகாந்திருந்தார்கள். அவர்களுக்கு இத்திரைப்படத்தில் பெருமாள் சாமியெனவும், பேராசிரியர் கல்யாணி எனவும் பெயரிடப்பட்டிருந்தது.

நாளை அவர்கள் அந்தியூரிலோ, பவானியிலோ வி.பி.குணசேகரனாகவோ, அன்புராஜாகவோ, ச.பாலமுருகனாகவோ அழைக்கப்படலாம் ஒரு விதமான சிலிர்ப்பில் உட்கார்ந்து கோர்ட் நடவடிக்கைகளை கவனிக்க ஆரம்பித்தபோது ராஜாம்பாளின் மீதிருந்து வீசும் அக்கவுச்சிக் கலந்த வாசம் வீச திரும்பிப் பார்த்தபோது இடப்பக்கம் முழுக்க செங்கேணி, குள்ளன், உட்பட அந்த இனக்குழுவின் மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளோடு கோர்ட்டில் குந்தியிருந்து தங்கள் இனத்துக்கான முதல் நியாயம் கிடைத்துவிடாதா என்ற வேண்டுதலோடு உட்கார்ந்திருந்தார்கள்

கண்களில் மிரட்சியும், வெறுப்பும், பதட்டமும் எதிர்கால நிச்சயமின்மையுமாக அப்போலீஸ்காரர்கள் என் வலப்பக்கம் இருந்தார்கள்.

என் தோளில் கிடந்த சிகப்புத் துண்டு அவர்களை கலவரப்படுத்திக் கொண்டேயிருந்தது. ஒரு ஸ்நேக புன்னகையை அவர்கள் நடிப்பிற்காக கூட பாலகிருஷ்ணனை நோக்கி சிந்திவிட தயாராக இல்லை.

அந்த அளவிற்கு அப்பாத்திரங்களுக்கு தங்களை ஒப்புக்கொடுத்து அதுவாகவே மாறி இறுகிப்போயிருந்த அந்த ஒப்பனை போலீஸ் காரர்கள் எத்துணை விசித்திரமானதொரு கலைஞர்கள் என்பது மதிய உணவு பகிர்தலின் போதுதான் வெளிப்பட்டது.

நீதிமன்ற நடவடிக்கைகளை பார்வையாளர்கள் மத்தியிலிருந்து கவனிக்கும் காட்சி படமாக்கப்பட்டபோது என் அருகிலிருந்த கலைஞர் பிரகாஷ்ராஜ், அவர் பாத்திரம் காட்சிப்படுத்தப் பட்டபோதெல்லாம் சிங்கிள் டேக்கில் முடித்தது அவரின் அனுபவச் செழுமையை கண்டு என்னை ஸ்தம்பிக்க வைத்தது. அவருக்கு டூப் போட வந்திருந்த இன்னொரு துணை நடிகர், இதுவரை நிஜ பிரகாஷ்ராஜோடு ஒரு புகைப்படம் கூட எடுத்துக்கொண்டதில்லை என என்னிடம் சொன்னபோது, திரைப்படத்துறையின் இன்னொரு மங்கலான முகம் என் நினைவுக்கு வந்து போனது.

திரைப்பட உருவாக்கமென்பது பல நூறுபேரின் கூட்டியக்கம். முழுக்க முழுக்க கலைஞர்களால், எதிர்காலத்தைப் பற்றியதொரு பெருங்கனவோடு மட்டுமே இயங்கும் தனி உலகமது. அவ்வுலகில் லௌகீக பேச்சுவார்த்தைகள் அங்கு அறவேயில்லை. ஒவ்வொரு கலைஞனின் கண்களிலும் மின்னுமொரு எதிர்கால கனவை தரிசிக்க முடியும்.

ராஜாக்கண்ணு இனி திரும்பி வரப்போவதில்லை, போலீஸ் சித்ரவதையில் இறந்த அவருடல் அப்புறப்படுத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுவிட்டது என்ற அதிர்ச்சிகரமானதொரு உண்மை செங்கேணிக்கு தெரியவரும்போது அவள் பேச்சற்றுப் போவாள். ‘எல்லாம் முடிந்தது' என்றொரு மனநிலை அவளை பெரும் மௌனத்துக்குள் ஆழ்த்தும்.

ஏரிமோட்டு குடியிருப்பைச் சுற்றிலும் ஒப்பாரி ஒலிக்க அவளுக்கு தாலியகற்றும் சடங்கு நிறைவேறும்.

அதிகாரத்தை எதிர்த்து எதுவும் செய்ய முடியாதவர்களாக வழக்கறிஞர் சந்துரு, பேரா.காளிஸ்வரன், நான் மூவரும் மௌனித்து உறைந்து நின்றிருக்கும் காட்சி படமாக்கப் பட்டபோது,

அக்கூட்டத்திலிருந்து எழுந்து, எங்களை நோக்கி ‘அய்யா பெரிய மனுசங்களா என் புருசன் உசுரோடு இருக்கானானு இப்பவாவது சொல்லிடுங்க. என் கழுத்துல தொங்கற தாலியை அறுத்திடறேன்' என பெருங்குரலெடுத்து கதறினபோது நாங்கள் மூவருமே அந்த வெப்பம் தாங்கமுடியாமல் அங்கிருந்து அகன்றோம்.

இத்திரையாக்கம், இதுவரை தமிழ்சினிமா சொல்லாமல் விட்ட வேறொரு கதையாடலை பேச முயல்கிறது என்ற கருத்து என்னை மேலும் அழுத்த பேச்சற்றவனாக அன்றிரவு வீடு திரும்பினேன். படத்தில் டப்பிங் பேசுகிற வரை அந்த மனநிலையிலிருந்து விடுபடமுடியாமல்தானிருந்தேன்.

படத்தின் வெளியீட்டு நாளுக்காக எல்லோரையும் போல நானும் பெரும் காத்திருப்பிலிருந்தேன். அதற்கும் முன், நீதிபதி சந்துருவும், கிருத்திகாவும் பல முறை என்னை தொலைபேசியில் அழைத்து பிரிவியூ பார்க்க அழைத்த போதிலும் என்னால் போக முடியாமல் போய்விட்டது.

படம் வெளியான அந்த இரவு வீட்டில் உட்கார்ந்து, அத்திரைப்படத்தை எல்லோருடனும் பார்த்தேன். யாரும் யாருடனும் இல்லை. எல்லா தைரியமும் உதிர்ந்து போக, செங்கேணியோடும் அக்குழந்தையோடும் அப்பெருமழையில் நானும் நனைந்தேன். என் துக்கத்தை யாரிடமாவது கடத்திவிடமுடியுமாவென கரம் தேடினேன். அந்த இரவெல்லாம் பெய்த மழையினூடே செங்கேணியின் குரல் கேட்டுக்கொண்டேயிருந்தது.

படம் வெளியான இரண்டாம் நாள் அதுகுறித்த  சர்ச்சைகள் ஆரம்பித்தது. படபிடிப்பின்போதும், அதன் போஸ்ட் புரடக்‌ஷன் போதும், பிரிவியூ திரையிடலின் போதும் யாராலும் கவனிக்கப்படாத அக்காலண்டர் பிரச்சனையின் மையமாக ஆக்கப்பட்டது.

காலத்தை சரியாக காட்சிப்படுத்த வேண்டுமென ஆர்ட் டிபார்ட்மெண்டில் நடந்த அப்பிழை உடனே படக்குழுவினரால் சரிசெய்யப்பட்டது. ஆனாலும் பிரச்சனையின் மழை வலுத்துக்கொண்டேதான் இருந்தது.

உலகமெல்லாம் அப்படத்தின் காட்சிகளும், செங்கேணியின் குரலும், ‘என்னை விட்டுடாதே  செங்கேணி' என்ற ராஜாகண்ணுவின் கதறலும் யாரையும் தூங்கவிடாமல் துரத்திக்கொண்டேயிருந்தது. அப்போது தமிழ்நாடெங்கும் பெய்து தீர்த்த மழையின் சத்தத்தை மீறி இக்குரல் எல்லா வீடுகளிலும் கேட்டது.

‘எந்த உள்நோக்கமும் இல்லை நண்பா' என அதன் இயக்குநர் நேசக்கரம் நீட்டியபோதும் பலரின் சந்தேகங்கள் அதிகரித்துக் கொண்டேயிருந்தன.

காட்சிகள், பெயர்கள், எல்லாவற்றின் மீதும் மறுபார்வை தேவைப்பட்டது.

 எல்லாவற்றையும் மீறி தன் புருஷனின் மரணத்தை யாருமே பொருட்படுத்த தவறியபோதும், அதை சுலபமாகக் கடந்த போதும் கம்யூனிஸ்ட் கட்சிக் காரர்களின் உதவியோடு சென்னை உயர்நீதிமன்றம்வரை பயணப்பட்டு தன் கணவனின் மரணத்திற்கான நீதியைக்கேட்டுப் பெற்று, சாமானியர்களும் சபையேற முடியும் என்ற செங்கேணியின் உறுதி இன்னும் இந்நிலத்தில் வாழ்வதற்கான நம்பிக்கையை பல கோடிப்பேருக்கு விதைத்திருக்கிறது.

எப்போதும்ஒரு மகத்தான கலைப்படைப்புதான் இதை சாத்தியப்படுத்த முடியும்.

 ‘ஜெய்பீம்' இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது.

மோதலின் சுவடுகள்!

ஜெய்பீம் என்றால் அம்பேத்கருக்கு வெற்றி....

அம்பேத்கரியத்துக்கு வெற்றி என்று பொருள். அம்பேத்கர் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த வேண்டும் என்று கற்பிக்கவில்லை. ஆனால், ஜெய்பீம் என்ற பெயரில் திரைப்படம் தயாரித்து நடித்துள்ள நீங்களும், உங்கள் குழுவினரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தருவதை விட, வன்னியர்களை இழிவுபடுத்துவதில் தான் அதிக கவனம் செலுத்தியிருக்கிறீர்கள். இது தான் ஜெய்பீம் என்பதற்கு நீங்கள் அறிந்து கொண்ட பொருளா?

அன்புமணி ராமதாஸ் -பாமக இளைஞர் அணி தலைவர், நடிகர் சூர்யாவுக்கு எழுதிய கடிதத்தில்

உண்மையான குற்றவாளியின் சாதிய அடையாளத்தை மறைத்து விட்டு, அவரை வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவராக காட்டியிருப்பதும், படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உண்மையான பெயரே சூட்டப்பட்டுள்ள நிலையில், உதவி ஆய்வாளர் கதாபாத்திரத்தின் பெயரை மட்டும் அந்தோணி சாமி என்று வைக்காமல் குருமூர்த்தி என்று வைத்திருப்பதும், அவரை அடிக்கடி குரு, குரு என்று அழைப்பதும் அயோக்கியத்தனத்தின் உச்சம் ஆகும்.

பு.தா.அருள்மொழி - வன்னியர் சங்கத் தலைவர் விடுத்த அறிக்கையில்

சக மனிதர்கள் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பைத் தொடர்ந்து செய்கிறேன். நாடு முழுவதிலும் எல்லா தரப்பு மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது. விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ. தேவையோ எனக்கு இல்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சமத்துவமும், சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம். தங்கள் புரிதலுக்கு நன்றி.

நடிகர் சூர்யா எழுதிய பதில் கடிதத்தில்

படைப்பாளி, கலைஞன் எனச் சொல்லிக்கொள்வோர்க்கெல்லாம் ஒரு நேர்மை வேண்டும். ‘எலிவேட்டை’ என என்னிடம் காட்டி ‘ஜெய்பீம்’ என நீங்கள் மாற்றுவது உங்களுக்கு சாதாரணமாகக் கொள்ளலாம். ஆனால் எலிவேட்டை என்கிற  தலைப்பில் இருக்கிற அதே சாதாரண உரையாடல், பெயர்கள், ஜெய்பீம் என அக்கினிக் கலச குறியீடுகளோடு வருகிறபோது உக்கிரம் கூடி வேறொரு குரூர ரூபம் கொள்கிறது. ஓட்டுமொத்தமாய் ஒரு பொய்த் தலைப்பை வைத்து என்னை வட்டார உரையாடலை எழுதச்சொல்லி பிறகு அவற்றை மாற்றிவிட்டு எனக்கு பச்சைத் துரோகம் இழைத்துவிட்டீர்.

எழுத்தாளர் கண்மணி குணசேகரன் எழுதிய கடிதத்தில்

அனைத்து சமூகத்தினருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் கலைவடிவமே திரைப்படம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இத்திரைப்பட ஆக்கத்தில் எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இதன் பொருட்டு மனவேதனை அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் என் உளப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் த.செ.ஞானவேல் அறிக்கை

டிசம்பர், 2021.

logo
Andhimazhai
www.andhimazhai.com