அந்திமழை வாசகர்களுக்காக ரோமன் லிபியில் எழுதப்பட்ட கேள்வியைத் தமிழில் தட்டச்சு செய்து தருகிறேன்.
அந்தக் கேள்வியின் தமிழ் ‘மொழிபெயர்ப்பு’: “ஹலோ சாரு, நான் உங்கள் தளத்தைத் தவறாமல் படிக்கும் வழக்கம் உள்ளவன். உங்களைத் தன்னம்பிக்கையின் மறு உருவமாகத்தான் பார்க்கிறேன். நான் ஸாஃப்ட்வேர் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவன்.
சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு நிறுவனத்தில். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு வரை. திடீரென்று ஒரு நாள் கூப்பிட்டார்கள். உங்களுக்கு வேலை இல்லை என்று சொன்னார்கள். எல்லாம் முடிந்து விட்டது. ஜனவரி வரை மாதம் 85 ஆயிரம் வாங்கிக் கொண்டு இருந்தேன். இப்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை. தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூடத் தோன்றுகிறது. அடுத்து வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. உங்களை என் குருவாக நினைத்துக் கேட்கிறேன். இதிலிருந்து எப்படி மீள்வது என்று தெரியவில்லை. தினமும் குடிக்கிறேன் இப்போது எல்லாம். ப்ளா, ப்ளா, ப்ளா...
உங்கள் ரசிகன்: ரவி.
பதில்: எனக்கு இப்படி ஒரு மகன் இருந்து இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருந்தால் நான் தான் தற்கொலை செய்து கொண்டிருந்திருப்பேன், இப்படி ஒரு தறுதலையைப் பெற்று வளர்த்ததற்காக. மாதம் 85000 சம்பளம் தரும் வேலை போய் விட்டது. தற்கொலை செய்து கொள்ளலாம் போல் தோன்றுகிறது.
நீங்கள் குருவாக நினைக்கும் ஒருவருக்குக் கடிதம் எழுதுகிறீர்கள். எப்படி? ரோமன் லிபியில். ஏன்? தமிழ் எழுத்து உங்கள் மடிக் கணினியில் இல்லையெனில் இரண்டே நிமிடத்தில் தேடி எடுத்துத் தரவிறக்கம் செய்து தமிழில் அனுப்பி இருக்கலாம். சரி, அது கூட பெரிய வேலை. விடுங்கள்.
ஆங்கிலத்தில் தப்பும் தவறுமாகவாவது எழுதியிருக்கலாம் இல்லையா? அது என்ன ரோமன் லிபியில் எழுதி இன்னொருவரின் கழுத்தை அறுப்பது? உங்கள் வாழ்க்கைப் பிரச்சினைக்கே இப்படி பொறுப்பற்ற தனமாக நடந்து கொள்ளும் நீங்கள் வேலையில் எப்படி இருந்திருப்பீர்கள்? என்னிடம் நீங்கள் வேலை செய்திருந்தால் பத்தே நிமிடத்தில் சீட்டைக் கிழித்து, அடித்துத் துரத்தியிருப்பேன். ஏன் ‘அடித்து’ என்கிறீர்களா? உங்கள் பொறுப்பற்ற நடத்தையால் என் நேரத்தை வீண் செய்ததற்கும், மன உளைச்சல் கொடுத்ததற்கும்.
இதைப் படித்து உங்களுக்குக் கொஞ்சமாவது கோபம் வந்தால் நீங்கள் உருப்பட்டு விடுவீர்கள் என்பதற்கான சிறியதொரு நம்பிக்கைக் கீற்று தெரிகிறது என்று பொருள். சமயங்களில் கோபம் போன்ற தப்பான உணர்ச்சிகள் கூட ஒருவரை முன்னேற்றத்தின் பாதையில் கொண்டு தள்ளும். உங்களுடைய கடிதம் எனக்கு வந்து மூன்று நாட்கள் ஆகின்றன. இந்த மூன்று நாட்களாக நான் மகாபாரதத்தில் வரும் வனபர்வத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். பல முறை படித்திருந்தாலும் இந்த முறை படித்தது அருட் செல்வப் பேரரசன் மொழிபெயர்த்தது. அவருடைய மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு நளன் சரிதத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் நன்றி கூற வேண்டியது எனக்கு அல்ல. அருட்செல்வப் பேரரசனுக்கு.
பாண்டவர்கள் வனவாசத்தின் போது கிருஷ்ணையுடன் (திரௌபதி) காம்யக வனத்தில் வசித்து வந்த காலத்தில் தேசத்தையும் கீர்த்தியையும் இழந்து இப்படிக் காட்டில் வாழ்வதை நினைந்து மிகவும் துக்கத்தில் ஆழ்ந்தான் யுதிஷ்டிரன். அப்போது பிரஹதஸ்வர் என்ற மகரிஷி அந்தப் பக்கம் வந்தார். அவரிடம் யுதிஷ்டிரன் கேட்டான்:
“நான் ஆடிய பகடையாட்டம் சம்பந்தமாக எனது நண்பர்களும் மக்களும் என்னைப் பற்றிப் பேசியவை என் மனதிலேயே இருக்கின்றன. அந்த வார்த்தைகளை நினைத்து நினைத்து இரவு முழுவதும் தூங்காமல் துயர் கொள்கிறேன். என்னை விட துரதிர்ஷ்டம் கொண்ட மன்னன் எவனாவது இந்தப் பூமியில் இருக்கின்றானா? இப்படி நீர் கண்டதோ கேட்டதோ உண்டா?”
இதற்குத்தான் பிரஹதஸ்வர் நளனின் சரிதத்தை அவனிடம் கூறினார். “உனக்காவது இங்கே வனத்தில் உன் சகோதரர்களும் தர்மபத்தினியும் இருக்கிறார்கள். ஆனால் நளனோ யாருமே இல்லாத அநாதையாக இருந்தான். கந்தர்வனைப் போல் இருந்த அவனுடைய அழகான தோற்றத்தையும் இழந்து விகாரமானவனாக மாறினான். அவனுடைய பிள்ளைகளுக்கே அவனை அடையாளம் தெரியாமல் அவனுடைய விகாரமான உருவத்தைக் கண்டு அஞ்சி ஓடி விட்டன. நீ எவ்வளவோ தேவலாம்.”
நள தமயந்தி கதையின் சுருக்கம் இது: தமயந்தி பெரும் அழகி. மூவுலகத்திலும் அப்படிப்பட்ட அழகியைப் பார்க்க முடியவில்லை. நளனும் அப்படியே. இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்து காணாமலேயே காதல் கொள்கின்றனர். தன் காதலைத் தெரிவிக்க தமயந்திக்கு அன்னத்தைத் தூது விடுகிறான் நளன். அன்னம் சொன்னதைக் கேட்ட தமயந்தி காதல் மிகுந்து மனப்பிறழ்வு கொண்டவளைப் போல் ஆகிறாள். அதை அறிந்த தமயந்தியின் தந்தை பீமன் ஒரு சுயம்வரம் வைக்கிறான். இதற்கிடையில் தமயந்தியின் பேரழகைப் பற்றி இந்திரனிடம் விவரிக்கிறார் நாரதர். அதைக் கேட்கும் இந்திரனும் மற்ற தேவர்களும் தேவலோகத்திலிருந்து பூலோகம் இறங்கி வருகின்றனர். வழியில் நளனைக் கண்டு அவனையே தமயந்தியிடம் தூது போகச் சொல்கிறார்கள். “இந்திரன், வருணன், அக்னி, யமன் ஆகிய நான்கு பேர் வந்திருக்கிறோம். இந்த நான்கு தேவர்களில் யாரையேனும் ஒருவரை நீ தலைவனாகக் கொள்’ என்று தமயந்தியிடம் போய்ச் சொல்” என்று நளனிடம் சொல்கிறான் இந்திரன்.
தமயந்தியிடம் தேவர்களின் தூதனாகச் செல்லும் நளன் இந்திரன் சொன்னதைச் சொல்கிறான். அவளோ, “அன்னங்களின் மொழி என்னை எரித்துக் கொண்டிருக்கிறது. நீர் என்னை மணம் செய்து கொள்ளவில்லையானால் தற்கொலை செய்து கொள்வேன்” என்று நளனிடம் சொல்கிறாள். “தேவர்கள் மரணம் அற்றவர்கள்; நானோ வெறும் அற்ப மனிதன். நீ தேவர்களில் ஒருவரை மணப்பதே நன்று” என்கிறான் நளன். “காதல் பற்றித் தெரியாதவரா நீர்? உம்மை மணம் முடிக்க முடியாமல் போனால் என் உயிரை மாய்த்துக் கொள்வேனே அல்லாது வேறு ஒருவன் எனக்கு மாலையிட அனுமதிக்க மாட்டேன்” என்று சொல்லும் தமயந்தி, “தேவர்களின் பேச்சைக் கேட்கவில்லை என்ற அபவாதம் உமக்கு வர வேண்டாம். எனவே தேவர்களோடு நீரும் சுயம்வரத்துக்கு வாரும். நான் உமக்கு மாலையிட்டுத் தேர்ந்தெடுக்கிறேன்” என்கிறாள். ஆனால் சுயம்வரத்திலோ ஐந்து பேர் நளன் உருவத்தில் இருக்கிறார்கள். இந்த ஐவரில் உண்மையான நளனை எப்படி அறிவது என்று குழம்புகிறாள் தமயந்தி. பிறகு தெய்வத்தை தியானித்து உண்மையான நளனைக் கண்டுபிடிக்கிறாள். தேவர்களின் தேகத்தில் வியர்வை இல்லை; அவர்கள் கண் சிமிட்டுவதில்லை; கால் தரையில் பாவவில்லை; மாலைகள் வாடவில்லை.
பிறகு நான்கு தேவர்களும் நளனுக்கு இரண்டு இரண்டு வரங்கள் கொடுத்து விட்டு இந்திரலோகம் திரும்புகின்றனர். நளன் தமயந்திக்கு இந்திர சேனன் என்ற மகனும் இந்திரசேனை என்ற மகளும் பிறக்கின்றனர்.
தேவர்கள் இந்திர லோகம் செல்லும் வழியில் கலியையும் துவாபரனையும் சந்திக்க நேர்கிறது. அவர்கள் தமயந்தியின் சுயம்வரத்துக்காகத்தான் போய்க் கொண்டிருந்தனர். கலிக்கு தமயந்தியின் மீது தீராத ஆசை. இந்திரன் மூலம் விஷயத்தை அறிந்த கலி மிகுந்த கோபம் அடைகிறான். தன் ஆசை நிறைவேறாததால் ‘நான் நளனைப் பீடிக்கப் போகிறேன்’ என்கிறான். அதேபோல் பீடித்து, நளனின் தம்பியான புஷ்கரனையும் கைக்குள் போட்டுக் கொண்டு நளனை புஷ்கரனோடு பகடை ஆடச் செய்கிறான். பல மாதங்கள் தொடர்கிறது பகடை ஆட்டம். கலியால் பீடிக்கப்பட்ட நளன், மனைவி தமயந்தியின் பேச்சையும் கேட்காமல் பகடை ஆடி எல்லாவற்றையும் இழந்து கொண்டிருக்கிறான்.
இப்படியே போனால் குழந்தைகளையும் இழந்து விடுவோம் எனப் பயந்து தேரோட்டியை அழைத்து குழந்தைகளைத் தனது உறவினர்களிடம் அனுப்புகிறாள் தமயந்தி. அயோத்யா நகரம் சென்ற தேரோட்டி, மன்னன் ருதுபர்ணனிடம் குழந்தைகளை ஒப்படைக்கிறான்.
கடைசியில் நளன் தனது ராஜ்ஜியத்தையும் மற்ற எல்லாவற்றையும் இழந்த நிலையில் ‘தமயந்தியை வைத்து ஆடு” என்றான் புஷ்கரன். அவ்வாறு ஆட மறுத்து தான் அணிந்திருந்த ஆடை அணிகலன்களைக் கூட கழற்றிக் கொடுத்து விட்டு ஒற்றை ஆடையுடன் தமயந்தியையும் அழைத்துக் கொண்டு வெளியேறுகிறான் நளன். தமயந்தியும் ஒற்றை ஆடையுடன் அவனுடன் செல்கிறாள்.
நளனுக்கு உதவி செய்தால் தண்டிக்கப்படுவார்கள் என்று உத்தரவு பிறப்பிக்கிறான் புஷ்கரன். ஊருக்கு வெளியே மூன்று தினங்கள் இருவரும் வெறும் தண்ணீரை மட்டுமே உண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த பறவைகளை அடித்து உண்ணலாம் என்ற எண்ணத்தில் பறவைகளின் மீது தன் ஆடையை மூடினான் நளன். உடனே பறவைகள் அனைத்தும் ஒன்றாக எழுந்து பறந்தன. அப்போது ஒரு பறவை, “சிறுமதி கொண்ட நளனே! நாங்களே அந்தப் பகடைக் காய்கள். நீ ஆடையுடன் கூட இருக்கக் கூடாது என்றுதான் இப்படி வந்தோம்” என்கிறது.
நிர்வாணமாக நின்ற நளன், தமயந்தியின் ஆடையிலேயே ஒரு பகுதியால் தன்னை மூடிக் கொள்கிறான். அந்த ஒரே ஆடையை அணிந்தபடியே ஒரு சத்திரத்தில் உறங்கினர். அப்போது உறங்க முடியாமல் தவித்த நளன்,‘இனிமேலும் தமயந்தி தன்னுடன் இருந்தால் இதை விட துன்பம் அடைவாள்’ என்று எண்ணி, அந்த ஆடையில் தன்னுடைய பகுதியை வெட்டிக் கொண்டு போய் விடுகிறான். (அவன் மனம் கலியால் பீடிக்கப்பட்டிருந்தது.)
நளனைக் காணாமல் தவித்த தமயந்தி கானகத்தினூடே அவனைத் தேடி வரும் போது அவளை ஒரு பாம்பு பிடித்துக் கொள்கிறது. அப்போது ஒரு வேடன் அவளைக் காப்பாற்றுகிறான். காப்பாற்றிய அவன் அவள் அழகில் மயங்கி அவளைக் காமுறுகிறான். கற்புக்கரசியின் சாபத்தில் கருகிச் சாகிறான் வேடன்.
மூன்று இரவும் மூன்று பகலும் நடந்து ஒரு ஆசிரமத்தை அடைகிறாள் தமயந்தி. அதன் பிறகு ஒரு வணிகர் கூட்டத்தோடு சேர்ந்து கானகத்தினூடே நடக்கிறாள். இரவு வந்ததும் வணிகர் கூட்டம் ஒரு தடாகத்தின் அருகில் தங்கி இளைப்பாறி விட்டு உறங்கினர். அப்போது அங்கே வந்த காட்டு யானைகள் அந்த வணிகர்களைத் தாக்கி பலரும் இறந்து போக நேர்கிறது.
இந்த துர்சம்பவத்துக்கு பைத்தியக்காரியைப் போல் தோற்றமளிக்கும் அந்தப் பெண் தான் காரணம்; அவள் மானுடப் பிறவி அல்ல; யட்சிணி; அவளைக் கொல்லுங்கள் என்கிறார்கள் தப்பிப் பிழைத்த வணிகர்கள்.
அந்த வணிகர்களிடமிருந்து தப்பிய தமயந்தி சேதி நாட்டில் நுழைகிறாள். அரைகுறை ஆடையும், விரிந்த தலையும், புழுதி படிந்த தேகமுமாகச் செல்லும் அவளைச் சிறுவர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். ஆனாலும் அவள் தொடர்ந்து செல்கிறாள். இந்தக் காட்சியை அரண்மனையின் உப்பரிகையிலிருந்து பார்க்கும் மன்னன் சுவாஹுவின் தாய், அவள் பைத்தியக்காரியைப் போல் தோற்றம் அளித்தாலும் நற்குடியைச் சேர்ந்தவளாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணி தன் பணிப்பெண்ணை அனுப்பி அவளை அழைத்து வரச் செய்கிறாள். தன் மகள் சுனந்தையோடு தோழியாக இருக்கும்படி தமயந்தியைக் கேட்டுக் கொள்கிறாள் ராஜமாதா.
கானகத்தில் தமயந்தியைத் தனியாக விட்டு விட்டுச் சென்ற நளன் ஒரு காட்டுத் தீயைக் காண்கிறான். அந்தத் தீயில் மாட்டிக் கொண்ட கார்க்கோடகன் என்னும் பாம்பு தன்னை மீட்கச் சொல்லி நளனை அழைக்கிறது. மீட்கிறான். மீட்டதும் கார்க்கோடன் நளனைக் கடிக்கிறது. கடித்த உடனேயே நளனின் உருவம் அகோரமாக மாறுகிறது. கைகள் குள்ளமாகின்றன. அப்போது கார்க்கோடன் சொல்கிறது. (இந்த இடம் மகாபாரதத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.) “நளனே, உன்னுள்ளே கலி இருக்கிறான். அவன் உன்னை விட்டு நீங்காதவரை என் விஷத்தின் வலியை அவன் உணர்ந்து கொண்டே இருப்பான். ஆனால் அந்த வலி உனக்குத் தெரியாது.”
(ஆக, நம்முடைய மிகக் கொடூரமான துயரத்தின் போது நிகழும் இன்னொரு துயரம் கூட நமக்கு நன்மையையே விளைவிக்கும் என்பது இதன் மூலம் பெறப்படுகிறது.)
மேலும் கார்க்கோடன் என்ற அந்தப் பாம்பு நளனிடம் சொல்கிறது: “இன்றே நீ அயோத்தி செல். அதன் மன்னன் ரிதுபர்ணனிடம் ‘என் பெயர் பாகுகன், நான் ஒரு தேரோட்டி’ என்று சொல். உன்னிடமிருக்கும் குதிரை ஞானத்துக்குப் பதிலாக சூதில் நிபுணனான அவன் தன்னுடைய பகடை ஞானத்தைத் தருவான். எப்போது உன் நிஜ உருவத்தை அடைய வேண்டுமென விரும்புகிறாயோ அப்போது இந்த ஆடையை அணிந்து கொள்.”
அயோத்யா சென்றடையும் நளன், “குதிரைக் கலை, சமையல் கலை ஆகிய இரண்டிலும் என்னை விஞ்ச ஆள் இல்லை” என்று சொல்லி ரிதுபர்ணனிடம் நண்பனாகிறான். அவனைத் தன்னுடைய குதிரைக் கொட்டடியின் கண்காணிப்பாளனாக நியமிக்கிறான் ரிதுபர்ணன். அங்கே ஏற்கனவே இருக்கும் தேரோட்டியான வார்ஷ்ணேயன் தான் ஏற்கனவே நளனின் தேரோட்டியாக இருந்தது. ரிதுபர்ணனும் நளனும் நண்பர்களாகிறார்கள்.
தமயந்தியின் தகப்பன் பீமன் தன் மகளையும் மருமகனையும் தேட அந்தணர்களை அனுப்புகிறான். அவர்களில் ஒருவனான சுதேவன் தமயந்தியை சேதி நாட்டில் சுனந்தையோடு பார்க்கிறான். தமயந்தியின் புருவ மத்தியில் இருக்கும் தாமரை வடிவ மச்சம், புழுதி படிந்து கிடந்தாலும் சுதேவன் அதைப் பார்த்து விடுகிறான். பிறகுதான் ராஜமாதாவுக்கும் மற்றவர்களுக்கும் தமயந்தியின் உண்மையான வரலாறு தெரிய வருகிறது. ராஜமாதாவின் சகோதரியின் மகள் தான் தமயந்தி.
பிறகு அங்கிருந்து தந்தையையும் குழந்தைகளையும் காண விதர்ப நாட்டுக்குக் கிளம்புகிறாள் தமயந்தி. அங்கே சென்ற பின், நளனைத் தேட பல தேசங்களுக்கும் ஒற்றர்களும் அந்தணர்களும் அனுப்பப்படுகின்றனர். அப்போது பர்ணாதன் என்ற அந்தணன் அயோத்தி நகரில் ரிதுபர்ணனிடம் நளன் பற்றி விசாரிக்கிறான். ரிதுபர்ணனுக்கு நளன் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை. ஆனால் விகாரமான தோற்றம் கொண்ட அவனுடைய தேரோட்டி தமயந்தி தன் கணவன் மீது வருத்தத்திலும் கோபத்திலும் இருக்கிறாள் என்பதை அறிந்து பர்ணாதனிடம், ஆடையைக் கூட இழந்து விட்ட ஒருவன் மீது கற்புள்ள பெண் கோபம் கொள்ளலாகாது என்றும் இன்ன பிறவும் கூற சந்தேகம் அடையும் பர்ணாதன் உடனே அங்கிருந்து கிளம்புகிறான்.
பர்ணாதனிடமிருந்து விபரம் அறிந்த தமயந்தி தகப்பன் பீமனுக்குத் தெரியாமல் அந்தணன் சுதேவனை அழைத்து, ரிதுபர்ணனிடம் சென்று தமயந்திக்கு நாளையே சுயம்வரம் என்று தெரிவிக்குமாறு சொல்லி அனுப்பி வைக்கிறாள். “நளன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்பது தெரியாததால் நாளை சூரியன் உதித்ததும் தமயந்தி தனது இரண்டாவது கணவனைத் தேர்ந்தெடுப்பாள்” என்று ரிதுபர்ணனிடம் வந்து சொல்கிறான் பர்ணாதன். இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் நளனுக்குக் குழப்பம் உண்டாகிறது. ‘துன்பம் தாங்க முடியாமல் இப்படிச் செய்கிறாளா? அல்லது, என்னைக் கண்டு பிடிப்பதற்கான திட்டமா?’ என யோசிக்கிறான்.
பாகுகனையும் (நளன்) வார்ஷ்ணேயனையும் அழைத்துக் கொண்டு விதர்ப நாடு கிளம்புகிறான் ரிதுபர்ணன். நூறு யோஜனை தூரம். நாளை காலைக்குள் சென்றாக வேண்டும். குதிரைகளைப் பற்றி நன்கு அறிந்த பாகுகனால் அது முடியும் என்று நம்புகிறான் ரிதுபர்ணன். வழியில் தென்படும் தான்றி மரத்தைக் (vibhitaka) கண்டு அதில் உள்ள இலைகளையும் கனிகளையும் எத்தனை எண்ணிக்கை என்று சரியாகச் சொல்ல முடியும் என்கிறான் ரிதுபர்ணன். உதாரணமாக, அதன் இரண்டு கிளைகளில் ஐம்பது லட்சம் இலைகளும், 2095 கனிகளும் இருக்கின்றன. எண்ணிப் பார்க்க வேண்டும் என்கிறான் பாகுகன். “காலைக்குள் விதர்ப நாடு சேர்ந்து விட முடியுமா?” “அது என் பாடு” என்று சொல்லி விட்டு எண்ணுகிறான். ரிதுபர்ணன் சொன்னது போலவே இருக்கின்றன இலைகளும் கனிகளும். இது ஒரு விஞ்ஞானம்; இதுதான் பகடையாட்டத்தின் அடிப்படையும். நீ குதிரை ஞானத்தை எனக்கு அளித்தால் நான் உனக்குப் பகடை ஞானத்தைத் தருகிறேன் என்கிறான் ரிதுபர்ணன். மாலையிலேயே விதர்ப நாட்டின் தலைநகரான குண்டினம் வந்து சேர்ந்து விடுகிறது பாகுகன் ஓட்டிய தேர்.
பாகுகன் தான் நளனா என்று கண்டறிய தன் சேடியை அனுப்புகிறாள் தமயந்தி. “பாகுகன் நெருப்பைத் தொடுகிறார்; சுடவில்லை. இரண்டு பிள்ளைகளையும் கண்டு அழுகிறார்” என்று சொல்கிறாள் சேடி. வேறு தோற்றத்தில் இருந்தாலும் வந்திருப்பது நளன் தான் என்று உறுதியாகிறது தமயந்திக்கு. அவனிடம் வந்து அழுகையும் ஆற்றாமையுமாக “கானகத்தில் என்னைத் தனியே விட்டு விட்டு ஓடியது சரியா?” எனக் கேட்கிறாள்.
ஒற்றை ஆடையும், சடை விழுந்த கூந்தலும், அழுக்கடைந்த மேனியுமாக தன் முன்னே வந்து நின்று கேட்கும் தமயந்தியிடம் நளன் சொல்கிறான்:
‘ஓ, மருட்சி கொண்டவளே, நாட்டை இழந்ததோ உன்னைக் கை விட்டதோ என் செயல் இல்லை. அவை கலியால் ஏற்பட்டவை. கானகத்தில் என்னைக் காணாது இரவும் பகலும் அழுது நீ கலியைச் சபித்தாய். அதன் காரணமாக அவன் என் உடலிலேயே தங்கி எரிந்து கொண்டிருந்தான். உனது சாபத்தால் எரிந்த அவன் நெருப்புக்குள் நெருப்பென வாழ்ந்தான்.”
பிருஹதஸ்வர் யுதிஷ்டரிடம் கூறுகிறார்: “நளனும் தமயந்தியும் பிரிந்திருந்தது மூன்று ஆண்டுகள். அத்தனைக் காலமும் நளன் தன் பெயர் கூட இல்லாமல் தனியாகவே இருந்தான். கந்தர்வன் போல் அழகு வாய்ந்த அவன் விகாரமானவனாக மாறினான். அவன் குழந்தைகளே அவனைக் கண்டு அஞ்சி ஓடின. நீயோ உன் சகோதரர்களுடனும் மனைவியுடனும் கதைகள் கேட்டுக் கொண்டு இந்தக் கானகத்திலே வாழ்கிறாய். நளனோடு பார்க்கையில் உன் துன்பம் சிறிது.”
“விதியின் விபரீதத்தையும் முயற்சியும் பயனற்ற தன்மையையும் புரிந்து கொண்ட தைரியசாலியான மனிதன் ஒருபோதும் துயருற மாட்டான்.”
ஏப்ரல், 2015.