முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையில் வேடிக்கை பார்த்த ஐநாவின் குற்றம் அம்பலமாகியுள்ள நிலையில், ஐநா என்ற அமைப்பின் நம்பகத்தன்மை பெரும் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. இந்த நேரத்தில், ஈழத்தில் கடைசியாக ஏற்படுத்தப்பட்ட சமாதான காலத்தில், தமிழர்களுக்கு எதிராக விரிக்கப்பட்ட சர்வதேச வலை பற்றியும் அதில் நார்வேயின் பங்கு பற்றியும்கூட தமிழ் மக்கள் மத்தியில் உரிய அளவுக்கு பேசப்படவே இல்லை என்பது மிகவும் வருத்தத்துக்கு உரிய ஒன்று.
நார்வே நாட்டின் சமாதான முயற்சியாளர் பாத்திரத்துக்கு, சித்தாந்த வரலாறே இருக்கிறது. இந்நாட்டின் 80 வயது சித்தாந்தவாதியான யொகான் குல்டாங் என்பவர், நார்வேயின் சமாதான ஏற்பாட்டாளர் பாத்திரத்துக்கு அடித்தளம் இட்டவர். இவருடைய கொள்கைப்படி, ‘உலக அளவில் 2ஆயிரம் தேசங்கள்(ணச்tடிணிணண்) இருக்கின்றன; ஆனால், 200 அரசுகள் ( ண்tச்tஞுண்) தான் இருக்கின்றன. இந்த தேசங்கள் அனைத்துக்கும் இறையாண்மையும் அரசுரிமையும் மீட்டெடுக்கப்படும்வரை எல்லா இடங்களிலும் சண்டை தொடரும். இறையாண்மையை மீட்டுக் கொடுக்க சமாதான வழியை நாடவேண்டும். எந்த இரு தரப்பும் சம உரிமையுடன் சமாதானப் பேச்சில் பங்கேற்கவேண்டும். இதற்கு, ‘ஜனநாயக சமாதானம்’ என பெயர் சூட்டப்பட்டது.
உலக சூழல் மாறிய நிலையில், பாலஸ்தீனம், ஈழம் விடுதலைப் போராட்டங்கள் பெரும் பிரச்னைகளாக உருவெடுத்த நிலையில், நார்வேயின் சமாதான முயற்சியாளர் பாத்திரம் முன்னைவிட முனைப்பு பெற்றது. யான் ஈகாலாண்ட் என்ற கருத்தியல்வாதி, சண்டையிடும் இரு தரப்புக்கும் இடையில் எப்படி தூதுவராக செயல்படுவது, உடன்பாட்டை உருவாக்குவது, இறுதித் தீர்வை எட்டுவது என்பது பற்றிய வரையறைகளை எடுத்துவைத்தார். குல்டாங்கின் ஜனநாயக சமாதானத்தைவிட மாறுபட்ட இந்த முறையானது, ‘தாராள சமாதானம்’ எனப்படுகிறது. நேட்டோ நாடுகளின் நலன் சார்ந்தே இந்த சமாதானம் முன்வைக்கப்படுகிறது.
இந்த தாராள சமாதான வழியைத்தான், பாலஸ்தீனத்திலும் இலங்கையிலும் நார்வே கையாண்டது. ஆனால், சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு பலனும் இல்லை. பாலஸ்தீனத்தில் அவ்வப்போது நூறுநூறாக சாவுகள் என்றால், ஈழத்தில் சில நாட்களில் பத்தாயிரக்கணக்கில் என்பதுதான் வித்தியாசம்.
80களுக்கு முன்பே நார்வே நாட்டுக்குப் படிக்கச்சென்ற ஈழத்தமிழர்கள், அங்கு பல துறைகளில் முக்கிய நிலையில் இருந்த சூழலில், நார்வேயின் முயற்சிக்கு வன்னியில் உற்சாக வரவேற்பு கிடைத்தது. 2002 முதல் 2004வரை ஓரளவுக்கு நல்லபடியாகவே இருந்தது. இதற்கிடையில், புலம்பெயர்ந்த ஈழத்-தமிழர்கள், தாயகத்தில் துயருறும் தமிழ் மக்களுக்கு அடிப்படை கல்வி, சுகாதார வசதிகளுக்காக நிதியுதவி செய்தனர். அவை அனைத்தையும் தமிழ் ஈழத்தில் உள்ள மக்களுக்கு கிடைக்கச்செய்ததில், நார்வேயின் பங்கு முக்கியமானது. மேலும், புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆண்டன் பாலசிங்கத்துக்கு, நார்வே மூலம் அதிநவீன மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த செயல்பாடுகளால், நார்வே மீது ஈழத் தமிழ் மக்களுக்கு இயல்பான நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், இது விரைவில் பொய்த்துப்போகும் என ஈழத்தமிழ் மக்கள் நினைத்திருக்க மாட்டார்கள்.
2004 இறுதியில் ஈழத்தை சுனாமி புரட்டிப்போட்டது. புலிகளின் சார்பில், இடைக்கால தன்னாட்சி அதிகார சபை எனும் வரைவுத் திட்டம் முன்வைக்கப்பட்டது. அரசுரீதியாக புலிகளின் பங்கேற்பை அங்கீகரிக்கும் அந்த சிறிய ஏற்பாட்டைக் கேட்டு அதிர்ந்து, அந்தத் திட்டம் ஒரு அங்குலம்கூட நகரவிடாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டது. கையைக் கட்டிக்கொண்டு சும்மா கிடந்தது, நடுவராக இருந்த நார்வே. இன்னொரு பக்கம், சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற புலிகளின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.இரு தரப்புமே சரியில்லை எனச் சொல்லிவந்த எரிக் சோல்கிம், ஒரு கட்டத்தில், போராளிகள் ஆயுதங்களைக் கீழே போட்டால்தான், தீர்வு வரும் எனக் கூறத் தொடங்கினார்.
சமாதான தூதுவராய் இருந்து பல கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்திய எரிக் சோல்கிம், 2008-ல் போர் தொடங்கிய பிறகு, ஒரு தரப்புக்கு ஆதரவாக, அதாவது புலிகளுக்கு எதிராக பேசியதும் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் பலியான பொழுதும் வாய்திறக்காது மௌனம் காத்ததும் எரிக் மீதான நம்பகத்தன்மையை உடைத்தது. மேற்குலகமும் பிற சர்வதேச ஆதிக்க சக்திகளும் சொல்வதைக் கேட்டால் மட்டுமே, எந்த இனமும் போராட முடியும்; இல்லையேல் எத்தனை உயிர்கள் பலியானாலும் எல்லை மீறிய போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் நடந்தாலும் போராட்டம் அழியும்வரை வாய்திறக்க மாட்டோம் என்பதுதான் இவர்களின் நியதி.
இப்பொழுது மீண்டும், ஐநா மன்றத்தில் ஆதரவு, போர்க் குற்ற விசாரணை கோரி நாடாளுமன்றங்களில் தீர்மானம் என நார்வே போன்ற நாடுகள் மீண்டும் மென்மை முகம் காட்டுகின்றன. தமிழர்கள் இனியாவது விழிப்பாக இருக்கவேண்டியது, கட்டாயம்!
டிசம்பர், 2012.