நம்ம வீட்டுப் பெண் மனோரமா

நம்ம வீட்டுப் பெண் மனோரமா
Published on

1960களின் முற்பகுதியில் தமிழ்த் திரை வானில் மனோரமாவின் கொடி பறக்க ஆரம்பித்தது. அவர் 1958ல்’மாலையிட்ட மங்கை’ படத்தில் நடித்ததாக ஆவணப் படுத்தப்பட்டிருந்தாலும், அதற்கு முன்பே சில படங்களில் தலை காட்டுவார். ‘பாமர ஜாதியில் நான் தனி மனிதன்,படைப்பதனால் என் பேர் இறைவன்’ என்று எழுதிப் பாடிய கண்ணதாசன் படைத்த ஒரு அருமையான நகைச்சுவை நடிகை மனோரமா. சர்க்கஸில் ஜோக்கருக்கு எல்லா சர்க்கஸும் தெரிந்திருக்கும். அப்படி ஒரு சகல கலாவல்லிதான் மனோரமா. எஸ்.எஸ்.ஆர் நாடகமான மணிமகுடம் 1963-64 வாக்கில் திருநெல்வேலியில் நடை பெற்றபோது - திடீர்க் கதாநாயகி ரோலில் என்று நினைவு- நடித்தார்,மனோரமா. அவர் மேடையில் வந்ததும் நாடகக் கொட்டகையில் பெரிய பரபரப்பு. “ஏல மனோரமாலே”என்று. அப்புறம் விசாரித்ததில் தெரிந்தது, அவர் எஸ்.எஸ்.ஆர் நாடகமன்ற நடிகைகளில் ஒருவராக இருந்தவர் என்று. 1966 களில் கலைஞருடன் ‘காகிதப் பூ’ நாடகத்தில் நடித்தார். 1978-79 களில் மனோரமாவே நாடகக் கம்பெனி நடத்தினார் தன் மகன் பூபதிக்காக. பூபதியும் ஒரு நல்ல நடிகர்தான். உதிரிப்பூக்கள் போன்ற படங்களில் சிறப்பாகவே நடித்திருப்பார். ஆனால் செல்லப் பிள்ளையாக வளர்ந்ததால் மனோரமாவுக்கு சிரமம் தரும் பிள்ளையாகவும் இருந்து அவரது  துயரத்தைக் கூட்டினார்.

மனோரமா சினிமாவில் பிரபலமான 1960 களில் சுகி.சுப்ரமணியன் எழுதிய ‘காப்புக்கட்டிச் சத்திரம்’ என்று ஒரு வானொலி தொடர் நாடகம் ஆல் இந்தியா ரேடியோவில் ஒலி பரப்புவார்கள். அதில் மனோராவின் குரல் அற்புதமாக நடிக்கும்.  அது மதியம் 12.30 வாக்கில் மறு ஒலிபரப்பானது. அப்போது கூட பலர் தங்கள் மதியச் சாப்பாட்டை ஒத்தி வைக்கும் அளவுக்கு அதற்கு இப்போதைய சீரியல்களை விட அதிக சதவிகிதத்தில் வரவேற்பு இருந்தது. இதற்கு முன்னால் ‘துபாஷ் வீடு’ என்று ஒரு தொடர் வந்தது. அதிலும் நாகேஷும் மனோரமாவும் உண்டு. காப்புக்கட்டி சத்திரத்தில் மனோரமா பேசும் நகரத்தார் ஆச்சி பாஷையை சினிமாவில் பயன்படுத்தி ‘ஆச்சி’யானவர் மனோரமா.

மனோரமா போல வெவ்வேறு வட்டார மொழிகளை மிகச் சரியாகப் பேசியவர் தமிழ் சினிமாவில் எவருமே இல்லை. மக்களைப் பெற்ற மகராசி படத்தில் சிறப்பாகக் கொங்கு பாஷை பேசும் சிவாஜி கூட சமயத்தில் தன் இயல்புக்குத் திரும்பி விடுவதை இப்போது பார்க்கையில் உணர முடிந்தது. மனோரமா அனுபவி ராஜா அனுபவி படத்தில் திருநெல்வேலித் தமிழை மிகச் சரியாகப் பேசுவார். அதற்கு முன்னும் பின்னும் நெல்லைத் தமிழை யாருமே சரியாக எழுதியதும் இல்லை, பேசியதுமில்லை. சமீபத்திய சறுக்கல் பாவனாசம் படத்தில் கமல். பாஷையே பேசாமல் கூட மனோரமா ‘உனக்கும் வாழ்வு வரும்’ படத்திலும், அறுந்த நாக்குடையவர் பேச்சுப் போல சரஸ்வதி சபதம் படத்திலும் பிரமாதமாகப் பண்ணியிருப்பார். சின்னக் கவுண்டர் படத்தில், துருத்திய பல்லுடன் அவர் பேசும் கொங்குத் தமிழும் நடிக்கும் குணச்சித்திர நடிப்பும், தமிழில் எந்த நடிகரும் நடிகையும் செய்யாதது.

கிட்டத்தட்ட 1500 படங்களில் அவர் பண்ணாத பாத்திரங்களே  கிடையாது. அவர் கதாநாயகியாக நடித்த மாடர்ன் தியேட்டர்ஸின் 99 வது படமான ‘கொஞ்சும் குமரி’யில் கூட அந்தப் பாத்திரத்தைச் சரியாகவே பண்ணியிருப்பார். ஒரு நகைச்சுவைப் பாத்திரத்தை மையமாக்கி கதை இருந்திருந்தால், அது சர்வர் சுந்தரம் போல இன்னொரு படமாக அமைந்திருக்கும். மனோரமாவின் பல ரோல்களில் முகம்மது பின் துக்ளக் படத்தில் இந்திராகாந்தியின் சிகை அமைப்புடன் வரும் பாத்திரம் இன்னொரு சிறப்பு என்பேன். அதில் கலைஞரின் அப்போதைய முழக்கமான தமிழ் நாட்டுக்குத் தனிக்கொடி  உட்பட பல அரசியல் நிகழ்வுகளையும் அரசியல்வாதிகளையும் கிண்டல் செய்திருப்பார் சோ. அதை எழுதுவதற்கு சோவுக்கு தைரியம் இருந்திருக்கலாம்,அதில் ஆச்சரியமில்லை. ஆனால், நடிப்பதற்கு மனோரமாவுக்கு இருந்த துணிச்சல் பாராட்டிற்குரியது. நாகேஷுக்கு அடுத்தபடியாக சோவுடன்தான் அதிகப் படங்கள் பண்ணியிருக்கிறார். ஜெய்சங்கர், ராஜன்,முத்துராமன் போன்ற கதாநாயகர்களின் பல படங்கள் மனோரமாவாலேயே ஓடியிருக்கின்றன என்றால் மிகையில்லை. உதாரணம்,அவர் பாடும்’வா வாத்யாரே ஊட்டாண்ட...’ பாடல் இடம் பெறும்  பொம்மலாட்டம்.

’தமிழில் நாகேஷ் எப்படி ஒரு மகா கலைஞனோ அதே போலும் அதற்கு மிஞ்சியும் மனோரமா ஒரு பெரும் ஆளுமை.  இப்படியான வார்த்தைகள் எல்லாம் அந்த அற்புதமான ஆத்மாவுக்குத் தெரிய  வாய்ப்பில்லை, ஆனால் நடிப்பை ஆத்மார்த்தமாக வாழ்ந்தவர் மனோரமா. பொதுவாக சினிமாவில் எல்லாத் துயர்களும் சிக்கல்களும் கதாநாயக, நாயகிகளுக்கே வரும். உடன் நடிக்கிற நகைச்சுவை ஜோடிகள் பெரிய கஷ்டங்களை அனுபவிக்காமல் இணைந்து, கடைசிக் காட்சியில் நாயக நாயகிகளுடன் மீண்டும் சுபமாக இணைந்து விடுவார்கள். ஆனால் மனோரமாவின் சொந்த வாழ்க்கை அப்படி அமையவில்லை என்பது பெரிய முரணா அல்லது பல நகைச் சுவைக் கலைஞர்களின் எழுதப்படாத விதியா தெரியவில்லை.

எங்க வீட்டுப் பிள்ளையைத் தொடர்ந்து ‘சௌகார்’படத்தின் ரீ மேக் ஆக எங்க வீட்டுப் பெண் என்று ஒரு படம் வந்தது. கதைப்படி கதாநாயகி விஜய நிர்மலாதான்,  எங்க வீட்டுப் பெண். ஆனால் படத்தின் முக்கிய முடிச்சை அவிழ்த்து, சுபமாக முடித்து வைக்க உதவுபவர், சலவைத் தொழிலாளியாக வரும் மனோரமா. படத்திலேயே அதை முத்தாய்ப்பு வசனமாக எஸ்.வி.சுப்பையா மனோரமாவைப் பார்த்துச் சொல்லவும் செய்வார், “உண்மையைச் சொல்லணும்ன்னா கண்ணம்மா தான், ‘எங்க வீட்டுப் பெண்” என்று. ஆம், மனோரமா என்னும் தமிழ்க் கலையாளுமையைப் பொறுத்து அவர் நம்ம வீட்டுப்பெண் என்று பெருமை கொள்ளவைத்தவர் என்பது மிகப்பெரிய உண்மை.

நவம்பர், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com