நட்புன்னா என்னன்னு தெரியுமா?

ரமேஷ்
ரமேஷ்
Published on

சென்னைக்கு அருகே இருக்கும் தாம்பரப்பாக்கம் கிராமம். ஒன்றரை கிரவுண்ட் இடத்துக்குள் அடுத்தடுத்து அழகாகக் கட்டப்பட்டிருந்தன இரண்டு வீடுகள். இரண்டும் ஒன்று போலவே இருந்தன.

அன்றுதான் புதுமனை புகுவிழா.

சொந்தங்களும் சுற்றங்களும் கூடி இருந்தனர். அதிகாலையிலேயே புரோஹிதர் வந்து விட்டார். பூஜை புனஸ்காரங்களுக்கான பொருட்களும் ஆஜர்.

இரண்டு வீடுகளுக்கும் சேர்த்து ஒரே ஹோமம்  வளர்க்கப்பட்டது. இரண்டு வீடுகளின் சொந்தக்காரர்களும் நண்பர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள்.

இருவரையும் அவரவர் குடும்பத்துடன் மனையில் வந்து அமரும்படி அழைத்தார், புரோஹிதர்.

ஓரமாக நின்றிருந்த அவ்விரு இளைஞர்களும் ஒன்றாக வெளியே சென்று, வாசலில் பந்தி ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்த நண்பர்களை அழைத்து வந்தார்கள். நண்பர்களை மனையில் உட்காரச் சொன்னார்கள்!

குழப்பமாகி விட்டார்,புரோஹிதர்.

'என்ன தமாஷ் பண்றேள்? நீங்க ரெண்டு பேரும்தானே ஆத்துக்குச் சொந்தக்காரர்கள். இவங்களை உட்காரவச்சு, ஹோமம் பண்ணச்
 சொல்றீங்களே?!' என புரோஹிதர் கேட்க, 'இவங்க எங்க ஃப்ரண்ட்ஸ். இவங்க இல்லேன்னா நாங்க இல்லை. இவங்களே மனையில் உட்கார்ந்து பூஜை செய்யட்டும்!' என்றார்கள், இளைஞர்கள் இருவரும் ஒரே குரலில்!

தாம்பரப்பாக்கம் அருகே இருக்கும் புன்னம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம். வீட்டில் சகோதர சகோதரிகள் அதிகம். விவசாயக் குடும்பம்.

சிறுவயது முதலே படிப்பில் நாட்டமில்லை. ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு பள்ளிக்கூடத்துக்கும் போகவில்லை. கொஞ்சம் பெரியவனானதும் வெட்டியாக ஊர்சுற்ற ஆரம்பிக்கிறான். கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொண்டாவது பிழைத்துக் கொள்ளட்டும் தன் மகன் என்ற எண்ணத்துடன் பையனைக் கூட்டிக் கொண்டு பஸ்ஸில் ஏறுகிறாள் ராமின் தாய். சென்னை - மயிலாப்பூருக்குச்
செல்கிறார்கள் இருவரும். விவேகானந்தா கல்லூரி அருகே இருக்கும் மோட்டோர் பைக் மெக்கானிக் ஒருவரிடம் தன் பிள்ளையை ஒப்படைக்கிறாள்.

'விவசாய நிலத்துல இருக்கும் பம்ப் செட் மோட்டார் ரிப்பேரானா இவன் தான் பிரிச்சு மாட்டுறான். அது மாதிரி வேலைகள்ல இவனுக்கு ஆர்வம் அதிகமா இருக்கு. இவனை உங்க கூட வச்சுக்கங்க. உங்க தொழிலைக் கத்துக் கொடுங்க' என்கிறாள்.

உறவினர் ஒருவர் மூலம் ஏற்கெனவே அறிமுகமாயிருந்த நபர்தான் அந்த மெக்கானிக். மகனைக் கரையேற்றிவிட்ட நம்பிக்கையோடு கிராமத்துக்குத் திரும்புகிறாள் தன் பிள்ளையின் எதிர்காலத்தைச் சரியாகத் திட்டமிட்ட அந்தத் தாய்.

ராம்
ராம்அந்திமழை

வந்தவாசிப் பையன் ரமேஷ். ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறான். அதற்கு மேல் படிக்கவைக்க வீட்டில் வசதியில்லை. அவன் ஓரளவுக்கு வளர்ந்ததும் அவனது எதிர்காலம் குறித்த கவலை பிறக்கிறது பெற்றோருக்கு.

சென்னையில் வசிக்கும் உறவுக்காரர் ஒருவரின் வீட்டுக்கு அவனை அழைத்துக் கொண்டு செல்கிறார் அவனது தந்தை. 'இவனை ஏதாச்சும் ஒரு வேலைல சேர்த்து விடுங்க. உங்களுக்குப் புண்ணியமா போகும்' என்கிறார் தந்தை. பவ்யமாக நிற்கிறான் பையன்.

புல்லட் மோட்டோர் சைக்கிள்களை பிரமிப்போடு பார்ப்பதில் அவனுக்கிருந்த ஆர்வத்தைப் பார்த்து அவனது எதிர்காலத்தை முடிவு செய்தார் அந்த உறவுக்காரர். அவர் மூலம் அதே மயிலாப்பூர் மெக்கானிக் ஷெட்டில் வேலைக்குச் சேர்கிறான் அவனும்.

வெவ்வேறு மந்தைகளில் இருந்து பிரிந்து வந்த ராம், ரமேஷ் என்ற இரண்டு ஆடுகளும் ஒரே மேய்ப்பனின் நிழலில் ஒதுங்குகின்றன. இருவரும் இணை பிரியா நண்பர்களாகிறார்கள்.

சுறுசுறுப்போடும் கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடனும் இருக்கும் இரண்டு பேரையும் முதலாளிக்கு மிகவும் பிடித்துப் போகிறது. தொழில் நுணுக்கங்களை இருவருக்கும் கற்றுக் கொடுக்கிறார்.

அரை டிராயர் அணிந்தபடி ஸ்பானர் பிடிக்க வந்த அந்த இரண்டு சிறுவர்களும் இளந்தாரிகளாக வளர்ந்து நிற்கிறார்கள் இப்போது. ஏற்கெனவே பிரபலமாக இருந்த அந்த மெக்கானிக் ஷெட் அவர்களது கைராசியால் மேலும் பிரபலமாகி இருக்கிறது.

மயிலாப்பூர் சாந்தோம் ஹைஸ்கூலில் படிக்கும் ப்ளஸ் ஒன் பையன்கள் தங்கள் மொபெட்களை சர்வீஸ் செய்ய அந்த மெக்கானிக் ஷெட்டுக்குத்தான் கொண்டு வருகிறார்கள். படிப்பறிவு இல்லாத ரமேஷ், ராம் இருவரும் அந்தப் பள்ளிக்கூடத்துப் பையன்களுடன் நெருக்கமாகிறார்கள்.

நாளடைவில் ஸ்கூல் பாய்ஸ் ஒன்று கூடும் ஜங்ஷனாகவே ஆகி விடுகிறது அந்த மெக்கானிக் ஷெட். சிங்கிள் டீ வாங்கினாலும், எல்லோரும் பகிர்ந்து பருகி பாசம் வளர்க்கிறார்கள்.

என்னதான் நண்பர்களுடன் பேசிச் சிரித்தாலும், செய்யும் தொழிலில் சிதறாத கவனத்துடன் இருக்கிறார்கள் ரமேஷ், ராம் இருவரும்.

ப்ளஸ் ஒன் படித்தவர்கள் ப்ளஸ் டூவுக்குப் போகிறார்கள். தினமும் மெக்கானிக் ஷெட்டில் அவர்களது ஜமா கூடுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நட்பு ஒவ்வொரு நாளும் பலமாகிக் கொண்டே இருக்கிறது.

ஒரு நாள்.. தன் மெக்கானிக் ஷெட்டை மூடிவிட்டு, வெளிநாடு போய் பணம் சம்பாதித்து வரக் கிளம்பும் முடிவெடுக்கிறார், அதன் முதலாளி.
 அதை கொஞ்சமும் எதிர்பார்த்திராத இருவரும் அதிர்ச்சியாகிறார்கள்.

ஆளுக்கொரு திசையாக இனி பிரிந்து செல்ல வேண்டுமே என்ற சிந்தனையே அவர்களுக்குத் துயரத்தைக் கொடுக்கிறது. துவண்டு போகிறார்கள்.

தோள் கொடுக்க ஓடி வருகிறார்கள் ப்ளஸ் டூ பையன்கள். 'நீங்கள் எங்கேயும் போக வேண்டாம். எங்களை விட்டுப் பிரிஞ்சும் போக வேண்டாம். உங்களுக்கு இருக்கும் திறமைக்கு நீங்கள் ஏன் சொந்தமா ஒரு கடை ஆரம்பிக்கக்கூடாது?' என்று தூண்டுகிறார்கள் அத்தனை பேரும்.

தனியாக கடை திறக்க வேண்டுமென்றால் அதற்கு நிறைய பணம் வேண்டுமே! கைகளைப் பிசைந்தபடி நிற்கிறார்கள் இருவரும்.

'கவலைப்படாதீங்க மச்சான்ஸ். நாங்க இருக்கோம்ல..' என்று உற்சாகப்படுத்தும் பள்ளிப்பையன்கள் உடனடியாகக் களத்தில் இறங்குகிறார்கள். அவரவர் வீடுகளுக்குத் தெரிந்தும் தெரியாமலும் பணம் திரட்டுகிறார்கள். தங்கள் பாக்கெட் மணியைப் பத்திரப்படுத்துகிறார்கள்.

நண்பர்கள் உடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் உற்சாகம் பிறக்கிறது ரமேஷ், ராம் இருவருக்கும். அத்தனை வருடங்களாக தாங்கள் உழைத்துச் சம்பாதித்ததில் சேமித்து வைத்த கொஞ்சம் பணத்தையும், கடன் வாங்கிச்
சேர்த்த கூடுதல் பணத்தையும் எடுத்துக் கொண்டு வருகிறார்கள் அவர்கள். முன்பணம் கொடுத்து ஒரு இடத்தை வாடகைக்குப் பிடிக்கிறார்கள். மோட்டார் சைக்கிள்களை சர்வீஸ் செய்யத் தேவைப்படும் உபகரணங்கள் மொத்தத்தையும் தங்கள் பணத்தில் வாங்கிக் கொண்டு வந்து நிற்கிறார்கள் பள்ளிக்கூடத்துப் பையன்கள்.

சுபயோக சுபதினத்தில் உதயமாகிறது.. 'அம்மன் ஆட்டோ மொபைல்ஸ்'.

பள்ளிக்கூடம் விட்டதும் நேராக மெக்கானிக் நண்பர்களைப் பார்க்க ஓடி வருகிறார்கள் ப்ளஸ் டூ பையன்கள்.

இருட்டும் வரை அங்கேயே பொழுதைக் கழிக்கிறார்கள். எழுதப்படிக்கச் சிரமப்படும் மெக்கானிக் நண்பர்களுக்கு உதவும் நோக்கத்தில் பில் போடுவது, பணம் வாங்குவது, கஸ்டமர்களிடம் பேசுவது, சர்வீஸ் செய்யப்பட்ட வாகனங்களைத் துடைத்துச் சுத்தம் செய்து கொடுப்பது, உதவி ஒத்தாசை புரிவது, என எல்லா வேலைகளையும் மாணவ நண்பர்களே எடுத்துச் செய்கிறார்கள்.

கடை ஆரம்பிப்பதற்கு வாங்கிய கடன்களை அடைக்க வேண்டுமே என்ற வைராக்கியத்தில் அல்லும் பகலும் உழைக்கிறார்கள் ராம், ரமேஷ் இருவரும். பெரும்பாலான நாட்களில் ஒரு வேளை உணவுதான். காபி, டீ குடிப்பதில்லை. குருவி சேர்க்கும் தானியம் போல ஒவ்வொரு நயா பைசாவையும் சேர்த்து வைக்கிறார்கள். வாங்கிய கடன்களுக்கு வட்டி கட்டுகிறார்கள்.

தங்களுக்குத் தெரிந்தவர்களைப் பிடித்து இழுத்து வந்து கஸ்டமர்களாக ஆக்குகிறார்கள் பள்ளிப் பையன்கள். ராம், ரமேஷ் இருவரின் தொழில் நேர்மை காரணமாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. சகல விதமான டூ வீலர்களையும் பழுது பார்க்கும் சரியான இடமாக அந்த மெக்கானிக் ஷெட் பிரபலமாகிறது.

சேர்த்து வைக்கும் பணத்தை சீட்டுப் போட்டுச்
சேமித்தால் வட்டியில்லாமல் பெரும் தொகையாக எடுக்க முடியும் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள் பள்ளிப்பையன்கள்.

ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்த பையன்கள் கல்லூரிகளுக்குள் காலடி எடுத்து வைக்கிறார்கள்.

உயர் படிப்புகளுக்காக வெளியூர் செல்லும் பையன்கள், 'மிஸ் யூ மச்சான்ஸ்' சொல்லி வருத்தத்துடன் பிரிகிறார்கள். உள்ளூர்க் கல்லூரிகளில் சேரும் பையன்கள் அப்படியே இருக்கிறார்கள். நட்பைத் தொடர்கிறார்கள். கிடைக்கும் விடுமுறை நாட்களில் ராம், ரமேஷ் இருவரையும் பார்க்க மெக்கானிக் ஷெட்டுக்கு ஓடி வந்து விடுகிறார்கள்.

அதே நட்பு.. அதே உற்சாகம்.. அதே அரட்டை.. அதே தேநீர் இனிப்பு.. தொடர்கிறது அதே பந்தபாசம்!

அடுத்து என்ன.. கல்யாணம் தானே! முதலில் ரமேஷுக்குத் திருமணம் நடக்கிறது. ஓரிரு வருடங்களில் ராமுக்கும் டும்டும்டும்!

அவர்கள் இருவரும் ஈருடல், ஓருயிர் என்பதைப் புரிந்து கொண்ட அவரவர் மனைவிகளும் உடன் பிறவா சகோதரிகளாகிறார்கள். ரமேஷ், ராம் இருவரின் நண்பர்கள் அனைவரும் அவர்களது அன்புக்குரிய அண்ணன்களாகிறார்கள்.

நட்பு வட்டத்துக்குள் இருக்கும் ஓரிருவர் தவிர அனைவருக்கும் திருமணம் முடிந்து, ஆளுக்கொரு திசைக்குச் சென்று, ஒவ்வொருவரும் வெவ்வொரு பணிகளில் இருக்கிறார்கள். ஆனாலும், அம்மன் ஆட்டோமொபைல்ஸில் அடிக்கடி கூடும் ஒரு கூட்டுப் பறவைகளாகவே இப்போதும் இருக்கிறார்கள்.

பல வருட உழைப்பு மற்றும் சிக்கனத்தினால் சொந்தமாக ஒரு இடம் வாங்குகிறார்கள் ரமேஷ், ராம் இருவரும். ஒரே மாதிரியான வடிவமைப்பில் இரண்டு வீடுகள் கட்டிக் கொள்கிறார்கள்.

இடம் வாங்குவதற்கும், வீடு கட்டுவதற்கும் அதே நண்பர்கள் தங்களால் ஆன உதவியைச் செய்கிறார்கள்.

அந்த வீட்டின் புது மனை புகு விழாவில் தான் கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டிருக்கும் நட்புக்கு மரியாதை நடந்தேறியது!

ப்ளஸ் ஒன் காலத்தில் ஆரம்பித்து இன்றுவரை ராம், ரமேஷ் இருவருடனும் தொடர்பில் இருக்கும் நண்பர்களில் ஒருவரான லட்சுமணன் மூலம்தான் இந்த விஷயம் அறியக் கிடைத்தது.

'இவன் தான் ராம்.. இவன் ரமேஷ்..' என இந்த 'கதையல்ல நிஜ'த்தின் கதாநாயகர்கள் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தார் லட்சுமணன். உடன் இருந்த மற்ற நண்பர்களான மகாராஜா, சஞ்சய், புஷ்பா, செல்வம், மகேஷ் அனைவரும் புன்னகையுடன் கைகுலுக்கினார்கள்.

'கிரஹப்பிரவேசம் அன்னிக்கு இவனுங்க ரெண்டு பேரும் எங்களைக் கூப்பிட்டு மனையில் உட்காரச் சொன்னதும் நாங்க அப்டியே ஷாக் ஆகிட்டோம்' என்று லட்சுமணன் கூற, எல்லோரும் சிரித்தார்கள். அடுத்த நிமிடமே சீரியஸானார்கள்!

'ரொம்ப வற்புறுத்தித்தான் இவனுக ரெண்டு பேரையும் மனையில் உட்கார வச்சோம். ரொம்ப நெகிழ்ச்சியான நாள் அது. அதை இப்ப நினைச்சாலும் கண் கலங்கிடும். அதை மறைச்சுக்கத்தான் இப்படி கிண்டலா பேசி சிரிச்சுக்குவோம்' என்றார் லட்சுமணன்.

பத்து கேள்வி கேட்டால் ஒரே ஒரு வார்த்தையில்தான் பதில் கூறினார்கள் ராம், ரமேஷ் இருவருமே! அநியாயத்துக்கு சங்கோஜப்பட்டார்கள்!

அவர்கள் பேசிய துண்டு துக்கடா வார்த்தைகளைச் சேர்த்துப் படித்தால் இப்படித்தான் வருகிறது.. 'மிகவும் சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து சென்னை வந்த கிராமத்துப் பையன்கள் நாங்கள் இருவரும். நட்பு என்ற உறவு எங்கள் இருவரையும் இணைத்து வைத்தது. படித்தவன் & படிக்காதவன், ஏழை & பணக்காரன், ஜாதி & மதம்.. என எந்த வித்தியாசமும் பார்க்காமல் எங்கள் மீது அன்பு காட்டினார்கள் எங்களுக்குக் கிடைத்த நண்பர்கள். எங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு அத்தியாயமும் நட்பினால் கிடைத்த வெகுமானமே! இந்த நண்பர்கள்தான் நாங்கள் சம்பாதித்திருக்கும் மிகப்பெரிய சொத்துகள்!'.

'இவனுங்க எப்பவும் இப்படித்தாங்க. ஒரு டீ வாங்கி ரெண்டு பேரும் குடிப்பானுக. ஒரே பைக்ல தான் ஷெட்டுக்கு வந்து போவானுக. வார்த்தைகளைக்கூட
சிக்கனமாத்தான் பயன்படுத்துவானுக.' என்று கிண்டலடித்தார்கள் கூட இருந்த நண்பர்கள் அனைவரும்.

அவர்களை போலி கோபத்துடன் ராம் முறைக்க.. ரமேஷ் தன் கையில் பிடித்திருந்த ஸ்பானரை எடுத்துக் கொண்டு அடிக்கப் போக.. பள்ளிக்கூட மாணவர்கள் போலவே கள்ளம் கபடமில்லாமல் சிரித்தார்கள் அனைவரும்.

நட்பு என்றால் என்னவென்று தெரிந்தது!

ஆகஸ்ட், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com