வேலூர் மேல் விஷாரத்தில் உள்ள சி அப்துல் ஹக்கீம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் உள்ள நிர்வாகவியல் துறை மாணவர்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி வகுப்பொன்றை நிகழ்த்தினார் அந்திமழை நிறுவிய ஆசிரியர் டாக்டர் என். இளங்கோவன். கல்லூரியின் முதல்வர் முனைவர் தனசேகரன், துறைத்தலைவர் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்வில் தமிழ்நாட்டு இளைஞர்கள் தொழில்துறையில் ஆர்வமுடன் ஈடுபடவேண்டியதன் அவசியத்தை பல்வேறு உதாரணங்கள் மூலம் விளக்கினார் இளங்கோவன்.
‘இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே முன்னணி ஐடி நிறுவனமாக திகழும் டிசிஎஸ் கடந்த ஆண்டு ஈட்டிய வருவாய் 1,35,963 கோடி. இதை இப்படிச்சொல்வதை விடவேறுவிதமாக ஒப்பீடு செய்து பார்க்கலாம். தமிழ்நாடு என்கிற நமது மாநிலத்தின் கடந்த ஆண்டு பட்ஜெட்டின் மதிப்பு 1,35,000 கோடி. அதில் வருவாய் பற்றாக்குறை மதிப்பு 20,000 கோடி! ஆக தமிழ்நாடு என்பதை ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக எடுத்துக்கொண்டால் டிசிஎஸ் நம்மை விட பெரிய நிறுவனம். தொழில்துறையில் வளர்ச்சி என்பதற்கு எல்லையே இல்லை. தொழில்நிறுவன வளர்ச்சி என்பது ஒரு நாட்டின் மாநிலத்தின் வளர்ச்சியும்தான். எனவே தமிழ்நாடு மாநிலமாக வளரவேண்டும் என்றால் இங்கிருந்து ஏராளமான தொழில்நிறுவனங்களும் உருவாகி வளரவேண்டும்' என்று விவரித்தவர் தமிழ்நாட்டின் பெருமைக்குரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் நிறுவனத்தின் ஆரம்பகால கதையை சுவாரசியமாக விவரித்தார்.
‘ஆரம்பத்தில் பேருந்துகளை இயக்கினார் திரு சுந்தரம் அவர்கள். நேர அட்டவணைப்படி சரியான முறையில் அவற்றை இயக்கிட பல உத்திகளை அவர் கையாண்டார். வாகனங்களின் டயர்கள் பஞ்சர் ஆகிவிடக்கூடாது என்பதற்காக சாலைகளில் கிடக்கும் கூரான ஆணி போன்ற பொருட்களை அகற்ற காந்தம் பொறுத்தப்பட்ட வாகனம் ஒன்று முன்கூட்டியே செல்லும்.
அதே போல பின்னர் கார்களை வாங்கி விற்றபோது அவற்றை அந்த காலத்தில் ஜமீன்தார்களாக பணக்காரர்களாக இருந்தவர்களிடம் விற்க, ஓட்டுநருடன் கார்களை சில நாள் அவர்களின் பயன்பாட்டுக்கு விட்டுச்செல்லும் வர்த்தக உத்தியைக் கடைப்பிடித்தார். சில காலம் கார்களின் வசதியான பயணத்துக்குப் பழகிய அந்த பணக்கார மனிதர்கள் கார்களை வாங்கிக்கொள்ள முன்வந்தனர்.. இது போன்ற வணிக உத்திகளால்தான் இன்று கல்லிடைக்குறிச்சி என்ற சிறிய கிராமத்திலிருந்து புறப்பட்ட ஒரு மனிதர் தொடங்கிய நிறுவனம் அறுபதாயிரம் பேர் பணிபுரியும் நிறுவனமாக வளர்ந்துள்ளது,' என்று விளக்கிச் சொன்னார்.
‘1969-இல் இந்தியாவின் டாப் டென் தொழில் நிறுவனங்களாக இருந்தவற்றின் பட்டியலில் டாடா, பிர்லா, வால்சந்த போன்றவை இருந்தன.2005-இல் அந்த பத்து நிறுவனங்களில் இரண்டு மட்டுமே டாப் டென் நிறுவனங்கள் பட்டியலில் நீடிக்கின்றன. புதிய நிறுவனங்கள் அவற்றை பின்னுக்குத் தள்ளிவிட்டன. இந்த புதிய பட்டியலிலும் இரண்டு நிறுவனங்கள் வெறும் 25000 ரூபாய்க்குக் குறைவான முதலீட்டில் தொடங்கப்பட்டு மிகவேகமாக உயர்ந்து டாப் டென் பட்டியலில் இடம்பிடித்தவை. ஆகவே புதிய தொழில் தொடங்கினால் முன்னுக்கு வரமுடியுமா என்ற கேள்வியை கைவிடுங்கள். தொழில்முனைவோருக்கு எப்போதுமே வெற்றிக்கான வாசல் திறந்தே இருக்கிறது!' என குறிப்பிட்டார் அவர்.
ஏப்ரல், 2022