தொப்பையும் அழகுதான்!

தொப்பையும் அழகுதான்!
Published on

திரைத்துறையிலுள்ள பலர் தாங்கள் செய்து கொண்ட உடல் குறைப்பு அறுவை சிகிச்சை (Bariatric Surgery) பற்றி வெளியே சொல்வதில்லை. ஆனால் நான் அப்படியல்ல.

2012ஆம் ஆண்டு எனது எடை 135 கிலோ.  அறுவை சிகிச்சை செய்தபின் எனது எடை 96 கிலோ ஆனது, அதை மெயின்டெயின் செய்கிறேன். 96 கிலோ எடை குறைவானது அல்ல ஆனால், எனது வயதிற்கு இது ஓகே. சாதாரண வழிமுறையில் எடையைக் குறைக்க வேண்டும். முடியாத பட்சத்தில்  இந்த அறுவைசிகிச்சை செய்யலாம். நமது நாட்டின் மிகப் பெரிய துரதிர்ஷ்டம் உடல் பருமனானவர்களை காமெடியனாக பார்ப்பது தான்', இது பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஜூன் 2019 இல் நடந்த  எம்.ஜி.எம் ஹெல்த் கேரின் எடைகுறைப்பு அறுவை சிகிச்சைத் துறையின் தொடக்கவிழாவில் பேசியது.

என்னளவில் எஸ்.பி.பியை பார்க்கும் போதெல்லாம் அவரது குரலின் வசீகரம் உடல் பருமனை எனது பார்வையிலிருந்து அகற்றி விடும்.

‘எந்த விலங்கும்

இரைப்பைக்கு மேல்

இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை

எங்கேனும்

தொப்பைக் கிளியோ

தொப்பை முயலோ

பார்த்ததுண்டா?' என்கிற வைரமுத்துவின் கவிதை வரிகள் தொப்பையுள்ள மனிதனை ஏளனமாகப் பார்க்கிறது.

‘யாரைப் பார்த்தாலும் முதலில் அவர்கள் தொப்பை எந்த ரகம் என்று கண்டு பிடித்துவிடுவேன். வீட்டிற்கு எந்த விருந்தாளி வந்தாலும் நான் முதலில் கவனிப்பது தொப்பையைத் தான். சிலருக்கு ஆப்பிள் தொப்பை, சிலருக்கு பேரிக்காய் தொப்பை, மடிப்பு தொப்பை, பீர் தொப்பை, வெண்ணெய்ப் பானை தொப்பை, சரிந்த தொப்பை, இரட்டை குழந்தை தொப்பை இப்படி ஒரு டிக்‌ஷனரியே உருவாக்கி விட்டேன். என் மாமாவின் நண்பர் மாரி அவர்களுக்கு தொப்பை கிடையாது. இத்தனைக்கு அவர் சராசரி மனிதர்களை விட மூன்று மடங்கு அதிகம் சாப்பிடுவார். அவரை பார்க்கும் போதெல்லாம் என் மாமாவுக்கு கோபம் வரும். அந்த ஆளுக்கு  ‘களவாணி வயிறுப்பா‘  என்று சொல்வார்.' இது தொப்பை பற்றி கௌதமன் நாகமுத்து எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி.

தொப்பை படுத்தும் பாடும், தொப்பையால் அடுத்தவரிடம் படும் பாடும் கொஞ்ச நஞ்சமில்லை என்கிற அங்கலாய்ப்புகள் திரும்பும் திசையெங்கும்.

தொப்பை உள்ளவர்கள் சோம்பேறிகள், சரியாக வேலை பார்க்க மாட்டார்கள், அவர்களால், ஷூ லேசைக் கட்ட முடியாது, எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள் என்று விதவிதமான கட்டுக்கதைகள் உலாவுகின்றன.

எத்தனை மாசம்?,  எந்த கடையில் அரிசி வாங்குகிறாய், ever pregnant never delivery your தொப்பை என்று செல்லமாகக் குத்துபவர்கள், பந்தியில் அவனுக்கு கூடுதலாகக் கொஞ்சம் சாப்பாடு போடு என்கிற பக்கத்து இலைக்கார நண்பர், பிள்ளைகள் உன் தொப்பையில் சறுக்கு மரம் விளையாடலாம் என்ற கிண்டல்களுக்குக் குறைவிருக்காது.

காலையில் எழுந்து நாற்பத்தைந்து நிமிடம் ஓடணும் இல்லை நடக்கணும், வாயக்கட்டணும், வயித்தக் கட்டணும், காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான சுடுநீரில் ஒரு டீஸ்பூன்  தேன் கலந்து குடித்தால் இரண்டு மாசத்தில் தொப்பை காணாமல் போய்விடும், சிலர் தேனோடு இஞ்சி சாறை சேர்த்து அருந்த சொல்வார்கள். இது போன்ற இலவச ஐடியாக்கள் தொப்பையுடையவர்களை ஏவுகணைகளாகத் தொடர்ந்து தாக்கும்.

வசதி வாய்ப்புகள் உயர உயர, வாழ்க்கை முறை மாறி, உடலுக்கான வேலை குறைந்து, உணவுப் பழக்கங்கள் ஒழுங்கற்று போகும் போது தொப்பை இரைப்பையின் மேல் மெல்ல மெல்ல வளர்ந்து விஸ்வரூபம் எடுக்கிறது.

வயது முதிர்ச்சி, மரபணு , உடற்பயிற்சி இல்லாதது, ஆரோக்கியமற்ற உணவுகள், மன அழுத்தம், தூக்கமின்மை, சிசேரியன் போன்ற அறுவை சிகிச்சைகள் ஆகியவை தொப்பைக்கு காரணமாகலாம்.

எது தொப்பை? 35 இன்ச் (94 செ.மீ) மேல் பெண்களின் இடுப்பின் சுற்றளவும். 40 இன்ச் (102 செ.மீ) மேல் ஆண்களின் மத்திய பிரதேச சுற்றளவும் இருந்தால் தொப்பை என்கிறது பிரிட்டனின் தேசிய உடல்பருமன் அமைப்பு.

பிஎம்ஐ (BMI)  -40க்கு மேல் இருந்தால் சம்பந்தப்பட்டவர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்கிறார்கள்.

பிஎம்ஐ-க்கு கொழுப்புக்கும் சதைக்கும் வித்தியாசம் தெரியாது. தான் முழு திறனோடு இருந்த காலகட்டத்தில் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கருக்கு பிஎம்ஐ எடுத்துப் பார்த்திருந்தால் அவரது பிஎம்ஐ அதிகமாகத் தான் இருந்திருக்கும் என்றொரு எதிர்க் கருத்துள்ளது.

எனக்கு நினைவு தெரிந்த பரிச்சயமான முதல் தொப்பை எனது தாத்தாவினுடையது (அம்மாவின் அப்பா). ஆறடிக்கு மேல் உயரம். ஆஜானுபாகுவான உடல் கட்டுள்ள அவரது பெரிய தொப்பையால் எந்த நோய் நொடியும் இல்லாமல் 85 வயதில் காலமானார். தொப்பை இருந்தால் இருதய நோய் மற்றும் கேன்சர் வரும் என்று படிக்கும் கேட்கும் போதெல்லாம் என் தாத்தா நினைவிற்கு வருவார்.

தொப்பையும் அழகு தான் என்று விதவிதமான விநாயகரின் சிலைகளை பார்க்கும் போது தோன்றும்.

‘ என் வயிறை நான் வெறுக்கிறேன். அதைச் சுருக்கவே முடியவில்லை. என் தொப்புளைச் சுற்றியுள்ள பகுதி என்னை வெறுப்பேற்றுகிறது‘ என்ற  அமெரிக்க நடிகை கார்மென் எலெக்ட்ராவின் வார்த்தைகள் எண்ணற்றோரின் மனக்குரலாக (Mind Voice) உள்ளது.

நடுவயதுக் காரர்களுக்கானது தான் தொப்பை என்ற காலம் மலையேறி சிறுவர்களிடமும் தொப்பை பரவலாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கோவிட் காலத்தில் உண்மையான பெருந்தொற்றாக பரவியது தொப்பை தான். தொப்பை பற்றிய விரிவான/சரியான புரிதலை இந்த சிறப்புப் பக்கங்கள் தரும்.

நீங்கள் நடிகர் விஜய் போல் சிக்கென்றும் இருக்கலாம், நடிகர் மோகன்லால் போல் கொஞ்சம் கூடுதலாக பூசியது போலும் இருக்கலாம் தொப்பையுடன். ஆனால் ஆரோக்கியம் சுறுசுறுப்பிலும் தொடர்ந்து இயங்குவதிலும் இருக்கிறது.

ஜூன், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com