தேவை ஒரு பெண்ணுடல்

Published on

உஸ்மான் சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தேன். பாதைவாசிகள் படுத்தும் உட்கார்ந்தும் நிறம் மாறும் பொழுதுகளை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சுவரில் அம்மன் படம் சாயம் வெளுத்திருந்தது. குழம்பு கொதித்தது. பத்துப் பன்னிரெண்டு வயது சிறுமி ஒரு குழந்தைக்கு முத்தம் கொடுத்துச் சிரித்துக்கொண்டிருந்தாள்.

காணாமல்போகும் பெண் குழந்தைகளையும் பெண்களையும் பற்றிய எந்தச் செய்திகளையும் அவள் அறிந்திருக்கமாட்டாள். நாளை அவளே கூட அப்படி ஒரு செய்தி ஆகலாம்; அல்லது அதுவும் திட்டமிட்டு மறைக்கப்படலாம்.

அதிகாலையில் நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தின் நடைமேடையில் திருமணமாகாத 24 வயது சுவாதி கொல்லப்பட்டிருக்கிறாள். நடு இரவில் இராயப்பேட்டையில் வீட்டுக்குள் உறங்கிக்கொண்டிருந்த பாண்டியம்மாள் அவளது மூன்று மகள்களோடு சேர்த்துக் கொல்லப்பட்டு நான்கு உடல்களும் நிர்வாணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இன்று வீடு, வெளி இரண்டுமே பெண்களுக்குப் பாதுகாப்புக்கு உரியதாக இல்லை.

ஒரு பெண் யாரோடு வாழ விரும்புகிறாள் என்பது அவளுடைய உரிமை; பிரிய நினைப்பது அவளது சுதந்திரம். இதை இப்படி எந்தப் பெண்ணும் வெளிப்படையாகச் சொல்லிவிட முடியாது. சொல்பவள் குடும்பப் பெண்ணாக இருக்க முடியாது. இதுதான் நம் சமூகம்.

ஒரு பெண்ணின் மனதுக்கும் உடலுக்கும் இடையிலேயே பலநூறு மைல் தூரம் இருக்கிறது; ஆயுள்வரை எந்தப் பெண்ணும் நமது சமூகத்தில் இந்தத் தூரத்தை முழுதாகக் கடந்திருக்கமாட்டாள்.

அவள் காவல் அதிகாரியாக, இராணுவ அதிகாரியாக முரட்டுச் சீருடையில் இருந்தாலும் அந்த உடைக்குள்ளிருப்பது பலவீனமான அவளது பெண்ணுடல்தான் என்கிற சிந்தனையை அவளுக்குள் திணித்து வேட்டையாடிக்கொண்டிருக்கிறார்கள் வீரியக் கட்டற்ற ஆண்விரியர்கள்.

ஆண் திமிரை நிலைநாட்டிக்கொள்ள; சாதி மதப் பெருமைகளைச் சொல்ல; பண்பாட்டுச் சட்டங்களை எழுதிவைக்க எல்லாவற்றுக்கும் இங்குப் பெண்ணுடல்களே தேவைப்படுகின்றன.

ஆண்களின் மதுக்கோப்பைகளில் பனிக்கட்டிகளாகப் பெண்களின் உறுப்புகளே மிதக்கின்றன; அவர்களின் சாம்பல் கிண்ணங்களிலிருந்து பெண்களின் பெருமூச்சே புகையாக வெளியேறிக்கொண்டிருக்கிறது. பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத பத்து நாடுகளில் இந்தியா இப்போது மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நமக்கு முன்னால் காங்கோ குடியரசும், ஆப்கானிஸ்தானும் இருக்கின்றன.

பெண்ணை வெறும் உடலாகப் பார்த்தாலும் அது கேட்கிற அன்பையும் காதலையும் காமத்தையும் முழுமையாகத் தர முடியாத - அவளை வெல்ல முடியாத பலவீனர்களாகவே இங்கே ஆண்கள் இருக்கிறார்கள் என்று ஓஷோ நம் கன்னங்களில் ஓங்கி அறைகிறார்.:

 “பேரழகியான கிளியோபாட்ராவைப் பற்றி ஒரு கதை கேள்விப்பட்டேன். அவள் இறந்ததும் பழைய எகிப்து சடங்குப்படி மூன்று நாட்கள் அவள் உடம்பு புதைக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்தது. அந்த மூன்று நாட்களிலும் அவள் உடலுறவு கொள்ளப்பட்டாள். எனக்கு இது முதன்முதலாகத் தெரியவந்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன். அவள் உடலுடன் (ஒரு பிணத்துடன்) உறவு கொண்ட மனிதன் எப்படிப்பட்டவனாக இருந்திருப்பான்? ஆனால் பின்பு அது அவ்வளவு விநோதமான விஷயமல்ல என்பதை உணர்ந்தேன். எல்லா ஆண்களுமே பெண்களுடன் உடலுறவு கொள்ளும்போது அவர்களைப் பிணங்களின் நிலைக்குக் குறைத்தே விடுகிறார்கள்”.அங்கிருந்து  என்னால் நகரவே முடியவில்லை.

ஜூலை, 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com