தெருவெல்லாம் தமிழோசை!

தெருவெல்லாம் தமிழோசை!
Published on

அது ஒரு முன் பனிக்காலம். சில்லென்ற குளிர்க்காற்று இதமாகத் தழுவிக் கொண்டிருந்தது. அண்ணாச்சி கடை வாசலில் நாங்கள் எட்டுப்பேர், அன்று மனப்பாடம் செய்த திருக்குறளை ஒருவர் மாற்றி ஒருவராகச் சொல்லிக் கொண்டிருந்தோம். கடைக்கார அண்ணாச்சிக்கு தமிழ்ப் பற்று அதிகம்.

சொல்லப்போனால் அவர் ஒரு கம்யூனிஸ்ட்! அவர் ஈற்றடி சொல்வார்! அந்த திருக்குறளை உடனே சொன்னால் , ஒரு வேர்க்கடலை பர்பி தருவார்! நெஞ்சில் திருக்குறளோடு அண்ணாச்சியும் இருக்கிறார்.

 டாக்டர் மு.வ அவர்களின் எழுத்துகள் இளைஞர்களை கட்டிப்போட்டிருந்தது. அவரது கதா நாயகர்கள் போல வாழ்வது இளமையில் எங்கள் லட்சியம்.! வீணாகக் கூடிக் கலையாதீர்கள் என்று அண்ணாச்சி எங்களை தமிழ் மன்றம் ஆரம்பிக்க வைத்தார். மே.வீ.வேணுகோபால்  பிள்ளை & தமிழ் மேதை எங்களை வழி நடத்தினார். எத்தனையோ அறிஞர்களை அழைத்து பேச வைத்தோம். ! அன்று  தமிழ் நாட்டில் தமிழ் அறிஞர்களின் அமைப்பாக  'புலவர் குழு ' செயல்பட்டது. ஆகவே தமிழ் அறிஞர்களை அறிந்து, பேச அழைப்பது எளிதாக இருந்தது.

மே.வீ.வேணுகோபால பிள்ளை  தலைமையில் ஒரு முறை பாரதிதாசன் பேசினார். மறக்க முடியாத உரை! ஸ்ரீ ரங்கநாதனையும், தில்லை நடராஜனையும் பீரங்கி கொண்டு பிளக்கும் நாள் எந்நாளோ' என்பது அவரது சொல்லாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. ''நான் ஏன் அப்படி சொல்கிறேன். என் உள்ளத்தில் கலை நயம் உண்டு. சிற்பியின் கை வண்ணத்தை ரசிப்பவன். அது என் பாட்டல்ல,'' என்று முழங்கினார் பாரதிதாசன்.

மா.ராசமாணிக்கனார்,பன் மொழிப்புலவர் கா.அப்பாத்துரை , கி.வ.ஜகன்னாதன், அன்பு கணபதி & இப்படி எங்கள் கூட்டத்தில் பேசியவர்கள் பட்டியல் நீளும். ஆண்டு விழாவை  மூன்று நாள் விழாவாக திருக்குறள், கம்பன், சிலப்பதிகாரம் என்று கொண்டாடினோம். ராஜாஜி துவக்கி வைத்து தட்டிக் கொடுத்தார். எங்கள் அபிமான தமிழ்வாணன் கலந்து கொண்டார். மனிதம் என்ற தடிமனான கையெழுத்து பிரதியை வெளியிட்டோம். முத்தான கையெழுத்தில் பஸ் கண்டக்டராக பணியாற்றிய வேணு கானன் எழுதினார்.

தங்கள் பெயரை தமிழ் பெயராக மாற்றிக்கொண்டவர்கள் பலர். கபிலன், பாரி, தமிழ்வேந்தன், அவ்வை அடிமை.. இப்படி.. இந்த தமிழ் மன்றம் என்ன ஆயிற்று? கணக்கில்லாமல் நாங்கள் சேர்த்து வைத்த தமிழ் புத்தகங்களுக்கு என்ன நடந்தது? கடைசியாக பார்க்கலாம்.

அன்று தெருவெல்லாம் தமிழ்முழக்கம்! அறிஞர்

அண்ணாவின் தம்பிகளால் தமிழ் முழக்கம் கேட்ட  நாட்கள். பல தமிழ் மன்றங்கள் இருந்தன. அவர்கள் நடத்திய தமிழ் இலக்கிய விழாக்களும் சென்னையில் மூலை முடுக்குகளில் நடந்தன.

வட சென்னையில் மணவழகர் (திரு.வி.க) மன்றம் மூன்று நாட்கள் தமிழ் விழா நடத்தும். பஸ் போகாத இடம், நடந்து போவோம்  செவிக்கு நல்ல விருந்து, நள்ளிரவு வீடு திரும்புவோம். நாவலர் நெடுஞ்செழியனின் அருமையான பேச்சு!

ப.ஜீவானந்தம் நடத்திய கம்பர் வகுப்புகள்! டவுனில் ஒய்.எம்.சி.ஏ வில் நடத்திய சிலப்பதிகார கூட்டங்கள்.., டாக்டர் சிதம்பரநாதனின் நளினமான தமிழ் பேச்சு!

ஆக்கூர் அனந்தாச்சாரி என்ற விடுதலை தியாகி மகாகவி பாரதியின் ரசிகர் அவர். தி.நகர் வாணி  மகாலில் மூன்று நாட்கள் பாரதியாருக்கு விழா எடுப்பார். சிலம்புச் செல்வர் மா.பொ.சி தான் தலைமை.

மா.பொ.சியின் கம்பீரமான குரலில் பாரதி பாடல்களின் வலிமை புரிந்தது. ‘கம்பன் என்றொரு மானிடன் பிறந்ததும் சேரன் தம்பி சிலம்பை

இசைத்ததும், தெய்வ வள்ளுவன் வான்மறை தந்ததும்,' & ஆங்கில கல்வி படித்தவர்கள் அறிய மாட்டார்கள். என்ற பாரதியின் வருத்தம் மா.பொ.சியின் குரலில் வெளிப்படும்.  'குயில்' பாட்டை தெ.பொ.மீ விவரித்தது இன்றும் மனதில்! இங்கே தான் டி.கே சண்முகத்தின்  கப்பலோட்டிய தமிழன் நாடகம் அரங்கேறியது.

அப்பொழுதெல்லாம் அண்ணாசாலை ராஜாஜி மண்டபத்தில் 'கம்பன் விழா ‘ நடக்கும். ஜஸ்டிஸ் மகாராஜன் தலைமை வகித்த விழாவில் கி.ஆ.பெ. விசுவநாதன் பேசியதை கேட்டு 'தமிழின்  அழகில்' சொக்கிப்போனார்கள்.

“என் பேச்சு ரேடியோவில் ஒளிபரப்ப மாட்டார்கள் என்று கி.ஆ.பெ.சொன்னதும் கூட்டமே வருந்தியது.

'அப்பர் பற்றி ஒரு விழா , குன்றக்குடி அடிகளார் தலைமை வகித்தார். ப.ஜீவானந்தம் பேசினார். அப்பரின் தொண்டு பற்றி ஜீவா பேசப் பேச அடிகளார் மெய்மறந்தார். பெரும் கூட்டமும் அப்படியே, ஜீவா பேசி அமர்ந்தார்.

குன்றக்குடி அடிகளார் எழுந்தார்.''என் உரை கிடையாது , அவசியமும் இல்லை. ஜீவா பேசியதை எண்ணிப்பார்த்து கலைந்து செல்லுங்கள்'' என்றார்.

கம்பர் அடிப்பொடி என்று தன்னை அழைத்துக் கொண்ட சட்டை அணியாத சா.கணேசன் ' கம்பன் வாழ்க, கம்பன் புகழ் வாழ்க,  கன்னித்தமிழ் வாழ்க, என்று கணீர் குரலில் கம்பர் விழாவை துவக்கி வைப்பாரே ! மறக்க முடியுமா?

 அதில் ஒருமுறை கவிஅரங்கத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் சொன்ன கவிதை 50 ஆண்டுகள் கடந்தும் நினைவில் அமுதாய் பதிர்ந்திருக்கிறது.

‘காலத்தின் கோலத்தால்

கன்னிப் பருவமுற்ற

வண்ணத் தமிழ்ப்பெண்

தன் வடிவழகைப் பார்க்க  ஒரு

கண்ணாடி தேடினாள்

கம்பன் கிடைத்தான்.''

 அந்த காலகட்டத்தில் தமிழ் மன்றமும், தமிழார்வமும் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று உணர்த்த வைத்தது.

எல்லோருக்கும் திருமணம் ஆயிற்று. முதல் முதலாக ஒரு நண்பனின் மரணம்... எங்கள் தமிழ் மன்றம் கலைந்தது. நாங்கள் சேகரித்த புத்தகங்களும் கிடைக்காமல் போயின. அண்ணாச்சியும் காயாமொழி போய்விட்டார்!

தமிழ் எங்களை விட்டு நீங்காமல் அணைத்துக் கொண்டிருக்கிறது!

ஜனவரி, 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com