தீ அணைந்து விடவில்லை

மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கலாம்
தீ அணைந்து விடவில்லை
Published on

பொங்கலன்று காலையில் நாங்கள் கோமதி வீட்டின் கீழேப் போய் இறங்கும்போது பால்கனியில் நின்று தன் மகள் ஓவியாவுக்கு தோசை ஊட்டிக்கொண்டிருந்த கோமதியின் முகத்தைப்பார்த்தேன்.

சூரிய ஒளி இருவரின் முகத்தையும் இன்னும் வெளிச்சமாக்கிக்காட்டியது. ஒரு தாய்க்கான பூரிப்பும், ஒரு மகளுக்கான பிரியமும் ஒரே சமயத்தில் அம்முகங்களில் பூத்திருந்ததை கவனித்தேன்.

கோமதி என் கால்நூற்றாண்டு ஸ்நேகிதி. திருவண்ணாமலை அரசுக் கலைக்கல்லூரியில் நான் வணிகவியல்; கோமதி தாவரவியலும் படித்தோம். நான் எங்கே படித்தேன்? சும்மா கல்லூரிக்கு போய் வந்தேன். கோமதிதான் படித்துக்கொண்டே போராடிய தோழி.

கல்லூரியின் மதிற்சுவரின் மீதேறி, ஈழத்திற்கு ஆதரவு குரல் கொடுத்துக் கொண்டிருந்த போதுதான் கோமதி மீதான என் கவனம் குவிந்தது.

பேசிமுடித்து டீ குடிக்கபோனபோது கைப்பிணைப்புக் கிடையே எங்கள் இருவரின் பின்புலமும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

 “நான்  SFI-இல் இருக்கிறேன்  கோமதி.”

“உங்கள் சாத்வீக போராட்டங்கள் மீது நம்பிக்கையற்றவள் நான். மார்க்ஸிய- லெனினிய அமைப்புகளோடு சேர்ந்து இயங்கவே விரும்புகிறேன். தோழர் அ.மார்க்ஸ் என்  ஆசான்.”

இந்த இருவேறு நிலைகள் எங்கள் நட்புக்கு எப்போதும் ஒரு தடையாகவே இருந்ததில்லை. இன்னும் தூரத்தை குறுக்கியிருக்கிறது. தேர்தலின்போது நாங்கள் நடத்திய வீதி நாடகங்களுக்கு கோமதியிடம் கெஞ்சி அனுமதி பெற்றிருக்கிறேன். குறிப்பாக ஜெயலலிதா கேரக்டருக்கு அவரைவிட்டால் அப்போது ஆளில்லை. எத்தனை நெருக்கடிகளிலும் கோமதி மிக தைரியமாக முன்னெடுத்த கொள்கைகளும், நடைமுறைகளும் இப்போது  நினைத்தாலும் சிலிர்ப்பூட்டக்கூடியவை.

கல்லூரிக்காலம் முடிந்து முப்பது வருடங்கள் கடந்துவிட்டன. இப்போது, நினைவின் நதிக்கரையிலிருந்து திரும்பிப்பார்க்கையில் கோமதி மட்டுமே எனக்கு மிஞ்சியிருக்கும் தோழி. மற்ற எல்லோரும் திருமணமாகி, குழந்தைபெற்று, கான்வெண்டுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிற சராசரிகளின் மிச்சமாக மட்டுமே செட்டிலாகி எஞ்சி நிற்கிறார்கள்.

பல நாட்கள் நான் கோமதி வீட்டில் நடக்கும் மார்க்சிய தர்க்கங்களில் பேராசிரியர் அ.மார்க்சின் மெல்லிய குரலின் உரத்த உரையாடல்களை கேட்டிருக்கிறேன்.

ஜான் ஆப்ரகாம் என்ற ஒரு கலகக்கார திரைப்பட இயக்குநரின் கனவுகளை இரும்புப் பெட்டிகளில் சுமந்து கொண்டு ஊர், ஊராக அலைந்த ஒரு சிறு குழு ஒரு நாள் திருவண்ணாமலைக்கு வந்த போது, நான் வசித்த  சாரோனின் அகலமான சபைத்தெருவின் மத்தியில் மூன்று  இரவுகள் திரையிடலுக்கு ஏற்பாடு செய்தோம். ஒரு 16mm புரஜக்டரை அவர்கள் கையோடு தூக்கிக் கொண்டு வந்திருந்தார்கள்.

இரண்டாம் நாள் இரவு கூட  The Glass என்ற குறும்படம் திரையில் ஓடிக்கொண்டிருந்த போது கோமதி என் காதருகில் தன் ஒரு சொல்லைக் குவித்து சர்ச்க்கு முன் வரமுடியுமா என கேட்க, நாங்கள் இருவரும். அடுத்த பத்தாவது நிமிடம் அங்கிருந்தோம்.

“சொல்லுங்க கோமதி”

மௌனம், வெட்கம், கூச்சம் எதுவும் வந்து தன் முகத்தில் தேங்கிட ஒரு துளியும் இடம் விடாமல், “பாண்டிச்சேரியில் இருந்து வந்திருக்கிற பையன் பேர் என்ன பவா?”

     “அருணன்”

     “எனக்கு அவனை ரொம்ப புடிச்சிருக்கு. அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னா நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழறோம்”

யோசிப்பதற்கெல்லாம் நேரமில்லை. கூட The Glass முடிந்து அடுத்தபடம் முடிவதற்குள் நான் அருணனிடம் பேசி முடித்து சம்மதம் வாங்கியிருந்தேன். சமூகம் குறித்து ஒரே மனநிலையில் இயங்கும் இருவர் சேர்ந்து வாழ இதுவே அதிக நேரம்தான்.

குடும்பம், கோத்ரம், சொத்து, பழக்க வழக்கம் என பார்த்து பார்த்து நீளும் இந்திய திருமண பந்தங்கள்தான் நூல்கயிறுகள் போல சட்டென அறுந்து கொள்கின்றன. என் அருணனும் கோமதியும் மார்க்சிய கொள்கையால் இணைக்கப்பட்டிருந்தார்கள்.

அடுத்த நாள் காலை கோமதியின் அம்மா ஒரு பருப்பு டப்பாவுக்குள் தான் சேர்த்துவைத்திருந்த 2000 ரூபாயை என் கையில் திணித்து என் முகத்தை ஏறெடுத்து      “இதான் எங்கிட்ட இருக்கு,  ஆனா, இருந்த எல்லாத்தையும் போட்டு அவளைப் படிக்க வச்சிருக்கேன். எப்படியாவது அவ கல்யாணத்தை முடிச்சிடுப்பா”

  நான் அப்போது தற்காலிகமாய் பணியாற்றிய – டேனிஷ் மிஷன்  பள்ளியின் புகழ்பெற்ற  ரெட் பில்டிங்கின்  சென்டர் ஹாலில்  ஒரு சாயங்காலத்தில் தன் வயலினோடு பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்த காசி விசுவநாதனை வேட்டிக்கட்டி உட்காரவைத்து, பேராசிரியர் கல்யாணியை வரவழைத்து அவர்கள் இருவரின் வாழ்வின் துவக்கத்தைச் சமூகத்திற்கு அறிவித்தோம்.  தாலி கூட அல்ல பூ மட்டும் வைத்துக்கொள்  என்ற அம்மாவின் சொல்கூட கோமதியால் தடுத்து நிறுத்தப்பட்டது. ‘ரெட்ரோஸ்’ என அப்போது எங்கள் ஊரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கேக்கும், டீயும் அத்திருமணத்திற்கு வந்த தோழர்களுக்கு தரப்பட்டது. போதாதா, வயலின் இசை,  பேரா.கல்யாணியின் உரை, கூடவே ரெட்ரோஸ், டீ. எல்லாம் முடிந்து அடுத்தநாள் காலை கோமதியின் அம்மாவைப் பார்த்து இரண்டாயிரத்தில் மீதி 600 ரூபாயை திருப்பித்தந்தபோது அவர்கள் கண்கள் நிறைந்திருந்தன.

ஆயிற்று நண்பர்களே, இருபத்திஐந்து ஆண்டுகள். கோமதி அந்தமானில் தன் தாவரவியல் டாக்டர் பட்டம் பெற்று, ஒரு ஸ்விட்சர்லாந்து நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பிலிருக்கிறார். தோழர் அருணன் சென்னை வானொலியில் அதிகாரியாய் இருக்கிறார். சொந்தவீடு, கார் என சில வசதிகளுக்கு இடம் தந்திருக்கிறார்கள். இருவர் இதயத்திலும் எரிந்துகொண்டிருந்த ஏதோ ஒரு கனல் இப்போது கனன்றுகொண்டிருப்பதாக மட்டும் அவர்களுக்குத் தோன்றுகிறது.

ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியின் போதும் பொங்கல் அன்று காலை உணவு அவர்கள் வீட்டில்தான். குழந்தை வளர்ப்பு, தங்கள் பொது வேலைகளை மந்தப்படுத்தும் என்பதால் அதைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தார்கள் இருவரும். விவாத சொற்கள் புறக்கணிக்கப்பட்ட பொழுதுகள் ஏராளம்.

என் மகள் மானசி, ஒரு சிறுமியாக கோமதியின் மீது ஏறி விளையாடிய பொழுதில்தான் அவர்களுக்கு ஒரு குழந்தையின் அதுவும் பெண் குழந்தையின் ஸ்பரிசம் எத்தனை மகத்தானது என்பதை உணரமுடிந்தது. உடைகளும், பரிசுகளும், மகள்  மானசிக்குக் குவிக்கப்பட்டன.

இது போதாது கோமதி! நான் என்ன செய்யட்டும் பவா, எல்லாம் காலதாமதமாகிவிட்டது. நான் ஐம்பதுகளில் நுழையப்போகிறேன். எனக்கும் ஒரு மகளின் ஸ்பரிசம் வேண்டும்.

நான் அவர்களுக்கு ஓவியாவைத் தத்தெடுத்துக் கொடுத்தேன். ஓவியாவுக்கு நான்தான் தாய்மாமன்.  தன் கல்லூரி நாட்களில் புத்தகம், இலக்கியம், சமூகம், மார்க்சியம், புரட்சி பேசிய இருவரும் தங்கள் முழு நேரத்தையும் தங்கள் மகள் ஓவியாவின் மழலையில் கரைப்பதாக தூர இருந்து பார்ப்பவர்களுக்குத் தோன்றும். எனக்கு மட்டும் அப்படியில்லை.

 ஏதோ ஒரு தேவையான தினத்தில் கோமதி ஒரு மதில் சுவரின் மீதேறி போராட்ட தூண்டுதலுக்கான சொற்களை விதைக்கலாம்.  தீ அணைந்துவிடவில்லை கனன்று  கொண்டுதானிருக்கிறது.             

பிப்ரவரி, 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com