ஐ.டி நிறுவனங்களில் முப்பது, நாற்பது வயதுகளில் இருப்பவர்களுக்குத்தான் அழுத்தம் அதிகம். திருமணம், குழந்தைகளுக்கான பள்ளிச்செலவு, கடனில் வீடு, காருக்கான இ.எம்.ஐ என்று கிட்டத் தட்ட செட்டில் ஆகிவிட்டதாக உணரும் தருணத்தில் வேலையிழப்பு என்பது பெரும் சுமையைக் கொண்டு வந்து இறக்கும். ‘வேலைக்கு பிரச்சினை எதுவும் வந்துவிடுமோ’ என்கிற மன அழுத்தமே பிற எல்லாவற்றையும் பின் தள்ளிவிட்டு உச்சந்தலையில் அமர்ந்து கொள்கிறது.
‘இதை விட்டுட்டு போய் வேற வேலை பார்த்துக்கலாம்’ என்று சொல்கிறவர்கள் நிறைய இருக்கிறார்கள். அப்படிச் செல்வதற்கான வாய்ப்புகளும் சூழல்களும் இல்லாதவர்கள் வேலை சார்ந்த அழுத்தங்களிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள நாம்தான் மண்டை காய வேண்டும். சமீபத்தில் ஐடி துறையின் பெருந்தலை ஒருவரின் பேச்சைக் கேட்க நேர்ந்தது. பேசிக் கொண்டிருந்தவர் ‘ஆடூணிஞிடுஞிடச்டிண’ தொழில்நுட்பத்தில் கால் வைக்க வேண்டும் என்று பேசினார். கடந்த சில மாதங்களாக இந்த நுட்பம் தெரிந்த ஆட்களைத் தேடிப் பார்த்திருக்கிறார்கள். எவ்வளவு வேண்டுமானாலும் சம்பளம் கொடுக்கத் தயாராக இருந்தும் சரியான ஆட்கள் சந்தையில் கிடைக்கவில்லை என்றார். அப்படியொரு ஆள் இருந்தால் கேட்கிற சம்பளத்தைக் கொடுப்பார்கள். இதுதான் நிதர்சனம். நாம் செய்கிற வேலைகளைச் செய்தபடியே வெளியுலகத்தின் மீது ஒரு கண் இருக்க வேண்டும். நமக்கு ஆடூணிஞிடுஞிடச்டிண பற்றி அக்குவேறு ஆணி வேறாகத் தெரிய வேண்டும் என்று கூட இல்லை. ஐந்து நிமிடங்கள் பேசுகிற அளவுக்குத் தெரிந்தால் கூட போதும். அப்படியான ஆட்களே வெகு குறைவு என்பதுதான் சிக்கல்.
இதுவொன்றுதான் புதிய தொழில்நுட்பம் என்றில்லை. க்ளவுட் கம்யூட்டிங், பிக் டேட்டா, ஐஓடி என்பதெல்லாம் இன்னபிற சூடான கேக்குகள். ஐடி வேலைச் சந்தையில் தேவை அதிகம். ஆட்கள் குறைவு.
தேடல் இருந்து கொண்டேயிருக்க வேண்டியதாக இருக்கிறது. ஒரே வேலையைச் செய்து கொண்டிருக்காமல் மெல்ல மெல்ல புது நுட்பங்களில் கையை நனைத்துக் கொள்வதுதான் நம்மை ஆசுவாசமாக வைத்திருக்கும்- இந்நிறுவனம் இல்லையென்றால் இன்னொன்றுக்குச் சென்றுவிடலாம் என்கிற தைரியத்திலேயே கெத்தாகச் சுற்றலாம்.
இன்றைக்கு ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்கு ஏற்ப இந்திய நிறுவனங்களில் செயல்படும் மென்பொருட்களை மாற்றியமைக்க ஆட்கள் தேவைப்படுகிறார்கள். ‘உங்களுக்கு இந்தியா டூணிஞிச்டூடித்ச்tடிணிண தெரிஞ்சவங்க யாராச்சும் இருக்காங்களா? நிறையப் பேர் தேவையா இருக்கு’ என்றார்கள். அதாவது இந்திய வணிகத்திற்கு ஏற்ப மென்பொருட்களில் மாறுதல்களைச் செய்வதுதான் இது. சில மாதங்களுக்கு முன்பாக நண்பரொருவர் கணித்துச் சொன்னார். அப்பொழுதே கணித்து தயாரிப்புகளைச் செய்து வைத்திருந்தவர்கள் பாக்கியவான்கள். மந்தமான வேலை வாய்ப்புச் சூழலிம் கூட கூடுதலான சம்பளத்தில் வேலையை வாங்கியிருக்க முடியும். எதற்குக் குறிப்பிடுகிறேன் என்றால் நம்மைச் சுற்றி நடைபெறும் அரசியல், பொருளாதார மாற்றங்களை வைத்து நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
வெளியாட்கள் சொல்வது போல ஐடி துறை காலியாகிவிடாது. அதற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் இருக்கின்றன. இன்னமும் பல நூறு கோடி மக்களை இணையம் சென்றடையவில்லை. அவர்கள் இணையத்தைப் பயன்படுத்தும் போதும் ஆன்லைன் வணிகத்தில் இறங்கும் போதும் இத்துறை பன்மடங்கு வளர்ச்சியை அடையும். அதற்கான மென்பொருட்கள் வடிவமைப்பு, அவர்களுடைய தகவல்கள், தேவையான தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு, அவற்றுக்கான பாதுகாப்பு என்று ஏகப்பட்ட வேலைகள் இருக்கின்றன. அதையெல்லாம் செய்யக் கூடிய திறமை நம்மிடம் இருக்கிறதா என்பதுதான் கேள்வி. இத்துறையில் பாம்பு சட்டையை உரிப்பது போல உரித்துக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது- சுணக்கமேயில்லாமல். அதைச் செய்யவில்லையென்றால் யாரைக் குறை சொல்லியும் பலனில்லை.
ஜூலை, 2017.