மும்பையில் 1896-இல் முதன்முறையாக சினிமா திரையிடப்பட்டபோது பெரிதாக வரவேற்பில்லை. ஒருவாரம் கழித்து கூட்டம் குமுறித்தள்ளியது. இடையில் அரங்கிற்கு கூட்டத்தை வரவழைக்க அவர்கள் அப்படி என்ன செய்தார்கள் தெரியுமா ?
பெரிதாக எதுவுமில்லை படம் போடும் அரங்கில் மூன்று தடுப்புகளைப் போட்டு உயர் வகுப்பு, இடை வகுப்பு, தரை வகுப்பு என மூன்றாகப் பிரித்தார்கள்.
திரையரங்கில் பார்வையாளர்கள் தகுதி அடிப்படையில் பிரிக்கப்பட்டது உலகிலேயே இந்தியாவில்தான் முதன் முறை. பிற்பாடு இதுவே நிரந்தரமாகவும் ஆனது.
இப்படி சினிமா அரசியல் அன்றே துவங்கியிருந்தாலும் அரசியல் சினிமாக்கள் இந்தியாவுக்குள் மிக தாமதமாகத்தான் வந்தது.
தமிழில் 1939-ஆம் ஆண்டில் வெளியான இயக்குநர் கே.சுப்ரமணியம் அவர்களின் தியாகபூமி தான் தமிழின் முதல் அரசியல் படம். மக்களிடையே விடுதலைப் போராட்ட உணர்வை வளர்க்கும் நோக்கில், இறுதிக்காட்சி ஊர்வலத்தில் அனைவரும் காங்கிரஸ் கொடியை ஏந்தி ” பேபி சரோஜாவின் ஜெய காந்தி மகானுக்கு ஜே ஜே” என்ற பாடலைப் பாடிக்கொண்டு
செல்வதாகக் காண்பிக்கப்பட அரங்கிலும் மக்கள் உணர்ச்சி வெள்ளத்தில் கோரஸாகப் பாடினர். இதனால் படம் தடை செய்யப்போவதாக அறிவிக்க, உடனே படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான கே.சுப்ரமணியம் உடனடியாக அனைத்து அரங்குகளிலும் இலவசக்காட்சி என அறிவிக்க திரையரங்கங்கள் அனைத்தும் திருவிழாக் கூட்டம் போல நிறைந்தது. பின் பிரிட்டிஷ் ஆட்சியர்களால் இப்படம் தடை செய்யப்பட்டு இந்தியாவின் முதல் தடை செய்யப்பட்ட படம் என்ற பெயரையும் பெற்றது.
சேத்தன் ஆனந்த் இயக்கத்தில் 1946-இல் வெளியான நீச்சா நகர் தான் சமூக அரசியலைப் பேசிய முதல் படம். இந்தப்படம் தான் உலக அரங்கில் இந்திய சினிமாவுக்கான முகவரியை தேடித்தந்த முதல் படமும்கூட. அதுவும் பிரான்ஸின் கான் விருது துவங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே அதன் முதல் விருதைப் பெற்றது என்பதுதான் இதில் விசேஷம். அதுவும் யாரோடு தெரியுமா, புகழ்ப்பெற்ற நியோ ரியலிஸ இத்தாலி படமான ரோம் ஓபன் சிட்டியுடன் இந்தப்படம் விருதைப் பகிர்ந்து கொண்டது. பிற்பாடு 1953-ல் பிமல் ராய் இயக்கத்தில் வெளியான தோபிகா ஜமீன் சமூக அரசியலை அழுத்தமாகப் பேசிய இன்னொரு முக்கியமான படம். பிமல் ராய் தான் தேவதாஸ் எனும் புகழ்பெற்ற இந்தியக் காதல் காவியத்தை வங்காளத்தில் எடுத்தவர் . பிற்பாடு தெலுங்கு, தமிழ் எனப் பலமுறை மீட்டுருவாக்கம் கண்டு தேவதாஸ் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றது நாடறிந்த சேதி.
தோ பிகா ஜமீனைத் தொடர்ந்து 1956-ல் பதேர் பாஞ்சாலி மூலமாக உலகை தன் பக்கம் திருப்பிய சத்யஜித்ரேவின் படங்கள் அழகியலையும் மானுட வாழ்க்கையின் அவலத்தையும் சினிமாவில் சிறப்பாகப் பதிவு செய்ததேயொழிய அது தீவிரமான அரசியலைப் பேசவில்லை. மேலும் அவரது புகழ்பெற்ற அபு டிரையாலஜி படங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு எடுக்கப்பட்டதால் அவரால் துணிந்து அரசியல் கருத்துக்களைப் பேச முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் அவர் மேல் விழுந்தது.
அவரது படங்களில் ”சாருலதா”தான் பெண்ணிய அரசியல் பேசிய குறிப்பிடத்தகுந்த படம் எனலாம். சுதந்திரப் போராட்ட காலப் பின்னணியில் பெண்னின் அக உலகத்திற்கு முக்கியத்துவம் தந்து வெளியான சாருலதாவைத்தான் விமர்சகர்கள் பலரும் இன்றும் அவரது மிகசிறந்த படமாகக் கருதுகின்றனர். 1981-ல் இந்தி மொழியில் வெளியான அவரது ’சத்கதி’ சாருலதாவுக்குப் பிறகான குறிப்பிடத்தக்க அரசியல் படம்.
மேற்சொன்ன இரண்டு ரே- படங்களை விடவும் கூடுதலான அரசியலையும் காட்சி வழி உரையாடலில் தீவிரத்தையும் காண்பித்தவர் ரித்விக் கட்டக். 1953-லேயே இவரது நாகரீக் படம் வந்திருக்க வேண்டியது. அப்படி வந்திருந்தால் ரேவுக்கு முன்பே உலக இயக்குநர்களின் பாரட்டைப்பெற்ற இந்திய இயக்குநர் என்ற பெயர் இவருக்கு கிடைத்திருக்கும். ஆனால் என்ன காரணத்தாலோ அந்த முதல் படம் 24 வருடங்கள் கழித்தே வெளியானது. 1958-ல் அஜாண்ட்ரிக் மூலமாகத்தான் ரித்விக் கட்டக்கின் முதல் சமூக எதார்த்தப் படம் வெளியானது. இவரது மேகே தாக்க தாரா-வும், சுபர்ண ரேகாவும் குடும்ப உறவுகளின் சிதைவைப் பேசினாலும் வங்காள சமூகத்தின் அழுக்குகளைத் தோலுரித்துக்காட்டிய படங்கள்.
இப்படியாகச் சமூக அரசியலை இப்படங்கள் பேசினாலும் அவை உரத்துப் பேசவில்லை. மிகச் சன்னமான குரலிலேயே கலாபூர்வத்துக்கு முக்கியத்துவம் தந்து அரசியலைப் பின்புலமாகப் பேசின. அதுவும் கூட கலைப்படங்கள் வரிசையில் வெளிநாட்டுத் திரைப்பட விழாக்களில் மட்டும் கொண்டாடப்பட்டதே தவிர மிகப்பெரிய வணிக வெற்றியை ஈட்டவில்லை.
அதே சமயம் மைய நீரோட்ட இந்திப்படங்களில் அரசியல் என்பது கடுகளவு கூட இல்லாத காலம் அது.
இந்தச் சூழலில் சமூகப் பிரச்சனைகளை உரக்கப் பேசி மக்களைப் பாதிக்க வைத்து மாநிலத்தின் அரசியலையே மாற்றிய படங்கள் என்றால் அந்த அதிசயம் தமிழில் மட்டுமே நிகழ்ந்தன. தமிழில் 1950-களில் வெளியான பராசக்தி, ரத்தக்கண்ணீர் ஆகிய படங்கள் தீவிர சமூக அரசியலைப் பேசியதோடு மைய நீரோட்ட படங்களில் வெற்றிப்படமாகவும் வலம் வந்தன. இந்தப் படங்கள் உண்டாக்கிய அரசியல் பாதிப்பு அளவுக்கு இந்தியாவின் வேறெந்த மொழியிலும் சினிமாக்கள் வரவில்லை, இந்த அளவுக்கு அதிர்வோ மாற்றங்களோ நடக்கவில்லை.
எழுபதுகளுக்குப் பிறகுதான் இந்தி சினிமா துணிந்து அரசியலைப் பேசத் துவங்கியது. அக்காலத்தில்தான் தொழிற்சாலைகள் பெருகி மக்கள் கிராமம், சிற்றூர்களிலிருந்து நகரங்களை நோக்கி நகர இந்திய வாழ்க்கை நகரமயமாக்கலுக்கு மாறியது. இதனால் மக்களிடையே வேலையில்லாப் பிரச்சனை, கூட்டுக் குடித் தன உறவுச் சிக்கல்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகளை உருவாக்க, இன்னொருபுறம் ஒரே மாதிரியான காதல் கதைகளைப் பார்த்துப் பார்த்துப் போரடித்துப்போன மக்களின் எதிர்பார்ப்பும் ரசனை மாற்றத்துக்கான நெருக்கடியை உருவாக்கியபோது இந்திய சினிமாவில் சில அதிசயங்கள் நிகழத்துவங்கின.
அது மைய நீரோட்ட இந்தி சினிமாக்களில் பாதிக்கத் துவங்கியது, அப்படங்களில் கோபக்கார இளைஞன் பாத்திரத்தில் அமிதாப்பச்சன் புதிய நட்சத்திரமாக உருவாகிறார். இன்னொருபக்கம் வங்காளத்திலிருந்து மிருணாள் சென், ஷ்யாம் பெனகல் , கோவிந்த் நிஹ்லானி, பாசு சட்டர்ஜி, மணிகவுல், தபன் சின்ஹா, எம்.எஸ். சாத்யூ , புத்த தேவ் தாஸ் குப்தா ,கவுதம் கோஷ், கன்னடத்தில் க்ரீஷ் காசரவள்ளி , கேரளாவில் அடூர் கோபாலகிருஷ்ணன், ஜி.அரவிந்தன் போன்ற இயக்குநர்கள் உருவாகத்துவங்கினர். சினிமாவும் மாறத் துவங்கியது .
இவ்வகை சினிமாக்களில் நாயக வழிபாடு, சண்டைக் காட்சிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. படத்தில் வரும் பாத்திரங்கள் அனைத்துமே நாம் வாழ்வில் சந்திக்கும் அடித்தட்டு நடுத்தர மக்களைப் பிரதிபலிப்பது போல உருவாக்கப்பட்டன. அதுவரை நாயகர்கள் ராஜேஷ்கண்ணா போல அழகாக பளபளவென இருந்தாக வேண்டும் என்ற மரபு உடைக்கப்பட்டது. நஸ்ரூதீன் ஷா, ஓம்புரி , அமோல் பலேகர் போன்ற திறமைசாலிகள் நாயகர்களாகியினர். ஸ்மிதா பட்டீல் , ஷ்பனா ஆஸ்மி போல புற அழகு தாண்டி உணர்வை இயல்பாக வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க நடிகைகள் நாயகிகளாக அறிமுகமாயினர் .
அதே சமயம் கலை சினிமா போல திரைப்பட விழாக்களுக்கான படமாக இல்லாமல் வெகுமக்கள் பார்க்கும் விதமான சமரசத்துடன் இவை அமைந்தன. இந்த ’பேரலல்’ சினிமா இயக்குனர்களில் மிருணாள் சென்னின் படங்கள் அரசியலைத் தூக்கலாகப் பேசின. 1969-ல் வெளியான இவரது புவன் ஷோம், சத்யஜித் ரே, கட்டக்-குப் பிறகு எதார்த்தம், தீவிரமான காட்சி மொழி, இரண்டோடு கூர்மையான அரசியலையும் பேசியது. இவரது ஏக் தீன் பிரதின் படம் வேலைக்கு போய் வீடு திரும்பாத ஒரு இளம் பெண்ணைப்பற்றிய கதை. அந்த ஒரு இரவில் அந்த வீட்டின் அனைவரும் பதட்டமாகி என்னென்ன செய்கிறார்கள் என காட்சிகளில் சொல்லிக்கொண்டிருக்க மறுநாள் காலையில் அவள் யாரையும் எதையும் பொருட்படுத்தாமல் அசட்டையாக அலட்டிக்கொள்ளாமல் வீட்டுக்குள் நுழைய படம் முடிகிறது.
அந்த இரவில் அவள் என்ன ஆனாள் எங்கே போனாள் எதையும் இயக்குநர் சொல்லவில்லை. பலரும் அவரைத் துரத்தி துரத்தி கேட்டனர். அவள் என்ன ஆனாள், யாருடனாவது படுக்கையைப் பகிர்ந்து கொண்டாளா எனக் கேட்க, மிருணாள் சென் எனக்குத் தெரியாது ஒருவேளை இருந்தாலும் இருக்கலாம் எனச் சொல்ல, இந்த பதில் அப்போது பெரும் அதிர்ச்சியை மீடியாக்களின் மத்தியில் உருவாக்கியது.
ஒருபுறம் சமூக அரசியலைப் பேசும் படங்கள் வந்துகொண்டிருக்க இன்னொரு பக்கம் மைய நீரோட்டத்தில் கட்சி அரசியலைப் பேசும் படங்களும் வரத்துவங்கின . அதில் குறிப்பிடத்தக்க படம் 1977-ல் வெளியான ஆந்தி.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி- பெரோஸ் காந்தி ஆகியோரது காதல் மற்றும் திருமண வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சினிமாவுக்கென செயற்கையாகச் சில காட்சிகளையும் சேர்த்து இப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் குல்சார். நாயகியாக நடித்த சுசித்ராசென்னின் தோற்றத்தை இந்திரா போலவே வடிவமைத்திருந்தார். படம் ரிலீஸானதோ 1975 எமர்ஜென்சி உச்சத்திலிருந்த நேரம். இந்தியாவே நடுங்கிக்கொண்டிருந்த காலம். விடுவாரா இரும்பு பெண்மணி. ரிலீசான சில நாட்களிலேயே படத்துக்குத் தடை விதித்தார். இயக்குனரும் தயாரிப்பாளரும் முட்டி மோதிப்பார்த்தார்கள். ம்ஹூம் மசியவில்லை .
பிறகு 1977-ல் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபிறகுதான் படம் ரிலீசாகியது. இதே காலகட்டத்தில் இந்திராகாந்தி மற்றும் சஞ்சய் காந்தி ஆகியோருடைய அரசியல் ஊழல்களைக் கிண்டலும் கேலியுமாக சித்தரித்து கிஸ்ஸா குர்ஸிகா என்ற படம் 1977ல் வர, இந்தப் படமும் காங்கிரஸ் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டு முடக்கப்பட்டது. சமீபத்தில் இதே போல இந்திராகாந்தி சஞ்சய் காந்தி ஆகியோரின் வாழ்க்கையை அடியொற்றி மராத்தி இயக்குனர் மதுபண்டார்கர் தயாரிப்பில் ”இந்து சர்க்கார்” என்ற படம் வெளியானது. இதற்கும் காங்கிரஸ் கட்சியிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தியேட்டருக்குள் வந்த சில நாட்களிலேயே அந்த படம் பெட்டிக்குள் முடங்கிப்போனது.
தொடர்ந்து இதே போல பேர்லல் சினிமா காலத்தில் இந்தியில் வெளியான மற்றுமொரு முக்கியப் படம் கரம் ஹவா. 1973-ல் வெளியான கரம் ஹவா இன்னொரு குறிப்பிடத்தகுந்த அரசியல் படம். புகழ்பெற்ற சிறுகதையாளரும் பெண் படைப்பாளியுமான இஸ்மத் சுக்தாய் எழுதி எம்.எஸ்.சத்யூ இயக்கத்தில் வெளியான இப்படம் 1947-ல் இந்தியா -பாகிஸ்தான் பிரிவினையும் அதையொட்டி உண்டான பிரச்சனைகளையும் மையமாக கொண்டது. 1973-ல் இப்படம் வெளியிடத் தயாரான நிலையில் படத்திற்கு எதிர்ப்புகள் வலுக்கத் துவங்கின. பால் தாக்கரே படம் வெளியானால் கலவரம் வெடிக் கும் எனக்கூற எட்டு மாதங்கள் படம் வெளியாவது தள்ளிப்போனது. பிற்பாடு 1974 ஏப்ரலில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதேபோல ஷியாம் பெனகலின் மண்டி , பூமிகா, போன்ற படங்களும் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி இயக்குநராக பரிணமித்த கோவிந்த் நிஹ்லானியின் ஆக்ரோஷ், அர்த் சத்யா, துரோக்கால் போன்ற சமூக அரசியலைத் தீவிரமாகப் பேசியபடங்களும் இக்காலத்தில் வெளியாகி இந்திய சினிமாவுக்கு மகுடங்களைச் சூட்டின.
இக்காலத்தைத் தொடர்ந்து இந்திய சமூக அரசியல் படங்கள் வெளி நாடுகளிலும் வரவேற்பைப் பெற்றன. மீரா நாயர் எடுத்த சலாம் பாம்பே, தீபா மேத்தா எடுத்த பயர் வாட்டர், சேகர்கபூர் எடுத்த பண்டிட்குவின் போன்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பையும், உள்நாட்டில் பெரும் சர்ச்சையையும் உருவாக்கின.
1982ல் அட்டன்பரோ இயக்கிய ஆங்கிலப்படமான காந்திக்குப் பிறகு இந்தி மைய நீரோட்டப்படங்களிலும் அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்களும் வரத்துவங்கின. காந்தி மை பாதர், மேக்கிங் ஆப் மகாத்மா, தமிழில் கமலஹாசன் இயக்கத்தில் ஹேராம் ஆகிய படங்கள் உருவாகின.மேலும்1993ல் கேதன் மேத்தா இயக்கத்தில் சர்தார் வல்லபபாய் படேல் பற்றிய படமும் 2005ல் ஷியாம் பெனகல் இயக்கத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய படமும் வந்தன. ஆயினும் இவர்களது படங்களுக்கு வராத பிரச்சனை 1999ம் ஆண்டு ஜாபர் படேல் இயக்கத்தில் தயாரான அம்பேத்கார் படத்துக்கு வந்தது. இத்தனைக்கும் இரண்டு தேசிய விருது பெற்ற இப்படம் திரையரங்கம் வர ஏகப்பட்ட முட்டுக்கட்டைகள். 2010க்குப்பிறகுதான் தமிழ்நாட்டில் சிலரது முயற்சிக்குப்பின் இந்தப்படம் திரையரங்கிற்கு வந்தது. இன்னும் பல மாநிலங்களில் இப்படம் திரையிடப்படவேயில்லை. இதைவிட அதிர்ச்சி என்னவென்றால் 2015 ஏப்ரல் 17ல் வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா தகவல் படி இன்னும் இந்தபடம் எந்த தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படவில்லை என்பதுதான் .
இது தவிர இந்தித் திரைப்பட உலகில் நேரடி அரசியல் படங்களைத் தொடர்ந்து இயக்கி வந்தவர் பிரகாஷ் ஜா. இவரது ராஜ்நீதி, கங்காஜல் போன்றவை குறிப்பிடத்தக்க திரைப்படங்கள். இவரது தயாரிப்பில் 2012ல் வெளியான சக்கர வியூகம் மாவோயிஸ்டுகளை வெளிப்படையாக ஆதரித்து வெளியான குறிப்பிடத்தகுந்த படம்.
ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான சர்க்கார் மற்றும் அதன் தொடர் வரிசைப்படங்கள் நேரடி நடைமுறை அரசியலை எதார்த்தத்தோடு காண்பித்த படங்களாகக் கருதலாம்.
அதே போல ராஹேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் வெளியான ரங் தி பசந்தியும், ஷாருக்கான் நடிக்க அஷுதோஸ் கோவ்ரேக்கர் இயக்கத்தில் வெளியான ஸ்வதெஷும் குறிப்பிடத்தக்க அரசியல் படங்கள்.
தற்கால இந்தித் திரைப்படங்களில் விஷால் பரத்வாஜ் மற்றும் அனுராக் காஷியப் ஆகியோரின் படங்கள் சமூக அரசியலைத் தீவிரமாகப் பேசும் படங்கள். கன்னட சினிமாவின் திதி, மராத்தியில் பன்றி, கோர்ட், மலையாளத்தில் கம்மாட்டி பாடம் போன்றவை சமூக அரசியலைப் பேசிய படங்கள்.
தமிழிலும் மெட்ராஸ், விசாரணை, அப்பா, மாவீரன் கிட்டு போன்ற படங்கள் வெவ்வேறு தளங்களில் தீவிரமான அரசியலை முன்வைத்தன.
செப்டெம்பர், 2017.