தாமதமும் ஒரு பேரிடர்தான்

Published on

பொதுவாக நமக்கு அளிக்கப்படும் வானிலை அறிக்கை சரியானதுதானா என்று ஆராயப்பட வேண்டும். அதன் நம்பகத்தன்மை ஒக்கி புயல் பேரிடருக்குப் பின் கேள்விக்குள்ளாகியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

 நான் ஜப்பானுக்கு வேலை நிமித்தம் சென்றிருந்தேன். வேலை முடித்து கடற்கரையில் ஓய்வெடுக்கச் சென்றிருந்தேன். மக்கள் எல்லோரும் கையில் குடையுடன் கடற்கரைக்கு வந்தார்கள். என்னிடம் மட்டும்தான் குடையில்லை. ஒரு குறிப்பிட்ட நேரம் கழித்து அவர்கள் எல்லோரும் குடையை விரித்தார்கள். மழை தொடங்கிவிட்டது. அப்புறம் அவரகளிடம் பேசியபோதுதான் தெரிந்தது அவர்கள் வானிலை அறிக்கையை கேட்டுவிட்டுத்தான் குடை கொண்டுவந்தார்கள் என. அவ்வளவு துல்லியமானது அந்நாட்டின் வானிலை அறிக்கை. அந்த துல்லியத்தை இந்திய அரசின் வானிலை அறிக்கைகளும் அடைய வேண்டும்.

ஒரு பேரிடர் நிகழ்ந்துவிட்ட பிறகு அரசு எப்படி செயலாற்றுகிறது என்பது முக்கியமான ஒன்று. பேரிடருக்குப்பின்பான அரசாங்க அமைப்புகளின் நடவடிக்கைகள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. பேரிடர் பாதுகாப்பு என்பது இன்னமும் மக்கள் நலனில் அக்கறையுள்ளதாக இல்லை. பேரிடர் நிகழ்ந்துவிட்ட பின்பும் அரசின் கட்டளைகளுக்காகக் காத்திருப்பது என்பது சரியான நடவடிக்கை இல்லை. ஒக்கி புயல் பாதிப்பு அதிகமானதற்கு இதுவும் ஒரு முக்கியான காரணம். மீட்புக் குழுவினர் இன்னும் விரைந்து செயலாற்றியிருந்தால் நூற்றுக்கணக்கான மீனவர்களை மீட்டிருக்க முடியும். பாதுகாப்பு என்பது எதிரிகளிடமிருந்து பாதுகாப்பது மட்டுமல்ல, புயல் மற்றும் பூகம்பம் மாதிரியான பேரிடர்களிலிருந்தும் மக்களைப் பாதுகாப்பதும்தான். மேலும் மீனவர்கள் மீட்பில், மீனவர்களின் பாரம்பரிய கடல் சார்ந்த அறிவை அரசு சார் அமைப்புகள் கவனத்தில் கொள்ளவில்லை.

மீனவர்கள் பற்றிய முறையான தவல்கள்         அரசிடம் இல்லை. அல்லது சரியான நேரத்தில் அரசு சார்பு துறைகளிடமிருந்து அளிக்கப்படவில்லை. பழவேற்காடு தொடங்கி  நீரோடி வரை மீனவர்கள் உண்டு என்றாலும் மீன்பிடியில் மூன்று வகைகள் உண்டு. 

கரை கடல் மீன்பிடிப்பு, அண்மைக்கடல் மீன்பிடிப்பு, ஆழ்கடல் மீன்பிடிப்பு என அவற்றைச் சொல்லலாம். கன்னியாகுமரியில் தொடங்கி நீரோடி வரை இருக்கும் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் வல்லவர்கள். அவர்கள் சாதாரணமாக 500 கடல் மைல் தூரம் வரை ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வார்கள். இந்த புள்ளி விவரங்கள் எல்லாம் அரசுக்குத் தெரியும். ஆனாலும் மீனவர்கள் மூலம் வரும் அன்னியச் செலாவணியில்  கவனம் வைக்கும் அரசு மீனவர்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது வருத்தத்துக்குரியதுதான். எழுபது ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் அரசு அரசு அமைப்புகள் இயங்கும்விதம், அதன் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியிருக்கிறது. 

புயல் பாதிப்புகளில் சமவெளி பாதிப்புகளுக்கும், கடற்பகுதி பாதிப்புகளுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. மரங்கள், பயிர்கள், குறைவான உயிரிழப்புகள் சமவெளியில் நிகழும் பாதிப்புகள். நிவாரணத்தின் மூலம் சரிக்கட்ட முடிகிற பாதிப்புகள் இவை. ஆனால் கடற்கரையில் நிகழும் புயல் பாதிப்புகள் மீனவர்களின் உயிரையே பறித்துவிடுகின்றன. எத்தனை நிவாரணங்கள் கோடிகளில் கொடுத்தாலும் கூட உயிரிழப்பை ஈடு செய்ய முடியாது. மேலும் கடற்கரை மக்களின் வலி மிகுந்த, துயர் நிரம்பிய போராட்ட வாழ்க்கை சமவெளி மக்களால் புரிந்துகொள்ளப்படவில்லை. பழவேற்காடு தொடங்கி நீரோடி வரை மீனவர்களுக் கென்று பிரதிநிதிகள் ( எம்.எல்.ஏ & எம்.பிக்கள்) சட்டமன்றத்திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ இல்லை. மீனவர்களுக்கென்று தனித்த சட்டமன்ற நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். இது அவர்களுக்கான பிரச்சினைகளை பொதுவெளியில் வெளிப்படுத்தும் ஒரு அரசியல் தீர்வாக அமையும்.  

மீனவ மக்கள் இந்திய கடற்பரப்பில் எல்லைக் காவலர்கள். அவர்களை பாதுகாக்க இனியாவது அரசு கவனமேற்கொள்ள வேண்டும்.  

ஜனவரி, 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com