ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்துவுக்கும், சாக்ஷி மாலிக்கிற்கும் நடக்கும் பாராட்டு விழாக்களை பார்த்து ‘120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் இரண்டு தோற்ற பதக்கங்களுக்காக இவ்வளவு கொண்டாட்டமா’ என்று இங்கிலாந்து பத்திரிகையாளர் மார்கன் ட்வீட்டில் தட்டிவிட போர்க்களமானது சமூக வலைத்தளம். பதிலுக்கு ஷேவாக் ‘ நாங்கள் (இந்தியர்கள்) சின்ன விஷயத்தைக் கூட கொண்டாடக் கூடியவர்கள். கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து இதுவரை ஒரு உலகக்கோப்பை கூட ஜெயிக்காதது ஏன் என்று கவலைப்படுங்கள்’ என்று விளாசி அவருடைய தேச பக்தியை காண்பித்துக் கொண்டார். மார்கனின் கிண்டலை விட்டுவிடுவோம். ஆனால் அதிலுள்ள உண்மையை எப்போது நாம் ஒத்துக் கொள்ளப்போகிறோம்?
இதுவரை இந்தியா பங்கேற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தமாக 28 பதக்கங்களை வென்றுள்ளது. 1900 ல் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் நார்மன் ( இந்தியாவில் பிறந்த இங்கிலாந்துக்காரர்) பெற்ற இரண்டு பதக்கங்களை நீக்கிவிட்டால் 26 தான் நம்முடைய மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை. 2008 பிய்ஜிங்கில் 3 பதக்கங்கள், 2012 இலண்டனில் 6 பதக்கங்கள் என்று படிப்படியாக முன்னேறி வந்ததால் இந்த முறை கண்டிப்பாக இரட்டை இலக்க பதக்க எண்ணிக்கை உண்டு என்று ஒலிம்பிக் சங்கமும், மக்களும் எதிர்பார்த்து காத்திருக்க, ஒரு கட்டத்தில் பதக்கப் பட்டியலில் இந்தியா பெயர் வருமா என்று ஏங்குமளவிற்கு போனது.
சாக்ஷி மாலிக் மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பெயரை பதக்க பட்டியலில் இடம் பெறச் செய்தார். அடுத்து சிந்து இறகுப் பந்து போட்டியில் இறுதிப் போட்டியில் நுழைந்தது மொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்தது. உலகின் முதல் நிலை வீராங்கனை மெரினுடன் போராடி தோற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். மொத்த இந்தியாவும் பார்த்த முதல் இறகுப் பந்து போட்டி அனேகமாக இதுவாகத்தானிருக்கும். ஜிம்னாஸ்டிக்கில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைத்து மிகக் கடினமான ப்ரடுனோவா முறை ஜிம்னாஸ்டிக்கில் அசத்தி நூலிழையில் பதக்கத்தை தவறவிட்ட தீபா கர்மாக்கரும் நாம் பெருமைப்பட வேண்டிய நம்பிக்கை நட்சத்திரமே.
நாம் ஏன் அதிக பதக்கங்களை வெல்வதில்லை?
‘மக்களின் மன நிலை மாறாமல் எந்த மாற்றமும் வந்துவிடாது. ஒட்டுமொத்த சமுதாயமே விளையாட்டை தீண்டத்தகாத ஒன்றாக பார்க்கும் நிலையில், பதக்கம் வெல்வதைப் பற்றி எப்படி பேசுவது?” என்கிறார் பிரபல தடகள பயிற்சியாளர் நாகராஜ்,“ஒலிம்பிக்கில் வெற்றிபெற்றால் பரிசு கொடுக்கிறார்கள். ஆனால் ஒலிம்பிக் வரை வருவதற்கு ஒரு தடகள வீரனும் அவரது குடும்பமும் எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கிறது. அதுவரை அவர்களுக்கு பாதுகாப்பும் நம்பிக்கையையும் யார் கொடுப்பது? இன்று மாற்றம் வரத் தொடங்கியிருக்கிறது. ஆனால் உலக அளவிலான வேகத்தை கணக்கிடும்போது இது மிக மிக குறைவு. மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் வீரர்களை ஊக்குவித்தால் அதிக பேர் விளையாட்டை நோக்கி வருவார்கள். 100 பேர் வருமிடத்தில் 1000 பேர் வந்தால் தான்மாற்றம் நிகழும்” என்கிறார்.
விளையாட்டை வாழ்க்கையாக எடுத்துக் கொள்ள நம்மில் எத்தனை பேருக்கு தைரியம் இருக்கிறது? அதற்கான பயிற்சியை எடுத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு வாய்ப்புகள் எங்கே, எப்படி கிடைக்கிறது? அப்படி நாம் முடிவுசெய்தாலும் அதை நம்முடைய குடும்பமும் சமூகமும் அங்கீகரிக்குமா? இத்தனை கேள்விகளுக்கும் பெற்றோர்கள் வைத்திருக்கும் பதில், விளையாட்டில் அரசியல் இருக்கிறது. அதை தாண்டி முன்னேற நமக்கு ஆள் பலமும், பண பலமும் இல்லை. அதனால் மருத்துவம், பொறியியல் என்று படித்து வேலைக்குப் போவது பாதுகாப்பானது என்பதே. விளையாட்டுத் துறை என்றில்லை, நம் நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துகிடப்பது உண்மைதான். மற்ற துறைகளில் இதனை வெற்றிகரமாக முறியடித்து முன்னேற முடியும் என்று நினைப்பவர்கள் விளையாட்டுத் துறையை மட்டும் புறக்கணிப்பதன் அர்த்தமென்ன? இந்தியாவில் இதுவரை வென்ற 26 பதக்கங்களைப் பெற்றவர்கள் வேற்று கிரகவாசிகள் அல்ல. இந்த அமைப்பிலிருந்து தான் அவர்கள் வெளியே வந்திருக்கிறார்கள். தங்களுடைய முயற்சிகளுக்கு இடையில் வந்த தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து வந்திருக்கிறார்கள்.
தீபா கர்மாக்கர் திரிபுரா மாநிலத்தின் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜிம்னாஸ்டிக்கிற்கு தோதான உடல்வாகு இல்லாதவர். ஆறு வயதில் பயிற்சியை தொடங்கியவர் 23 வயதிற்குள் 77 பதக்கங்களை வென்றுள்ளார். மழை பெய்தால் ஒழுகும் கூரை கொண்ட பயிற்சி நிலையம். சரியான உபகரணங்கள் இல்லை. தன்னுடன் ஒலிம்பிக்கிற்கு பிசியோதெரபிஸ்டை அனுப்பி வைக்க கேட்டது நிராகரிக்கப்பட்டது. இத்தனையையும் தாண்டித்தான் இன்று நம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார் தீபா.
சாக்ஷி மாலிக் ஹரியானா மாநிலத்தில் மோக்ரா என்ற கிராமத்தில் பிறந்தவர். அப்பா , பஸ் கண்டக்டர். அம்மா அங்கன்வாடி மையத்தில் சூப்பர்வைசர். தாத்தா பத்துலு ராம் மல்யுத்த வீரர். கிராமத்தில் அவருக்கு கிடைக்கும் மரியாதையைப் பார்த்து மல்யுத்த பயில விரும்பினார் சாக்ஷி. 12 வயதில் பயிற்சியைத் தொடங்கும்போது, பயிற்சி எடுக்க சக பெண் வீரர்கள் கூட கிடையாது. பெண் குழந்தைக்கு மல்யுத்தமா என்று கிண்டலடித்த அதே ஊர்க்காரர்கள் தான் இன்று சாக்ஷியால் பெருமை கொள்கிறார்கள்.
ஹைதராபாத்தில் பி.வி. சிந்துவின் பெற்றோர்கள் இருவருமே கைப்பந்து வீரர்கள். தந்தை ரமணா அர்ஜுனா விருது பெற்றவர். விளையாட்டு ஆர்வம் கொண்ட பெற்றோர்கள் சிந்துவின் ஆர்வத்திற்கு உறுதுணையாக இருக்க 6 வயதிலிருந்து இறகுப் பந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். தினமும் 40 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்து பயிற்சி பெற வேண்டிய கட்டாயம். கோபிசந்தின் விளையாட்டின் மேல் ஆர்வம் கொண்டு இறகு பந்து விளையாட ஆரம்பித்த சிந்துவிற்கு அவரே பயிற்சியாளராகவும் அமைந்தது கூடுதல் பலம். சைவ உணவு பழக்கத்திலிருந்த சிந்து சிக்கன் சாப்பிட தொடங்கியதும், இயல்பிலேயே அமைதியானவர் களத்தில் ஆக்ரோஷமாக கத்த தொடங்கியதும் கோபிசந்தால்தான்.
உணவு முறைக்கும், விளையாட்டு வீரர்களுக்கான வலுவான உடலுக்கும் நிறையவே தொடர்புண்டு. அதிக அளவு புரதச் சத்தை உட்கொள்ளும் நாட்டினர் அதிக அளவு பதக்கங்களை வெல்கிறார்கள் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. அருகே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலை பார்த்தால் நாம் எங்கே இருக்கிறோமென்று உங்களுக்கே புரியும்.
சிந்து, சாக்ஷி, தீபா இவர்கள் எல்லோருக்கும் உள்ள ஒற்றுமை அவர்களின் பெற்றோர்களின் ஆதரவு. விளையாட்டை வாழ்க்கையாக எடுக்க முடியும் என்று அவர்களும் நம்பியதால்தான் நல்ல ஊக்கம் கொடுத்துள்ளார்கள். இரண்டாவதாக 23 வயதில் உலக போட்டிக்கு வருவதற்காக இளம் வயதிலேயே முறையான பயிற்சியை தொடங்கியிருக்கிறார்கள். ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு மேலாக சீராக பயிற்சி பெற மனோதிடமும் உறுதியும் வீரர்களுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் இருந்திருக்க வேண்டும்.
நம்முடைய குழந்தை வளர்ப்பு முறையிலேயே பிரச்னை இருக்கிறது. மிகவும் பாதுகாக்கப்பட்ட சூழ் நிலையில் படிப்பை மட்டும் நோக்கியே அவர்களை தள்ளுகிறோம். அவர்கள் தோல்வியையே சந்திக்க கூடாது என்று எண்ணுகிறோம். அதனால் தான் முதல் முறை தோல்வியை சந்திக்கும் போது அவர்கள் தற்கொலையை நோக்கி செல்கிறார்கள்.
பழைய மன்னர்கள் காலத்தில் இளவரசர் களுக்கு கடுமையான பயிற்சியையும் கொடுப்பார்கள். கொட்டும் மழையில் குழந்தையை இரவு முழுக்க வைத்த ஒரு மன்னனின் கதை நம்ப முடியாததாக இருந்தாலும் கடுமையான பயிற்சிக்கு தயார்ப்படுத்தினார்கள் என்பதை இதிலிருந்து உணரலாம்.
இதுவரை பதக்கம் பெற்றவர்கள் தங்களுடைய சொந்த முயற்சியாலும், சிறிதே சிறிதளவிற்கு அரசின் முயற்சியாலும் வென்றிருக்கிறார்கள். பதக்கப் பட்டியலில் முன்னணியிலுள்ள அனைத்து நாடுகளிலும் அரசாங்கமே இதற்கான முன்னெடுப்புகளை செய்கிறது. மற்ற நாடுகளில் வீரர்களுக்கு செலவிடப்படும் தொகையுடன் இந்தியாவை ஒப்பிட்டால் மிகச் சொற்பமான அளவே செலவிடப்படுகிறது. ஆனால் வென்ற பிறகு தாராளமான பரிசு மழையில் நனைய விடுகிறோம். இதுவரை 15 கோடி வரை பரிசு கொடுக்கப்பட்டுள்ள சிந்துவின் பயிற்சிக்கு செலவிடப்பட்ட தொகை 44 லட்சம் மட்டுமே.
சாக்ஷிக்கு 12 லட்சமும், தீபாவிற்கு 2 லட்சமும் செலவழிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் வென்ற வீரர்களுக்கு பரிசு கொடுப்பதில்லை. ஆனால் இங்கு கொடுக்கப்படும் பரிசு பணத்தைவிட பல மடங்கு வீரர்களை தயார்ப்படுத்த செலவழிக்கிறார்கள். அதனால்தான் அவர்களால் 67 பதக்கங்களை வெல்ல முடிந்திருக்கிறது. நாம் வென்ற பிறகு கதாநாயர்களை உருவாக்கி சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
“முன்பு விளையாட்டுத்துறை ஒதுக்கீட்டில் வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அதிகமாகக் கிடைத்தது. கடந்த இருபது ஆண்டுகளில் இது படிப்படியாகக் குறைந்துள்ளது. ஹாக்கி இந்தியாவின் பெருமைகளில் ஒன்று. 1980க்குப் பிறகு ஹாக்கியில் நாம்பதக்கம் வெல்லவில்லை. பாஸ்கரன், தன்ராஜ் பிள்ளை, போன்ற திறமையான முன்னாள் வீரர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்தால், அவர்களால் சிறந்த வீரர்களை உருவாக்கமுடியும். விளையாட்டுக்குத் தொடர்பே இல்லாத ஆட்கள்தான் இந்தத்துறையில் முக்கியமான பொறுப்புகளில் உள்ளனர். இங்கே உலக தரத்தில் உபகரணங்கள் இல்லை. விளையாட்டுக்கென்று தனியாக மருத்துவர்கள் இல்லை.செலவிடப்படும் தொகையில் 10 விழுக்காடுதான் விளையாட்டு வீரர்களை சென்றடைகிறது. இந்த நிலையில் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் பதக்கம் வேண்டும் என்றால் எப்படி? நீண்ட கால திட்டத்தில் வீரர்களை கண்டடைந்து உருவாக்க வேண்டும். தொழிலதிபர்களும் கிரிக்கெட்டை தவிர மற்ற விளையாட்டு வீரர்களுக்கும் ஆதரவளிக்க வேண்டும்” என்கிறார் விளையாட்டு விமர்சகரும் பத்திரிகையாளருமான திருவேங்கிமலை சரவணன்.
உண்மையிலேயே அரசு இனிவரும் காலங்களில் அதிக பதக்கங்களை பெற விரும்பினால் செய்யவேண்டியன:
1. தரமான பயிற்சி கூடங்களை நாடெங்கும் ஏற்படுத்துதல்
2. விளையாட்டு துறையில் அனுபவம் பெற்ற மூத்த வீரர்களை பங்குபெற செய்து அரசியல்வாதிகள் ஒதுங்கிக் கொள்ளல்
3. ஒவ்வொரு துறையிலும் தரமான பயிற்சியாளர்களை நியமித்தல், தேவைப்பட்டால் வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமித்தல்
4. 2032 ஒலிம்பிக்கிற்கான இளம் வீரர்களை மாநிலந்தோறும் இப்போதே கண்டெடுத்து அவர்களுக்கு பயிற்சியளித்தல்
5. பயிற்சிக்கு தேவையான பணத்தை திட்டமிட்டு ஒதுக்குதல்
6. மாநில, தேசிய அளவிலான போட்டிகளுக்கு முக்கியத்துவமளித்தல்.
பெற்றோர்கள் பள்ளிகளில் விளையாட்டு மைதானம் உள்ளதா, என்ன மாதிரியான விளையாட்டுகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதை கவனிக்கலாம். விளையாட்டு உடலை உறுதிபடுத்துவதோடு, மனதை ஒருமுகப்படுத்தவும் உதவும். பதக்கங்களுக்காக இல்லாவிட்டாலும் உறுதியான எதிர்கால சந்ததிக்கு இது தேவை அல்லவா?
செப்டெம்பர், 2016.