தமிழர்களின் இரட்டை சமய வாழ்க்கை!

தமிழர்களின் இரட்டை சமய வாழ்க்கை!
Published on

தமிழகத்தின் முக்கியமான நாட்டாரியல் ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் அவர்களிடம் நாட்டார் சமயம், வழிபாடு, தெய்வங்கள் குறித்துப் பேசினோம்.

நாட்டார் சமயம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

சைவம், வைணவம், கிறித்தவம், இஸ்லாம் போன்று இச்சமயம்  தனியாக ஒரு சமயமல்ல. ஆனால் சில தனித்துவமான அடையாளங்களையும் வழிபாட்டு நெறிகளையும் தன்னகத்தேகொண்டுள்ள பிரிவாக இது செயல்பட்டுவருகிறது. இதில் இடம் பெற்றுள்ள கடவுளர்களை கிராமதெய்வம், ஊர் சாமி, குலதெய்வம், துடியானசாமி, காவல்தெய்வம், எனப் பல்வேறு பெயர்களில் அழைப்பர். இக்கடவுளர் வழிபாட்டை  மையமாகக்கொண்டதே நாட்டார்  சமயம். இக்கடவுளர்கள்  வட்டாரம் சார்ந்தவர்கள். சிவன், திருமால் போன்று தமிழ்நாடு முழுக்க  அறிமுகம் ஆகி வழிபாட்டுக்குரியவர்கள் அல்லர். இவர்களை மையமாகக்கொண்டு  நிகழும்  வழிபாடுகளையும் சடங்குகளையும் தன்னகத்தே கொண்டதுதான்  நாட்டார் சமயம்.

நாட்டார்  சமயம் என்ற சொல் கல்விப்புலம் சார்ந்த  சொல்லாக அமைந்து  சராசரித் தமிழனுக்கு அன்னியமான சொல்லாக உள்ளதே... மேலும் ‘‘நாட்டார்'' என்ற பெயரில்  ஒரு சாதியும் உள்ளது. இதன் அடிப்படையில் அச்சாதியின் சமயம் என்று, தவறாகப் பொருள் கொள்ளவும் நேரிடும். இதனைத் தவிர்க்க ‘‘நாட்டுப்புறச் சமயம்'' என்று அழைக்கலாமா?

‘Folk‘ என்ற ஆங்கிலச்  சொல்லுக்கு, சென்னைப்பல்கலைக்கழகம் வெளியிட்ட ‘‘ஆங்கிலம் &தமிழ்ச்  சொற்களஞ்சியம்'' மக்கள், நாடு, இனம்  என்று பொருள் உரைக்கிறது. இவற்றுள்  மக்கள் என்ற சொல் பரந்துபட்ட பொருள் தருவதாக  அமைய இனம்  என்ற சொல்  மக்களுள் - ஒரு குறிப்பிட்ட சிறு பிரிவைக் குறிப்பதாக அமைகிறது. இதன் அடிப்படையிலேயே Folklore என்ற ஆங்கிலக் கலைச்சொல்லை நாட்டார்  வழக்காறு என்று மொழி ஆக்கம்  செய்துள்ளனர். இது பற்றியே மக்களுள் ஓரு சிறு பிரிவினரின்  சமய நெறி  நாட்டார்சமயம் எனலாயிற்று. நாட்டார் என்ற பட்டத்தை சாதிப்  பின்னொட்டாக இட்டுக்கொள்ளும் மக்கள் பிரிவினர்  தமிழ் நாட்டில் வாழ்வது உண்மைதான். அது வழங்கும் சூழல் வேறு. நாட்டார்  என்பது பொதுவாக மக்கள் இனத்தையும் சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட சாதிப் பிரிவைக் குறிப்பதாகவும்  பயன்படுத்தும் சூழலுக்கு  ஏற்பப் பொருள் தரும். நாட்டார் கடவுளர்கள் மக்களின் இடப்பெயர்ச்சியின் காரணமாக பெருநகர்களிலும் இடம் பெற்றுள்ள நிலையில்  நாட்டுப்புறம் என்ற கிராமியம்  சார்ந்த, சொல்லைப் பயன்படுத்துவதைவிட  நாட்டார்  என்ற சொல்லைப் பயன்படுத்துவது  பொருத்தம்தானே!

நாட்டார் சமயம் தோற்றுவித்தவர் யார்? பரப்பியவர் யார்? இப்படி ஏதாவது உண்டா?

நீங்கள் கேட்பதுபோல் யாரும் தோற்றுவிக்கவும் இல்லை பரப்பவும் இல்லை. அது தொடக்கக் கால மனிதனின் தொல்சமயத்தில் அல்லது புராதன சமயத்தில் உருவாகி மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமயநெறி. இவ்வகையில் இதை தோற்றுவித்தவர்கள் பொதுமக்கள்தான்.

மக்கள் தோற்றுவித்தார்கள் என்றால் அதன் மையப்புள்ளியாக எதை கருதுகிறீர்கள்?

ஆதி மனிதர்களின் தொல்சமயம் என்று அழைக்கப்படும் புராதனச் சமயத்தில் இரண்டு கூறுகள் அழுத்தம் பெற்றிருந்தன. முதலாவது உயிர் உள்ள பொருட்கள், உயிரில்லா பொருட்கள் எல்லாவற்றிலும் ‘‘ஆவி'' என்ற ஒன்று உறைகிறது என்று நம்பினார்கள். இது இன்றும் கூட உலகின் பல்வேறு பழங்குடியினரிடையே தொடர்கிறது.. இதை மானுடவியலாளர்கள் ஆவியம் (கண்ணுக்கு தெரியாத ஆற்றல்) என்கின்றனர். இரண்டாவதாக சில குறிப்பிட்ட விலங்குகள், பறவைகள், தாவரங்கள் போன்ற ஆற்றல் உடையன என்று நம்பி அதை வழிபடுவதும் உண்டு. இதை ''குலகுறியம்'' என்று குறிப்பிடுவார்கள். இவை தவிர வேறுசில காரணங்களும் உண்டு.

ஆவியம் மற்றும் குலகுறியம் குறித்து விளக்கமாக கூறுங்கள்.

ஆவியம் என்பதை ஒரு ஆற்றலாக கருதினார்கள். இவை உயிருள்ள பொருட்களிலும் சடப்பொருட்களிலும் உறையும் என்று நம்பினார்கள். டைய்லர் என்ற மானுடவியலாளர் ‘‘புராதன பண்பாடு'' என்ற தலைப்பிலான தமது நூலில் இதை ஒரு கோட்பாடாக உருவாக்கியுள்ளார். ஆவியானது மனிதர்களை மட்டுமின்றி விலங்குகளையும் பாதிக்கின்றது. எடுத்துக்காட்டாக கன்றுக்குட்டியின் நச்சுக்கொடியை நாய் கடித்துவிட்டால் மாடு பால் கொடுக்காது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஆலமரத்தின் விழுதுகளில் கட்டி தொங்கவிடுவார்கள். நச்சுக்கொடியில் ஆவி இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். ஆவி குறித்த நம்பிக்கையின் அடிப்படையில் ஆவி வழிபாடு தோன்றியது. இதன் வளர்ச்சி நிலையாக மூதாதையர்களின் வழிபாடு உருவானது. இந்நம்பிக்கையின் படி இறந்தவர்களின் ஆவி ஆற்றல் படைத்தது என்றும் அதன் துணையால் தங்களுக்கு நன்மை பயக்கும் என்றும் அதன் கோபத்தால் தீமை பயக்கும் என்றும் நம்பினார்கள். மிகப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தாழிகளை இன்று கண்டெடுத்துள்ளார்கள். அந்த தாழியில் இறந்த மனிதனின் உடலை வைத்து அடக்கம் செய்துள்ளார்கள். அன்று அடக்கம் செய்யப்பட்ட மனிதனின் எலும்பு கூடு மட்டுமின்றி ஆயுதங்கள், தானிய உமிகள், உலோகப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள் இவையெல்லாம் கிடைக்கின்றன. இவையெல்லாம் இறந்தவனின் ஆவிக்குத் தேவைப்படும் நிலையில் இவற்றை வைப்பதன் மூலம் அவனுடைய ஆவியை நிறைவு செய்யமுடியும் என்று நம்பிக்கை இதனுள் மறைந்துள்ளது. இன்றும் கூட இதன் தொடர்ச்சியாக ‘கல்எடுப்பு' என்ற பெயரில் ஒரு செங்கல் துண்டையோ கல்லையோ இறந்தவராகப் பாவித்து அதற்கு எண்ணெய், இளநீர், பால் போன்றவற்றால் திருநீராட்டு செய்து மாலைசூடி வணங்கும் வழக்கம் தொடர்கிறது. ‘‘கிழமை அல்லது படைத்தல்'' என்ற பெயரில் இறந்தவனுக்கு விருப்பமான பொருட்களை அவனது ஆடையை ஒரு உருவமாக பாவித்து அதன் முன்னால் படைத்து வழிபடுவார்கள். இன்று ஆடைக்கு பதில் புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது.

இதற்கும் நாட்டார் சமயத்திற்கும் என்ன தொடர்பு?

நமது நாட்டார் தெய்வங்கள் என்பன பெரும்பாலும் உயிரோடு வாழ்ந்து இறந்துபோன, கொலையுண்ட அல்லது விபத்தில் மரணித்த மனிதர்கள்தான். இவர்களை நிறைவுசெய்து வளம்பெற அல்லது இவர்களது கோபத்தில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள தென்மாவட்டங்களில் கொடை என்ற பெயரில் ஆண்டுக்கு ஒருமுறையோ இரண்டு ஆண்டுக்கு ஒருமுறையோ சிறப்பு வழிபாடு நடக்கிறது. இவ்வழிபாட்டில் முக்கியமாக அமைவன மூன்று.  அவை சாமியாட்டம், உயிர்பலி, படையல் போடுதல்.. முதலில் சாமியாட்டத்தைப்பற்றி பார்ப்போம்.

வழிப்படக்கூடிய தெய்வத்தின் ஆவியானது ஒரு குறிப்பிட்ட மனிதனின் மீது இறங்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இது குறிப்பிட்ட நேர அளவு அவனுடைய உடலில் தங்கியிருக்கும் என்றும் நம்புகிறார்கள். இந்த நேரத்தில் அந்த குறிப்பிட்ட மனிதன் நம்மை போன்ற மனிதன் என்ற நிலையில் இருந்து மாறுபட்டு ஒரு குறிப்பிட்ட தெய்வமாகவே கருதப்படுகிறார். அப்போது அவனது பேச்சு என்பது தெய்வத்தின் பேச்சாக மக்கள் நம்புகிறார்கள். அவரும் சாதாரணமாக பேசாமல் கட்டளையிடும் தொனியிலே பேசுவார். இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் சைவம், வைணவம் என்ற இரு சமயவழிபாட்டில் காணப்படாத ஒன்று. சைவ வைணவ தெய்வங்களின் ஆவி இறங்கியதுபோல் ஒருவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டாலும் அதை ஊக்கப்படுத்துவது கிடையாது. இவ்வகையில்  சாமியாட்டம் என்பது நாட்டார் சமயத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றாக அமைகிறது.

இரண்டாவது உயிர்பலி, ஒரு குறிப்பிட்ட விலங்கு அல்லது பறவையை பலியிடுவது உயிர்பலி ஆகும். ஆனால் சைவ வைணவ கோயிலில் வெறுப்புடன் பார்க்கப்படுவது மட்டுமல்லாமல் தடைசெய்யப்பட்டது.  ஒரு காலத்தில் நாட்டார் தெய்வங்களாக இருந்து பின்னர் நிறுவன சமய எல்லைக்குள் கொண்டுவரப்பட்ட தெய்வங்களின் வழிபாட்டில் உயிர்ப் பலியின் எச்சத்தைப் பார்க்கலாம். அங்கு ஆடு வெட்டாமல் உயிருள்ள ஆடுகளை காணிக்கைகளாக கொடுத்துவிடுவார்கள். சில திருவிழாக்களின்போது திருச்செந்தூர்க் கோயிலின் முன் மண்டபத்தில் காணிக்கைக் கொடுக்கப்பட்ட ஆடுகளையும், சேவல்களையும் பார்க்கலாம். அப்படியென்றால் திருச்செந்தூர் முருகன் நாட்டார் தெய்வம் என்கிறீர்களா என்றால் ஆம்தான் என்று சொல்லுவேன். சங்கிலக்கியத்தில் முருகன் வழிபாடு இடம்பெற்றுள்ளது. வேலவன் என்று அழைக்கப்படும் பூசாரி, ஆடு பலியிட்டதைப்பற்றிய பதிவுகள் சங்கிலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன. ஆட்டு இறைச்சியையும் சோற்றையும் கலந்து முருகனுக்குப் படைத்ததை சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. ஏதோவொரு கட்டத்தில் தன்னுடைய பூர்விக நிலையில் இருந்து விடுபட்டு முருகன் வைதீக சமய கடவுள் என்று வரும்போது பழைய பழக்கததின் எச்சமாக உயிருள்ள ஆடுகளையும் உயிருள்ள சேவல்களையும் காணிக்கையாகப் படைக்கிறார்கள்.

மூன்றாவதாகப் படையல். கடவுளுக்கு முன்னால் உணவுப்பொருட்கள் படைப்பது. தென் மாவட்ட நாட்டார் கோயில்களில் படைப்புச் சோறு என்பார்கள். வைதீகக் கோயில்களில் உணவு படைக்க எடுத்து செல்லும் போது துணியால் மூடியே எடுத்துச் செல்லப்படும். படைக்கும்போதும் கருவறை திரையிட்டு மறைக்கப்படும். தான் உண்ணும் உணவையும் உண்ணுவதையும் பிறர் பார்க்கக்கூடாது என்பது மேட்டிமை உணர்வின் வெளிப்பாடு, ஆனால் நாட்டார் தெய்வங்களுக்குப் படைக்கும் படையல் பொருட்களுக்கு எந்த தடையும் கிடையாது. சுருட்டு, மது போன்ற எந்த பொருட்களையும் படையலாக படைக்கலாம். மனிதர்கள் எதையெல்லாம் உண்ணுவதற்கு பயன்படுத்துகிறார்களோ அவற்றையெல்லாம் படையலாகப் படைக்கலாம், இதற்கு விலக்கு என்பது கிடையாது.

சைவ வைணவத் தெய்வங்களுக்கு உள்ளதுபோல் நாட்டார் சமய கடவுகளுக்கு அவற்றின் தோற்றம் குறித்துப் புராணங்கள் உண்டா?

நீங்கள் குறிப்பிடும் புராணங்களை ‘தோற்றப்புராணங்கள்' என்று நாட்டார் வழக்காற்றியலாளர் குறிப்பிடுவர். இவை புனிதமானவையாகக் கருதப்படும். ஒரு குறிப்பிட்ட கோயில் உள்ள தெய்வம் உருவான வரலாறு, கோயில் உருவான வரலாறு கோயிலுடன் தொடர்புடைய நீர்நிலைகள் (தீர்த்தம்) உருவான வரலாறு அங்கு வழிபட்டு முக்திடைந்த அடியவர்களின் வரலாறு இவையெல்லாம் தோற்றப்புராணத்தில் இடம்பெற்றிருக்கும். இதேபோன்று நாட்டார் தெய்வங்களுக்கு கிடையாது. அப்படியென்றால் இவைகளை வரலாறு அற்ற சாமிகள் என்று சொல்லலாமா என்றால் நிச்சயமாக அப்படிச் சொல்லவே முடியாது. ஆவி என்பதைப்பற்றி குறிப்பிட்டேன். அந்த ஆவி வழிபாடுதான் நாட்டார் தெய்வத்தின் உயிர்நாடி. நாட்டார் தெய்வங்களின் மிகப்பெரிய தெய்வங்களின் வரலாறு உயிரோடு இருந்து இயல்பாக இறந்து போனவர்களாக, அல்லது விபத்தில் இறந்து போனவர்களாக, கொலையில் இறந்துபோனவர்களாக, தண்டனையால் இறந்துபோனவர்களாக, போரில் இறந்துபோன, கொடிய காட்டுவிலங்குகளால் தாக்கப்பட்டு இறந்துபோனவர்களாக, ஆநிரை கவர போனபோது அல்லது கவரப்பட்ட ஆநிரைகளை மீட்கச் சென்றபோது இறந்தவர்களாக இருப்பார்கள். இவ்வாறு பலவாறாக இறந்துபோனவர்களை மக்கள் தெய்வமாக வணங்குகிறார்கள்.

இவர்கள் இறப்புக்கு முன் என்ன வாழ்க்கை வாழ்ந்தார்கள், என்ன காரணத்தால் இறந்துப்போனார்கள் என்பன வாய்மொழியாக அந்தத் தெய்வத்தை வழிபடுபவர்களிடம் வழங்கி வருகின்றன. இதை ‘‘வாய்மொழிவரலாறு'' என்பர்.

சைவ நாயன்மார்கள், வைணவ ஆழ்வார்கள் வரலாறு போல் எழுத்துவடிவம் பெற்று தமிழ்நாடு முழுவதிலும் பரக்க நிலைப்பெற்று இருப்பதுபோல் அனைத்தும் தமிழர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.

ஆனால் குறிப்பிட்ட தெய்வத்தை தம் குலதெய்வமாக கொண்டுள்ளவர்கள் அல்லது ஊர்தெய்வமாக கொண்டுள்ளவர்கள் அந்த தெய்வத்தின் வரலாற்றை அறிவார்கள். தலைமுறைதலைமுறையாக இத்தெய்வத்தின் தோற்றக்கதை கூறப்பட்டு அறிந்திருப்பார்கள்.

இன்னொன்று நாட்டார் தெய்வ கோயில் விழாக்களில் ஒரு முக்கிய அங்கமாக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் நிகழும். இக்கலைகள் வட்டார தன்மை கொண்டவை.

வில்லுப்பாட்டு, கணியான் கூத்து, தெருக்கூத்து, உடுக்கைப்பாட்டு, லாவணிஆட்டம் என ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு பெயர்களில் நிகழ்த்தப்படும் நிகழ்த்துக்கலைகள் இத்தெய்வங்களின் தோற்றக்கதைகளை வெளிப்படுத்துவனவாகவும் அமையும். இவ்வகையில் ‘‘வாய்மொழி புராணங்கள்'' என்று இவற்றைக் குறிப்பிடலாம். சில கோயில்களில் நிகழ்த்துக்கலை இல்லாமல் இருக்கலாம். அக்கோயில் உருவாகி பல ஆண்டுகள் கழித்து ஒரு நிகழ்த்துக்கலைஞரை அழைத்து அத்தெய்வத்தின் வரலாற்றை மையமாக்கொண்டு நிகழ்த்துக்கலையை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்ளுவதும் உண்டு. இது தனியொரு மனிதனின் விருப்பத்தின் அடிப்படையில் நிகழ்வதல்ல. எடுத்துக்காட்டாக தூத்துக்குடி மாவட்டம்  சாத்தான்குளம் அருகில் உள்ள பன்னம்பாறை என்ற ஊரில் மாடத்தியம்மன் என்ற பெயரில் நாட்டார் கோயில் உள்ளது. இங்கு தன் அண்ணன்மார்களால் கொலைசெய்யப்பட்ட பெண் தெய்வமாக்கப்பட்டுள்ளார். இந்தக் கோயிலில்  நீண்டகாலமாக அம்மனை மையமாக்கொண்டு நிகழ்த்துக்கலை கிடையாது. இக்குறையைக் களையும் வகையில் சென்ற நூற்றாண்டின் 80களில் வில்லிசைக் கலைஞரிடம் கதையை கூறி வில்லுப்பாட்டு எழுதும்படி வேண்டினார்கள். அவரும் ஊரார் பலரும் கூறியக்கதையை கேட்டார்.

அக்கதையில் அப்பெண்ணின் அண்ணன்கள் ஆடுதிருடும் வழக்கம் உள்ளவர்கள் என்பதும் அவர்கள் திருடிய ஆட்டை அந்த பெண் வீட்டிற்கு கொண்டு வந்துவிடுவாள் என்றும் கூறப்பட்டது. அதைப் பொய் என்று யாரும் மறுக்கவில்லை. ஆனால சிலர் அண்ணன்களின் பெருமைக்கு இழுக்கு எனவே இதை விட்டுவிடவேண்டும். என்று வலியுறுத்தினார்கள். அப்போது எல்லோரும் கூடிப்பேசி அம்மனுடைய கதையில் எதையும் மறைக்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்து அதை வில்லுப்பாட்டில் இணைக்க அனுமதித்தார்கள்.

நாட்டார் சமயத்தைப் பின்பற்றுவர்கள் என்று தனி அடையாளம் உண்டா?

ஒரு கோயிலுடன் தம்மை இணைத்துக்கொண்டு அதற்குத் திருவிழா வரிகொடுப்பதும் திருவிழா எடுப்பதும் தனித்தனி சாதி அடிப்படையிலோ, கிராம அடிப்படையிலோ, குடும்ப அடிப்படையிலோ நிகழும். அதே நேரத்தில் இவர்கள் சைவராகவே வைணவராகவோ அந்த தெய்வங்களை வழிபடுபவர்களாகவோ இருப்பார்கள். இவ்வகையில் பெரும்பாலான தமிழர்கள் இரட்டை சமயவாழ்க்கை கொண்டவர்கள். இதில் அவர்களுடைய குடும்ப வாழ்வில் நாட்டார் தெய்வத்தின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். எப்படியென்றால் அவர்களது குடும்பத்தில் நிகழும் மங்கல நிகழ்ச்சி களுக்கு முதல் வெற்றிலை பாக்கு குலதெய்வ கோயிலில்தான் வைப்பார்கள். பல குடும்பங்களில் திருமணமாகி வீட்டிற்கு வரும் புதுமணபெண் முதல் பொங்கல் இடுவது குலதெய்வ கோயிலாகதான் இருக்கும். தம் குழந்தைகளுக்கு குலதெய்வ பெயரை இடுவதும் உண்டு. பெரும்பாலும் பிறப்பு முதல் இறப்புவரையிலான வாழ்க்கை வட்டச் சடங்குகளில் குலதெய்வ கோயிலாகவே அமையும். அதேநேரத்தில் அவர்கள் சிவனையோ விஷ்ணுவையோ வணங்குபவர்களாக இருப்பார்கள்.

ஏப்ரல், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com