செட்டிநாடு ஹெல்த் சிட்டி, கேளம்பாக்கம். “வண்டியை பார்க்கிங்கில் நிறுத்துங்கள்; பத்து நிமிடத்-தில் ஆய்வகத்தில் இருந்து வந்துவிடுகிறேன்” என்றார் பேராசிரியர் டாக்டர் பிச்சப்பன். இந்தியாவில் இருக்கக்கூடிய விரல்விட்டு எண்ணக்கூடிய மரபியல் அறிஞர்-களில் ஒருவர். தொழுநோய்க்கான மரபணுக்கூறைக் கண்டுபிடித்து புகழ்பெற்ற ஆய்வுக்கட்டுரை எழுதியவர். இப்போது உலகெங்கும் மனிதர்களின் தோற்றம், பரவல் குறித்து மரபணுக்கள் மூலம் செய்யப்பட்ட ஜீனோகிராபிக் திட்ட ஆய்வில் (நேஷனல் ஜியோகிராபிக் சொசைட்டி செய்யும் உலகளாவிய மரபியல்ஆய்வு) முக்கியப் பங்காற்றி தமிழர்கள் மரபியல் பற்றிய இறுதி அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். இதையொட்டிதான் இந்த சந்திப்பு. ஏற்கெனவே இவரது குழுவினர் வெளியிட்ட ஆய்வுமுடிவுகள் சுவாரசியமானவை.
எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் ஆதிமனிதன் புறப்பட்டு ஆண்டுக்கு 16 கிலோமீட்டர் என்கிற தூரத்துக்கு இடப்பெயர்ச்சி செய்து இன்றிலிருந்து சுமார் 60,000 ஆண்டுக்கு முன்பாக தமிழகம் என்று இன்று சொல்லப்படுகிற இந்த நிலப்பரப்புக்கு வந்து சேர்ந்தான். அந்த ஆதிமனிதனின் மரபணுவில் இருந்த ஒரு குறிப்பிட்ட கூறு, இன்றும் தமிழர்களிடம் உள்ளது. விருமாண்டி என்கிற பிரமலைக்கள்ளர் இனத்தைச் சேர்ந்த ஓர் இளைஞரின் டி.என்.ஏவில் அந்த மரபணுக்கூறு இருப்பதை ஆய்வில் சொன்னவர் பிச்சப்பன்.
நீல நிற கோட் அணிந்து மெல்ல நடந்து வந்த பிச்சப்பனின் கரத்தைக் குலுக்கினேன். “ மருத்துவமனையின் பின்புறம் இருக்கிறது தங்கும் இல்லம். மெதுவாக நடந்தே செல்லலாமா?” என்றார். இரவு பெரும்போர்வையாகச் சூழ மேலே அரைநிலவு எழுந்திருந்தது. அந்த வளாகமெங்கும் இனிய தூய்மையான குளிர்காற்று. தங்குமிடங்களுக்குள் காரோ பைக்கோ அனுமதிப்பதில்லை. சைக்கிள்கள் கிடந்தன. பகல் நேரத்தில் யார் வேண்டுமானாலும் அவற்றை எடுத்து ஓட்டிக்கொண்டு இந்த வளாகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்லலாம். அது ஒரு சுற்றுச்சூழல் நட்பு வளாகம். பிச்சப்பனின் இல்லத்தில் நுழைந்தோம். அவரது மாணவரும் பேராசிரியருமான அருண்குமார் வந்திருந்தார். அவர்தான் இந்த ஆய்வுக்கட்டுரையின் முதல் ஆய்வாளர். பேராசிரியர் பிச்சப்பன் இக்கட்டுரையின் நெறியாளுநர். பிச்சப்பனே உள்ளே போய் சுடச்சுட மென்ரொட்டியை வெதுப்பி சாப்பிட எடுத்துவந்தார். தமிழர் மரபியல் ஆய்வுக்கட்டுரை பற்றி பேச்சைத் தொடக்கினோம்.
“இந்த ஆய்வில் தமிழ்நாட்டு மக்களை ஏழு பிரிவா பிரிச்சோம். இந்த ஏழு பிரிவுக்குள்ளும் சில உள் குழுக்களையும் தீர்மானித்தோம். இது ஆண்வழிச்சமூகம். மரபியலில் ஆணுடைய ஒய் குரோமோசோம் அவனுடைய ஆண் குழந்தைக்குத்தான் வருகிறது. பெண் குழந்தைக்கு இல்லை. இந்த ஒய் குரோமோசோமைத்தான் நாங்க எடுத்த சாம்பிள்களில் ஆராய்ந்தோம். பொதுவாக தமிழர்கள் எல்லோரும் ஒரே மரபணுத் தொகுதியில் இருந்து வந்திருப்பார்களா? ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா என்று ஆராய முயற்சிசெய்தோம்.
ஏழு குழுவாக தமிழ்நாட்டு மக்களை பிரித்தோம் என்று சொன்னேன் இல்லையா? அவர்கள் வாழ்வதற்காகச் செய்யும் வேலையின் அடிப்படையில் அவர்களைப் பிரித்தோம். இத்துடன் அவர்களின் கலாச்சாரத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டோம். இந்த ஏழில் மூன்று பழங்குடிக் குழுக்கள். நாலு சாதிக் குழுக்கள். இவர்கள் அனைவரும் எப்படியும் பொதுவான முன்னோரில் இருந்துதான் வந்திருக்கவேண்டும். எவ்வளவு காலத்-துக்கு முன்னால் இவர்கள் ஒரே குழுவாக ஒன்றாக இருந்-திருப்பார்கள்? பழங்குடிகள் அனைவரும் ஒரே மரபணு-வில் இருந்து வந்தவர்களா? ஆறுகள் கிளை நதியாகப் பிரிவதை எவ்வளவு தூரத்தில் அது பிரிகிறது என்று அளக்கமுடியும். இதுபோல மரபியல் கணக்கீடுகள் மூலம் எவ்வளவு காலம் முன்பாக ஒரு குழு பிரிந்தது என்பதை கணக்கிடலாம். அதைத்தான் நாங்கள் செய்தோம்.
மொத்தம் தமிழ்நாட்டிலிருந்து 1680 பேர்களிடம் சாம்பிள்-கள் எடுத்து எங்கள் மதுரை மரபணு ஆராய்ச்சிக் கூடத்தில் ஆய்ந்தோம்.
பழங்குடிகளைப் பொருத்தவரை நீலகிரியிலிருந்து அம்பா-சமுத்திரம் வரை சாம்பிள் எடுத்தோம். இதில் மூன்று குழுக்கள் என்று கூறியிருந்தேன் அல்லவா? ஒன்று மலைவாழ் வேட்டையாடும் பழங்குடிகள் (பளியர், இருளர், காடர்), இரண்டு: மலைவாழ் கன்னடம் பேசும் பழங்-குடிகள் (குறும்பர்கள்), மலையில் வாழும் தோடா, கோட்டா ஆகியோர் மூன்றாவது குழு. இவர்கள் எருமை வளர்க்கிறார்கள், இறந்தவர்களை எரிக்கிறார்கள்.
இதையடுத்து சமவெளியில் உள்ள சாதிகளில் நாங்கள் நான்கு பெரும்குழுக்களை அடையாளம் கண்டோம். ஒன்று வானம்பார்த்த பூமியில் விவசாயம் செய்பவர்கள், கலைஞர்கள் மற்றும் படைவீரர்கள், பிராமணர்கள் மற்றும் அவர்களுடைய தொடர்புடைய குழுவினர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள்.
எங்கள் ஆய்வின் முடிவு இதுதான்: 7000 ஆண்டுகளுக்கு முன்பாக முதல் இரண்டு மலைவாழ் பழங்குடிகள் பிரிந்து சென்றுள்ளனர் (பார்க்க படம்). அதற்கு ஆயிரம் ஆண்டு-களுக்கு முன்பு இன்னொரு மலைவாழ் பழங்குடிக் குழு (தோடர்கள், கோட்டா) பிரிந்து சென்றுள்ளது. பிராமணர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புள்ள குழுவினர் 5600 ஆண்டுகளுக்கு முன்பாகப் பிரிந்தனர். இதே சமயத்தில் பிரிந்த ஒரு குழுவிலிருந்து சுமார் 2000 ஆண்டு கழித்து அதாவது இன்றிலிருந்து மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் விவசாயம் செய்யும் சாதிகள், கலைஞர்கள் மற்றும் படைவீரர்கள், பட்டியல் இனத்தவர் ஆகிய குழுக்கள் பிரிந்துள்ளன. அதாவது இன்று பட்டியலிடப் பட்டவர்கள் என்று சொல்லப்படுகிற ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் வானம்பார்த்த பூமியில் விவசாயம் செய்யும் சாதிகளுக்கும் ( முக்குலத்தோர், நாடார், போன்றோர் ) ஒரே முன்னோர்தான், சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்திருக்கவேண்டும். இதுதான் எங்கள் டி.என்.ஏ ஆய்வு கூறும் முடிவு. இந்த ஆண்டுக்கணக்கு இன்னும் கொஞ்சம் பின்னோக்கியும் கூட இருக்கலாம். இந்த மரபியல் வேறுபாடுகள் தோன்றியகாலமும் தமிழ்-நாட்டில் விவசாயம் செய்ய ஆரம்பித்த காலகட்டமும் ஒத்துப்போகின்றன. இந்த பிரிவுகளும் அவர்கள் செய்யும் தொழிலையொட்டி உருவானவை.
இதை வைத்து நாங்கள் சொல்லும் முடிவு இதுதான்: பொதுவாக நால்வருண சாதி அடுக்கு ஆரியர் வருகையையொட்டி பல்லவர்காலத்தில்தான் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கு முன்பே தொழில் அடிப்படையில் நன்கு கட்டமைக்கப்பட்ட சமூக அடுக்குகள், சாதிகள் தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றன என்பதுதான். அதாவது தந்தை தன் மகனுக்கு தன் தொழிலையும் வாழ்க்கைமுறையையும் தந்தார் அல்லது தந்தையின் தொழிலை மகன் செய்தான். பத்தாயிரம் ஆண்டுக்கு முன்பாக தமிழர்கள் எல்லோருமே ஒரே கூட்டமாக இனமாக இருந்திருக்க வேண்டும். அப்போது மொழி உருவாகிறது. இது வளர்ச்சிக்கு ஒரு கருவி அல்லவா? கம்ப்யூட்டர் மொழி தெரிஞ்சவங்க இப்ப நல்லா சம்பாதிக்கிறார்கள். அதுபோலத்தான் அன்று மொழியறிவு பெற்றவர்கள் மேன்மை பெற்றிருப்பார்கள்.
பொதுவாக நவீன மரபியல் டி.என்.ஏ ஆய்வுக்குப் பின்னால் நாம் உணர்வது உலகில் உள்ள அனைவருமே மேல் தோலுக்குக் கீழே ஆப்பிரிக்கர்கள்தான். இரண்டாயிரம் தலைமுறைகளுக்கு முன்னால் அனைவரும் சகோதர சகோதரிகள்தான் என்பதே. தமிழ்நாட்டில் சுமார் 500 தலைமுறைக்கு (25 ஆண்டுகள் ஒரு தலைமுறை) முன்பாக நம் முன்னோர்கள் அனைவரும் ஒரே குடும்பம்தான். சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்னால் சுதந்திரமான சாதி வேறுபாடற்ற மனிதகுலம் இருந்திருக்க வேண்டும். கூட்டம்/ மக்கள்தொகை பெருகப்பெருக வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்து தனிக்குழுக்களாக உருவாகி இருப்பர். அவர்களுக்கே உரிய மரபியல் மாற்றங்கள் உருவாகி இருக்கும். எங்கு வசதியாக இருக்கிறதோ அங்கு தங்கி இருக்கலாம். இவர்கள்தான் இன்று வெவ்வேறு இடங்களில் வசிக்கும் பல்வேறு மக்கள் அல்லது சாதிகள். அதற்கு ஏற்ப பிற்காலத்தில் அவர்களின் சமூக கலாச்சாரம் வேறு பட்டிருக்கிறது. வாழ்வியல் ஆதாரங்களும் மாற்றமடைந்திருக்கின்றன. மரபியல் கூறுகளில் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன” பேராசிரியர் விளக்கினார்.
ஒரு சந்தேகம். பிராமணர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய குழுவினர் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னால் பிரிந்ததாக சொல்லுகிறீர்கள். ஆனால் அவர்கள் தமிழ்நாட்டுக்கு பல்லவர்காலத்துக்குப் பின்னால் (1400 ஆண்டுகள்) அல்லது பிற்காலத்-தில் அழைத்துவரப்பட்டதாக அல்லவா சொல்லப்படுகிறது?
“ நான் சொல்வது மரபியல் சார்ந்த அறிவியல் முடிவுகள். இதில் ஒரு விஷயம் சொல்கிறேன். ஒய் குரோமொசோமில் உள்ள டி.என்.ஏவை ஆராய்ந்து எப்போது ஒரு குறிப்பிட்ட மாற்றம் ஏற்பட்டது என்ற கால அளவைத்தான் எங்களால் சொல்லமுடியும். ஆனால் அது எங்கே ஏற்பட்டது என்கிற இடத்தைச் சொல்லமுடியாது. பிராமணர்கள் உள்ளிட்ட குழுவினர் நீலகண்ட சாஸ்திரி உள்ளிட அறிஞர்களின் கூற்றுப்படி வடக்கே ஆந்திராவில் இருந்து வந்திருக்கலாம். ஒருவர் முன் ரயிலில் வந்தார். அடுத்தவர் பின்வந்த ரயிலில் வந்தார். இன்னொருவர் அதற்கடுத்த ரயிலில் வந்தார். அவ்வளவுதான்”
சாதி என்பது?
“அது ஒரு இன்ப்ரீடிங் (Inbreeding) யூனிட். ஒரு குறிப்--பிட்ட பகுதியில் வசிப்பவர்கள், தங்களுக்குள்ளேயே திருமணம் செய்து உறவு கொண்டு இனப்பெருக்கம் செய்து-கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒரு காலகட்டத்-தில் இந்த குழுவில் இருந்து சில குழுக்கள் / மரபணுக்கள் பல்வேறு நிர்ப்பந்தங்களால் ஒன்றை விட்டு ஒன்று விலக ஆரம்பித்து புதிய குழுக்கள் தோன்றும் . இவை இரண்டுவேறு சாதிகள் ஆகிவிடும்”
சாதியை ஒழிக்க முடியுமா? ஒரு அறிவியல் அறிஞரிடம் கேட்கக்கூடாத கேள்விதான்...
“எந்த நாகரீமடைந்த மனித சமூகத்திலும் அடிப்படைக் கூறு குடும்பங்களே. இவர்கள் தங்களை மாதிரியே இருப்பவர்களை விரும்புவது இயல்பே. இது மகிழ்ச்சியான, பாதுகாப்பான, சமூக வாழ்க்கைக்காக மேற்கொள்ளப்பட்ட உத்தி. இதுதான் சாதி என்ற அமைப்பின் அடிப்படை. இப்போது ஐடி வேலை செய்கிறவர் ஐடி வேலை செய்பவரை விரும்புகிறார்; டாக்டர், இன்னொரு டாக்டரை திருமணம் செய்கிறார். காரணம் ஒரே மாதிரியான சமூக கலாச்சார விழுமியங்கள்.. இதுதான் வரலாறு முழுக்க நடந்திருக்கிறது! ஆகவே சாதி அல்லது குழுக்களின் பரிமாணம் மாறிக்கொண்டே இருக்கும். இது இயற்கையின் நியதி!”
விடைகொடுக்கிறார் பிச்சப்பன். இரவில் வெளியே வந்து நடந்தபோது ஆப்பிரிக்காவில் இருந்து புறப்பட்டதாகச் சொல்லப்படும் ஆதிமனிதன் கண்டு அஞ்சிய இருளை இன்று ஒளிவிளக்குகள் கிழித்துக்கொண்டிருப்பதையும் அந்த மனிதன் கண்ட அதே நிலா உச்சிக்கு வந்திருப்பதையும் பார்த்தேன்.
பிப்ரிவரி, 2013.