ஈரோட்டிலிருந்து உற்ற நண்பர் ஒருவர் போனில் அழைத்தார். ஒரு டாகுமெண்டரி படம்... ஸ்கிரிப்ட் பத்தி பேசணும்... வர முடியுமா? என்றார். ஒரு தனி நபர் ஒருவர் பற்றி அவரது குடும்பம் ஆவணப்படுத்த விரும்புகிறது. சந்ததியினருக்கு முன்னோரின் முகவரியினை அடையாளப்படுத்த விரும்பி அவரை அறிந்தவர்கள் அவரோடு பழகியவர்கள், அவரது குடும்பத்தினர் கூறுவதைப் பதிவு செய்ய வேண்டும். பின்னர் அதனைத் தொகுத்து கொடுக்க வேண்டும். அவ்வளவுதான்.
ஆனால் காலஞ்சென்ற அந்த மனிதரின் படத்தில் பங்கெடுக்க போய் அதன் மூலமாக அந்த மனிதர், அவரைப்பற்றி பேசுபவர்கள் மூலமாக என் மனதை அசைத்துப் பார்த்து எனது நம்பிக்கைகளைப் பெருக்கிக் கடந்து செல்வார் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்த கதாநாயகனின் பெயர் சி. துரைசாமி. சி.டி என்ற அடையாளமாக கூறப்படுபவர். ஈரோடு மக்களுக்கு நன்கு அறிந்த முகம். இன்று புகழ்பெற்று விளங்கும் கொங்கு பொறியியல் கல்லூரியை உருவாக்கியவர்.
ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து ரொட்டி விற்றும், உணவகம் நடத்தியும் வந்த பெற்றோரிடம் வளர்ந்து, சொந்தமாக அரிசி ஆலை நடத்தி, பிறகு சமையல் எண்ணெய் வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்து இந்தியாவில் சமையல் எண்ணெய் விலையை வடக்கத்தியினர் முடிவெடுத்தது போய் ஈரோட்டில் ஒரு தனி மனிதர் நிர்ணயித்திருக்கிறார் என்ற பெயரோடு திகழ்ந்திருக்கிறார் பத்துவரை மட்டுமே படித்த இந்தக் கதாநாயகன்.
முதன்முதலாக சொந்தமாக நெல் வியாபாரம் தொடங்க எண்ணி தன் தந்தையிடம் பணம் வாங்கியிருக்கிறார். வியாபாரம் தோற்று விட்டது, நம்பிக்கையை மட்டும் மீதம் வைத்து விட்டு. அப்பாவுக்கு விஷயம் தெரிந்ததும் பணத்தை வீண் செய்துவிட்டாய். இனி நீ தொழில் செய்து பிரயோஜனமில்லை என் பணத்தை கொடுத்து விடு என்று கேட்டிருக்கிறார். கையில் பணமில்லாத சி.டி வட்டியாளர்கள் முன்பு போய் நின்றிருக்கிறார். அதன் பிறகு தீவிரமாக அரிசி வியாபாரத்தில் இறங்கி கடனடைத்து வெற்றியும் பெற்று பிறகு தொழிலை பெருக்கி கொள்ளும் விதமாக கவனம் எண்ணெய் பக்கம் திரும்பியிருக்கிறது.
பழுதான பழைய எண்ணெய் இயந்திரம் ஒன்று சென்னை தண்டையார்பேட்டையில் இருப்பதை அறிந்து அதனை வாங்கி சரிசெய்து ஓட்ட எண்ணி சென்னைக்கு வருகிறார். வாங்க முடிவெடுத்தாகிவிட்டது. அதன் பதினாறு அடி உயரத்திற்குச் சென்று பார்வையிடுகிறார். எங்கோ பிசகியதால் தவறுகிறார். முதுகெலும்பில் பலத்த முறிவு. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவர் மீண்டு வந்தது அவரது நெல் வியாபாரம் தோற்றபோது மீதம் இருந்த அந்தப் பழைய தன்னம்பிக்கையால் மட்டுமே என்கிறார்கள்.
அணுகுமுறையில் எளிமை, போராட்ட குணம், வெற்றி மீது வெறி, சகோதரத் தன்மை, பலனைப் பகிர்தல், வேறுபாடு அற்ற பண்பு, உழைப்பாளர்களை உயர்த்துவது, நண்பர்களை நன்மைக்கு அழைத்து செல்வது, சி.டி யின் குணநலன்களை இவற்றுக்குள்ளேயே தேடுகிறார்கள் நான் டாகுமெண்டரிக்காக சந்தித்தவர்கள்.
தனது சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களை உயர்த்துவதற்கு ஒரே வழி, தான் பெறாத கல்வி என்று முடிவெடுத்து நண்பர்களுடன் ஒரு பள்ளி ஆரம்பிக்க விவாதித்து இருக்கிறார். அதுவே ஒரு விதையாகி கொங்கு தொழில்நுட்பக் கல்லூரியாக முளைத்து இன்று கொங்கு பொறியியல் கல்லூரி மற்றும் கல்வி அறக்கட்டளை என்று வியாபித்திருக்கிறது.
தென்காசியிலிருந்து ஒரு மனிதர் கல்லூரிக்கு வந்திருக்கிறார். முதல்வரை சந்திக்கிறார். தான் வறுமையில் இருப்பதாகவும் தனது மகன் பொறியியல் படிப்பு படிக்க ஆசைப்படுவதாகவும் உதவி செய்யும்படியும் வேண்டுகிறார். கல்லூரி விதித்திருக்கிற கட்டணத்தினை கட்டும்படி முதல்வர் கூற தன்னால் இயலாது என்கிறார் அவர். முதல்வர் எவ்வளவு கூறியும் மாலை வரை அவர் கல்லூரியிலேயே காத்திருக்கிறார். கடைசியாக முதல்வர் அவரிடம் தன்னால் அவருக்கு உதவ முடிந்தது ஒன்றுதான், ஈரோட்டிற்கு செல்ல இருக்கும் தனது காரில் கொண்டு போய் பஸ் நிலையத்தில் விடுவதால் அது வரைக்குமான போக்குவரத்து பணம் மிச்சம் என்று கூறி இருக்கிறார். வேறு வழியில்லாமல் அவரும் ஒத்துக் கொள்கிறார்.
வரும் வழியில் கார் நிற்கிறது. எதிரில் வேறு ஒரு வாகனம். முதல்வர் இறங்கி எதிர்வாகனத்தில் இருப்பவரிடம் பேசுகிறார். தென்காசிக்காரர் அவர் யாரென விசாரிக்க அவர் தான் சி.டி என்று தெரிந்து கொள்கிறார். உடனே போய் அவரிடம் முறையிடுகிறார்.
சி.டி, ‘இவரது மகனின் படிப்பு செலவு முழுவதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் படிக்கட்டும்!’ என்கிறார். இன்று அந்த மாணவன் வாழ்வில் அடைந்த வெற்றியைப் போன்று நன்றிகூற நிறைய மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மனதில் சி.டியின் பதிவு எவ்வாறு இருந்திருக்கும்?
அதே சமயம் ஒரு தடவை அவரது நிறுவனத்தில் உள்ளூர்காரர்கள் வேலை நிறுத்தத்தை அறிவிக்கிறார்கள். பெரிய பிரச்சனையாக அது உருவெடுக்கிறது. அதிகார அழுத்தம் கொடுத்து அவர்களை வெளியேற்ற ஒரு முதலாளிக்கு கிடைத்த வாய்ப்பு. ஆனாலும் அவர் சம்பளத்தினை மட்டுமே தொடர்ந்து கொடுத்து கொண்டிருக்க, வேலை செய்யாமல் பணம் மட்டுமே வாங்க விரும்பாத அந்த தொழிலாளிகள் தங்களுக்கான நிவாரணத்தை பெற்றுக்கொண்டு சென்று விட்டார்கள்.
அவரிடம் வேலை செய்த ஒருவர் பணி நேரத்தில் மற்றவர்களுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக வேலையை விட்டு நின்றிருக்கிறார். அது போன்ற சமயம் வீடு தேடிச் சென்று அழைத்து வரத் தயங்காத குணம் கொண்டவர் சி.டி என்ற இன்னொரு சம்பவத்தை ஒருவர் பகிர்ந்துகொண்டார்:
“காசாளராக இருந்த ஒருவர் கணக்கில் வராமல் அடிக்கடி பணத்தினை எடுத்திருக்கிறார். கணக்கு வழக்கில் அவரளவிற்கு சி.டி நுட்பம் அறியாதவர் என்பதால் அவருக்கு இது எட்டவில்லை. ஒருகட்டத்தில் பணம் பெரிய அளவில் திருடு போய் விட்டது. அது வரையிலும் காணாமல் போன தொகை தெரிந்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். காசாளரும் வேலையை விட்டு நின்றுவிட்டார். அவருக்கு தண்டனை கிடைப்பதே நியாயம் என அனைவரும் குரல் கொடுத்த பொழுது, இது போன்றவர்களை அறியாமல் வேலைக்கு வைத்திருந்தது எனது தவறு தானே தவிர அவரது தவறு இல்லை..மேலும் அவர் அவ்வளவு பெரிய தொகையை திருடிய பிறகும் நாம் லாபம் தானே சம்பாதிதிருக்கிறோம். நட்டமில்லையே. யாரையும் காயப்படுத்த வேண்டாம். நம்மிடம் வேலை செய்யாததே அவருக்கு தண்டனை விட்டு விடுங்கள் என்றிருக்கிறார்”
சி.டியின் மரணம் எதிர்பாராத ஒன்று. ஐம்பது வயது சமீபத்திலேயே அவர் மறைந்திருக்கிறார். அதைப் பற்றிய பதிவின் போது ஒருவர் கூறியதிலிருந்து...
வனஸ்பதி வியாபாரத்தினை தொடங்கிய சமயம் அதன் தரத்தில் அவர் உறுதியாக இருந்தார். கிட்டத்தட்ட எட்டு விதமான வனஸ்பதி மாதிரிகள் தனித் தனி டப்பாக்களில் நேரம் குறிக்கப்பட்டு அவர் முன்பு வைக்கப்படும். அவர் விரலினால் தோண்டி அதனை சுவைத்து விழுங்கி பரிசோதித்துக் கொள்வார். தொண்டையில் காரல் ஏற்பட்டு விடக்கூடாது. அதில் அதிருப்தி வந்து விட்டால் மீண்டும் சுத்திகரிக்க அனுப்பப்பட்டு அவரிடத்திலே திரும்பும். ஒருநாளைக்கு குறைந்தபட்சம் எட்டு மாதிரிகள்...உடம்புக்கு பாதிப்பு ஏற்படும் என்று தடுத்தால் “வேற வழி இல்லைங்க... பேரு கெட்டு போயிருமே” என்று கூறி விடுவார்.
‘இப்படி யாருங்க பண்ணுவாங்க? அதுவே கூட அவரோட இதயத்தை பாதிச்சிருக்கும்” என்கிறார் மருத்துவ நண்பர் ஒருவர்.
சிடி இருந்திருந்தால்...?
நிறைய பேர் இதற்கான பதிலை முடிக்கவில்லை. உழைப்பு, தன்னம்பிக்கை மட்டுமே கொண்ட சிடியின் தேவையை கண்ணீரால் நிரப்ப முயன்று தோற்கிறார்கள். அவர்கள் அனைவருமே அவரது மதத்தில் இல்லை, ஜாதியில் இல்லை. தொழிலாளர்களாகவும் , நண்பர்களாகவும் மட்டுமே இருக்கிறார்கள்.
அவரது சிலை ஒன்று கொங்கு பொறியியல் கல்லூரியின் உள்ளே இருக்கிறது. மாணவர்கள் கடந்து செல்கிறார்கள். ஒரு மாணவரிடம், ‘இது யார் எனத் தெரியுமா” என்று கேட்டேன். தெரியவில்லை என்றார் உடனேயே. ‘சி.டி யைத் தெரியுமா?’ என்றேன். ‘ப்ச்’ என்று தோளைக் குலுக்கி கொண்டு கடந்து போனார். அறம் புறம் தெரிவதில்லை!.
பிப்ரவரி, 2013.