‘தனிச்சல்ல ஞான்!

‘தனிச்சல்ல ஞான்!
Published on

எதற்காக இந்த வாழ்க்கை? ..செவித்திறனுக்கும் அப்பால்கூட ஆறுதல் வார்த்தைகளைப் பேறும் இதயங்கள் இல்லை.. கண்ணெட்டும் தூரத்துக்கும் சாய்ந்துகொள்ளத் தோள்களும் இல்லை..  தினமும் விளக்கேற்றி, துளசி மாலை அணிவித்து, மந்திரம் சொல்லி வணங்கிய குருவாயூரப்பனும் புறக்கணிக்கிறார். தனிமையின் குரூரமான விளையாட்டில் மனமெங்கும் ஆழமான புண்கள்.. இந்த உணர்வுகளுடன் செல்லம்மாள் என்ற எழுபத்தி ஐந்து வயதுடைய அந்தக் கேரள நம்பூதிரி பிராமணப் பெண்மணி, அம்பலப்புழா அருகில் உள்ள ரெயில் தண்டவாளம் நோக்கி நடந்துகொண்டிருந்தார்.. எப்போதும் தள்ளாடும் அவர் கால்கள் மிக உறுதியாக நடந்து சென்றன.

ஆனால் அந்தக் கிராமத்தில் தனக்கொரு தாய் வேண்டும் என எப்போதோ ஒரு முறை அல்லாவிடம் வேண்டிக்கேட்டுக்கொண்ட ஒரு ரசியா பீவி இருந்தார். அல்லா, தண்டவாளம் அருகில் ஒரு தாய் இருப்பதாகவும் அவரை அழைத்துவரும்படியும் உணர்த்துவதாக  ரசியாவுக்கு திடீரெனத் தோன்றியது. உடனே விரைந்த  ரசியா பீவி, செல்லம்மாளைக் கண்டு தம் வீட்டிற்கு அழைத்துவருகிறார். கணவரும் குழந்தைகளும் மகிழ்ந்து அவருக்காக உதவினர். ஆனால் அவ்வூரில் வாழும் சிலருக்கு இந்த இரு மதத்தில் இருக்கும் தாயும் மகளும் ஒன்றாக நன்றாக வாழ்வது பிடிக்கவில்லை. பலவித தொந்தரவுகளுக்குள்ளாகிறார் ரசியா பீவி.. பாவம் அதையெல்லாம் அன்பாலும் கருணையாலும், மன உறுதியாலும் நேருக்கு நேர் நின்று போராடி வெற்றியடைகிறார். அப்படிச் செல்லம்மாள் என்ற பிராமணப் பெண்மணி, முஸ்லிமான ரசியா என்ற மகளுடன் மகிழ்வுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்.

இதொன்றும் கட்டுக்கதையல்ல.. உண்மைச் சம்பவம். இக்கதை ஏதோ ஒரு பத்திரிகையில்  செய்தியாக வெளிவர அதைப்படித்த  பாபு திருவல்ல என்ற திரைப்பட இயக்குநர் இதைப் படமாக்க முயல்கிறார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த நடிகையிடம் இதைச்  சொல்ல, நடிகைக்கு ஒரு  ஆர்வம்: இந்த அம்மாவையும் மகளையும் நேரடியாகச் சந்திக்கவேண்டுமென்று. சரி என்கிறார் இயக்குநர். பிறகு நடந்ததெல்லாமே இன்று வரலாறாகின.

அப்படித்தான் கல்பனா பிரியதர்ஷினி எனும் மலையாள நடிகை கல்பனா, ரசியா பீவியையும் அவரின் தாய் செல்லம்மாளையும் பார்க்கச் செல்கிறார். ரசியாவும் செல்லம்மாளும் அசந்தே விட்டார்கள். கல்பனா இந்த மனுஷிகளைக் கண்டு நெகிழ்ந்துபோனார். பிறகு கல்பனாவின்  பொறுப்பாக மாறியது அக்குடும்பம். எல்லா மாதமும் ஒன்றாம் தேதி ரசியாவின் வங்கிக்கணக்கில் ஒரு தொகை பணம் கல்பனாவிடமிருந்து வரும். பண்டிகைகள் தோறும் மகிழ்விக்கும். பல் ஆண்டுகளாக இது தொடர்ந்தது, இதற்கிடையே ‘தனிச்சல்ல ஞான்‘ எனும் பெயரில் ஓர் மலையாள திரைப்படம் வெளியானது. அதன்மூலம் கல்பனா நிஜ ரசியாவின் திரை நிழலாக மாறினார். அவருக்கு அந்த ஆண்டின் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. கல்பனாவிற்கு அழுகையும் சிரிப்பும் ஒன்றாக வந்தது.. முதல் அழைப்பு ரசியாவுக்கும் செல்லம்மாளுக்கும்.. அவர்களுக்கு இது மகிழ்ச்சி என்றாலும் இதை அவர்கள் எதிர்ப்பர்த்திருந்ததாகக் கல்பனாவிடம் சொல்ல அவருக்கு ஒரே வியப்பு.. எப்படிச் சொல்கிறீர்கள்.. என்று கேட்கிறார்.

‘ஆமாம் கல்பனா அக்கா.. நான் எல்லா நாளும் அல்லாவிடம் மனம் திறந்து வேண்டுவேன்.. உங்களுக்கு உலகிலேயே மிகச் சிறந்த விருதுகள் கிடைக்கவேண்டும் என்று.. அம்மாவும் தினமும் விளக்குவைத்து துளசிமாலை அணிவித்துக் கண்ணனிடம் கல்பனா மகளின் உயர்வுக்காகப் பிரார்த்தனைச் செய்வார்.. அல்லாவும் கண்ணனும் எங்களின் வேண்டுதல்களைக் கேட்டிருக்கிறார்கள்.. அதனால் நாங்கள் கிடைக்கும் என்று உறுதியாக நம்பிய விருது இது.. ‘ ரசியா இதைக் கூறியதும் ஏற்கனவே கருணையின் மூர்த்தியாக இருக்கும் கல்பனாவால் அழத்தான் முடிந்தது..

நடிகை கல்பனா சமீபத்தில் இறந்த செய்தியை  கேட்டதும், ‘அவர்களால் எப்போதுமே இறக்கவே முடியாது, எங்களை விட்டுப் போகமுடியாது, பொய் சொல்லாதீர்கள்’ என்று கதறி  அழுதார் ரசியா. ‘வாரத்தில் ஒருமுறை இனி யார் எங்களை அழைத்து ஆறுதல் சொல்வார்கள்.. வெளியே யாருக்கும் தெரியாமல் உதவியவர் கல்பனா அக்கா. இல்லை அவர்கள்  இறக்க முடியாது...’ என்று இப்போதும் நம்ப முடியாமல் ஒருவித பிரமையில் புலம்புகிறார் ரசியா பீவி..

கல்பனா குழந்தை நட்சத்திரமாகச் சினிமாவில் வந்தவர்.. பிறகு ஜி அரவிந்தன், எம் டி வாசுதேவன் நாயர் போன்ற திரையுலகப் பீஷ்மர்களின் கலைத் திரைப்படங்களில் முக்கிய வேடங்களேற்று நடித்தவர்.. 1985 ல் வந்த பாக்கியராஜின் ‘சின்னவீடு’   திரைப்படத்தில், படித்த இளைஞனின் கற்பனைகளுக்கு ஈடுகொடுக்கமுடியாத குண்டான உடல்வாகுடன், அழகில்லாத, புறக்கணிக்கப்பட்ட மனைவியாக வாழ்ந்திருப்பார் கல்பனா.

சதி லீலாவதி என்ற படத்திலும் சிரிப்பும் சிந்திப்புமாகப் பார்வையாளர்களைத் திருப்திப் படுத்தியிருப்பார் கல்பனா.. நகைச்சுவையின் மர்மம் அறிந்தவர் என்று சொன்னால் அது கல்பனாவின் விஷயத்தில் நூற்றுக்கு நூறு விழுக்காடு உண்மை.. நடிப்பின் பரிணாமங்களை யதார்த்தமாக்குவதில் மனோரமாவின் வாரிசு என்றே சொல்லலாம்.

ஐம்பது வயதில் திரைவானை விட்டு வெளியேறும்போது கேரளாவின் மனோரமா என்ற செல்லப் பெயரில் அறியப்பட்டவர் கல்பனா .. இவரை நினைவுக்கூறியவர்கள் அனைவருமே சொன்ன ஒரு விஷயம் இதுதான். ‘ இவரின் இதயத்திற்குப் பிரச்சினை இருந்திருக்கிறது என்று இப்போதுதான் எங்களுக்குத் தெரியும்  அதைக்கூட எங்களிடம் யாரிடமும் பகிர்ந்ததில்லை.’ தன் சொற்களால்கூட யாரும் வருத்தப்படும்படியான நிலை உருவாக்கக்கூடாது என்பதில் மிகக் கவனமாக வாழ்ந்தவர் கல்பனா..

பிரபல நாடகக் கலைஞர்களான  சவற வி பி நாயரின், விஜயலக்ஷ்மியின் இரண்டாவது மகளாகப் பிறந்தவரின் சகோதரிகளும் சினிமா உலகில் புகழ்பெற்ற நடிகைகள்தாம்.. அக்கா நடிகை கலா ரஞ்சினியும் தங்கை நடிகை ஊர்வசியும்...

ஒரு மலையாளத்  தனியார் டிவியின் ஒரு பேட்டியின்போது நெறியாளர் கேட்கிறார் ‘கல்பனா நீங்கள் நான்கு தென்னிந்திய மொழிகளிலும்  நடித்திருக்கிறீர்கள். மொழிப் பிரச்சினை  நடிப்பை பாதிக்குமா ? எந்த மொழி எளிதாகக் கையாளமுடிகிறது ? சிரித்துக்கொண்டே சொன்னார்.. ‘கொஞ்சம் கவனிக்க வேண்டிய இடமிது. சிலநேரங்களில் சொற்களின் அர்த்தம் புரிந்துகொண்டு பேசவேண்டும் ..அப்போது கொடுக்கப்படவேண்டிய முகப் பாவனைகள், அந்த மொழி உட்கொள்ளும் கலாச்சாரத்தின் விகிதத்திலும் இருக்கவேண்டும். இதெல்லாம் ஒரு சவால்தான்..  உலகிலேயே அருமையான மொழி தேன் போன்ற மொழி தமிழ். தமிழை எல்லோரும் படிக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்’ என்றார். கல்பனாவின் அகால மறைவு, இந்திய சினிமாவிற்கு, ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு.

கல்பனா காலத்தை வென்ற நடிகை ..

மார்ச், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com