சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஞாநியின் வீட்டிற்கு வந்தபோது ஆண்களும் பெண்களுமான பெருந்திரளான இளைஞர்கள் அங்கே கூடியிருந்தார்கள்.
மருத்துவக்கல்லூரிக்கு தனது உடலைத் தானமாக அளித்திருந்த பத்திரிகையாளர் ஞாநியின் உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டது. சூழ இருந்த நண்பர்கள் தமிழில் இசைத்தன்மையுடன் கோஷங்கள் எழுப்பினர். ஞாநியின் கண்கள் சங்கர நேத்ராலயா கண் மருத்துமனைக்கும், உடல் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டது. பரீக்ஷா நாடகக் குழுவைச் சேர்ந்த நண்பர்கள் வீட்டுக்கு வெளியே ஒரு குழுவாகச் சேர்ந்து பாடல்களைப் பாடியவண்ணமிருந்தார்கள். பரீக்ஷா நாடகக் குழு ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன் ஞாநியால் தோற்றுவிக்கப்பட்டது.
ஞாநி சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் எனக்கு ஒரு வருடம் ஜூனியர். ஞாநி அந்நாட்களில் செங்கல்பட்டிலிருந்து தினமும் ரயிலில் பயணம் செய்துதான் கல்லூரிக்கு வருவார். செங்கல்பட்டிலிருந்து தாம்பரத்துக்கு பயண தூரம் முப்பது கிலோமீட்டர். அவ்வளவாக பேருந்து வசதியில்லாத அந்த நாட்களில் ரயில் மார்க்கம் ஒன்றே பெரும்பாலானவர்களுக்கு சரியான ஒன்று. ரயில் கொஞ்சம் தாமதம் ஆனாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஏகப்பட்ட அசௌகரியங்கள் உண்டாகும் என்பது அந்நாளைய நிலைமை. இதுவே தான் தமிழ்நாட்டின் முதல் 'ரயில் பயணிகள் சங்கத்தில்' ஞாநி இணையக் காரணமாக இருந்தது. ரயில்கள் காலம் தவறாமல் ஓடுவதை வலியுறுத்தி, பல போராட்டங்களை அந்த அமைப்பு நடத்தியது. இந்த அமைப்பின் தீவிரமான தொடர் செயல்பாடுகளால் சிறப்பு ரயில் ஒன்றும் செங்கல்பட்டு - தாம்பரம் மார்க்கத்தில் இயக்கப்பட்ட நிகழ்வும் நடந்தேறியது.
ஞாநி ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றபின் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் சேர்ந்தார். அவரது தந்தையின் பணி ஒய்வுக்குப் பின் இந்த வேலை ஞாநியின் குடும்பத்துக்கு அவசியமான ஒன்றாக இருந்தது. ஒரு பத்திரிகையாளராக அவரது முதல் அசைன்மெண்ட் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை சார்ந்த செய்திகள் சேகரித்ததுதான். நீதிமன்ற வழக்கு தீர்ப்புகள் குறித்த செய்திகளை இம்மி பிசகாமல் சேகரித்துத் தரும் வழமையான போக்கு ஞாநியின் வருகைக்குப் பிறகு மாற்றமடைந்தது. நீதிமன்ற செய்தி சேகரிப்புக்களுக்கு அப்பால் நீதிமன்ற வளாகத்தின் உள்ளே இருந்த விஷயங்களும் முக்கியமானதாக இருந்தது ஞாநிக்கு.
நீதிமன்ற வளாகத்தில் காலனியாதிக்க நீட்சியாக ‘‘டபேதார்கள்'' செருப்பு அணிய அனுமதிக்கப்படாததை அவர் முதலில் கண்டார். அதை செய்தியாக்கினார். கோபமடைந்த நீதிமன்ற வட்டாரங்கள் பத்திரிகைகள் எல்லை மீறுவதாக ஆவேசப்பட்டார்கள். விஷயம் இதோடு முடிந்துவிடவில்லை. மாவட்ட நீதிபதிகள் பயணிப்பதற்காக வாங்கப்பட்ட மினி பஸ்கள் பயன்படுத்தப்படாமல் ஷெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை புகைப்படம் எடுத்துச் செய்தியாக்கினார். செய்தியைப் படித்த தலைமை நீதிபதி இந்தப் போக்கு தொடர்ந்தால் பத்திரிகையாளர்களை நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கமாட்டோம் என எச்சரிக்கை விடுத்தார்.
ஞாநி, ஒரே நிறுவனத்தில் அல்லது ஒரே வேலையில் தொடர்ந்து நீடித்திருக்க விரும்பியவர் அல்லர். தவறேதும் செய்திராத அவரை இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாகம் பணியிலிருந்து நீக்கியது. ஆங்கிலப் பத்திரிகை வேலையிலிருந்து வெளியேற உள்ளுற விருப்பம் கொண்டிருந்தாலும் ஞாநி விடுவதாக இல்லை. தனது வேலை நீக்க உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனார். தொழிலாளர் நீதிமன்றத்திலும் பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கில் வெற்றி பெற்று மீண்டும் இந்தியன் எக்ஸ்பிரஸில் பணியில் சேர்ந்தார். சில மாதங்களுக்குப் பிறகு வேலையை ராஜினாமா செய்து வெளியேறினார். ஆனந்த விகடன் பத்திரிகையில் பணியில் சேர்வதற்கு முன் சில ஆண்டுகள் ஃப்ரீலான்ஸராக பல்வேறு ஆங்கிலப் பத்திரிகைகளுக்குப் பணியாற்றினார். ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதப்படும் எழுத்து மத்தியதர வர்க்கத்தினருக்கானது என்பது ஞாநியின் நம்பிக்கை. உழைக்கும் வர்க்கத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சிறு வணிகர்களை தன் எழுத்து சென்றுசேரவேண்டும் என்று விரும்பினார் ஞாநி. புலனாய்வுப் பத்திரிகையாளராக புதிய திசையை மேற்கொண்ட அவர் வெகு விரைவிலேயே முன்னணி பத்திரிகையாளராக அறியப்பட்டார்.
ஆனால் ஞாநிக்கு நிறுவனம் சார்ந்த பத்திரிகைகளின் கட்டுப்பாடுகள் ஒத்துவரவில்லை. இதனாலேயே அவர் அடிக்கடி நிறுவனம் மாறி வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வேலையைத் துறந்த அவர் ‘தீம்தரிகிட' என்னும் சொந்தப் பத்திரிகையைத் தொடங்கினார். அதில் சென்னை அணுமின் நிலையம் குறித்து அவர் எழுதிய அட்டைப்படக் கட்டுரை, சிபிஐ அவரது வீட்டுக்குள் நுழைந்து சோதனையிடும் அளவுக்குக் கொண்டுபோனது. அந்தச் சோதனையின் நோக்கம் கட்டுரைக்கான தரவுகளை ஞாநி எங்கிருந்து பெற்றார் என்பதை அறியவே.
ஞாநிக்கு பத்திரிகையாளர் பணி என்பது அவரது ஆளுமையின் ஒரு பகுதி மட்டுமே. அது மட்டுமே அவர் அல்லர். பாதல் சர்க்காரின் வீதி நாடகங்களால் கவரப்பட்ட அவர் பரீக்ஷா என்னும் சென்னையை மையமாகக் கொண்ட ஒரு நாடகக் குழுவை உருவாக்கினார். எந்த ஒரு கலை வடிவமும் மக்களின் பொதுநலப் பிரச்சினைகளைப் பேச வேண்டும் எனக் கருதிய அவர், பிற நாடுகளின் முக்கியமான நாடகங்களை தமிழுக்கு மொழியாக்கம் செய்து பொது வெளியில் நிகழ்த்திக் காட்டினார். பேருந்துக் கட்டணம் உயர்த்தப் பட்டபோது எதிர்ப்பு தெரிவிக்க ஏற்பாடு செய்யப்படிருந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்பாளர்களிடம் பலூன்களை வழங்கிய அவர், இனி பேருந்துப் போக்குவரத்துக்குப் பதிலாக பலூன்கள் வழிப் பயணம் மட்டுமே செலவில்லாதது என்ற கருத்தாகத்தை அரசாங்கத்துக்கு உணர்த்தினார்.
மக்கள் நலம் சார்ந்த பிரச்சினைகளை தனது வீதி நாடகங்கள் மூலம் நிகழ்த்திக்காட்டிய ஞாநி போலீசாரின் கெடுபிடிகளுக்கு ஆளானார். தீவிர மனித உரிமை ஆர்வலரான ஞாநி பல்வேறு சிவில் உரிமைக் குழுக்களுடன் தொடர்பில் இருந்தார். பிற்பாடு தொலைக்காட்சிப் படங்கள் உருவாக்குவதிலும், சினிமா உருவாக்கத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார். யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றாமலேயே தானே கற்றுக்கொண்டார் எனலாம்.
அவரது தனிப்பட்ட வாழ்க்கை அவரது அரசியல் செயல்பாடுகளின் நீட்சியாகத்தான் இருந்தது. பரிக்ஷாவின் நாடகம் ஒன்றின் இடைவேளையில் சமூகச் செயற்பாட்டாளரான பத்மாவைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். நாடகத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது. அதுதான் திருமண விருந்து.
ஞாநியின் மகன் மனுஷ் நந்தன் பள்ளி செல்லும் வயதை எட்டியவுடன் வீட்டின் அருகில் இருக்கும் ஆங்கிலப் பள்ளியில் சேர்க்காமல் தமிழ்வழி கற்பிக்கும் அரசுப் பள்ளியில் சேர்த்தார். மேல்நிலை வகுப்புகளில் புகைப்படக் கலையை பாடமாகக் கொண்ட அரசுப் பள்ளி அது. மனுஷ் நந்தன் புகைப்படக் கல்வி பயின்றதும் பின்னர் அடையாறு அரசு திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து ஒளிப்பதிவு பயின்று இப்போது பாலிவுட்டின் முன்னணி ஒளிப்பதிவாளராகத் திகழ்வது தற்செயல் அல்ல.
கடந்த சில வருடங்களாக சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட அவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிவு செய்துவிட்டு காத்திருந்தார். ஆனால் உடல் சுகவீனங்கள் அவரது செயல்பாட்டை கொஞ்சமும் பாதிக்கவில்லை. வழக்கம் போல சுறுசுறுப்புடன் செயல்பட்டுக்கொண்டிருந்தார். இறப்புக்கு சில வாரங்களுக்கு முன்பாக அவரை மதுரையில் நாடக மேடையில் பார்க்க முடிந்தது அவரது நாடகத்தின் மேல் இருந்த அர்ப்பணிப்பு உணர்வுக்குச் சான்று.
ஞாநியின் மரணம் ஏற்படுத்தியுள்ள வெற்றிடம் அசாதாரணமானது. அவரது இறுதி அஞ்சலியில் திரளாகப் பங்கேற்றவர்கள் ஒரு தனி மனிதன் இயக்கமாக வாழ்ந்தார் என்பதற்கான சாட்சியமன்றி வேறில்லை. ஞாநியின் இறுதி யாத்திரையில் பங்கேற்ற இளைஞர்கள் குழாமைப் பார்க்கையில் தலைமுறை இடைவெளிகள் தாண்டி இளைஞர்களிடம் தொடர்பு கொள்வதில் அவர் காட்டிய ஆர்வம், பலனளித்திருக்கிறது என்றே தோன்றியது.
(scroll இணையதளத்தில் வெளியான கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம். தமிழில்: சரோ லாமா )
பிப்ரவரி, 2018.