தந்தையின் கண்ணீர்!

மணிவண்ணன்
மணிவண்ணன்
Published on

நள்ளிரவு நேரம். பையன் இன்னும் வீடு திரும்பவில்லையே என்ற கலக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார், அப்பா தர்மலிங்கம்.

சென்னை ஏழுகிணறு பகுதியில் வசித்து வரும் குடும்பம். தர்மலிங்கத்துக்கு கொத்தவால் சாவடியில் சின்னதாக பழ வியாபாரம். அவரது உழைப்பே அந்தக் குடும்பத்துக்கான உரம்., அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து, சூரிய உதயத்துக்குள் கொத்தவால் சாவடிக்குச் சென்று, வியாபாரத்தில் மூழ்கி விடுவது அவரது பழக்கம்.

இரவு பன்னிரண்டு மணியைத் தாண்டி விட்டது. தூக்கம், கண்களைக் கெஞ்சுகிறது. படபடப்புடன் வாசலையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

நெருப்பு போல ஒரு செய்தி வந்து சேர்கிறது!

இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த மகன் மணிவண்ணன் விபத்துக்குள்ளாகி, அவரை அள்ளிக்கொண்டு மருத்துவமனைக்குச்
சென்றிருப்பதாகக் கிடைக்கிறது துயரச் செய்தி!

அத்தனை பேரும் மருத்துவமனைக்கு ஓடுகிறார்கள். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் பலத்த காயம் அடைந்திருக்கும் மணிவண்ணன்.

விபத்துக்குக் காரணம் மகன் குடித்த மதுவே எனத் தெரியவருகிறது அப்பாவுக்கு. அந்த நிலையிலும்.. என்ன இவன் இப்படிக் குடித்து விட்டு இப்போது விபத்தைத் தேடிக் கொண்டு விட்டானே என கடிந்து பேசவில்லை அவர். அப்படி பேச நினைக்கிறவர்களையும் அவரது பேரமைதி, அமைதிப்படுத்துகிறது.

*****

தன் தாய், மனைவி யசோதா, மூன்று மகள்கள், இரண்டு மகன்கள். இதுதான் தர்மலிங்கத்தின் குடும்பம்.

உழைப்பைத் தவிர தர்மலிங்கத்துக்குத் தெரிந்த மற்ற விஷயங்கள்.. உண்மையும் நேர்மையும் குடும்பத்தின் மீதான பாசமும்!

மணிவண்ணனுக்கு பதின்மூன்று வயதாகும்போது அம்மா யசோதா இறக்கிறார். மனையாளின் மரணம் தர்மலிங்கத்தை வாட்டி வதைக்கிறது. ஆனாலும்.. முடங்கிச் சாய்ந்து விடவில்லை அவர்.

பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக மீண்டெழ வேண்டிய கட்டாயம் அவருக்கு. வியாபாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் ஒற்றைச் சுமையுடன் ஓடிக்கொண்டிருந்தவருக்கு, குடும்பத்தின் அன்றாட நிகழ்வுகளையும் தூக்கிச் சுமக்கும் இரண்டாவது சுமையும் சேர்ந்து விடுகிறது. தாயுமானவனாகி, தன் பிள்ளைகளையும் பேணிக்காக்கிறார்.

*****

பிள்ளைகள் ஐந்து பேர் என்றாலும் மணிவண்ணன் மீது அளவிலா பாசம் தர்மலிங்கத்துக்கு. மகன் என்ன சொன்னாலும், எதைச் செய்தாலும் கடிந்து பேசுவதில்லை அவர்.

பத்தாம் வகுப்பில் ஆங்கிலத்தில் தேர்ச்சியாகவில்லை மணிவண்ணன். அதனால் தொடர்ந்து படிக்கப் பிடிக்கவில்லை. பள்ளிக்கும் செல்லவில்லை.

தாயற்ற நிலை, பொருள் தேடி அலையும் தந்தையின் போதிய நேரமின்மை.. இதனால் கண்காணிப்பற்ற சூழல் ஏற்படுகிறது மணிவண்ணனுக்கு. நல்லது கெட்டதை அறிந்திராத இரண்டும் கெட்டான் பருவத்தில் இருப்பவரை கூடா நட்புகள் கவ்விக் கொள்கின்றன.

கஞ்சாவும், போதை ஊசியும், கள்ளச்சாராயமும், வன்முறைகளும் ஏழுகிணறு பகுதியின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த காலம்!

குடிக்கு அடிமையாகிறார் மணிவண்ணன். தள்ளாட்டத்துடன் வீட்டுக்கு வந்து சேரும் மகனுக்காக அந்த நேரத்திலும் கண் விழித்துக் காத்திருக்கிறார் அப்பா.

ஏன் இப்படிச் செய்கிறாய் என ஒரு நாளும் அதட்டியதில்லை, மிரட்டியதில்லை, அடித்ததும் இல்லை. மனதுக்குள் கவலைகளைத் தேக்கி வைத்துக் கொண்டு, தன் மகன் சாப்பிட்டு விட்டானா என்பதை அறிந்துகொள்வதில் ஆறுதலடைகிறார் அந்த அன்புள்ள அப்பா.

இப்படி அவர் உறக்கம் தொலைக்கும் இரவுகள்.. ஒவ்வொரு நாளுமே!

அதில் ஒன்றுதான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் படித்த, அந்த துயரம் தோய்ந்த இரவு!

*****

மயக்கம் தெளிந்து கண் விழிக்கிறார் மணிவண்ணன். போன உயிர் திரும்ப வந்து விட்டது! கண்ணீர் காய்ந்த முகங்களுடன் சுற்றிலும் நிற்கிறார்கள் சகோதரிகள். அப்பாவைத் தேடுகின்றன மகனின் கண்கள்.

''இந்த கோலத்தில் உன்னைப் பார்க்கும் தைரியம் அவருக்கில்லை. அவர்தான் உன் தேவைகள் அனைத்தையும் கவனித்துக்  கொள்கிறார். இத்தனை வருடங்களில் இந்த இரண்டு நாளாகத்தான் அவர் கடைக்குப் போகவில்லை. அழுது அழுது அவர் முகம் வீங்கி இருக்கிறது..'' என்கிறார்கள் சகோதரிகள்.

விபத்தால் நொறுங்கிப் போன உடல் தரும் வலியை விடவும், அதுவரை ஒரு சுடுசொல் கூட பேசியிராத தன் தந்தையைக் கண்ணீர் விடச் செய்துவிட்டதால் ஏற்பட்ட மன வலியே அதிகமாக இருக்கிறது மணிவண்ணனுக்கு. கதறி அழுகிறார்.

அழுகையினூடே அவருக்குள் ஒரு மின்னல் வெட்டுகிறது! புதிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் மின்னல் அது! எதற்குமே கலங்கியழாத தந்தையை இனி ஒரு போதும் கண்ணீர் சிந்தவைக்கக் கூடாது என்ற வைராக்கியம் பிறக்கிறது மகனுக்கு!

புதிய மனிதனாக மறுபிறவி எடுக்கிறார் மணிவண்ணன். குடியையும் கூடா நட்புகளையும் விலக்குகிறார். அப்பாவின் பழ வியாபாரத்தையே தனக்கான எதிர்காலமாகத் தேர்ந்தெடுக்கிறார். இவன் முன்பைப் போல அல்ல என சுற்றியிருப்பவர்கள் உணரத் தொடங்குகிறார்கள். மகனின் மனமாற்றத்தையும் செயல் மாற்றத்தையும் தந்தை கவனிக்கிறார். மகிழ்கிறார்.

பழங்கள் வாங்கவும் விற்கவும் வெளியூர்களுக்குப் பயணம் செல்கிறார் மணிவண்ணன். வியாபார நுணுக்கங்கள் பல கற்றுத் தேர்ச்சியடைகிறார். அப்பாவைப் போலவே அயராது உழைக்கப் பழகுகிறார்.  நடுத்தர வர்க்கத்துக்கும் கீழே இருந்த அந்தக் குடும்பம் படிப்படியாக உயர்வடைகிறது. முன்னேற்றங்கள் தேடிவருகின்றன.

இந்நிலையில்.. மணிவண்ணனுக்குத் திருமணம் நடைபெறுகிறது. வந்தாள் மகாலட்சுமி. கீதாஞ்சலி என்ற வாழ்க்கைத் துணை.

அப்பா தர்மலிங்கம் இப்போது உடல் தளர்ந்த வயதில் இருக்கிறார். இனி முழுக்க முழுக்க மகனின் காலம்!

திருமணமான ஜரூரில் பழ வியாபாரத்தை பெரிய அளவில் சொந்தமாகச் செய்ய விரும்புகிறார் மணிவண்ணன். அதற்குத் தேவை இரண்டு லட்சம் ரூபாய்கள். நம்பிக் கொடுக்க யாரும் முன்வரவில்லை!

தன் தள்ளாத வயதிலும்.. அப்பா தர்மலிங்கமே மகனது ஆசையை நிறைவேற்ற அலைகிறார். தன் பழைய நண்பர்களைத் தேடிப் போகிறார். அவர்களில் ஒருவர் இரண்டு லட்சம் ரூபாயை வட்டிக் கடனாகக் கொடுக்க முன் வருகிறார்.

மணிவண்ணனின் சொந்தத் தொழில் கனவு நனவாகிறது. சென்னை கோயம்பேட்டில் சிறிய கடை உருவாகி, உயிர் பிடிக்கிறது.

நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் பறக்கிறார். இங்கு கிடைக்கும் பழங்களை அங்கு விற்கிறார். அங்கு கிடைக்கும் பழங்களை வாங்கி வந்து இங்கே விற்கிறார். 

எண்ணிக்கை அடிப்படையில் பழங்களை கூறு பிரித்து, அதற்கேற்ப விலை குறித்து விற்பதுதான் இதுவரையில் நடந்து வரும் வியாபார அணுகுமுறை. இதில் விவசாயிகளுக்கு எவ்வளவு லாபம் கிடைத்து விடப்போகிறது என யோசிக்கிறார் மணிவண்ணன். எண்ணிக்கை முறையில் கொள்முதல் என்பதை மாற்றி, எடைபோட்டு கொள்முதல் செய்யும் பழக்கத்தைக் கொண்டு வருகிறார். விவசாயிகளின் லாபம் கணிசமாகக் கூடுகிறது.

வெளிநாடுகளில் வணிகம்
வெளிநாடுகளில் வணிகம்

வெற்றியின் வெறியை துளியும் தன் தலைக்கு ஏற்றிக்கொள்ளவில்லை மணிவண்ணன். எளிமையின் அடையாளமாகவே இருக்கிறார்.

'பிரமிக்க வைக்கிறது உங்கள் வாழ்க்கை..' என்றதும், பணிவன்புடன் புன்னகைத்தார். அந்தக் கோர விபத்து கொடுத்த சேதாரமாக செயற்கைக் கைவிரல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

''என்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லைங்க. ஆனால், நான் கடந்து வந்த பாதை பலருக்குப் பாடமாக இருக்கலாம் என்பதால்தான் உங்களைச் சந்திக்க ஒப்புக்கொண்டேன். இளமைப்பருவத்தில் எனக்கிருந்த குடிப்பழக்கம் எப்படியெல்லாம் என் அப்பாவை துயரப்படுத்தி இருக்கும் என இப்போது நினைத்தாலும் மனம் உடைந்து விடும். இந்தக் கூடாத குடிப்பழக்கத்தால் எத்தனையோ குடும்பங்கள் சீரழிந்திருப்பதை  கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். குடிநோயின் பிடியில் சிக்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் என் வாழ்க்கையையே பாடமாகக் கொடுக்கிறேன்..'' என்றார்.

குடிப்பழக்கத்துக்கு எதிரான கருத்துக்களை எடுத்து வைக்கும் புத்தாண்டு பரிசு என்ற குறும்படத்தையும் தயாரித்திருக்கிறார் மணிவண்ணன். நார்வே நாட்டில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்துக்கான விருதைப் பெற்றிருக்கிறது அது.

மகிழ்ச்சி என்ற சமூக விழிப்பு உணர்வு திரைப்படத்தையும் தயாரித்திருக்கிறார்.

தர்மலிங்கம்
தர்மலிங்கம்

''முடிந்தவரை அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே என் ஆவல். அதற்காகவே, நான் எடுத்த திரைப்படம், எனது நிறுவனம், இயற்கை விவசாயப்பண்ணை,
மரச்செக்கு எண்ணெய் நிறுவனம் அனைத்துக்கும் மகிழ்ச்சி என்ற பெயரையே வைத்துள்ளேன்..'' என்றார்.

இரண்டு வருடங்களுக்கு முன்புதான் தந்தை தர்மலிங்கம் நிரந்தர ஓய்வை அடைந்திருக்கிறார். அப்பாவின் நினைவாக தர்மலிங்கம் அறவழித் தொண்டு கல்வி அறக்கட்டளை ஆரம்பித்து, சமூகத்துக்கு பல உதவிகளைச் செய்து வருகிறார் மணிவண்ணன்.

இவரது உதவியால் வாழ்க்கை அமைத்துக் கொண்ட சிறு வியாபாரிகள் பலர். குடி போதை மறந்து, உழைப்பென்ற போதைக்கு அடிமையான இளைஞர்கள் பலர்.

''கையில் காசில்லாமல் உழைத்துக் கொண்டிருந்த போதும் சரி, இன்று பொருளாதார தன்னிறைவை அடைந்து விட்டு உழைத்துக் கொண்டிருக்கும்போதும் சரி.. ஒருபோதும் பேராசை இருந்ததில்லை எனக்கு. இந்தச் சமூகத்துக்கு நம்மாலான தொண்டுகளைச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் தீராக் கனவு. என் அப்பாவும் இப்படித்தான் இருந்திருக்கிறார். இதையெல்லாம் நான் செய்திருக்கிறேன் என அவர் ஒருநாளும் எங்களுக்குச் சொன்னதில்லை. ஆனால், அவரது வருவாயில் ஒரு பகுதியை சமூக நலனுக்காகவும் தமிழ்த் தொண்டுக்காகவும்  கொடுத்துள்ளார் என்பதை அவரது நண்பர்கள்
 சொல்லக் கேட்டிருக்கிறேன்'' என்றார்.

ஆழமான தமிழ்ப்பற்றாளராகவும் இருந்திருக்கிறார் அப்பா தர்மலிங்கம். சிலம்புச் செல்வர் ம.பொ.சி. மீது அளவற்ற அன்பு கொண்டிருந்திருக்கிறார். தன் தமிழார்வம் காரணமாக, ஐந்து பிள்ளைகளுக்கும் அழகு தமிழிலேயே பெயர் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்.

அப்பாவின் வழியைப் பின்பற்றி மணிவண்ணனும் தமிழார்வம் கொண்டவராகவே இருக்கிறார்.

''தமிழே உலக மொழிகள் அனைத்துக்கும் ஆதாரம். சர்வதேச தரத்தில் தமிழ்ப் பள்ளிகள் நடத்தத் துணை செய்வதே என் இப்போதைய லட்சியம்' என்கிறார். தாய்த்தமிழ் பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் கடமையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

''பெரியவர்கள் அய்யா நல்லக்கண்ணு, பழ.நெடுமாறன் இருவரும் இப்போது என் தந்தையின் இடத்தில் இருந்து என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நற்சிந்தனைகள் கொண்ட நண்பர்கள் எனக்கு துணை நிற்கிறார்கள். என்னைக் கரம் பிடித்த என் துணைவியார் கீதாஞ்சலி என் காரியம் யாவினும் கைகொடுக்கும் தோழியாக இருக்கிறார். பிள்ளைகள் ஷாலினியும் ஐசுவர்யாவும் நற்குணங்களுடனேயே வளர்ந்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் இரண்டு லட்ச ரூபாய்க்கு ஜாமீன் வழங்க மறுத்த என் உறவுக்காரர்களுடனும் நான் பேதம் பார்க்காமல்தான் பழகுகிறேன். உறவுகளும் உணர்வுகளும் மனித வாழ்க்கைக்குக் கிடைத்த வரங்கள்..'' என்றார்.

அன்னை யசோதாவின் நினைவாகவும் தொண்டுகள் செய்துகொண்டிருக்கிறார் மணிவண்ணன். ஆதரவற்ற பெண்களை தத்தெடுத்து, அவர்களுக்கு உணவு & உடை & இருப்பிடம் கொடுப்பதுடன், தன் குடும்ப உறவாகக் கருதி பாசத்தையும் நேசத்தையும் பகிர்ந்து கொள்ளும் விதமாக ஓர் அருமையான திட்டம் தீட்டி அதைச் செயலாக்கும் முயற்சியில் இருக்கிறார்.

தொடர்கிறது... மணிவண்ணனின் வெற்றிகளும் சமூகத்தொண்டுகளும்.

எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை, கேள்வியாகக் கேட்டேன்.. 'உங்கள் வெற்றிகளுக்கும் சாதனைகளுக்குமான காரணங்களாக எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?'.

''திருக்குறளில் இருந்து வாழ்க்கைப் பாடம் படித்துக் கொண்டேன். முன்னோர்கள், வழிபடும் தெய்வம், விருந்தினர்கள், சுற்றத்தார் அனைவரையும் போற்றிக்காப்பதே அறம், அதன் பிறகே தன் நலம் என்கிறார் வள்ளுவர். அதுதான் என்னை உயர்த்திய மந்திரம். உழைப்புதான் நான் என்றும் வழிபடும் தெய்வம். ஒழுக்கம் பிரதானம், உண்மையே
அடித்தளம், உழைப்பதே மூலதனம், நேர்மைதான் நிலைக்க வைக்கும்.. இந்த இலக்கணத்தை எனக்கு நானே வகுத்துக் கொண்டேன். ஆரம்பத்தில் நான் தவறான பாதையில் போனபோது என் தந்தை என்னைத் திட்டியிருந்தாலோ, அடித்திருந்தாலோ எனக்கு இந்த அளவுக்கு உரைத்திருக்குமா என்று தெரியவில்லை. அவரின் அமைதியும் கண்ணீரும்தான் என் வாழ்க்கையை மடை மாற்றியது. நல்வழிப்படுத்தியது. அதேபோல ஒவ்வொருவரையும் மடைமாற்றவும் வழிகாட்டவும் ஏதோ ஓர் அனுபவம் நிச்சயம் கிடைக்கும். நம்பிக்கையோடு எதிர்கொண்டால் வாழ்க்கை வசமாகும். ஏட்டுப்படிப்பில் தேறாத நானே சாதிக்க முடிகிறது என்றால், சாதனைகள் எல்லோருக்குமே சாத்தியம்தான்'' & ரத்தினச் சுருக்கமாகச் சொன்னார் மணிவண்ணன்.

ஒரு காலத்தில் நான் அப்படித்தான் அழுக்கானவனாக இருந்தேன் என கோடிகளைக் கடந்த பின்னர் பகிரங்கமாகச் சொல்லும் மணிவண்ணன் வித்தியாசமான மனிதர். சிந்தனைகளையும் செயலையும் மாற்றிக்கொண்ட பிறகே உயர்ந்தேன் என்ற அனுபவப் பாடத்தை மற்றவர்களுக்கு
கொடுக்க விரும்புகிறார்.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளலாக இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இவரது வாழ்க்கையே சாட்சி.

நன்றி: அ.சேது

நவம்பர், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com