சென்ற மாதம் முழுக்கவே அத்தனை ஊடகங்களிலும் அட்சய திருதியைக் கொண்டாட்டம் தான். அதிலும் சென்னையில் நகைக் கடை திறக்க நாங்க வருகிறோம்.
நீங்களும் வாங்க என்று ஒரு நடிகர் பட்டாளமே அழைக்க, விருந்தோம்பலில் விட்டுக் கொடுக்காத தமிழன் மொத்தமாக தி. நகர் தெருவில் குழுமி அவர்களையே திகைக்க வைத்து விட்டான்.
அட்சய திருதியை என்பது நல்ல செயல்களை தொடங்குவதற்கு நல்ல நாள் என்ற நம்பிக்கையை, தங்க வியாபாரிகள் அவர்களின் வியாபார தினமாகவே மாற்றி விட்டார்கள்; தங்கைகளுக்கு பச்சைப்புடவை வாங்கிக் கொடுத்தால் அண்ணன்களுக்கு நல்லது என்று விற்காத பச்சை புடவைகளை தள்ளி விட்டது போல.
தங்கம் என்பது ஒரு உலோகம் என்பது, பணத்தை காகிதம் என்பதற்கு சமம். நம்முடைய திருமணங்கள் தங்கத்தாலேயே நிச்சயிக்கப்படுகிறது. உண்மைதான். ஆனால், அதற்காக இப்படியா தங்க வெறி கொண்டு அலைவது?
உலகிலுள்ள அரசு தங்க கையிருப்பில் அமெரிக்காவுக்கு முதலிடம்: 8133 டன். உலக கையிருப்பில் நான்கில் ஒரு பாகம். இந்தியாவிற்கு 11 வது இடம். அப்ப அமெரிக்ககாரன் தானே தங்க வெறி கொண்டு அலையறான் என்று பொங்குபவர்கள் கொஞ்சம் கவனிக்க, இது அரசு கையிருப்பு. இந்திய குடும்பங்களில் உள்ள தங்கத்தின் அளவு 18000 டன். உலகிலேயே அதிகமாக தங்கம் வைத்திருப்பது நாம் தான். இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு 850 - 900 டன் வரை தங்கம் விற்பனையாகிறது. கணக்கில் உள்ளது மட்டும் இது கடத்தல் வகைகள் தனி.
தமிழகத்தில் ஆண்டுக்கு 250 டன் தங்கம் விற்பனையாகிறது.( கிராம் 2500 ரூபாய் என்றால் என்ன தொகை வருகிறது என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! தலை சுற்றல் வரலாம். ஜாக்கிரதை). ஆக இந்தியாவின் தங்கத் தேவைக்கு 25 சதவீதத்திற்கு மேலாக தமிழகமே காரணம். அப்புறம் ஏன் ஏக்கர் கணக்கில் நகைக் கடைகள் முளைக்காது.?
தங்கம் மட்டுமே சிறந்த முதலீடு என்பவர்கள் அந்திமழை இணையத்தில் டாக்டர்.சங்கர் குமார் எழுதிய மந்திரச்சாவி என்ற தொடரின் இந்தப் பகுதியை படித்துப் பாருங்கள்(பெட்டி செய்தி) உண்மை புரியும்.
உத்தரவாதமான முதலீடு தங்கம் தான் என்பவர்கள், அதனை முதலீட்டு ஆலோசகர்கள் சொல்வது போல கோல்ட் இ.டி.எப் எனப்படும் பேப்பர் தங்கமாக சேமிக்கலாம்.இதன்படி நீங்கள் வாங்கும் நாளில் தங்கத்தின் அளவு உங்களிடம் பேப்பரில் இருக்கும். வேண்டிய போது அதே அளவு தங்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இதனால் தங்கத்திற்கான கொலை,கொள்ளைகளை தவிர்க்க முடியும்.
தங்கம் அணிவதற்கு ஆபரணமாகத்தான் வேண்டும் என்பவர்கள் கன்ஸ்யூமர் அசோசியேசன்ஸ் ஆப் இந்தியாவின் முன்னாள் தலைவர் தேசிகனின் ஆலோசனைகளை( பெட்டிச் செய்தி) முதலில் படித்து விடுங்கள். நாம் செலுத்தும் பணத்திற்கான தங்கம் நம் கைக்கு வருகிறதா என்பதை அறிவது நம்முடைய உரிமை.
சில நாட்களுக்கு முன்னாள் முக நூலில் ஜெர்மன் பெண் ஒருவர் சேதாரத்திற்கான தங்கத்தை நகை கடையில் சண்டையிட்டு கேட்டுப் பெற்றதாக படித்தோம்.
கேட்டால் கிடைக்கும். அதைத்தான் தேசிகன் அவர்களும் சொல்கிறார்.
கூடவே, வாங்கும் தங்க நகைக்கான பில்லை (எஸ்டிமேட் அல்ல) கேட்டு வாங்குங்கள். 1 சதவீதம் வாட் செலுத்தினாலும், பின்னாட்களில் நீங்கள் வாங்கிய தங்கத்தில் ஏதேனும் குறைபாடு உண்டென்றாலும் அதை முறையாகப் பெற பில் அவசியம். ஏனெனில் இந்தியாவை விட பல நாடுகளில் தங்கத்தின் விலை மிகக் குறைவு. உதாரணமாக தாய்லாந்து,மலேசியா,சிங்கப்பூர்,துபாய் ஆகிய நாடுகளில் 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் இங்கு ஒரு கோடி ரூபாய். அதனால்தான் தங்க கடத்தல் கன ஜோராக நடக்கிறது. வருடத்திற்கு சுங்கத்துறையினரால் பிடிபடும் தங்க மதிப்பு மட்டும் 1000 கோடி ரூபாய்( 4 டன் தங்கம்).
ஏற்கெனவே நீங்கள் வைத்துள்ள தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரை இல்லை என்றால் பதட்டப்பட தேவையில்லை.தமிழகத்தில் 56 ஹால்மார்க் மையங்கள் உள்ளன. www.bis.org.in தளத்தில் இவற்றின் விலாசங்கள் உள்ளன. அங்கு சென்று சோதித்துக் கொள்ளலாம்.
சூழலியலாளர்கள் கவலைப்படும் விஷயம் ஒன்றுண்டு. தங்கச் சுரங்கங்கள் புவி வெப்பமடைவதற்கும் காற்று, நீர் மாசு படுவதற்கும் முக்கியமான காரணிகள். விரலில் அணியும் சிறு மோதிரத்தை தயாரிக்கையில் 20 டன் அளவுக்கு கழிவுப் பொருட்கள் உருவாகின்றன. இவை, சாதாரண கழிவுப் பொருட்கள் அல்ல. சயனைடு, பாதரசம் போன்றவை அடங்கிய கழிவுகள். இவை பெரும்பாலும் ஆறுகளிலும் கடலிலும் தான் கலக்கின்றன. தங்கச் சுரங்கத்திலிருந்து வெளி வரும் வாயுக்கள் காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. உலக வெப்பமயமாதல் உபரி. அடுத்த முறை தங்கம் வாங்கச் செல்லும் முன் இந்த தகவல்களை மனதில் நிறுத்துவோம்.
மே, 2015.