நம்மைப் பொறுத்தவரை பாதுகாப்பான முதலீடு என்பது பிக்சட் டெபாசிட்டுகள், நிலம், வீடு அல்லது தங்கம். அதிலும் சமீப காலமாக ’பற பற’வென பறந்து எங்கேயோ உச்சத்திற்குப் போய்க் கொண்டிருக்கும் தங்கத்தின் விலை, சில ஆண்டுகளுக்கு முன் தங்கம் வாங்காதவர்களை ‘ச்சே! மிஸ் பண்ணிட்டோமே‘ என்று சலித்துக்கொள்ள வைத்திருக்கிறது.
ஆனால் இந்தப் பங்குச்சந்தை கோடீஸ்வரரான வாரென் பப்பெட்டுக்கு தங்கத்தின் மீது மட்டும் அப்படி என்ன வெறுப்போ தெரியவில்லை. தங்கத்தில் முதலீடு செய்வதே வேஸ்ட் என்பது அவரது கருத்து. கடந்த நாற்பது வருடங்களில் தங்கத்தின் விலை எப்படி ஏறி இருக்கிறது என்பதற்கான ஒரு சின்ன சாம்பிள் பாருங்கள்.
வருடம் 10கிராம் தங்கத்தின் விலை(ரூபாயில்)
1970 200
1975 545
1980 1522
1985 2120
1990 3450
1995 4960
2000 4480
2005 9000
2010 19230
2015 27000
1970ல் பத்தாயிரம் ரூபாய்க்கு அரை கிலோ தங்கம் வாங்கியிருக்கலாம். இன்றைய தேதிக்கு அதன் மதிப்பு கிராமுக்கு 2600 ரூபாய் என்று வைத்துப் பார்க்கும் போது பதிமூன்று லட்ச ரூபாய். இது கிட்டத்தட்ட 13000 சதவிகித வளர்ச்சி. ஆண்டு ஒன்றுக்கு சுமார் 290 சதவிகித வளர்ச்சி. நிலைமை இப்படி இருக்க வாரப் பப்பெட் போன்ற பங்குச் சந்தை பில்லியனர்களுக்கு தங்கத்தின் மீது அப்படி என்ன வெறுப்பு? அதுவும் தங்கத்தில் முதலீடு செய்வது முட்டாள்தனம் என்று பேசும் அளவுக்கு என்ன கோபம்?
ஓர் உதாரணத்துக்கு தங்கத்தையும் ஏதாவது ஒரு இந்திய நிறுவனப் பங்கையும் ஒப்பிட்டுப் பார்ப்போமா? புகழ் பெற்ற மென்பொருள் உற்பத்தி நிறுவனமான ‘WIPRO ‘ பங்குகளின் வளர்ச்சியைப் பார்க்கலாம். 1980ம் ஆண்டில் ஒரு விப்ரோ பங்கின் விலை 100 ரூபாய். ஒரு கிராம் தங்கத்தின் விலை 152 ரூபாய். பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்வதாகக் கொள்வோம். நாம் புத்திசாலித்தனமாக தங்கத்தில் முதலீடு செய்கிறோம். பத்தாயிரம் ரூபாய்க்கு 66 கிராம் தங்கம் வாங்கி வீட்டுப் பெண்களுக்கு நகை வாங்கிப் போட்டு சந்தோசப் படுத்தி விட்டோம். பக்கத்து வீட்டுக்காரர் அதே பத்தாயிரம் ரூபாய்க்கு விப்ரோ பங்குகளை வாங்குகிறார். ஆம். ஒரு பங்கு 100 ரூபாய் என்ற விலையில் 100 பங்குகளை வாங்கி விட்டார். இன்றைய தேதிக்கு (28.01.2013) தங்கத்தின் விலை கிராமுக்கு 3000 ரூபாய். நாம் வாங்கி வைத்த தங்கத்தின் மதிப்பு சுமார் இரண்டு லட்சம். இதே தேதியில் விப்ரோ நிறுவனப் பங்கின் விலை எவ்வளவு தெரியுமா? 420 ரூபாய். பக்கத்து வீட்டுக்காரரின் பத்தாயிரம் ரூபாய் முதலீடு 42000 ஆகியிருக்க வேண்டும். ஆனால் நிஜம் அதுவல்ல. அங்கேதான் இருக்கிறது பங்குச் சந்தையின் சூட்சுமங்கள்.
ஒரு சின்ன வித்தியாசம் என்னவென்றால் நீங்கள் அன்று வாங்கிய 66 கிராம் தங்கத்தின் மதிப்பு கூடியதே ஒழிய, வாங்கிய தங்கத்தின் அளவு கூடவில்லை. இன்றும் உங்களிடம் இருப்பது அதே 66 கிராம் தங்கம்தான். ஆனால் பங்குகள் அப்படி இல்லை. குட்டி போடும். அப்புறம் அந்த குட்டிகள் குட்டி போடும். இப்படி குட்டி மேல் குட்டி போட்டு வாங்கிய 100 பங்குகள் எண்ணிக்கையில் பல மடங்காகப் பெருக வாய்ப்புகள் உள்ளன. இதனை பங்குச் சந்தையில் போனஸ் பங்குகள் என்பார்கள். நம் ஊரில் ஒரு சட்டை வாங்கினால் ஒரு சட்டை இலவசம் என்கிறார்களே. கிட்டத்தட்ட அது போலத்தான். நன்றாக லாபம் ஈட்டும் நிறுவனங்கள் உங்களிடம் உள்ள பங்குகளுக்கு போனசாக பங்குகள் தருவார்கள். இது ஒன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் இருக்கலாம். சில சமயம் ஒன்றுக்கு பத்து என்ற ரீதியிலும் (பம்பர்) இருக்கலாம். அது நிறுவனத்தின் லாபத்தைப் பொறுத்தது. இது மட்டும் இல்லாமல் பங்குகள் வேறு ஒரு வழியிலும் குட்டி போடும். ஒவ்வொரு பங்கிற்கும் முகமதிப்பு (Face Value) என்று ஒன்று இருக்கும்.இது பொதுவாக ஆரம்பத்தில் அனைத்து நிறுவனங்களுக்கும் பத்து ரூபாய் என்று இருக்கும். சில சமயங்களில் நிறுவனங்கள் இந்த முகமதிப்பை ‘Split ‘என்ற முறையில் குறைப்பார்கள். உதாரணத்திற்கு ஒரு பத்து ரூபாய் பங்கை இரண்டு ஐந்து ரூபாய் பங்குகளாக பிரிப்பார்கள். அப்போது உங்களிடம் உள்ள ஒரு பத்து ருபாய் பங்கு இரண்டு ஐந்து ருபாய் பங்குகளாக மாறும். பங்கின் விலையும் சரி பாதியாகக் குறைந்து பின்னர் மீண்டும் உயரத் துவங்கும். பங்கின் விலை என்பதும் முகமதிப்பு என்பதும் வெவ்வேறு என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள 100 ரூபாய் மதிப்புள்ள 100 விப்ரோ பங்குகள் 50 ரூபாய் மதிப்புள்ள 200 பங்குகளாக மாறும். பின்னர் பங்கின் விலை மறுபடியும் 50ல் இருந்து உயரத் தொடங்கும். இது போன்று விப்ரோ நிறுவனப் பங்குகள் போட்ட குட்டிகளையும் இன்றைய தேதிக்கு பக்கத்து வீட்டுக்காரரிடம் உள்ள பங்குகளின் எண்ணிக்கையையும் அதன் மதிப்பையும் பார்க்கலாமா?
இன்றைய தேதிக்கு உங்கள் பக்கத்துக்கு வீட்டுக்காரரிடம் 96 லட்சம் பங்குகள் இருக்கும். ஆம். அவர் வாங்கிய 100 பங்குகள் குட்டி மேல் குட்டி போட்டு 96 லட்சமாக எண்ணிக்கையில் பெருகிவிட்டன. இப்போது அந்த பங்குகளின் மதிப்பை கணக்கிட்டு பாருங்கள். 2013 ஜனவரியில் விப்ரோ நிறுவனப் பங்கின் தற்போதைய விலை 420 ரூபாய். அப்படியென்றால் அவரிடம் உள்ள பங்குகளின் மதிப்பு 403 கோடியே 20 லட்சம். கண்ணைக் கட்டுகிறதா? ஆனால் இது உண்மை. பத்தாயிரம் ரூபாய்தான் சுமார் முப்பதே ஆண்டுகளில் இத்தனை கோடிகளாகப் பெருகியிருக்கிறது.
2004ல் யூனிடெக் நிறுவனத்தில் நாற்பதாயிரம் முதலீடு செய்திருந்தால் மூன்றே ஆண்டுகளில் அதாவது 2007ல் அது 1.1 கோடி ரூபாயாகப் பெருகியிருக்கும். இதெல்லாம் நம்ப முடியாத வளர்ச்சியாகத் தோன்றினாலும் உண்மை இதுதான். (ஆதாரம்: www.moneycontrol.com).
எல்லா நிறுவனங்களின் பங்குகளும் இப்படி அள்ளிக் கொடுத்து விடுமா என்றால் அதுதான் இல்லை. ஆனால் எந்த நிறுவனம் நன்றாக செயல்படுகிறது என்பதைக் கண்டுபிடிப்பதில்தான் அடங்கியுள்ளது பங்குச்சந்தையில் நமது வெற்றி. எது எப்படியோ வாரன் பப்பெட் சொன்னது போல தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் முட்டாள்கள் என்று ஒப்புக்கொள்ளாவிட்டாலும் பெரிய புத்திசாலிகள் இல்லை என்பதனை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் போல் இருக்கிறது.
(டாக்டர்.சங்கர் குமார் அந்திமழை இணைய தளத்தில் எழுதிய மந்திரச்சாவி தொடரில் இருந்து)
மே, 2015.