தகவல்தொடர்பின் போதாமை!

Published on

க டல் குறித்தான பாரம்பரிய அனுபவத்தைக் கொண்டிருந்த  மீனவர்கள்  ஆழ்கடலில் நீரோட்டத்தின் போக்கை கவனித்து தனது திசையை மாற்றிக்கொள்வதுடன் புதியதாக வரும் மீனவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்துவந்துள்ளனர்.

தற்போது அதற்கான அனுபவரீதியான ஆட்கள் குறைந்து வருகிறார்கள். நவீன உலகம் மீனவனையும் விட்டு வைக்கவில்லை. இதை ஒரு குற்றச்சாட்டாக வைக்கமுடியாதுதான் ஆனாலும் நாம்  கவனத்தில் கொள்ளவேண்டும்.

என்னுடைய 35 வருட அனுபவத்தில் தென்தமிழகக் கடலோரத்தில் இவ்வளவு வேகத்தில் புயல்காற்று வீசியதில்லை. புயல் இலங்கையில் மையம் கொண்டு தெற்கு நோக்கி நகர்ந்ததால் பேரழிவு நிகழ்ந்துவிட்டது.  இதில் குறிப்பாக நாம் ஒன்றை கவனிக்கவேண்டும். ஆழ்கடலில் செல்லும் சர்வதேச கப்பல்களுக்கு எந்த ஆபத்தும் நிகழவில்லை. விசைப் படகுகளில் சென்ற மீனவர்களுக்குதான் ஆபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. அதற்கு காரணம் ஆழ்கடலில் செல்லும் கப்பல் குறிப்பிட்ட எல்லையை கடக்கும்போது துறைமுகம் மற்றும் கடல் சார்ந்த மையங்களுக்கு தகவல்கள் கொடுப்பார்கள்.  தொடர்ந்து துறைமுகம் கப்பல்களை கண்காணித்து கொண்டும், முன் அறிவிப்போடும் செயல்படும். அதனால் புயல், கடல்சீற்றம் போன்ற கடலில் சிறுமாற்றங்கள் நிகழ்ந்தாலும் உடனே தகவல் தெரிவிக்கப்படும். கப்பல்களும் தங்களது திசையை மாற்றிக் கொள்ளும். இதுதான் காலம் காலமாக நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் நமது மீனவர்கள் போன விசைப் படகுகளில் அத்தகைய தகவல்தொடர்பு சாதனங்கள் இருந்ததா? என்பது ஆய்வுக்குரியது.

வானிலையை கணிக்ககூடிய கருவிகள், செயற்கைக்கோள் தொடர்பு கருவிகள். லைப்ஜாக்கெட், படகுக்கான இன்ஸ்சூரன்ஸ் போன்றவைகள் ஆழ் கடலுக்குச் செல்லும் மீனவர்களின் படகுகளில் இருக்கவேண்டும். இவற்றை துறைமுகம் மற்றும் கடல்  சார்ந்த மையங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மீனவர்கள் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டும்போது தரைத்தளத்திற்கு சிக்னல் கொடுக்கவேண்டும் அப்போதுதான் மீனவர்களின் இடத்தைக் கணிக்கமுடியும். மேலும் நவீன கருவிகளை விசைப்படகுகளில் பொருத்தும் போது அதற்குண்டான பயிற்சியை மீனவர்களுக்கு அளிக்கவேண்டும்.  மீனவர்கள் விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது அவர்களை தரைத்தளத்திலுள்ள கண்காணிப்பு மையங்கள்  ஒவ்வொரு விசைப்படகுகளும் கரைச்சேரும் வரை தொடர்பில் இருக்கவேண்டும். அதற்குண்டான ஒழுங்குமுறைகளை அரசும்,  துறைச் சார்ந்த பல்கலைக்கழகங்களும் ஒருங்கிணைந்து செயல் படுத்தவேண்டும்.

மேலும் கடற்கரை ஒரத்தில் காற்றை தடுப்பதற்கான உயரமான சவுக்கு, தென்னை போன்ற  மரங்கள் இருந்தன. தற்போது அந்த இடத்தை வீடுகளும் தொழிற்சாலைகளும் பிடித்துகொண்டன. அதனால்தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் மரங்கள் மற்றும் மின்கம்பங்களுக்கு அதிகமான சேதாரம் ஏற்பட்டுள்ளது. தற்போது கடற்கரை ஒரத்தில் மீனவர்கள் வசிப்பதற்கு ஏற்ற இடங்கள்,  படகுகள் நிறுத்தும் இடங்கள், அலைகளால் கடற்கரை பாதிக்கப்பட்டிருக்கும் இடங்கள் போன்றவைகளை புவிநுட்பவியல் ஆய்வாளர்கள் கணக்கெடுத்து அரசுக்கு அறிக்கை அளிக்கவேண்டும். அதனால் எதிர்காலத்தில் இன்னும் மோசமான பேரழிவுகளை தவிர்க்கலாம். புயல் என்றாவதுதானே வரும் என்ற மெத்தனபோக்கை கல்வியாளர்களோ, அரசோ கடைப்பிடிக்ககூடாது.  பொதுவாக இந்தமாதிரி புயல்காற்றுடன் மழை பெய்யும்போது  கடலின் மையத்தில் இருந்து கடற்கரை ஓரத்திற்கு கறுப்புமணல் அதிகளவில் கொட்டும். ஒருசில இடங்களில் மணல் அரிப்பு ஏற்பட்டு இருக்கும் அவற்றை அடையாளம் கண்டு அரசுக்கு அறிக்கை அனுப்பவேண்டும். மீனவர்களுக்கும் தெரியப்படுத்தவேண்டும்.

  கன்னியாகுமரியில்  இதுவரை நிகழாத பேரிழிவு ஏற்பட்டு இருப்பதை நாம் ஒரு அனுபவப்பாடமாக எடுத்து எதிர்கால மீனவ சமுதாயத்திற்கு உதவ பல்கலைக்கழகங்களும் அரசும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.

 (பேராசிரியர் என்.சந்திரசேகர் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக புவிதொழில்நுட்பவியல் துறையின் தலைவராக இருந்து ஓய்வுபெற்றவர்)

ஜனவரி, 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com