டிஜிட்டல் அபாகஸ்

உலகம் உன்னுடையது
டிஜிட்டல் அபாகஸ்
Published on

கற்பித்தலை நவீனமாக்குங்கள் காலத்திற்கேற்றார்போல மாறாதது எதுவும் நிலைத்து நிற்பதில்லை’ என்று சொல்லும் பஷீர் அகமது, இண்டியன் அபாகஸ் (Indian Abacus)  நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி. அபாகஸ் கற்பிப்பதற்காக பழைய முறையை மேம்படுத்தி புதுமையான கருவியையும்,அதனை இன்றைய கனிணி உலகத்திற்கேற்றவாறு டிஜிட்டல் முறையில் புதுமையானதாகவும் உருவாக்கியிருப்பவர்.தமிழகத்தில் சுமார் 70 கிளைகளைக் கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தின் அண்ணா நகர் தலைமை அலுவலகத்தில் அந்திமழைக்காக சந்தித்தோம். பேசத் தொடங்கியவுடன் கேட்ப்பவரையும் உற்சாகம் கொள்ள வைக்கும் அளவிற்கு துடிப்பானவர்.

‘பாரம்பரியமான அபாகஸ் கணித முறையை 1999 லிருந்து கற்பித்து வருகிறோம். இந்தியாவில் முதன் முதலில் அபாகஸ் கற்பித்தலை தொடங்கியது நாம்தான். சிறிது காலம் செல்ல செல்ல பழைய முறையில் உள்ள குறைபாடுகள் தெளிவாகத் தொடங்கியது.அதை எப்படி சரிசெய்வது என்று கடந்த ஏழு ஆண்டுகளாக முயற்சி செய்து உருவாக்கியதுதான் இந்த புதிய அபாகஸ் கருவிகள். இதுவரை இதை யாரும் செய்ததில்லை. முறையாக பதிவுசெய்து காப்புரிமையும் பெற்றுவிட்டோம். முதலில் டயல் செய்யும் போன்களை பயன்படுத்தினோம்.பிறகு செல்போன்கள் பட்டன்களுடன் வந்தது. இப்போது எல்லாமே ஸ்மார்ட் போன்கள் தான் உபயோகப்படுத்துகிறோம்.காலத்திற்கேற்றவாறு, வசதிக்கேற்றவாறு கருவிகளை நாம் மேம்படுத்திக் கொண்டே வந்திருக்கிறோம்.அதேபோலத்தான் கற்க்கும் முறையையும் இன்றைய நவீன காலத்திற்கேற்றவாறு லகுவானதாகவும், டிஜிட்டல் வடிவத்திலும் மாற்றியிருக்கிறேன்’ புன்னகையுடன் தொடர்கிறார் பஷீர் அகமது.

‘அபாகஸை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் எண்ணை காட்சி வழியாக பார்ப்பது, காட்சியை எண்ணாக மாற்றுவது. இதில் பாரம்பரியமான முறையில் மணிகள் அனைத்தும் ஒரே வண்ணத்திலிருக்கும்.அதனால் சிறிய எண்களை வேகமாக கூட்டவும்,கழிக்கவும் முடிந்த குழந்தைகளுக்கு பெரிய எண்களை முயலும்போது கடினமாக இருக்கும். அதுவுமில்லாமல் குறிப்பிட்ட சட்டத்தை மட்டுமே கணக்கிட்டுக் கொண்டிருக்கும்போது அதன் அருகிலுள்ள மற்ற மணிகள் கவனத்தைச் சிதறடிக்கக் கூடியதாக இருக்கும். அத்துடன் சட்டத்தில் மணிகள் சில சமயம் தவறுதலாக கீழிறங்கும் வாய்ப்புமுள்ளது. இந்த குறைகளையெல்லாம் நீக்கித்தான் இந்த புதிய முறையை உருவாக்கியிருக்கிறேன். இதில் எண்கள் அனைத்தும் மறைந்திருக்கும்.

சட்டத்திலுள்ள நகரும் பட்டை ( Slider )யை (பெயர் பலகையிலுள்ள In out நகரும் பட்டையைப் போன்றது) நகர்த்தும் போது தேவையான வரிசையை மட்டுமே பார்க்கலாம்.மேலும் மேற்புறமுள்ள வரிசையும் கீழ் புறமுள்ள வரிசையும் வண்ணங்களில் வேறுபடுத்திக் காட்டப்பட்டிருக்கும்.இதனால் தேவையான வரிசையை மட்டுமே கவனிக்கலாம். நகரும் பட்டை தவறுதலாக நகரும் வாய்ப்பும் இல்லை.இதில் மற்றொரு சாதகமான அம்சம்,பாரம்பரிய முறையில் எண் அட்டைகள் (ஊடூச்ண்ட இச்ணூஞீண்) மணிச்சட்டத்துடன் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும். ஆனால் நம்முடைய நவீன முறையில் அதற்கான தேவையே இல்லை. அதனையும் உள்ளடக்கியதே புதிய கருவி.

இதை டிஜிட்டல் வடிவத்திலும் செய்திருக்கிறோம். ரிமோட் மூலமாகவும் இயக்கலாம். ஆன்லைனில் அபாகஸை கற்பித்தலையும் முதன் முறையாக அறிமுகப்படுத்தியிருக்கிறோம்’. பேசிக் கொண்டே அதை ரிமோட் மூலம் இயக்கிக் காண்பிக்கிறார்.

‘இந்தியாவில் முதன் முதலில் 1999 ல் அபாகஸை அறிமுகப்படுத்தியபோது பெரிய வரவேற்பில்லை. முதலில் மக்களுக்கு அபாகஸ் என்றால் என்ன வென்றே தெரியவில்லை. மெண்டல் அரித்மெட்டிக் சென்டர் என்ற பெயரைப் பார்த்து மருத்துவனை என்று நினைத்து டாக்டர் எங்கே என்று கேட்டவர்களும் உண்டு. பிறகு மெதுவாக பிரபலமாகத் தொடங்கியது. கல்வி நிலையங்கள் இதன் பயன்பாட்டை புரிந்துகொண்டு அபாகஸ் கற்பதை ஊக்கப்படுத்தியதும் முக்கியமான காரணம்.

இந்த புதிய முறையை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கு என்ன முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறீர்கள்?

உலகெங்கும் உள்ள யாவரும் ஆன்லைனில் கற்பதற்க்கு வசதி செய்துள்ளோம். இங்கு பயிற்சி நிலையங்களில் அபாகஸ் கற்பிக்கும் நிறுவனம் தொடங்குவதற்க்கான அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது. இந்த புதிய அபாகஸ் கருவியைக் கொண்டு மாணவர்களுக்கு எளிமையான முறையில், எவ்வித குறைபாடுகளும் இல்லாமல் கற்றுத்தருவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ் நாடு தவிர மற்ற மாநிலங்களில் எங்களுடைய புதிய முறையைக் கொண்டு அபாகஸ் பயிற்சி நிலையம் தொடங்க ஏராளமானவர்கள் தினமும் தொடர்புகொண்டு வருகிறார்கள். அதற்கான திட்டமிடல்களையும் செய்து வருகிறோம். மேலும் கல்வி நிலையங்களுக்கு இந்த புதிய அபாகஸ் முறையைப் பற்றியும், இதிலுள்ள சாதகமான அம்சங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறோம்.அவர்களும் பெரும் வரவேற்ப்பை கொடுக்கிறார்கள். நிச்சயமாக பெரிய மாற்றம் ஒன்றை கொண்டுவர முடியும்’

திருவாரூர் மாவட்டத்திலிருந்து டிகிரி முடித்தவுடன் குவைத் சென்று சில காலம் பணியாற்றிவிட்டு 1999 லிருந்து அபாகஸ் கல்வியிலேயே ஊறி திளைத்தவர் பஷீர் அகமது. தன் ஏழு ஆண்டு உழைப்பில் அதில் புதிய மாற்றத்தையும் கொண்டு வந்திருக்கிறார். ஈடுபடும் துறையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்பவர்களுக்கு புதிய கதவுகள் திறக்கும் என்பதற்கு இவரே சிறந்த எடுத்துக்காட்டு.

ஆகஸ்ட், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com