டாக்டர் என்ற சொல்லுக்கு கொடுக்கும் விலை!

டாக்டர் என்ற சொல்லுக்கு கொடுக்கும் விலை!
Published on

‘தளபதி’ படத்தில் காட்டுக்குயிலு பாடல் முடிந்தவுடன் வரும் சண்டைக்காட்சி அது. மம்மூட்டி துள்ளிக் குதித்து ஸ்டைலாக வேட்டியை மடித்துக் கட்டியபடியே ஓடி வருவார்.

பொள்ளாச்சி நல்லப்பா தியேட்டரே கை தட்டலில் அதிர்ந்த காட்சி அது. 25 வருடங்கள் கழிந்து அதே போல விஜய் துள்ளி வேட்டியை மடித்துக் கட்டியபடியே மெர்சலில் இரண்டு இடங்களில் ஓடி வருகிறார். சென்னை தேவி தியேட்டர் அதே போல கைதட்டலில் அதிர்கிறது. இந்த மக்கள் ரசனையைத் துல்லியமாக அறிந்ததால்தான் அட்லீ வெற்றிபெற்ற கமர்ஷியல் இயக்குநராக இருக்கிறார். எந்த விஷயத்தை எங்கிருந்து எடுத்து மக்கள் ரசிக்கும்படி எப்படிக் கொடுப்பது, என்ன பேசினால் கை தட்டல் எகிறும் என்பதை சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார். இதுவரை எந்த பிரச்னையும் இல்லை. மெர்சலில் அரசையும், மருத்துவர்களையும் கேள்வி கேட்கும்போது மக்கள் இன்னும் வேகமாகக் கைதட்ட படத்திற்கு சிக்கலாகிவிட்டது.

ஆசிரியர்களையும் மருத்துவர்களையும் என்றைக்கும் வணங்கக்கூடிய இடத்தில்தான் வைத்திருந்தார்கள் நம் மக்கள். நம்முடைய சினிமாவும் அப்படியே. ஆர்.சி.சக்தி இயக்கத்தில் 1979 ல் வெளியான ரஜினியின் தர்மயுத்தம் (சினிமா மட்டுமே, வேற நெனைப்பு வேண்டாம்) படத்தில் தேங்காய் சீனிவாசன் மக்களைக் கொன்று சட்டவிரோதமாகக் கண்களை எடுத்து வியாபாரம் செய்வதாகக் காட்டியிருப்பார்கள். இதில் அறுவை சிகிச்சை நிபுணராக வரும் மருத்துவரைக் கட்டாயப்படுத்தி, அவரது குடும்பத்தைக் காட்டி மிரட்டியே தப்பு செய்ய வைப்பார் தேங்காய் சீனிவாசன். அதாவது, மருத்துவர் நல்லவர்தான், சூழ்நிலை காரணமாக வில்லனுக்கு உதவுகிறார் என்பதாக.

இதற்கடுத்து வந்த புலன் விசாரணை(1990) திரைப்படம் அன்றைய பரபரப்பு விஷயமான ஆட்டோ சங்கர் விவகாரத்தை முதன்மைப்படுத்தி அதனுடன் உடல் உறுப்பு வியாபாரத்தை விரிவாகப் பேசியது. பாலாஜி சக்திவேலின் முதல் படமான சாமுராய் (2002) மருத்துவத் துறையில் நடக்கும் ஊழலினால் அப்பாவி பொதுமக்களின் உயிர் எப்படிப் பறிக்கப்படுகிறது என்பதை மையப்படுத்தி வந்தது.

மருத்துவர்கள் பெரிய அளவில் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்தது ரமணா(2002) படம் வெளியான போதுதான். ’பணம் சம்பாதிப்பதற்காக என்ன பொய்யையும் சொல்லத் துணிவார்கள் மருத்துவர்கள், பிணத்திற்கு கூட வைத்தியம் பார்த்ததாகச் சொல்லி ஏமாற்றுவார்கள்’ என்ற கருத்து மருத்துவர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. ஏறக்குறைய இதே விஷயத்தை விஜய் ஆண்டனியின் சலீம் (2014) படத்திலும் காணலாம்.

இதனைத் தொடர்ந்து நீயா நானா (17.8.14) நிகழ்ச்சியில் மருத்துவர்கள் மற்றும் சாமானியர்கள் என்ற விவாத நிகழ்ச்சி நடந்தது. இதில் முழு உடல் பரிசோதனை என்பதே ஒருவகையான வியாபார தந்திரம் என்று முடிவு சொல்வதாக இருந்தது.

இதைத் தான் அட்லீ மெர்சலில் பேசி இருக்கிறார்.

சரி, மெர்சல் பேசிய மருத்துவ விஷயங்களில் எவ்வளவு உண்மை, எது தவறானது? 7% ஜிஎஸ்டி வாங்கும் சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது தவறானது. சிங்கப்பூருக்குப் பதிலாக கனடா அல்லது பிரிட்டனை குறிப்பிட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும்.

அதேபோன்று இந்தியாவில் மருத்துவம் இலவசம் என்று அரசு சொல்வதிலும் உண்மை இல்லை. பொது சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு ஜிடிபி சதவீத விகிதத்தில் ஒவ்வொரு வருடமும் குறைக்கப்பட்டு வருகிறது என்பதே உண்மை.

பொது சுகாதாரத்தில் இந்தியாவின் இடம் 112 என்று மெர்சலில் சொன்னது. உண்மையில் அது 154 வது இடம் (மொத்த 195 நாடுகளில்).

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 52 லட்சம் மருத்துவத் தவறுகள் அலட்சியத்தால் நடக்கின்றன என்று மெர்சலில் சொன்னது உண்மை. அதில் 98000 பேர் இறக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

அடுத்து, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் குழந்தைகள் இறந்தது, டயாலிஸிஸ் செய்யும்போது கரண்ட் கட்டாகி நோயாளிகள் இறந்தது, இன்குபேட்டரில் இருந்த குழந்தை பெருச்சாளி கடித்து மரணமடைந்தது போன்ற அட்லீயின் வசனங்கள் எல்லாமே உண்மையோ உண்மை. செய்திகளை மேலோட்டமாக மேய்பவர்களுக்குக் கூட இந்தத் தகவல்கள் தெரியும்.

மெர்சல் கிளப்பிய புகைச்சலில் மேலும் விவாதிக்கப்பட்ட சில தகவல்கள்.

இந்தியாவில் ஒரு லட்சம் மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 18000 பேரே இருக்கிறார்கள்.

பிரசவத்திற்கு இந்திய அரசு மருத்துவமனைகளில் ஆகும் செலவு 2500 ரூபாய். தனியார் மருத்துவ மனைகளில் ரூ 17000 ஆகிறது. ஆனால் தமிழ்நாட்டில் சராசரியாக 32000 ரூபாய் ஆகிறது.

“தமிழகத்தில் மருத்துவம் பார்ப்பவர்களில் 25% பேர் வட்டிக்குப் பணம் வாங்கியே மருத்துவச் செலவை சமாளிக்கிறார்கள். வருடத்திற்கு ஆறு கோடி நடுத்தர வர்க்கத்தினர் மருத்துவச் செலவைச் சமாளிக்க முடியாமல் வறுமைக் கோட்டிற்கு கீழே செல்கிறார்கள்” என்கிறார் சமத்துவதற்கான மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர்.ஜி.ஆர். ரவீந்திரநாத்.

இந்த விவகாரத்தில் பல இடங்களில் உடன்பட்டாலும் டாக்டர்கள் வேறுபடும் சில முக்கியமான இடங்கள் இருக்கின்றன. அவர்கள் கேட்பது:

1 சினிமாக்காரர்கள் கோடிகளில் சம்பளம் வாங்கி ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டு எங்களை ஐந்து ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கச் சொல்வது எந்த விதத்தில் சரி?

2 உங்களின் பெரும்பாலான குற்றச்சாட்டுக்கள் கார்ப்பரேட் மருத்துவமனைகளை நோக்கி வைக்கப்பட வேண்டியவை. அதை நடத்துவது அரசியல்வாதிகள், செல்வாக்கான தொழிலதிபர்கள். அவர்களிடம் கேள்வி கேட்க முடியாமல் டாக்டர்களை குற்றவாளிகளாகச் சித்தரிக்கிறீர்கள்.

3 உடல் அளவில் அதிக பாதிப்புகளை மற்ற தொழில் செய்பவர்களைவிட டாக்டர்களே சந்திக்கிறார்கள். டாக்டர் என்னும் சொல்லுக்கு கொடுக்கும் விலை மிக அதிகம், என்கிறார்கள்.

இந்தப் பிரச்னைகளுக்கு நாமும் முக்கியமான காரணியாக இருக்கிறோம். நாராயண ஹிருதாலயா மருத்துவமனையின் டாக்டர் தேவி ஷெட்டி, “ இருபது வருடங்களுக்கு முன்பு இருதய நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய அவர்களிடம் குறைந்தது ஒரு மணி நேரமாவது பேசி சம்மதிக்க வைக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்றோ இதய நோயாளிகளுக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது பேசி ஏன் அறுவை சிகிச்சை வேண்டாம் என்று புரிய வைக்க வேண்டியிருக்கிறது” என்கிறார். டாக்டரே வேண்டாம் என்றாலும் “ டாக்டர் எதுக்கும் ஒரு எக்ஸ்ரே எடுத்துப் பாத்துடலாமா?” என்கிறோம். தன்னுடைய குழந்தை நகரத்தில் மிகப்பெரிய மருத்துவமனையில் அதிக பொருட்செலவில் பிறப்பதுதான் கௌரவமானதாக கருதும் நிறைய பேர் இருக்கிறார்கள்.  

மருத்துவர்களை அதிகம் குற்றம் சாட்டி அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் போது நமக்கு எதுக்கு வம்பு என்று அவர்கள் சிக்கலான தருணங்களில் பின்வாங்கத் தொடங்கினால் பாதிப்பு பொதுமக்களுக்குத்தான். இது இரண்டு புறமும் கூர்மையான கத்தி. மருத்துவர்களும் அவர்களுடைய துறையில் ஏற்கெனவே எழுந்திருக்கும் கலகக் குரல்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து செயல்படும் பட்சத்தில்தான் இதற்கான தீர்வை நோக்கிய பயணத்தைத் தொடங்க முடியும்.

மருத்துவம் தொடர்பான நீயா நானா நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட மற்றொரு முக்கியமான விஷயம் சர்க்கரை மற்றும் கொழுப்பு சம்பந்தமானது. இவை இரண்டையும் கடந்த இருபது ஆண்டுகளாக நாட்டின் மிக முக்கியமான வியாதிகளாக பார்க்கப்பட்டதின் பின்னணியில் உள்ள அரசியல் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கான பதில் பல வகையாக இருந்தாலும் இந்த விஷயத்தைப் பின் தொடர்ந்தால் அது மருந்து கம்பெனிகளையும், இன்சூரன்ஸ் நிறுவனங்களையுமே சென்று சேரும்.

சமீபத்தில் புகழ் பெற்றுவரும் பேலியோ டயட் வகையினரும் சொல்வது இதைத்தான். சர்க்கரை, கொழுப்பு ஆகியவை திணிக்கப்பட்ட வியாதிகள். உண்மையில் BMI (Body Mass Index) என்பதே மக்களை ஏமாற்றும் வேலை என்பவர்கள் கொழுப்பை உண்பதன் மூலமே ஆரோக்கியமாக வாழலாம் என்கிறார்கள். கொழுப்பு பற்றிய பல மருத்துவர்களின் நிலைப்பாடும் சமீப காலங்களில் மாறி வருகிறது.

மருத்துவர்கள் வெறும் மருத்துவர்கள் மட்டும்தானா? சமீபத்திய நீட் தேர்வுக்கான பிரச்னை மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு மட்டுமேயானதுதான். மருத்துவத்துக்கு ஏன் நாம் இவ்வளவு முக்கியத்துவம்  தருகிறோம்? பணம் சம்பாதிக்க என்று சொல்ல வேண்டாம். இதைவிட எளிமையாக அதிக பணம் கொழிக்கும் துறைகள் தமிழர்களுக்குத் தெரியும். நாயகன் படத்தில் வேலை முடிந்த பிறகு வைத்தியம் பார்க்க மாட்டேன் என்று கிளம்பும் மருத்துவரை மிரட்டி வைத்தியம் பார்க்க வைப்பார் வேலு நாயக்கர். உயிர் பிழைத்த மகனின் தாய் வேலு நாயக்கரைக் கை கூப்பி தொழும்போது டாக்டரைத்தான் தொழ வேண்டும், உயிர் கொடுக்கும் கடவுள் மருத்துவர் என்பார். மற்ற எல்லா துறைகளைக் காட்டிலும் மருத்துவம் வேறுபடும் இடம் இதுதான். நமது கிராமங்களில் சுமாராகப் படிக்கும் அனைவரின் கனவும் மருத்துவர் ஆவதுதான். 

நல்ல மருத்துவ வசதி வேண்டுமென்றால் கொஞ்சம் கூடுதலாகச் செலவழிக்கத்தான் வேண்டும் என்பது உண்மையா?

இல்லை.

கோயமுத்தூரைச் சேர்ந்த டாக்டர் பாலசுப்ரமணியம் இரண்டு ரூபாயில் ஆரம்பித்து கடைசியாக 20 ரூபாய்க்கு வைத்தியம் பார்த்திருக்கிறார். பணம் இல்லாதவர்களுக்கு அந்த 20 ரூபாயும் கிடையாது, இலவசம். அவருடைய மறைவிற்கு சென்ற ஆண்டு ( நவம்பர்’16) கோவை நகரமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு மக்கள் கூடினார்கள். இது போன்ற ஏராளமான தன்னலமில்லா டாக்டர்களின் நகல்தான் மெர்சலின் 5 ரூபாய் டாக்டர் கதாப்பாத்திரம்.

தனி நபர் வேண்டுமென்றால் இப்படிச் சேவை மனப்பான்மையோடு பணியாற்றலாம், மருத்துவமனை வியாபாரம் என்று வந்து விட்ட பிறகு லாபம் வேண்டுமல்லவா? இல்லையென்றால் மருத்துவமனையை எப்படி நடத்த முடியும் என்று கேட்கிறீர்களா... அதற்கும் உதாரணம் இருக்கிறது.

கொல்கத்தாவைச் சேர்ந்த ஆனந்த் லோக் மருத்துவமனை மிகக் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை தருகிறார்கள். மற்ற மருத்துவமனைகளில் நான்கு லட்ச ரூபாய் வரை செலவாகும் இதய அறுவை சிகிச்சையை வெறும் 85000 ரூபாய்க்கு செய்கிறார்கள். ஒரு நாள் படுக்கைக்கான வாடகை ரூ 75 மட்டுமே. மிக வறுமையான குடும்பத்தில் பிறந்த தேவ் குமார் ஷராப் (இவர் மருத்துவர் அல்ல) 1963 ல் மருத்துவ செலவிற்கு அறுபது ரூபாய்க்கு வழி இல்லாமல் தன்னுடைய தம்பியை இழக்கிறார். அப்போது ’இனி இந்த நாட்டில் மருத்துவ செலவிற்கு பணமில்லாமல் ஒரு உயிர் கூடப் பிரியக்கூடாது’ என்று சபதமெடுத்து பலரின் உதவியோடு ஆனந்த் லோக் மருத்துவமனையை உருவாக்குகிறார். இவ்வளவு குறைவான கட்டணத்தை வசூலித்தாலும் சென்ற ஆண்டு( 2015-16) பதினோரு கோடி வருமானம் ஈட்டியிருக்கிறது இந்த மருத்துவக் குழுமம். அவ்வளவு தூரம் போவானேன்... மதுரை அரவிந்த் மருத்துவமனையே குறைவான கட்டணத்தில் தரமான மருத்துவம் தர முடியும் என்பதற்கான உதாரணம் தானே.  ”அரவிந்த் மருத்துவமனையில் 1981 ஆம் ஆண்டில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கண் அறுவை சிகிச்சைகள் நிகழ்ந்தன. அந்த எண்ணிக்கை 1991 ல் ஐம்பதாயிரத்தையும் 96 ல் ஒரு லட்சத்தையும் 2003 ல் இரண்டு லட்சத்தையும் 2009ல் மூன்று லட்சத்தையும் தாண்டியது. எண்ணிக்கை முக்கியமல்ல. மொத்த அறுவைச் சிகிச்சைகளில் 47 சதவீதத்துக்கு மட்டுமே வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 26 சதவீதத்தினருக்கு சலுகைக் கட்டணமும், 27 சதவீதத்தினருக்கு இலவசமாகவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இப்படிச் செய்யும்போது நிறுவனத்தைச் சரிவர நடத்த முடியுமா என்ற கேள்வி பலருக்கு உண்டு. பிரசித்தி பெற்ற வர்த்தகப் பத்திரிகையான போர்ப்ஸ்,  அர்விந்த் குழுமத்தின் நிர்வாக மற்றும் லாபமீட்டும் திறன் உலகின் சிறந்த வர்த்தக நிறுவனங்களுக்கு இணையானது என்று கூறுகிறது. கூகுள் நிறுவனர்களில் ஒருவரான லாரி பேஜ் அரவிந்த் நிறுவனம் பற்றிக் கேள்விப்பட்ட போது ஆச்சர்யப்பட்டார். உடனே தன் சொந்த விமானத்தில் மதுரைக்குக் கிளம்பி வந்துவிட்டார் அரவிந்த் நிறுவனத்தைப் பார்வையிட” என்கிறது அந்திமழை இளங்கோவனின் கரன்சி காலனி நூல்.

பத்ம பூஷன் விருதுபெற்ற பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் பி.எம்.ஹெக்டே ‘அதிகப்படியான மருந்துகளும், தேவையில்லாத அறுவை சிகிச்சைகளும் மருந்து நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் பணத்தாசையின் விளைவு ’ என்று நேரடியாகவே குற்றம் சாட்டுகிறார்.

வசூல் ராஜா எம்பிபிஎஸ், என்னை அறிந்தால், காக்கி சட்டை(2015) ஆகிய படங்களும் மருத்துவத்துறை பற்றிப் பேசியவையே. வசூல்ராஜா மனித நேயத்தைப் பற்றி பேசியது ஆனால் மெர்சல் வணிகமாகும் மருத்துவத்துறை பற்றிப் பேசுகிறது. இது தீவிரமான பிரச்னை. சினிமா கிளப்பும் விவாதமா நாட்டை மாற்றப் போகிறது என்பவர்கள் அந்த விவாதத்தைக் கூட    சினிமாதான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.   

நவம்பர், 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com