அவர் சிரிக்க வைப்பவர். நோக்கத்தில் உறுதியாக இருந்து, தான் சாதிக்க நினைத்ததை சாதித்துக் கொண்டிருக்கிறார் தங்கதுரை. ஜோக்குகளுக்காக டிவி வட்டாரத்தில் எல்லோராலும் ரசிக்கப்பட்டவர், இப்போது திரையுலகில் கலக்க ஆரம்பித்திருக்கிறார். ‘‘என்னுடைய பூர்வீகம் விழுப்புரம் என்றாலும், பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில் தான். நான் பிறந்தபோது எங்கள் வீட்டில் மின்சாரமே கிடையாது. மிகவும் எளிமையான பொருளாதார பின்புலம் கொண்ட குடும்பம்.
நான் டிவியில் நடித்தபோது, அதைப் பார்ப்பதற்கு எங்கள் வீட்டில் டிவி இல்லை. பக்கத்து வீட்டில் தான் சென்று பார்த்தேன். ‘ஒலியும் ஒளியும்' நிகழ்ச்சியை பக்கத்து வீட்டின் ஜன்னல் வழியாகத்தான் பார்த்தேன்,'' என உருக்கமாகப் பேசத் தொடங்குகிறார்.
‘‘யானைகவுனியில் உள்ள ஆரிய சமாஜம் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரையும், பன்னிரண்டாம் வகுப்பை வேப்பேரியில் உள்ள செயின்ட் பால்ஸ் பள்ளியில் படித்தேன். பன்னிரண்டாவதில் சயின்ஸ் குரூப் எடுத்ததால், என்னை எப்படியாவது டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என வீட்டில் விரும்பினார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு நான் மார்க் எடுக்கவில்லை. ஒரு தனியார் கல்லூரியில் மட்டும் சித்த மருத்துவம் படிப்பதற்கு சீட் கிடைத்தது. அரசு கல்லூரியில் சீட் கிடைக்காததால் அதை அப்படியே விட்டுவிட்டேன். வீட்டில், நான் டாக்டராக வேண்டும் என்று நினைத்தார்கள், நான் ஆக்டராக வேண்டும் என்று நினைத்தேன்.
சிறு வயதிலிருந்தே மிமிக்ரி, காமெடி எல்லாம் பண்ணுவேன். ஸ்கூல் படிக்கும் போது செந்தில்நாதன் என்று ப்ரண்ட் ஒருவன் இருந்தான். அவனும் நானும் போட்டி போட்டுக் கொண்டு மிமிக்ரி செய்வோம். அவன் நம்பியார் மாதிரி பேசினால், நான் எம்.ஜி.ஆர் மாதிரி பேசுவேன். அவன் ரஜினி மாதிரி பேசினால் நான் ஆன்டனி மாதிரி பேசுவேன். இருவரும் மாறி மாறி கலாய்த்துக் கொள்வோம். நான் நல்லா காமெடி பண்ணுவேன் என்பதால் டீச்சர்களும் நண்பர்களும் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். இதெல்லாம் தான் எனக்கு காமெடி மீதான ஆர்வம் அதிகரிப்பதற்குக் காரணமாக இருந்தது.
பன்னிரண்டாவது முடித்ததும், திரைப்படக் கல்லூரியில் படிக்கலாம் என்று முடிவெடுத்தேன். குடும்ப பொருளாதாரம் அதற்கு ஒத்துழைக்கவில்லை. ‘நமக்கு யாரும் சப்போர்ட்டில்ல... படிச்சு தான் மேலே போகனும்... இந்த நேரத்தில, பிலிம் இன்ஸ்டியூட்டில் படிச்சா யாரு உனக்கு ஹெல்ப் பண்ணுவா?' என்பது மாதிரி வீட்டில் கேட்டார்கள். அதனால், விவேகானந்தா கல்லூரியில் பிஎஸ்சி பிளான்ட் பையாலாஜி & பிளான்ட் பையோ டெக்னாலஜி சேர்ந்தேன்.
காலேஜ் செல்வதற்கு வீட்டில் ஐந்து ரூபாய் கொடுப்பார்கள். அதை வைத்து கேன்டீனில் மதியம் சாப்பாடு சாப்பிடுவேன். மாலை கல்லூரி முடிந்ததும், கிளம்பி வடபழனிக்குச் செல்வேன். அங்கிருந்து நண்பர்களெல்லாம் சேர்ந்து, பேருந்தே போகாத இடங்களில் இருக்கும் சினிமா அலுவலகங்களுக்கு நடந்தே சென்று வாய்ப்புக் கேட்போம். நாலைந்து கிலோமீட்டரெல்லாம் நடந்தே சென்றிருக்கிறேன்.
அப்போது, ப்ரண்ட் ஒருத்தன் சைக்கிள் வைத்திருந்தான். எனக்கும் அவனுக்கு ஒரு டீல். போகும்போது சைக்கிளை அவன் ஓட்ட வேண்டும், வரும்போது சைக்கிளை நான் ஓட்ட வேண்டும். இப்படியெல்லாம் தான் சினிமா அலுவலகங்களுக்கு சென்று வந்தேன்.
நான் நல்லா மிமிக்ரி, காமெடி பண்ணுவேன் என்று பசங்க எல்லோருக்கும் தெரியும். ஒருநாள் என்னுடைய ப்ரண்ட் கணேசன் விஜய் டிவியில் கலக்கப்போவது யாருனு ஒரு காமெடி நிகழ்ச்சிக்கு ஆடிஷன் நடக்கப்போகிறது, அதில் போய் கலந்துகொள் என்றான்.
விஜய் டிவிக்கு ஆடிஷன் போகிறோம் என்பதால் நானும் என்னுடைய ப்ரண்ட்ஸ் தீபன், அசோக் சிவா போன்றவர்கள் எல்லாம் சேர்ந்து ஸ்கிரிப்ட் எழுதினோம். அந்த ஸ்கிரிப்ட்டில் இருப்பது மாதிரி ஒத்திகையும் பார்த்தோம். அதன்பிறகு தான் நானும் என்னுடைய சில நண்பர்களும் அங்கே சென்றோம். அங்கோ, இரண்டாயிரம் பேர் வந்திருக்கிறார்கள். ரோபோ சங்கர், மதுரை முத்து போன்ற பெரிய பெரிய ஜாம்பவான்களெல்லாம் இருந்தார்கள். அப்போது எனக்குப் பத்தொன்பது வயதுதான் இருக்கும். கூட வந்த நண்பன், ‘டேய் இது நமக்கெல்லாம் கிடைக்காதுடா, அவங்க தெரிஞ்சவங்களுக்குத்தான் கொடுப்பாங்க... வாடா போய்டலாம்' என்றான்.
அவன் அப்படிச் சொல்லியதும், இரண்டு பேரும் கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டோம். ஆனால் என்னுடைய மனசு முழுக்க ஆடிஷன் நடிக்கும் இடத்திலேயே இருந்தது. அந்த நேரம் பார்த்து தயா என்ற ப்ரண்ட் ஒருத்தன் வந்தான். அவனைக் கூட்டிக் கொண்டு மீண்டும் அங்கே சென்றேன். வெளியில் யாருமே இல்லை, கேட்டை மூடியிருந்தார்கள். அப்போது, அங்கு வந்தவரிடம், ‘சார் நான் நல்லா காமெடி பண்ணுவேன் சார்...எப்படியாவது ஆடிஷனில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கொடுங்கள்'என்று கெஞ்சினேன். அவருடைய உதவியால், கலந்து கொண்டு தேர்வாகினேன். அதன் பிறகு, கலக்கப்போவது யாரு ஐந்து எபிசோடில் பங்கேற்றேன். அதோடு அந்த ஷோ முடிந்ததால், மீண்டும் பழையபடி வாய்ப்பு தேடிக் கொண்டே கேட்டரிங் வேலைக்கு சென்றேன். ஒருநாளை நாற்பது ஐம்பது ரூபாய் தருவார்கள். அந்த பணத்தை வைத்து காலேஜ் பீஸ் கட்டுவேன். எனக்குத் தேவையான பொருட்களையும் வாங்கிக் கொள்வேன். மீதி பணத்தை சேமித்து வைத்து வீட்டில் கொடுப்பேன்.
ஒரு முறை தெரிந்த அண்ணன் ஒருத்தர் ‘தங்கதுரை, உனக்கு நா சினிமாவில வாய்ப்பு வாங்கித்தரேன் எனக்கு எதாவது பணம் கொடு' என்றார்.
சினிமா மீது பைத்தியமாக இருந்ததால், சேர்த்து வைத்திருந்த ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை அவருக்குக் கொடுத்தேன். ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரச்சொல்லியிருந்தார், போயிருந்தேன். செமையான கூட்டம். கூட்டத்தில் ஒரு ஓரமாக நிற்க வைத்தார்கள். வசனம் எதாவது கொடுப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந் தேன். கடைசி வரை கூட்டத்தில் ஒருத்தனாகத்தான் இருந்தேன். பணம் வாங்கியவர் எங்கிருக்கிறார் என்று தேடிப்பார்த்தால். ஆள் எஸ்கேப். அப்போது தான் தெரிந்தது, அவர் என்னை ஏமாற்றிவிட்டார் என்று. அதன் பிறகும் வாய்ப்புகளைத் தேடி அலைந்தேன்.
கல்லூரி முடித்த பிறகு, என்னுடன் படித்தவர்கள் எல்லோரும் நல்ல சம்பளத்துடன் வேலையில் சேர்ந்தார்கள்.
‘என்ன தங்கதுரை வேலைக்குப் போகலையா?' என்று நிறையப் பேர் என்னைக் கேட்கத் தொடங்-கினார்கள். ஒரே அவமானமாக இருக்கும். சென்னை பல்கலைக்கழகத்தில் ஜர்னலிசம் சேர்ந்தேன்.
இரண்டு வருடம் ஜர்னலிசம் படித்து முடித்த பிறகு ஐ.சி.எம்.ஆர்&இல் பணி பயிலுனராக வேலைக்குச் சேர்ந்தேன். எனக்கு நடிப்பு மீது முழு ஆர்வமும் இருந்ததால், அந்த வேலையிலிருந்து நின்றுவிட்டேன். என்னுடன் வேலை பார்த்தவர்களுக்கெல்லாம் அதன் பிறகு அங்கேயே நிரந்தர வேலை கிடைத்துவிட்டது.
மீண்டும் விஜய் டிவியில் வந்து சேர்ந்தேன். ‘அது இது எது' நிகழ்ச்சியில் தொடங்கிய பயணம் வெற்றிகரமாக இன்று வரை சென்று கொண்டிருக்கிறது. என்னுடைய ஜோக்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், அதை புத்தகமாக வெளியிடச் சொன்னார்கள். எல்லா ஜோக்குகளையும் தொகுத்து ‘தங்க துரையின் தற்கொலை ஜோக்குகள்' என்று புத்தகமாக வெளியிட்டேன். புத்தகம் வெளியிடுவதற்கு முக்கிய காரணமே விஜய் டிவி தான். அந்தப் புத்தகம் இப்போது நல்ல விற்பனையில் இருக்கின்றது. இப்போது, அதே தலைப்பில் பார்ட்&2 வெளியிடப்போகிறேன்.
விஜய் டிவியில் இருந்தபோதே சந்தானம் சார் ஏ1 படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்தார். அவருக்கு என்னை ரொம்ப பிடிக்கும், அவரே அதை என்னிடம் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு ரஞ்சித் சாரின் ‘சார்பட்டா பரம்பரை'யில் நடித்தேன். இத்தனை வருடத்தில் நிறையப் படங்கள் நடித்திருந்தாலும் சார்பட்டா எனக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்தது. எனக்கு மிகப்பெரிய வருத்தம் என்னவென்றால், நான் வளர்ந்து வரும் இந்த நேரத்தில் என்னுடைய அம்மா இல்லை என்பது தான். நான் கஷ்டப்படும் போது இருந்தவர், நான் சந்தோஷமாக இருக்கும்போது இல்லை.
இப்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் செல்ஃபி படத்தில் நடித்துள்ளேன். யோகி பாபுவுடன் ஒரு படத்திலும், சூர்யா சாருடன் ஒரு படத்திலும் என நிறையப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். படங்களில் நடிப்பதற்கு கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டதால், டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. எதாவது, ஸ்பெஷல் ஷோக்களில் மட்டும் கலந்து கொள்கிறேன்.
எனக்கு சினிமாவை பற்றித் தெரிந்து கொள்வதற்கு பத்து வருடங்களானது. ஒரு காமெடியனாக ஜெயித்து வருவது பெரிய விஷயம். பயிற்சியின் மூலமாகவும், கற்றுக் கொள்வதன் மூலமாகத்தான் என்னை நான் தயார்படுத்திக் கொள்கிறேன். தங்கதுரை நல்ல காமெடியன் என்பதைத் தாண்டி, நல்ல குணச் சித்திர நடிகன் என்ற அளவுக்கு வளர வேண்டும் என நினைக்கிறேன்,' என்று முடித்தார்.
நவம்பர், 2021