“ஜெலிலா மூணு சாயா கொடு”

அஞ்சலி - தோப்பில்
அஞ்சலி - தோப்பில்அந்திமழை
Published on

திருநெல்வேலியில் ஓர் எழுத்தாளர் இருக்கிறார்; அவர் மூன்று நாவல்கள் எழுதியிருக்கிறார் என்று தோப்பிலைப் பற்றி அரசல்புரசலாகக் கேள்விப்பட்டு  த.மு.எ.ச சார்பில் ஓர் இலக்கியக் கூட்டத்திற்குத் தலைமை ஏற்க அழைக்க,  நானும்  எழுத்தாளர்  நாறும்பூநாதனும்   சென்றோம்.

அது 1996. அந்தக் கூட்டம் அவரது நாவல் சார்ந்த கூட்டம் கிடையாது. அந்தநேரத்தில் யாரும் அவரது நாவலைப் படிக்கவும் இல்லை. எங்களிடம் அவரது நாவலும் கிடையாது. ஆனால், அவர் கூட்டத்திற்கு வர சம்மதித்தார்.  கூட்டத்தில் மொத்தமே 15 பேருக்குள்தான் இருந்தோம். இருந்தாலும் அவர் ,'எனக்கு எண்ணிக்கை முக்கியமில்லை. நான் பேசும் விசயத்தை இரண்டுபேர் கேட்டாலே போதும்; ஒரு எழுத்தாளனுக்கு மகிழ்ச்சிதான்!' என்றார்.

 தோப்பில் முஹமது மீரான் நெல்லை டவுன் மேலரதவீதியில் மிளகாய் வத்தல் வியாபாரம் செய்தார். அவர் அந்த மண்டியில் இருக்கும்போதும் எழுதுவார். அவருக்குத் தமிழில் எழுத வராது. ஆதலால் முதலில் மலையாளத்தில் தமிழ் நாவலை எழுதுவார். பிறகு அதைத் தமிழில் வாசிக்க, இன்னொருத்தர்  தட்டச்சு செய்து அச்சுக்கு அனுப்புவார். இப்படித்தான் இவரது கடலோர கிராமத்தின் கதை, கூனன்தோப்பு, துறைமுகம் ஆகிய மூன்று நாவல்களும் வெளிவந்தன.

அவர்  500 பிரதி அச்சிடுவார். அதில் 100 பிரதியை  வெளிநாட்டில் இருந்து உள்நாடு வரை உள்ள தனக்குத் தெரிந்த அத்தனைபேருக்கும் அனுப்பிவைப்பார்.  ஆனால் எந்தப் புத்தகத்தைக் குறித்தும் பெரியதாக பிரதிபலிப்பு வந்ததில்லை. மூன்று நாவல்களும் உலகத்தில் எங்கும் பேசப்படாததால் இனி எழுத்தாளனாக வேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணி அவ்வளவு புத்தகத்தையும் குவித்து தீ வைத்துக்
கொளுத்த ஒருமுறை முடிவு செய்திருந்தார்.  அந்த நேரத்தில்தான் வெளிநாட்டில் இருந்து தபாலில் 100 புத்தகத்திற்கு ஆர்டர் கேட்டு கடிதம் வந்து காப்பாற்றியது!

இலக்கியக் கூட்ட சந்திப்பின் காரணமாக  தோப்பிலோடு மிக நெருக்கமாக அடிக்கடி பார்க்கும் சூழல் நிகழ்ந்தது. இந்தத் தொடர் சந்திப்பால்  நான் அவருக்கு விமர்சன வாசகராக மாறியிருந்தேன் என்பதே எனக்குத் தெரியாமல் இருந்தது.  ஒருநாள் எம் 80 வண்டியில் என்னைப் பார்க்க வந்தார். "ஒரு நாவல் எழுதிகிட்டு இருக்கேன். வாரத்திற்கு இரண்டு அத்தியாயம் எழுதிவிடுவேன்.  இந்த தடவை நீங்கதான் எனக்குத் திருத்திக் கொடுக்கணும்!'' என்று சொன்னார். நானும் தயங்காமல், சரியென்றேன். அதன்பிறகு வாரத்திற்கு ஒருமுறை வருவார். எழுதியதை என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவார்.  நான் எழுத்துப் பிழையை மட்டும் பார்க்காமல் வாக்கிய அமைப்புகளையும் சரிசெய்தேன்.  நாவலைப் பற்றிய அபிப்பிராயமும் சொன்னேன். அதற்கு அவர் எனக்கு அனுமதிகொடுத்தார். நாவல் முடியும் தருவாயில் ஒருநாள் தோப்பிலிடம், "இந்த நாவலில் ஒரு 40 பக்கத்தை வெட்டவேண்டும், அதை எடுத்துவிட்டால் இந்த நாவல் கச்சிதமாக இருக்கும்'' என்று சொன்னேன். அவர் என்னை தீர்க்கமாகப் பார்த்தார். தயங்காமல் 40 பக்கத்தையும் வெட்டினார். அதேபோல் கடைசி அத்தியாயத்தை முடிப்பதற்கு பெரும் சங்கடத்திற்கு ஆளானார். அவரால் முடிக்கமுடியவில்லை. ஒருவழியாக கடைசி அத்தியாயத்தை எழுதிவிட்டு 20 நாட்கள் கழித்து என்னை சந்தித்தார். நானும் படித்துவிட்டு  "இதைவிட சிறப்பாக முடிக்கமுடியாது. நல்லா வந்திருக்கு'' என்றேன். 

"நாவலை அச்சடிக்கவேண்டும், 25,000 ரூபாய் பணம் தேவைப்படுகிறது. என்னசெய்ய?'' என்றார். நான் உடனே,"வாங்க வங்கில லோன் கேட்போம்'' என்றேன்.  நெல்லை சந்திப்பில் இருந்த யூனியன் வங்கிக்குச் சென்றோம்.  வங்கிமேலாளர்," எங்கள் வங்கியில் புத்தகம் வெளியீடுவதற்கு லோன் கிடையாது . ஆனால் என்னுடைய
சொந்த முயற்சியில் உங்களுக்கு வங்கிக் கடன் தருகிறேன்'' என்றார்.
சொன்னமாதிரியே கடனும் கொடுத்தார். புத்தகமும் அச்சிட்டு வந்தது. நான் அந்த புத்தகத்தை முழுவதுமாகப் படித்துவிட்டு அவரது வீட்டிற்கு ஒருவித படப்படப்புடன்தான் 
சென்றேன். நான்போனாலே விருந்துதான். நன்றாக
சாப்பிட்டேன். சாப்பிட்டு முடித்தவுடன் சாயா வந்தது. நிதானமாகக் குடித்துக்கொண்டே... "இந்த நாவலைப் பற்றி போனில் சொல்லவேண்டாம் என்றுதான் நேரில் வந்தேன். இந்த முறை சரியான நபர்கள் சாகித்ய அகடமியில் இருந்தால், உங்கள் நாவலுக்கு விருது கிடைக்கும்!" என்றேன். தோப்பில் மெலிதாகச் சிரித்தார். அவரது மகன்களும் அருகில் இருந்தனர். "இந்த நாவலுக்கு விருது கிடைக்கவில்லையென்றால் உங்களுடைய வேறு எந்த  நாவலுக்கும் விருது கிடைக்காது!" என்று உணர்ச்சிவசப்பட்டு சத்தமாகச் சொன்னேன்.  அப்போதும் அதே புன்னகைதான். அந்தவருடம் (1997) 'சாய்வு நாற்காலி' என்ற அந்த நாவலுக்கு விருது அறிவிக்கப்பட்டது.  அதற்கு அப்புறம்தான் தோப்பில் மீரான் எல்லோரும் தெரிய ஆரம்பித்தார்.   வத்தல் வியாபாரம் செய்கிறவர்
சாகித்ய அகடமி விருது வாங்கியிருக்கிறார். அவர் மிகவும் கஷ்டப்பட்டவர். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளார் என செய்தி வெளியானது. அதைப் பார்த்து, நெல்லையில்  பிரபல மருத்துவர் ஆக்னஸ் பண உதவி செய்ய முன்வந்தார்.

‘அஞ்சுவண்ணம்தெரு'  நாவலின் அத்தியாங்களையும் அவர் கேட்டுக்கொண்டதால் வரிசைப்படுத்தி அவரிடம் கொடுத்தேன். நாவலைப் படித்த எழுத்தாளர்  எம்.எஸ், நாவல் நன்றாக வந்திருக்கிறது என்றதாகவும் இந்த வரிசைதான் நாவலை தூக்கிவிடுது என்று சொன்னதாகவும் தோப்பில் என்னிடம் கூறினார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

 நெல்லையில் தோப்பிலைப் பார்க்க வேண்டுமென்றால்  முதலில் கிருஷியை பார்க்கவேண்டும் என்ற அளவுக்கு எல்லோரும் என்னைப் பார்க்க வந்தனர். அவரது வீடே
சேர்ந்து "வந்தவர்களைக்'' கவனிப்பார்கள். காலையில் புட்டு, பயறு, பப்படம்;  மதியம் மீன்குழம்பு இருக்கும்.  "ஜெலிலா மூணு சாயா குடு'' தோப்பில் தனது மனைவியிடம் சொல்லும்போது, அந்த சொல் போவதற்கு முன்னால் அழகான கப் அன் சாசரில் சாயா வந்துவிடும். அதிக தடவை
சாப்பிட்டது நானாகதான் இருக்கும்.

 அவரை கடைசியாக மருத்துவமனையில் பார்த்தபோது எனது கைகளை இறுக்கிப்பிடித்துக் கொண்டார்." நீங்க எழுந்திருச்சி வந்துருவிங்க பாய்,  வந்து எழுதுவிங்க . உங்க தோல் எல்லாம் ரொம்ப அழகாக இருக்கு. பார்வையில் நல்ல தெளிவு இருக்கு.  முடி உங்களுக்கு அப்படியே இருக்கு..  உடம்பு மெலியல...'' நான் இப்படி என்னை அறியாமல் ஏதோதோ சொல்லிக் கொண்டிருந்தபோது  அவரது முகத்தில் ஒரு மலர்ச்சி வந்தது. "சீக்கிரம் வீட்டுக்குப் போய்றணும்;  நல்ல மீன் குழம்பு வைத்து சாப்பிடணும். சீக்கிரம் என்னைக் கூட்டிகிட்டுப் போ எரிச்சலா இருக்கு இங்க,'' என்று மகன் ஷமீமைப் பார்த்துச் சொன்னது, இன்னும் ஞாபகம் இருக்கிறது!

ஜுன், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com