ஜெட் ராதாகிருஷ்ணன் சர்வதேச தமிழ் விஞ்ஞானி!

ஜெட் ராதாகிருஷ்ணன்
சர்வதேச தமிழ் விஞ்ஞானி!
Published on

அமெரிக்காவில் 2000-ஆவது ஆண்டு இண்டியானா போலிஸ் நகரில் சர்வதேச அறிவியல் அறிஞர்கள் மாநாடு. ஜெர்மன் விஞ்ஞானி ஒருவர் தலைமை ஏற்றிருக்கிறார். காலை எட்டுமணி. அனைவரும் சுறுசுறுப்பாகவும் விழிப்புடனும் பங்கேற்கும் நேரம். இந்தியாவில் கான்பூர் ஐஐடியில் பணிபுரியும் ஏரோடைனமிக்ஸ் துறை பேராசிரியர் ராதாகிருஷ்ணன் தன் கட்டுரையை வாசிக்க எழுந்தார். இருபது நிமிடங்கள். அதிவேக ஜெட் விமானங்களின் பின் பகுதியில் வெப்ப உமிழ்தலைக் குறைத்து ரேடார் போன்றவை கண்டுபிடிக்கமுடியாது செய்யும் ஓர் ஆய்வை சமர்ப்பித்தார்.

அவர் உரை முடிந்ததும் பேரமைதி. அவரது ஆய்வு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அது காண்பித்தது. தலைவராக இருந்த ஜெர்மன் விஞ்ஞானி எழுந்தார். “அனைவரும் ஒரு நிமிடம் கவனியுங்கள். ராதாகிருஷ்ணன் இங்கே கூறிய விஷயத்துக்கு ‘ராதாகிருஷ்ணன் லிமிட்’ என்று பெயர் சூட்டுகிறேன். நாம் அனைவரும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்றார். அங்கேயேஅதிவேக ஜெட்விமானங்களைப் பொறுத்தவரை ‘ராதாகிருஷ்ணன் லிமிட்’ என்பதும் உலகளாவிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகிவிட்டது.

‘’நான் இப்படி ஒரு அங்கீகாரம் நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை.” மெலிதாக புன்னகைத்தார் பேராசிரியர் ராதாகிருஷ்ணன். சென்னைக்கு வந்திருந்தபோது அந்திமழைக்காக அவரைச் சந்தித்தோம். வாலாஜாபாத் அருகே பாலாற்றுக்கு தெற்கே கம்மனூர் என்ற ஒரு கிராமத்தில் பிறந்தவர். தமிழ் வழிக்கல்வியில் பள்ளிக்கல்வியைப் படித்து சென்னைக்கு வந்து மேற்படிப்பு முடித்தவர். பள்ளிக்குப் போகும்போது கையில் கோவணத்துடன் தான் செல்லவேண்டும். “குறுக்கே ஒரு ஆறு ஓடும். அதைக் கடக்கத்தான் கோவணம். ஆற்றின் மறுகரை ஏறியதும் நிஜாரை அணிந்துகொள்ளலாம்” என்கிறார்.

பள்ளிப்படிப்பு முடிந்தபின் 16 வயதில் சென்னைக்கு வந்தார். பிஎஸ்சி கணிதத்தை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் முடித்தார். எல்லா பாடங்களிலும் முழுமையான  மதிப்பெண் பெற்ற அவருக்கு அங்கே உடனே ஆசிரியர் வேலை தர முன்வந்தார்களாம். அவர் எம்.ஐ.டியில் மேற்படிப்பு சேர்ந்து எம்.டெக் படித்தார். பின்னர் ஐஐடியில் பிஎச்டி.

“எம்டெக் முடித்தவுடன் இஸ்ரோவில் சயன்டிஸ்ட் ‘ பி’ வேலை காத்திருந்தது. அப்போதைய இஸ்ரோ இயக்குநர் வாய்மொழித் தேர்வாளராக வந்திருந்தபோது என் ஆய்வுத்தாளைப் பார்த்து என்னை சேர்த்துக்கொள்ள விழைந்தார். ஆனால் மேலும் படிக்க விரும்பி பிஎச்டி சேர்ந்தேன். அது முடிந்தவுடன் பாம்பே ஐஐடியிலும்  என்னை உடனே வரச்சொல்லி பேராசிரியர் பணி தருவதாகச் சொன்னார்கள். இதற்கு இடையில் கான்பூர் ஐஐடியில் கிடைத்த உதவிப்பேராசிரியர் பணி பிடித்திருந்தது. அங்கேயே வேலைக்குச் சேர்ந்துவிட்டேன்.” என்கிறார்.

கான்பூர் ஐஐடியில் அதிவேக ஜெட் ஆய்வகம் ஒன்றை உருவாக்கி அதில் சோதனைகள் மேற்கொண்டார். கல்லூரி வளாகத்தில் வேண்டாம் என்று தூக்கி எறியப்பட்ட ஒரு இரும்புக்குழாயை ஏழு ரூபாய் செலவில் ரிக்‌ஷாவில் கொண்டுவந்து வைத்து அதில் செய்தவைதான் முக்கியமான கண்டுபிடிப்புகள். ராதாகிருஷ்ணன் லிமிட் என்கிற விஷயத்தை உருவாக்குவதற்கு அவருக்கு ஆன செலவு... யாரும் நம்ப மாட்டீர்கள்.. எழுபதாயிரம் ரூபாய் மட்டும்தான்!

‘பெரிய கண்டுபிடிப்புகள் செய்வதற்கு பெரிய அளவு நிதி தேவை என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது” என்கிற ராதாகிருஷ்ணன் இஸ்ரோ நிறுவனத்துக்கும் பெரிய அளவில் தன் சோதனைச் சாலை மூலமாக பணத்தை மிச்சப்படுத்திக் கொடுத்திருக்கிறார். இஸ்ரோ நிறுவனத்தின் பரிசோதனைக்கான சில விஷயங்கள் வெளிநாடுகளில் செய்யப்பட்டுவந்தன. அவற்றை உள்நாட்டிலேயே செய்ய விரும்பியபோது அந்நிறுவனத்தார்க்கு ராதாகிருஷ்ணன் பெயர்தான் ஞாபகத்துக்கு வந்திருக்கிறது. ‘’ ஒரு நாள் திடீரென அழைப்பு வந்தது. என்ன தென தெரியாமல் நான் திருவனந்தபுரம் போய் இறங்கி அவர்களின் தலைமையகம் சென்றேன். அவர்கள் என்னிடம் விவரத்தை விளக்கினார்கள். பிறகு எவ்வளவு செலவாகும் என்றனர். சில பொருட்களை வெளிநாட்டிலிருந்து வாங்கவேண்டும். மொத்தமாக பத்து லட்ச ரூபாய் ஆகும் என்றேன். இஸ்ரோ காரர்கள் ஆச்சரியபட்டனர். அவர்கள் கோடிகளில் திட்டச் செலவுகளைச் செய்து பழக்கப்பட்டவர்கள் அல்லவா?

அதற்கான சோதனைகளைச் செய்து ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுக்கான பாதுகாப்பான ஒலி அளவு எவ்வளவு வரும் என்று ஆய்வகத்தில் துல்லியமாக கணித்துக்கொடுத்தேன். அதே அளவுதான் ராக்கெட் ஏவுகையிலும் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் பாராட்டினார்கள். எனக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. அதற்காக எழுதிய கோடையும்  அவர்களுக்கே உரிமையாக அளித்துவிட்டேன். அக்னி ஆகாஷ் போன்ற ஏவுகணைகள் ஏவப்படும்போது உருவாகும் வெப்பத்தின் அளவால் கீழ்பகுதியில் இருக்கும் கருவிகள் பழுதடையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இதற்காக ப்ரீத்திங் ப்ளண்ட் நோஸ் (Breathing Blunt Nose) என்ற தொழில் நுட்பத்தை உருவாக்கி அளித்தேன். இதுவும்  பெரும் பயனுள்ளதாக அமைந்தது. இந்த விஷயங்களைத்தொடர்ந்து, என்னைக் காண்பதற்காக இஸ்ரோ சேர்மன் கஸ்தூரிரங்கன் கான்பூர் ஐஐடிக்கே தேடி வந்துவிட்டார்” என்று தன் பணி பற்றிய விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார் ராதாகிருஷ்ணன். தன்னுடைய ஜெட் ஆய்வகத்தில் 31 பிஎச்டி படிப்புகள் வந்திருக்கின்றன; ஏராளமான சர்வதேச சஞ்சிகைகளில் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன என்பதில் அவருக்குப் பெருமை.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் புகழ்பெற்ற  ஹங்கேரி - அமெரிக்க அறிவியல் அறிஞர் பான் கார்மன் (Von karman)  ஓடும் நீரில் குறுக்கே ஒரு தடை இருக்கும்போது  அதைத்தாண்டி உருவாகும் சுழிகளின் ரெனாட்ல்ஸ் எண் 160க்குள் இருக்கும் என்று கூறியிருந்தார். இது பல ஆண்டுகளாக பாடமாக இருந்துவந்தது. ஜப்பானில் டோக்கியோ பல்கலையில் பணிபுரிந்தபோது, ராதாகிருஷ்ணன் இதற்கு மாற்றாக ரெனால்ட்ஸ் எண் 960க்கு மேல் வரும் என்று காண்பித்தார். இது புகழ்பெற்ற சர்வதேச அறிவியல் சஞ்சிகையில் வெளியாகி அவருக்கு நற்பெயர் ஈட்டித்தந்தது.

ஒரு குறிப்பிட்ட வகை நாஸில்கள் (Nozzle) செய்வதற்காக ஒரு சமன்பாடு  அமெரிக்கர்கள் கையில் இருந்தது. ஒரு நாஸிலுக்கு ஆயிரம் டாலர்கள் வாங்கி வியாபாரம் செய்துகொண்டிருந்தார்கள். 1987-ல் அந்த சமன்பாட்டை  இவரே எழுதி கண்டுபிடித்து ஒரு சர்வதேச சஞ்சிகையில் வெளியிட்டும் விட்டார்.  இது வெளியானதில் அமெரிக்கர்களுக்குக் கடுங்கோபம். ராதாகிருஷ்ணனுக்கு எதுவும் மக்களுக்கானதாக இருக்கவேண்டும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை.

இவ்வளவு சிறந்த அறிவியல் அறிஞருக்கு மறுபக்கம் இருக்கிறது. அது மிக சுவாரசியமானது. அது அவரது தமிழ் இலக்கிய ஆர்வம். ‘’எனக்கு வாரியார் சுவாமிகளை மிகவும் பிடிக்கும். அவரது உரைகளைக் கேட்டதிலிருந்து திருப்புகழைப் படிக்க ஆரம்பித்தேன். இதுவரை பத்தொன்பது தடவை அதை ஆழ்ந்து படித்திருக்கிறேன். அதுபற்றி ஒரு நூலையும் எழுதிவருகிறேன்” என்கிற இவர் கிருஷ்ணகாவியம் என்கிற நூலையும் அழகான மரபுக்கவிதையில் இயற்றி உள்ளார். சாந்தா பப்ளிஷர்ஸ் சார்பாக வெளிவந்திருக்கிறது. அதன் உயர்ந்த வைணவத் தத்துவ விவரிப்புக்காகப் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. ஜப்பானில் பணிபுரிந்த அனுபவங்களை வைத்து இரண்டு நூல்களையும் தமிழில் எழுதி உள்ளார். இவற்றுடன் வள்ளலார் காப்பியம் என்ற நூலையும் எழுதியிருக்கும் பேராசிரியரிடம் வள்ளலார் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் அற்புதங்கள் மீது ஓர் அறிவியல் அறிஞராக உங்களுக்கு நம்பிக்கை உண்டா என்று கேட்டோம்.

“மெய்ஞானம் இல்லாத விஞ்ஞானத்தால் பலன் இல்லை என்பது என்னுடைய நம்பிக்கை. அணுவைப் பிளக்கமுடியாது என்றார் டால்டன். ஆனால் அது பிறகு தவறாகிவிட்டது. அதுபோல் நம்மால் அறியமுடியாத விஷயங்கள் இருக்கின்றன. ராமலிங்க அடிகளார் வேட்டவலம் ஜமீன்தார் மனைவியின் மகோதரத்தை திருநீறு பூசி சரி செய்ததற்கு சான்றுகள் இருக்கின்றன. அவரது நிழல் தரையில் விழாது. ஒளிமயமாக அவர் தன்னை ஆக்கிக்கொண்டேன் என்றார். அவரைப் பரிசோதிக்க புகைப்படம் எடுக்க முயன்றபோது அவர் உருவம் விழவில்லை என்று வெள்ளைக்காரர்கள் எழுதி வைத்துள்ளனர். அவர் பூட்டிக்கொண்டு மறைந்த அறையைத் தோண்டிப்பார்த்து ஆய்ந்துவிட்டு ஆங்கிலேயர்கள் குறிப்புகள் எழுதி உள்ளனர். அவர் அருட்பா மருட்பா விசாரணைக்கு வந்தபோது நீதிபதியே எழுந்து வணங்கி ஆங்கிலேயர்களின் விசாரணைக்கு உள்ளானார். இதையெல்லாம் எப்படிப் புரிந்துகொள்வது? விஞ்ஞானம் அறியாத மெய்ஞானத்தின்பால்தான் இதைச் சேர்க்கவேண்டும்” என்கிறார் ராதாகிருஷ்ணன்.

ஏரோஸ்பேஸ் துறை சார்ந்த பாடநூல்கள் பலவற்றை எழுதியிருக்கிறார் இவர். கேஸ் டைனமிக்ஸ் பற்றிய இவரது பாடநூல் உலகில் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று. இவர் ஐரோப்பாவில் இருந்து வெளியாகும் இரண்டு சர்வதேச சஞ்சிகைகளின் தலைமை ஆசிரியராக இருக்கிறார்.

ஜூலை, 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com