ஜெகே பற்றி ஜேகே

ஜெகே பற்றி ஜேகே
Published on

எழுத்தாளர் ஜெயகாந்தனுடன் சுமார் நாற்பதாண்டுகள் நெருங்கிப் பழகியவரான சிறந்த ஓவியரும் திரைப்படத்துறை கலை இயக்குநருமான ஜேகே. தன் நினைவுகளில் சிலவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

அவரை நான் சந்தித்தபோது எனக்கு வயது 16. அவருக்கு 32. பொதுக்கூட்ட மேடையொன்றில் அவரை ஒவியம் தீட்டி கையெழுத்துக்கேட்டேன். வாங்கிப் பார்த்து “என்னை மாதிரியா இருக்கு” என்று  கேட்டார். “உங்கள் உருவத்தை விட உணர்ச்சியை வெளிப்படுத்தும் ஓவியம்” என்றேன் துடுக்காக. தலையை ஆட்டிக்கொண்டே கையெழுத்துப்போட்டார்.

“உங்களைச் சந்திக்கவேண்டும்”என்றேன்.

“மடத்துக்கு வாங்க” என்றார்.

“அது எங்கே இருக்கு? தெரியாதே?”

“தெரிஞ்சிகிட்டு வாங்க” சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

முகவரி விசாரித்துக்கொண்டு ஒரு நாள் ஆழ்வார்ப்பேட்டை வீட்டுக்குப் போனேன். நான் வருவது கண்டு திரும்பி வாங்க தோழரே என்றார். அவ்வளவுதான். சுமார் இரண்டுமணி நேரம் எதுவும் பேசவில்லை. அவர் சுற்றிலும் இருக்கும் உலகை ரசித்துக்கொண்டிருந்தார். நான் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இப்படி எத்தனை நாட்கள்? அவருடன் இருக்கையில் வாய்விட்டுப் பேசாமல் மௌனத்தின் மூலமே பேசுவதாகத் தோன்றும். நான் கேட்டு அவர் பதில்சொல்லி சிரித்து எல்லாம் மௌனமாகவே நடைபெறும். அது ஒரு அபூர்வ உணர்நிலை.

கல்லுரியில் படித்தபின் என் ஓவியக்கண்காட்சியைத் திறந்துவைக்க அழைத்தேன். ‘ஜெயக்குமார் உலகப் புகழ் பெறுவார்’ என்று சொல்லிவிட்டுப்போனார். இது எப்படி நடக்கும் என்று நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆறே மாதத்தில் நான் பிரிட்டனில் படிக்க வாய்ப்பு வந்தது. பிரான்ஸ் லூவர் அருங்காட்சியகத்தில் மாணவர்கள் பிரிவில் என் ஓவியம் இடம் பெற்றது.

அவரது சபைகளில் தொடர்ந்து இடம்பெற அவரது பேச்சைப் பின் தொடர நிறையப் படிக்கவேண்டியிருக்கும்.

“ரஷ்யாவில் ஒரு சிறுமியிடம் கேட்டார்களாம். வாய்ப்புக் கிடைத்தால் எந்த காரணத்துக்காக நீ மீண்டும் இந்த உலகில் பிறக்க விரும்புகிறாய் என்று?

செர்வாண்டீஸை மீண்டும் படிப்பதற்காக என்று அச்சிறுமி சொன்னாளாம். என்ன ஒரு அறிவு சார் சமூகம் அது என்பார். திடீரென சர்வாண்டிஸ், அலெக்சாண்டர் டூமாஸ் என்பார். அடுத்தமுறை போகும்போது அவர்களைப் பற்றி தெரிந்து வைத்திருந்தால்தான் அந்த சிந்தனைக்குள் நுழையமுடியும்.

வருபவர்களை வாங்க என்பார். செல்கிறேன் என்பவர்களை இருக்கச் சொல்லி ஆதிக்கம் செலுத்தமாட்டார். தலையசைப்பு மட்டும்தான். சிம்மம் தன் பிடரியை சிலிர்த்து அமர்ந்திருப்பதுபோல்தான் இருப்பார்.

ஒருவர் வந்தார். “அய்யா.. நான் இரண்டுமுறை வந்தேன். நீங்கள் இல்லை.” சிங்கம் சிலிர்த்துக்கொண்டது.

“நீர் சொல்வது தவறு. நான் இல்லாத நேரத்தில் நீர் வந்திருக்கிறீர்! அதற்கு நான் என்ன செய்யமுடியும்?” இதுதான் ஜெகே!

மதுரையிலிருந்து பெரிய போலீஸ் அதிகாரி பார்க்கவந்திருந்தார். பேசிக்கொண்டே இருந்தார். நேரம் ஆகிவிட்டது. சிலும்பி பற்றவைக்கப்பட்டது. புகை பறந்தது. போலீஸ் அதிகாரி தன் அதிகாரத்தைக்காட்ட விரும்பினார். “அய்யா, நான் ஒரு பெரிய போலீஸ் அதிகாரி, என் எதிரிலேயாவா?” என்றார்.

“ஆட்சேபணை இருந்தால் நீங்கள் எழுந்து வெளியே சென்று விடுங்கள்!” என சிலிர்த்துக்கொண்டது சிம்மம்!

சபையில் நகைச்சுவையான சம்பவங்களுக்குப் பஞ்சமே இல்லை. ஒருமுறை அவர் மீது ஆர்வம் கொண்ட பழுத்த ஆன்மீகவாதி மிகவும் சிரமப்பட்டு மது ஒழிப்பு பிரச்சாரம் முடிந்த நிலையில் படியேறி சபைக்கு வந்துவிட்டார். மது ஒழிப்புப் பிரச்சாரத்தில் சகதோழனான ஜெயகாந்தனை அவரது சபைக்கு வந்து பார்க்கவேண்டும் என்று அவருக்கு ஆர்வம். ஆர்வமாகப் பேசிக்கொண்டிருந்தார். மாலையில் மது அருந்தும் நேரமோ தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. பெரியவரோ கிளம்புவதாக இல்லை. ஜெகே பார்த்தார். “சரி, தொடங்குங்கள்” என்றார் சபையினரைப் பார்த்து. புட்டிகள் திறக்கப்பட்டன.

பெரியவர் ஆடிப்போனார். மெல்ல கேட்டார். “ஜெயகாந்தன் நான் ஒன்று கேட்டால் வருத்தப்பட மாட்டீர்களே?”

“ஓ.. தாராளமாக. வருத்தமே படமாட்டேன்”

“மது ஒழிப்பு பற்றி பேசிவிட்டு இப்படி நீங்களே மது அருந்தலாமா?”

சபை அமைதியானது. ஜெகே நிலைகுலையவில்லை.

‘இப்போது அதைத்தானே செய்கிறோம். இவ்வளவு நாட்களாக காய்ச்சி வைத்த மதுவை குடித்து அழிக்கிறோமில்லையா?’ என்று நகைச்சுவையாகச் சொல்லி சங்கடத்தைத் தவிர்த்தார்.

நினைப்பது கடலளவு; இருப்பது கையளவு என்றால் கையளவுக்குள் கடலைப் பார் என்பார். கையில் கிடைப்பது கடலினும் பெரிது என்பார். குறைகள் என்பன இயல்பு என்னும் குணம் அடைவது அனுபவம்! என்பார்.  இதுபோன்ற எத்தனை வழிகாட்டும் சொற்களை எனக்குச் சொல்லியிருப்பார்?

அவரது 79வது பிறந்த நாள். கூடியிருந்தவர்களிடம் என்னைப் பார்க்காவிட்டால் என்னவாகியிருப்பீர்கள் என்று கேட்டுக்கொண்டே வந்தார். என்னிடம் கேட்டபோது,

“உங்களைப் பார்த்திரா விட்டால் நான் ஒரு பணக்காரப் பொறுக்கி ஆகியிருப்பேன்” என்றேன்.

“என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? தவறு. பொறுக்குதல் என்பது பெரிய வார்த்தை. பொறுக்கித்தான் நண்பர்களைத் தேர்வு செய்கிறோம். சொற்களைப் பொறுக்கித்தான் நல்ல கவிதைகளைத் தெரிவு செய்கிறோம். உங்களுக்குள் இருக்கும் ஒன்றுதான் உங்களை என்னிடம் கொண்டுவந்தது.. இப்படிச் சொல்லாதீர்கள்” என்று அன்புடன் கடிந்துகொண்டார்.

எங்கள் வீட்டுக்கு வந்தால் மாடியில் உலாத்திக்கொண்டிருப்பார். பிடரியில் வழியும் முடியை முறுக்கிக்கொண்டிருப்பார். எதாவது ஒரு வரியைச் சொல்லிவிட்டு நிறுத்திவிடுவார். அடுத்தவரி என்ன என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருப்போம்.

ஒரு முறை, “நதி பழைய நதி..” என்று சொல்லி நிறுத்திவிட்டார். கொஞ்சநேரம் எங்களைப் பார்த்தவாறே “ம்ம்ம்.. என்ன?” என்று கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர் அவரே “அதில் புதுவெள்ளம் பாய்கிறது!’ என்று சொல்லி விட்டு தன்னைக் காட்டி, “தமிழ்தான்!‘’ என்றார்.

ஓங்கூர் சாமிகளுடைய நட்புதான் இவருக்கு இந்தியப்பண்பாட்டு வேர்களை ஒதுக்க முடியாது என்று புரிய வைத்தது. அவருடனான நட்பு ஆச்சரியகரமானது. தாய்ப்பறவை குஞ்சுப்பறவைக்கு ஊட்டுவதுபோல் ஜெகேவுக்கு வாயால் ஊட்டிவிடுவார் ஓங்கூர் சாமிகள்! நாங்கள் பார்த்து சிலிர்த்துப்போயிருக்கிறோம்!

எப்போதாவது என்ன எழுதறதை நிறுத்திட்டிங்களே என்று சாடை மாடையாகக் கேட்போம். “வள்ளுவர் குறள் மட்டும்தானே எழுதினாரு.. வேற எதுவும் எழுதலையேன்னு கேட்பீங்களோ? தாய் சில குழந்தைகளைப் பெறுகிறாள். மேலும் பெறவில்லையே ஏன் என்று கேட்பீங்களோ?” என்று பதில் தருவார்.

ஒருமுறை இன்னொருத்தர் இதே கேள்வியைக் கேட்டார்.

“நான் எழுதினதையெல்லாம் படிச்சிட்டியா?”என்றார். “எல்லாத்தையும் கல்லூரி நாட்களிலேயே படித்துவிட்டேன்” என்றார் அவர். ஜேகே யோசிக்காமல் சொன்னார்: ‘ கூடஞுண.. ணூஞுணூஞுச்ஞீ!. இந்த வயசுக்கு வேற புரியும்’

அன்று சி.ஏ.பாலன் வந்திருந்தார். அப்போது நடிகர் என்.எஸ்.கே. விலங்குகளிலேயே மனிதன் மட்டும்தான் சிரிக்கக்கூடியவை என்று சொன்னதாகப் பேச்சு வந்தது. சி.ஏ.பாலன், ‘’அப்புறம்?’ என்றார். ஜே.கே. எங்களையெல்லாம் சுட்டிக்காட்டி, அதைக்கேட்டு குரங்குகள் எல்லாம் சிரித்தன என்றார். நாங்கள் சிரித்துக்கொண்டிருந்தோம்! இதுபோல் நிறைய வந்து விழும்.

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியை ஜேகே என்பார்கள். உங்களையும் ஜேகே என்கிறார்களே என ஒருமுறை அவரது சிறுகதைகளை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்தவரான பூர்னிகா என்பவர் கேட்டார்.

சற்று மோவாயைத் தடவி மீசையை முறுக்கியவர்,“என் நண்பர்கள் அப்படி அழைக்கிறார்கள். இதோ இருக்கிறார் என் நண்பர் ஜெயக்குமார். இவரையும் ஜேகே என்பார்கள் என்று என்னைச் சுட்டிக்காட்டினார். ஜெயகாந்தனை ஜெகே என்று முதலில் அழைத்தவர் நடிகர் சந்திரபாபு!

அவரது சபையில் என்னை அனைவரும் ஜெயக்குமார் என்றே அழைப்பார்கள். ஜேகே என்று அழைக்கமாட்டார்கள். அவர் மரணத்தன்று வீட்டில் அவருடைய நெருங்கிய நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான கே.சுப்ரமணியம், மருத்துவ நண்பர் திலீபன், அவர் மீதுள்ள பிரியத்தால் தன் இளையமகனுக்கு ஜெயசிம்மன் எனப் பெயர் வைத்த ஸ்ரீசந்தர் என பலர் கண்கள் குளமாக நின்றுகொண்டிருந்தார்கள்! என்னை ஜேகே என யாரோ அழைத்தபோது திடுக்கிட்டேன். எனக்குள் பெரும் வெறுமை சூழ்ந்தது!

மே, 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com