சோலையைத் தேடும் பறவைகள் !

அவர்கள் அவர்களே-7
சோலை
சோலைஓவியம் : ஜீவா
Published on

நேரில் பார்த்தால் அப்பாவின் அப்பா மாதிரியோ, அம்மாவின் அப்பா மாதிரியோ இருப்பார். கதர் வேட்டி, கதர் சட்டை, சின்ன கதர் துண்டு, சில நேரங்களில் அதை கழுத்து காலருக்குள் நுழைத்தும் வைத்திருப்பார். டயர் செருப்பு. கையில் கருப்பு தோல் பை, பெரிய பேனா. ஒட்ட முடி வெட்டப்பட்ட முழு வழுக்கைத் தலை.

அங்கு இருந்திருக்க வேண்டிய முடிக்கற்றைகள், இரண்டு காதிலும் இருக்கும். மீசை இல்லாத முகம். பழுத்த உதடுகள். சாலையில் நடந்து போனால், ஏதோ கிராமத்தான், சென்னைக்குள் வந்திருக்கிறான் என்றே நினைக்கத் தோன்றும். ஆனால் அவர் தமிழ்நாட்டின் ஐந்து முதலமைச்சருக்குத் தெரிந்தவர் என்பது அந்த நகரத்தானுக்குத் தெரியாது. அந்த அப்பாவி மனதுக்குள் மறைந்திருந்த ரகசியங்கள் பல்லாயிரம் இருக்கும். அது அவரது முகத்தைப் பார்த்தால் தெரியாது. பேசினால் ஓரளவு கண்டு பிடிக்கலாம். எழுதினால் இன்னும் கொஞ்சம் கண்டு பிடிக்கலாம். மதித்தால் கொஞ்சம் கண்டு பிடிக்கலாம். அன்பு செலுத்தினால் கொஞ்சம் கண்டுபிடிக்கலாம். பேரனாய் மாறினால் முழுமையாக அறியலாம். நான் அவரது பேரன்களில் ஒருவன். அந்த அரசியல் சோலையில் ஒரு பறவை.

எல்லாப் பறவைகளும் ஏன் அலைகின்றன? அதற்கு வேறு வேலை இல்லையா? வேலை இருக்கிறது. அது தான் முன்பு தங்கிய, பின்னர் வீழ்ந்து பட்ட மரத்தை தேடித்தான் பறக்கிறது. நானும் அந்த சோலையைத் தேடிக்கொண்டிருக்கும் பறவை. என்னைப் போன்ற சக பறவைகள் அதிகம். 

அந்த மரம் விழுந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது.

எழுத்தாளர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், அரசியல் ஆலோசகர், போராட்டக்காரர், சமூக ஆர்வலர் என்று எல்லாம் சொல்லலாம். ஆனால் அவரை சோலை என்று சொல்வதே சரியானது. அது அவர் பெயர் மட்டுமல்ல. அது தான் அவரது பண்புப்பெயர்.ஆலிவர் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு எப்போது போனாலும், யாராவது புதிய மனிதர்கள் அங்கு மொய்த்துக் கிடப்பார்கள். போனதும் முதல் காரியமாக அவர்களை அறிமுகம் செய்து வைத்து விடுவார். 'அண்ணன், 1980ல எம் எல் ஏ ஆக இருந்தாரு' என்பார். 'இவங்க நவமணி பத்திரிகையில வேலை பார்த்தாங்க' என்பார். 'இவரு மக்கள் செய்தியில இருந்தவர்' என்பார். 'இவரு ராமாவரம் தோட்டத்துல இருந்தவர்' என்பார். 'இவரை அம்மாவுக்கு நன்கு தெரியும்' என்பார். இப்படி தென்படும் முகம் அனைத்தும் முக்கியமான முகமாகவே இருக்கும். இவர்கள் பேசிக் கொண்டு இருப்பதை அரை மணிநேரம் கேட்டுக் கொண்டு இருந்தாலே பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்த அனுபவம் கிடைக்கும். புத்தகங்களில் அறியமுடியாத வரலாறுகளை இவர்கள் எழுதிக்கொண்டு இருப்பார்கள், வாயால். நாமும் எழுதிக்கொள்ளலாம் காதால்.

நான் சட்டக்கல்லூரி படித்த காலத்தில் ஆலிவர் சாலையில் நடந்து போய்க்கொண்டு இருந்தேன். எதிரே சோலை வந்து கொண்டு இருக்கிறார். அவரை நான் அடையாளம் கண்டு கொண்டேன். ஆனால் அவருக்குத் தெரியாது என்பதால் பேசவில்லை. அதன்பிறகு விகடன் பேப்பர் நாளிதழில் நிருபராக சேர்ந்தபிறகு தான் அவரது அறிமுகம் கிடைத்தது. என்னுடைய ஏதோ ஒரு கட்டுரையை படித்துவிட்டு ஆசிரியர் ராவ் அவர்களிடம் கேட்க ராவ், ஒரு நாள், 'இவரு தான்' என்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்பிறகு ஜூனியர் விகடனில் சோலை எழுதி வந்த கட்டுரைத் தொடருக்கான கட்டுரையை வாங்குவதற்காக முதன்முதலாக அவரது வீட்டுக்குச் சென்றேன். அந்த நாளிலேயே அவரைப் பிடித்துப் போனது. பெரியாருடன் அடக்கமாக உட்கார்ந்து இருப்பார் சோலை ஒரு படத்தில். எம்.ஜி.ஆருடன் கம்பீரமாக உட்கார்ந்து இருப்பார் இன்னொரு படத்தில். எம்.ஜி.ஆருடன் இருந்தவர், ஜெயலலிதாவுடன் இருந்தவர் என்ற விஐபி மயக்கத் துடன் போன நான் அவருக்குள் இருந்த ஜீவாவைப் பார்த்தேன். அவருக்குள் இருந்த வினோபாவை பார்த்தேன். அவருக்குள் இருந்த பெரியாரைப் பார்த்தேன்.

ஆமாம்! எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்பதல்ல அவரது அடையாளம். அவர் ஜீவா குணம் தாங்கிய இடதுசாரியாய், வினோபா மனம் தாங்கிய சர்வோதய இயக்கத்தவராய், பெரியார் சிந்தனை தாங்கிய திராவிடமாய் இருந்தார். இந்த மூன்றில் சர்வோதயம் தான் அவரை அதிகம் ஈர்த்திருக்கிறது. அதை அவரது உடை காட்டும். படிப்பை பாதியில் விட்டுவிட்டு வினோபாவுடன் சென்றவர் அவர். பூமிதான இயக்கம் தானே வினோபா. அந்த சிந்தனை அவரை ஜீவாவிடம் கொண்டு போய் சேர்த்தது. இவருக்கு எழுத்து என்பது ஆரம்பத்திலேயே கைவரப்பெற்றதால் ஜனசக்தியில் இணைத்துக் கொள்கிறார் ஜீவா. சோலையின் தீவிரத் தன்மை இவரை தீக்கதிர் நோக்கித் தள்ளுகிறது.தீக்கதிர் தொடக்க காலத்திலும் சோலைக்கு பங்களிப்புகள் உண்டு. இயக்கமா, இதழா என்கின்ற போது இதழாளராக வருகிறார். அதன்பிறகு நவமணி, அலைஓசையில் எழுதுகிறார். பத்திரிகையாளர்கள் அனைவரும் முதல் போட்டு ஒரு இயக்கம் போலவே தொடங்கிய இதழ் மக்கள் செய்தி. அதிலும் சோலை பங்கெடுத்தார். அதன்பிறகு எம்.ஜி.ஆர். நட்பு ஏற்படுகிறது. மக்கள் குரலிலும் அண்ணாவிலும் இருந்தது அந்தக் காலக்கட்டங்கள். அண்ணா காலக்கட்டத்தில் தான் ஜெயலலிதாவுக்கு அரசியல் புகட்ட எம்.ஜி.ஆரால் அனுப்பி வைக்கப்படுகிறார் சோலை. சசிகலா கும்பல் தலையெடுத்ததும் சோலை தனது நிலத்தையே மாற்றிக் கொண்டு வெளியேறிவிடுகிறது.

அதன்பிறகு பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தான் ஜூனியர் விகடன், நக்கீரன், நந்தன், குமுதம் ரிப்போர்ட்டர் என்று அனைத்து புலனாய்வு இதழ்களிலும் எழுதினார். இந்த காலக்கட்டம் தான் நான் பழகியது. அவரோடு பயணித்தது. ஆலிவர் சாலை வீட்டில் இருந்து ஆழ்வார் பேட்டை சந்திப்புக்கு அவரோடு நடந்து சாப்பிட வரும்போது தாத்தாவும் பேரனுமாகப் போவேன். தோசையோடு சேர்த்து செய்தியும் பரிமாறுவார். காபியுடன் சேர்த்து அக்காலச் சூழலையும் கரைத்துக் கொடுப்பார்.

அதில் நிச்சயமாக தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்கள் இருக்காது. எம்.ஜி.ஆர். இறந்தபிறகும் எம்.ஜி.ஆர். குறித்த ரகசியங்களைச் சொல்லக் கூடாது என்ற நேர்மையைப் பாதுகாத்தார். ஜெயலலிதாவுடன் கோபங்கள் இருந்தாலும் அவர் குறித்த தனிப்பட்ட ரகசியங்களைச் சொல்வதைத் தவிர்த்தார். அதேநேரத்தில் அரசியல் நிகழ்வுகளாக இருந்தால் மணிக்கணக்கில் விவரிப்பார்.

காமராசர், பக்தவத்சலம், கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என ஐந்து முதலமைச்சர் களோடு அவருக்கு நெருக்கம் உண்டு. இதில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் மிக நல்ல நெருக்கம் உண்டு. இருவரது நட்புக்கும் அடித்தளமாக இருந்துள்ளார். இருவரும் சண்டை போட்ட காலத்திலும் அந்த சண்டையை இன்னும் அதிகப்படுத்தி விடாமல் சேர்த்து வைப்பதில் முனைந்திருக்கிறார். ஒரே நேரத்தில் இருவரது நட்பையும் பெற்றவராக இருந்துள்ளார். எம்ஜிஆருடன் நெருக்கமாய் இருப்பவர்களை ஜெயலலிதா நம்ப மாட்டார். ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருப்பவர்களை எம் ஜி ஆர் நம்பமாட்டார். ஆனால் அவர்கள் இருவரும் நம்பும் அளவுக்கு சோலைக்கு மட்டும் தான் ஹெமிஸ்ட்ரி சரியாக இருந்தது தான் ஹிஸ்ட்ரி.

சில சுவாரஸ்யமான நிகழ்வுகள் வரும்போது இதை எழுதச் சொல்லி இருக்கிறேன். 'அது பெர்சனல்' என்றார். சிறிது இடைவெளிவிட்டு, 'அது என்னோட பெர்சனல் அல்ல, அவங்களோட பெர்சனல். அதனால் அதைச் சொல்வதற்கான உரிமை நமக்கு இல்லை' என்றும் சொன்னார்.

சோலை இறந்தபோது அவரது பேரனும் ஆய்வாளருமான ரெக்கையா முருகனிடம், 'அண்ணன் ஏதாவது எழுதி வைத்திருக்கிறார்களா?' என்று கேட்டேன். இல்லை என்றார். 'நீங்களாவது கேட்டு எழுதி வைத்துள்ளீர்களா?' என்றேன். அதற்கும் இல்லை என்றார்.

சொல்லிவிட்டுச் சொன்னார், 'தாத்தாவிடம் கேட்டேன், அவர் சொல்ல மறுத்துவிட்டார்' என்றார் ரெக்கையா முருகன்.

'பெரிய அரசியல் திருப்பங்களுக்கும் காய் நகர்த்துதல்களுக்கும் ஆதார சக்தியாக பல பெரிய மனிதர்களுடன் பழகி உதவி இருக்கிறீர்கள். அது பற்றி நீங்கள் எழுதாவிட்டாலும் பரவாயில்லை. நீங்கள் சொல்லுங்கள், வருங்காலத்தில் நான் பதிவு செய்கிறேன்' என்று ரெக்கையா முருகன் கேட்டுள்ளார்.

மறுத்த சோலை, 'அதெல்லாம் அந்த நேரத்து பொதுநலனை உத்தேசித்துச் செய்தது. அதை தமக்குச் சாதகமாக வளைத்துக் கொண்டவர்கள் உண்டு. எனக்கு அவை இரண்டாம்பட்சம் தான் . அப்போது ரகசியமாக மேற்கொள்ளப்பட்டவற்றை இப்போது வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதன் மூலம் என்னை முக்கியமானவனாகக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை' என்று சொல்லி இருக்கிறார்.

இது பற்றி ரெங்கையா முருகன் ஏதோ விளக்கமளிக்க ஆரம்பிக்க, 'இனிமேல் இது பற்றிப் பேச வேண்டாம்' என்று கறாராகச் சொல்லி இருக்கிறார் சோலை.

'என்னை முக்கியமானவனாகக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை' என்ற வரி தான் சோலைக்குள் இருந்த ஒரு சர்வோதயன் வெளிப்பட்ட தருணம். இராஜாஜி சொன்னது எனக்கு நினைவுக்கு வந்தது. ‘யார் தன் வரலாறு எழுதினாலும் தனது தவறுகளின் மூலமாகவும் தனக்கு பெருமை வரும் வகையில் தான் சொல்வார்கள்' என்றார் அவர். அதனால் தன் வரலாறு எழுத விரும்பவில்லை என்றும் சொன்னார் அவர். சோலை அந்தப் பழசைச் சொல்லி பீற்றிக் கொள்ள விரும்பாதவர்.

கடைசிக் காலத்தில் கலைஞரோடு அதிக நெருக்கமாக இருந்தார் சோலை. எம்.ஜி.ஆருடன் உறவாக இருந்த காலத்தில் கலைஞருக்கும் சோலைக்கும் எத்தகைய மோதல் இருந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. ஆனால் பழம் ஆனபிறகு ( வயதாலும்/ காய்- பழத்தில் பழம்) இருவரும் கனிந்து குழைந்த காட்சி அற்புதமானது. 'தலைவரைப் பார்த்தேன்' என்று மட்டும் தான் சொல்வார். அடுத்த டயலாக்குகளில் பொதுவானது ஏதாவது இருந்தால் சொல்வார். இன்னும் நெருக்கமாக தளபதி மு.க. ஸ்டாலினுடன் இருந்தார்.இறுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சோலையை மருத்துவமனையில் சேர்த்தும் கவனித்துக் கொண்டார் மு.க.ஸ்டாலின்.

தனது பேச்சில் எப்போதும் காந்தியவாதிகளான ஜெகநாதன் & கிருஷ்ணம்மாள் ஆகியோர் பற்றிச் சொல்லாமல் இருக்க மாட்டார். அடிக்கடி அவர் உச்சரிக்கும் பெயர் இது. நிலமற்ற விவசாயிகளுக்காக நிலம் வாங்கித் தரும் போராட்டத்தை முன்னெடுத்த காந்தியவாதிகள் இவர்கள் இருவரும். திண்டுக்கல் பட்டிவீரன் பட்டியைச் சேர்ந்தவர்கள். சோலையும் திண்டுக்கல் அருகே அய்யம்பாளையத்துக்காரர். 1968 கீழ்வெண்மணி கொடூரம் அவர்களை நில உரிமையை நோக்கித் தள்ளியது. அவர்களது இயக்கத்தில் ஒருவராக தன்னை ஆரம்ப காலத்தில் அர்ப்பணித்துக் கொண்டவர் சோலை. 'புரட்சியில் பூத்த மலர்கள்' என்று அவர்களைப் பற்றி எழுதினார். அசேபா லோகநாதன் பற்றி, 'அமைதியாக ஒரு கங்கை' என்றும் எழுதினார். மூத்த பத்திரிகையாளர் பார்வையில் ஸ்டாலின், வீரமணி ஓர் விமர்சனம் ஆகிய இரண்டும் சோலையின் நூல்கள். ஆனால் இத்தனை ஆண்டுகளில் பல நூறு கட்டுரைகளை அவர் எழுதி இருக்கிறார். அவை எங்கெங்கோ இருக்கிறதே தவிர, மொத்தமாக தொகுக்கப்படவில்லை.

சின்னக்குத்தூசியின் வாக்கிய அமைப்பு  நீளமாக இருக்கும். இரண்டு மூன்று வாக்கியங்கள் கூட ஒரே வாக்கியமாக இருக்கும். ஆனால் சோலையின் வாக்கிய அமைப்பு சின்னதாக இருக்கும். 'அரிசி தான் இன்றைய அரசியல்' என்பது மாதிரி.இந்த பாணி படிப்பதற்கு எளிமையாக இருக்கும். அதேபோல், ஒரே வரிக்குள் ஒப்பீடுகள் நிறைய இருக்கும். 'பெரியாருக்கு விடுதலை என்பது, லெனினுக்கு இஸ்காரா போல' என்பார்.

மிகப்பெரிய வரலாற்றை ஒற்றை வரியில் முடிப்பார். 'சீன & இந்திய மேலாதிக்கப் போரில் ஈழத்தின் புதல்வர்கள் மடிந்தார்கள்' என்பது தான் மொத்த ஈழப்போராட்டத்துக்கு அவர் எழுதிய முடிவுரை.

அதேபோல் எதுகைமோனை லாகவமாக விழும். 'கொய்ராலாக்கள் அரண்மனையின் கொல்லைப்புறத்திலிருந்து ஆட்சி செய்தே அனுபவப்பட்டவர்கள்' என்பார். அவரது சிறப்பே, பழமொழிகளை பயன்படுத்துவது தான். அவரது கட்டுரைகளில் பலவற்றை எடுத்து வைத்திருக்கிறேன். அரசியல் விமர்சகர்கள் என்றால் அரசியல் தலைவர்கள், கட்சிகள் பற்றி எழுதுவது மட்டும் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் இவர் அரிசி, மின்சாரம், சுகாதாரம், விவசாயம் பற்றி அதிகம் எழுதுவார். 'இதுவும் அரசியல் தான்' என்பார். இந்த பிரச்னையைப் பற்றி எழுதுங்கள் என்று அவரது வீட்டை நோக்கி பலரும் வருவார்கள். கடிதம் போடுவார்கள். அதனை கட்டுரைகள் ஆக்குவார்.

அப்போலோ மருத்துவமனையில் சோலை இருந்தார். அப்போது வாழப்பாடி ராமமூர்த்தி அவர்களும் மருத்துவமனையில் இருந்தார். நான் வாழப்பாடியாரை பார்க்கச் சென்றிருந்தேன். சோலை அங்கு இருந்தது தெரியாது. வாழப்பாடியார் தான் சொன்னார், 'சோலையும் இங்கு தான் இருக்கிறார், பார்த்துவிட்டு வாருங்கள்' என்று. சோலையை பார்க்கப் போனேன். இன்னொரு பத்திரிகையாளரும் அங்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை எனக்குத் தெரியாது. தனக்கு வந்திருந்த பொருட்களைக் கொடுத்து, 'அவரை நீ பார்த்துட்டு வா' என்று அனுப்பினார் சோலை.

மனிதர்கள் எழுத்தைப் போலவே வாழ்ந்தார்கள் என்பதற்கு இவை எல்லாம் உதாரணம்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆலிவர் சாலை வீட்டில் இருந்து பெருங்களத்தூர் வீட்டுக்கு போய் தங்கிவிட்டார் நிரந்தரமாக. அதனால் அவரைப் போய் பார்க்கும் சூழல் இல்லாமல் போனது. மைபா நாராயணன் போகலாம் என்பான். இருவருக்கும் நேரம் கூடவில்லை. சரவணக்குமார்( இப்போது தந்தி டி.வி.யில் இருக்கிறார்) அந்தப் பகுதியைச் சேர்ந்தவர். அவர் பார்த்துவிட்டு வந்து சொல்வார். அதன்பிறகு பார்க்க முடியாத தூரத்துக்குப் போனார்.

ஏழு ஆண்டுகள் ஆனாலும், ஆலிவர் சாலையைக் கடக்கும்போது அந்த மொட்டமாடியை நோக்கித் தானாக தலை செல்லும். கொடரோடு கொய்யாப்பழ வாசனையும் எங்க அய்யா சோலையும்.

ஏப்ரல் 2019

logo
Andhimazhai
www.andhimazhai.com