சோடியம் ஆக்சைடு கொடுங்கள்

சோடியம் ஆக்சைடு கொடுங்கள்
Published on

ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில்  தற்கொலை செய்துகொண்ட ரோஹித் வேமுலா, பல்கலைக்கழகங்களில் தலித் மாணவர்களின் அவல நிலை என்கிற பிரச்னையை எல்லோருக்கும் புரியும்படி  தன்  மரணத்தின் மூலம் உணர்த்திச் சென்றுவிட்டார். அவரது தற்கொலைக் கடிதத்தை எல்லோரும் படித்திருக்கலாம்.  சில மாதங்களுக்கு முன்பாக அவர் பல்கலைக் கழக துணைவேந்தருக்கு எழுதிய கடிதமும் கசப்பின் உச்சத்தில், கையறுநிலையைப் பேசுவதாக அமைந்துள்ளது. அந்த கடிதத்தின் மொழிபெயர்ப்பு:

 18, டிசம்பர் 2015

பெறுதல்

துணைவேந்தர்

பொருள்: தலித் பிரச்னைக்குத் தீர்வு

ஐயா,

ஹைதராபாத்  மத்திய பல்கலைக் கழக வளாகத்தில் தலித்களின் சுயமரியதை இயக்கத்தின் மீதான உங்கள் தனி ஈடுபாட்டைப் புகழ முதலில்  பாராட்டுகிறேன்.  தலித்களை இகழ்ந்து பேசிய ஏபிவிபி இயக்கத் தலைவரை கேள்விக்குள்ளாக்கியபோது உங்கள் இரக்கமுள்ள தனிப்பட்ட ஈடுபாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் தனிச்சிறப்பு பெறுவது. 5 தலித் மாணவர்கள் வளாகத்தில் இருந்து சமூகப் புறக்கணிப்பு செய்யப்பட்டார்கள். டொனால்ட் ட்ரம்ப் கூட உங்கள் முன்னால் லில்லிப்புட் போல தோற்றம் அளிப்பார். 

உங்கள் ஈடுபாட்டைக் காண்கையில் சொந்த சிந்தனை இல்லாததற்கு அடையாளமாக  இரண்டு  ஆலோசனைகளைச் சொல்லவிரும்புகிறேன்.

1)      மாணவர் சேர்க்கையின்போதே தலித் மாணவர்களுக்கு 10 மிகி சோடியம் அசைடு தயவு செய்து கொடுக்கவும். அம்பேத்காரை வாசிக்க அவர்களுக்குத் தோன்றுகையில் இதைப் பயன்படுத்தவேண்டும் என்ற  ஆலோசனையுடன்.

2)       உங்கள் தோழரான தலைமை வார்டன் மூலம் அனைத்து தலித் மாணவர்களின் அறைகளுக்கும் நல்ல கயிறு கொடுங்கள்.

நாங்கள், அதாவது பி எச்டி மாணவர்கள் இந்த கட்டத்தைத் தாண்டிவிட்டோம். அதாவது துரதிர்ஷ்டவசமாக தலித் சுயமரியாதை இயக்கத்தில் உறுப்பினர்களாக ஆகியும்  விட்டதால் எங்களுக்கு எளிய வெளியேறும் வழி இல்லை என்றே தோன்றுகிறது. எனவே  என்னைப் போன்ற மாணவர்களுக்கு ’கருணைக்கொலை’ வசதியை ஏற்படுத்தித் தருமாறு மேன்மைதாங்கிய தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். தாங்களும் இந்த வளாகமும் என்றைக்கும் அமைதியுறுவதாக.

நன்றி

வேமுலா ஆர். சக்ரவர்த்தி.

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

டொனால்ட் ட்ரம்ப்: முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழும் அமெரிக்க குடியரசுக்கட்சி வேட்பாளர்.

லில்லிப்புட்: குள்ள மனிதர்கள்.

சோடியம் அசைடு: NaN3 - இது ரத்த அழுத்ததைக் குறைத்து மனிதர்களைக் கொல்லும் ஒரு வேதிப்பொருள்.

பிப்ரவரி, 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com