சோகப்பட(ல)ங்கள்

டிக்கெட் கிழிப்பவர்
ஓவியம்
ஓவியம்ஜீவா
Published on

நாராயணன் எப்போதுமே வகுப்பில் முதல் ரேங்க் வாக்குகிறவன். அப்போதைய எஸ்.எஸ்.எல்.சி என்கிற பதினோராம் வகுப்புப் பொதுத் தேர்வில் அறுநூறுக்கு நானூற்றி இருபது மார்க்கிற்கு மேல் வாங்கியிருந்தான்.

அந்த மார்க்கிற்கு அப்போதெல்லாம் (1966) தபால் துறையிலும் டெலிபோன் துறையிலும் கும்பிடு போட்டு வேலை தருவார்கள். ஒரு வெள்ளைத் தாளில் கையால் எழுதி விண்ணப்பித்தால் போதும். ஆனால் அவன் பியுசி என்னோடு சேர்ந்தான். அதிலும் நல்ல மார்க் வாங்கிப் பாஸானான். என்ன காரணமோ தனியார் டவுன் பஸ்ஸில் அப்போது டிரைவராக இருந்த அவன் அப்பாவால் மேலே படிக்க வைக்க முடியவில்லை. அப்போது பஸ்கள் எல்லாம் தனியார் வசம்தான் அவன் பி.யு.சி முடித்த போது டெலிபோன் துறைக்கு கிராக்கி வந்து விட்டது. கொஞ்ச நாள் சும்மா இருந்தான். அப்புறம் ஒரு தியேட்டரில் உதவி மேனேஜராகச் சேர்ந்தான். பேர்தான் உதவி மேனேஜர். மற்றப்படி ஹைகிளாஸ் டிக்கெட் கொடுக்கிற உத்தியோகம்தான். அதுவும் மரியாதை கூடுதலான வேலைதான்

ஹைகிளாஸ் டிக்கெட் என்றால் மாடிப்படி ஏற வேண்டும். அப்போதைய மாடி டிக்கெட் கட்டணங்கள், ரூ1.66, ரூ 2.06, ரூ 2.46 ஒரு தியேட்டரில் மட்டும் 3.20 ஏ.சி பாக்ஸ். நாராயணன் எவ்வளவு கெட்டிக்காரனோ அதே போல் ரொம்ப ஸ்ட்ரிக்டானவன். பள்ளிக் கூட்த்திலும் அனாவசியப் பேச்சு கிடையாது. முதல் நாள், முதல் காட்சிக்கு டிக்கெட் கேட்டால், ‘‘உனக்கு மட்டும் ஒரு  டிக்கெட் வாங்கிக்க, சும்மா ஊர்ல உள்ளவனுக்கெல்லாம் கேக்காதே,'' என்பான். ஆனா நாமதான் ‘ஊருக்கிற உழைக்கிற' கேசுல்லா. பொதுவாக எல்லாப்படங்களுக்கும் முதல் ஓரிரு வாரங்களுக்கே ஹைகிளாஸ் டிக்கெட்டிற்குக் கூட்டம் இருக்கும். அப்புறம் காத்தாடும். அது போல நேரங்களில் டிக்கெட் கவுன்டருக்கு வெளியே வந்து நின்று கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருப்பான். இல்லையென்றால் கவுண்டருக்குள்ளேயே அனுமதித்துப் பேசிக் கொண்டிருப்பான். கவுண்டரின் உள்புறமாக, பார்வையில் நன்றாகத் தெரியும் வகையில்  எத்தனை டிக்கெட்டிற்கு எவ்வளவு ரூபாய் என்று ஒரு ஞிடச்ணூt ஒட்டி வைத்திருப்பான். 1.66 பைசா டிக்கெட் என்றால் 1&66 x 2= 3.32., 1.66 x 3= 4.98, 1.66 x 4= 6.64……என்று ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் எவ்வளவு என்று எழுதி ஒட்டியிருப்பான். அதைப் பார்த்தோ பார்க்காமலோ, ரூபாயை வாங்கிப் போட்டுக் கொண்டு கரெக்டாக மிச்சச் சில்லறையத் தருவான். முதல் நாளுக்கென்றால் கவுண்டருக்குள் நாலைந்து கைகள் நுழைந்து நீட்டிக் கொண்டிருக்கும் எதற்கு எத்தனை டிக்கெட் எவ்வளவு ரூபாய்க்கு எவ்வளவு மிச்சம் என்றெல்லாம் கணக்கு சரியாக இருக்கும். வேகமாக வேறு கொடுக்க வேண்டும்.

எல்லாக் கவுண்டர்களிலும் இதே நிலைமைதான். தரை பெஞ்சு டிக்கெட்டுகளில் பழம் தின்று கொட்டை போட்ட ஆட்களே டிக்கெட் கொடுப்பார்கள். அவர்களுக்கு ஆயுசுக்கும் ப்ரொமோஷன் கிடையாது. கூட்டமில்லாத நாட்களில் படம் ஓட ஆரம்பித்து முதல் ரீல் முடிந்ததும், ஒரு சின்ன பெல் அடிப்பார்கள். அதாவது படம் ஆரம்பித்து பத்தாவது நிமிடத்தில். அதைக் கேட்டு, டிக்கெட் அவ்வளவும் தீர்கிறதோ இல்லையோ கவுண்டரை மூடி விடுவார்கள். சில பட விநியோகஸ்தரின் பிரதிநிதிகள் இதைக் கொஞ்சம் தாக்காட்டச் சொல்லுவார்கள்.அதற்குத்தான் அவர்கள் இருக்கிறார்கள்  அப்புறம் நாராயணன், DCR என்கிற டெய்லி கலெக்‌ஷன் எழுதப் போய் விடுவான். அதில் எந்த டிக்கெட் எவ்வளவு விற்றிருக்கிறது எவ்வளவு ரூபாய் வரவு. வரி எவ்வளவு, தியேட்டர் பங்கு  Exihibitor Shre எவ்வளவு, விநியோகஸ்தர் பங்கு Distributor  எவ்வளவு என்றெல்லாம் கணக்கு இருக்கும் . அப்புறம் அன்றையத் தேதியில் மற்ற தியேட்டர்களில் என்ன படம் (Opposition) ஓடுகிறது என்று எழுத வேண்டும்.

Distributor share : Exhibitor Share என்ன விகிதாச்சா ரமோ அதைப் பொறுத்துக் கணக்கிட்டு விநியோகஸ்தர்கள் அல்லது அவர்கள் பிரதிநிதிகள் ரெப்ரஸண்டேட்டிவ் வசம் ஒப்படைக்க வேண்டும். பெரிய தலைகளின் படங்களுக்கு முதல் வாரம் Distributor Share  அதிக விகிதமாக இருக்கும். அடிமைப்பெண் படத்திற்கு, முதல் வாரம் முதன் முறையாக 80%  Distributor,  20% Exhibitor Share இருந்தது. அப்புறம் அது 70:30 60:40 50:50 என்று குறைந்து கொண்டே வரும். இது போக வணிக வரி அலுவலகம் போய் வரியை முன் கூட்டியே கட்டி, டிக்கெட்டின் பின்னால் சீல் வைத்து வாங்கி வரவேண்டும். 2.06 பைசா டிக்கெட்டிற்கு காட்சி வரி 41 பைசா, சர்சார்ஜ்; 41 பைசா வீதம் எவ்வளவு டிக்கெட்டிற்குக் கட்டுகிறோமோ அவ்வளவிற்கு வணிக வரி அலுவலகத்தில் டிக்கெட் பின்னால் சீல் வைக்க அனுமதிப்பார்கள். சீல் வைக்காத டிக்கெட் செல்லாது. எப்போதாவது வந்து பரிசோ தனை செய்வார்கள். வரி கட்டுவது, சீல் வைப்பது எல்லாம் நாராயணன் போன்றவர்கள் பொறுப்பு. அந்த அலுவலகம் என் வீட்டிற்குப் பக்கத்தில் இருந்ததால், நானும் சமயத்தில் உதவியாகப் போவேன். ஆமாம் சீல் அடிக்கிற வேலைதான். ‘‘ஏல கை வசம் தொழில் இருக்குலே, வேலை கிடைக்கலைன்னா தியேட்டர்ல போயி டிக்கெட் கிழிக்கப் போயிரலாம்லே,'' என்று நண்பர்கள் கிண்டல் செய்வார்கள்.

தியேட்டரில் ஆப்பரேட்டர் தொடங்கி டிக்கெட் கிழிப்பவர் வரை எல்லாரையும் பழக்கம் உண்டு. படப்பெட்டி வந்ததும், ரீல் வைண்டரில் மாட்டி ரீலை, வல இடமாக்கி, தலைகீழாகச் சுற்ற வேண்டும். இல்லையென்றால் படம் தலை கீழாய்த் தெரியும் திரையில். சிலசமயம் படப்பெட்டி கடைசி நொடியில் வரும், பெட்டியைப் பார்த்ததும் டிக்கெட் கொடுக்க பெல் அடித்து விடுவார்கள், அது ஆப்பரேட்டர் வேலைதான். ஆனால் மேனேஜர் கண்ட் ரோல். கூட்டம் அரங்கு நிறைந்து தியேட்டர் ரெண்டு பட்டுக் கொண்டிருக்கும். இங்கே அவசர அவசரமாக ரீலை மாற்றி ஸ்பூலில் சுற்றி, ப்ரொஜெக்டரில் மாட்டுவதற்குள் ஆப்பரேட்டர் டென்ஷனில் கொதித்துக் கொண்டிருப்பார். உலகம் சுற்றும் வாலிபனுக்கு படப்பெட்டி லேட்டாக வந்தது. பெட்டியைச் சுற்றி ரசிகர்கள் பாதுகாப்பாக வளையம் போட்டுக் கொண்டு வரிசை வைத்து சிலம்பு வீசிக் கொண்டு ஆப்பரேட்டர் ரூம் கொண்டு

சேர்த்தார்கள். அவர்கள் ஆப்பரேட்டர் ரூமையும் சுற்றிக் காவலரணாக நின்றார்கள். கோபமே படாத ஆப்பரேட்டர் மாப்ஜான் பாய், ‘‘ஏய் நல்லாருப்பீங்க, எங்க வேலையைப் பாக்க விடுங்கடே, அப்பறம் தலைவர் தலைகீழாத் தெரிவாரு,'' என்று விரட்டினார்.'' ''ஏய் சொல்லுடே தம்பி'' என்று என்னிடம் சொன்னார். நான் சொன்ன சமாதானத்தை தோழர்கள் ஏற்றுக் கொண்டது எனக்கே ஆச்சரியம். அவரை சுமார் ஒன்பது வருடங்களாக அறிவேன், அது வரை ஒரு வார்த்தைகூட என்னிடம் பேசியதில்லை. யாரிடமும் கோபப்பட்டதுமில்லை. புரொஜெக்டரில் ஒளி தரும் கார்பன் குச்சிகளை வீணாக்கவே மாட்டார் என்று முதலாளியிடம் நல்ல பெயர். சிலர்   கார்பனை, டூரிங் டாக்கீஸ்களுக்கு விற்று விடுவார்கள் என்று கூடக் கேள்விப்பட்டிருக்கிறேன். மேனேஜர்கள் போஸ்டர்களை மிச்சம் பிடித்து டூரிங்க் டாக்கீஸ்காரர்களுக்கு, விநியோகஸ்தர்களை விட, விலை குறைவாக விற்பது உண்டு.

நாராயணனுக்கு சம்பளம் இரு நூறோ என்னவோதான். காலைக் காட்சி ஓடினால் ஐந்தோ பத்தோ படி உண்டு என்று நினைவு. 100 நாள் ஓடினால் தியேட்டர்க்காரர்களும், விநியோகஸ்தர்களும் ஆளுக்குப் பாதியாக  ஒரு மாச போனஸ் தருவார்கள். அதற்காக 80 நாட்களிலேயே படத்தை எடுத்து விடும் தியேட்டர்க் காரர்களும் உண்டு. புதிதாய் ஆப்பரேட்டர் வேலைபார்ப்பவர் கண்ணெல்லாம் ஒவ்வொரு நாள் காலையிலும் சூட்டில் பொங்கி வீங்கி விடும்.. அவர்களுக்கு அதிகம் போனால் சம்பளம்  நூறு ரூபாய் இருக்கும் அதுவும் மாப்ஜான் பாய் போன்ற பல வருட கால அனுபவம் உள்ள சீனியர் ஆப்பரேட்டர்களுக்கு இருநூறு இருந்தால் அதிகம். டிக்கெட் கிழிப்பவர்களுக்கு நூறு ரூபாய் கூட இருக்காது. ஆனால் எல்லோருக்கும், புதுப்படம் வந்தால்  ரசிகர்களிடையே ராஜ மரியாதை உண்டு'.

டிக்கெட் கொடுப்பவர்களுக்கும் பிளாக் டிக்கெட் காரர்களுக்கும் சில தியேட்டர்களில் கூட்டணி இருக்கும். அதில் கொஞ்சம் கமிஷன் கிடைக்கும். சில தியேட்டர்களில் அதற்கு இடமே இருக்காது. தெரிந்தவர்களுக்கு ஒன்றோ இரண்டோ ஹைகிளாஸ் டிக்கெட் வாக்கிக் கொடுக்க முடியும். .அரசுக்குச் செலுத்த வேண்டிய பணத்தை அங்கே செலுத்துவதால் வணிக வரித்துறை, ஸ்டேட் பேங்க், ட்ரஷரி ஆட்களுக்கு ராஜ  உபச்சாரம் இருக்கும். ஒரு தியேட்டர் மேனேஜருக்கே அதிகம் முன்னூற்றைம்பது ரூபாய் சம்பளம் இருந்தால் அப்போது ஆச்சரியம்.  அவர்தான் அடுத்தடுத்த நாட்களில் படங்களைச் சார்ட் போட்டு என்னென்ன படங்களைத் திரையிட வேண்டுமென்று,  ஷெட்யூல் செய்பவர். அந்த சார்ட் ரகசியமாக இருக்கும்.

தியேட்டர் வேலை பார்த்தவர்கள் வேறு வேலைக்குப் போக மாட்டார்கள். அவர்கள் நட்பு மற்றும் உறவு வட்டத்தில் அவர்களுக்கு நல்ல மரியாதை இருக்கும். எப்படியும் கூட்ட நேரத்தில் டிக்கெட் தருவாரே, சட்டை கசங்காமல் படம் போவது எவ்வளவு கௌரவம். . சினிமாக் கொட்டகை வேலை என்றால், 'நல்ல பையனா இருப்பானான்னு சொல்ல முடியாது, ஆனா எப்படியும் சம்பாதிப்பான்,' என்று பெண்  கொடுப்பவர்கள் கூட நினைப்பது உண்டு. இது போக பெண்கள் டிக்கெட் கவுண்டர் ஆசா மிகளுக்கு வேறு மச்சங்களும் ராசியும் உண்டு.  ஒவ்வொரு தியேட்டருக்கும் தனியே எலெக்ட்ரீஷியன், தட்டி போர்டு, சினிமா ஸ்லைடு எழுத ஓவியர்கள், என்று  உண்டு. திருநெல்வேலி பாலஸ் டி வேல்ஸ் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் பிரமதமாக தட்டி போர்டு எழுதுவார். அங்கே வாரத்திற்கு ஒரு படம் மாற்றுவார்கள்.  அந்தத் தியேட்டரில் தகரக் கூரைக்குக் கீழே, வெக்கை தாக்காமலிருக்க  பொய்க் கூரை(False roofing) கிடையாது. அதனால் மாட்னி காட்சிக்கு அனுமதி கிடையாது. ஆறுமணிக்  காட்சிக்கே தியேட்டர் இருக்கைகள் எல்லாம் அப்படிச் சுடும். பின்னால் அதன் லைசன்ஸை சுத்தமாகக் கேன்சல் செய்து விட்டார்கள்.

ஓவியரை, கடைகளுக்கு சைன் போர்டு எழுதும் ஒருவர் உதவிக்கு வைத்துக் கொள்வதாகக் கூப்பிட்டார். அவரால் அங்கே தாக்குப் பிடிக்க முடியவில்லை. இதுல  நம்ம கைப்போக்கில, இஷ்டப்படி எழுத முடியாது, சவம் எனாமல் பெயிண்ட் வேற, என்று இன்னொரு தியேட்டரில் உபரியாகச் சேர்ந்தார். நாங்கள் அங்கே படம் பார்க்கப் போயிருந்தோம்  அங்கே மறு நாளிலிருந்து 'மன்னாதி மன்னன்' படம் போடுகிறார்கள். அதற்கு பழைய பாட்டுப் புஸ்தகத்தை வைத்துக் கொண்டு அதே ஸ்டைலில் மெனக்கெட்டு தட்டி போர்டுகள் எழுதிக் கொண்டிருந்தார். இடைவேளை நேரத்தில் வெளியே வந்த நான் படம் பார்க்க உள்ளே போகாமல் அவர் எழுதுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.  என்னை மௌனமாகப் பார்த்துச் சிரித்தார், ‘‘இது ஒரு வாரம் ஒடுமா, அடுத்த படம் மாத்தும் போது நான் எங்கே இருக்கேனோ?'' என்று என்னைப் போலவே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த டிக்கெட் கிழிப்பவரிடம் சொன்னார். அதே நேரம் சரியாக 'கணையாழி இங்கே மணவாளன் எங்கே' என்று மன்னாதி மன்னன் பாட்டை ட்ரெயிலர் போல இடைவேளையில் போடுவது காதுகளில் ஒலித்தது.  

நல்லவேளை நாராயணன் ஐம்பது வயது வாக்கில் இறந்து போனான். அவனுக்குப் பின்னால் வந்த காலங்களில் தியேட்டர்கள் எல்லாம் மூடத் தொடங்கி விட்டார்கள்.அதையெல்லாம் அவன் பார்க்கவில்லை. வாழ்க்கையில் அதிக பட்சம் ஒரு நாளைக்கு பத்து ரூபாய் வருமானம் வந்து கொண்டிருந்த வேலைகளைத்தான் சினிமாக் கொட்டகை ஊழியர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். போஸ்ட் ஒட்டுபவர்கள், தியேட்டரில் ஸ்டால் போட்டிருந்தவர்கள். ‘‘டீ, காபி, முறுக்கு,

சோடா, கலர், பாட்டுப் புஸ்தகோம்,'' என்று விற்றுக் கொண்டிருந்தவர்களுக்கு அந்தச் சம்பளம் கூடக் கிடையாது. விற்றதற்குக் கமிஷன் மட்டுமே. அவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்.  தியேட்டர்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்ட போது அங்கே வேலை பார்த்தவர்கள் வாழ்க்கை, படத்தில் காட்சிகள் மாறுவது போல, எப்படியெல்லாம்  மாறியதோ. வாழ்க்கை சோகப் படமானதோ இல்லை  சுபமான முடிவோடு தொடர்ந்ததோ தெரியவில்லை.

தியேட்டர்கள் கல்யாண மண்டபங்களான போது சிலர் அதில் ஏதோ வேலை பார்த்தார்கள், பார்வதி டாக்கீஸில் அப்படி ஒருவரைப் பார்த்தேன், நாற்காலிகளைத் துடைத்துக் கொண்டிருந்தார், அது பார்வதி சேஷ மஹால் ஆகியிருந்த போது. ஒருவர் ஜவுளிக் கடையில் கார் பார்க்கிங்கில் காவலாளியாக, விசிலுடன் நின்று கொண்டிருந்தார். ஒருவர் ஓட்டலில் நின்றார். ஒருவர், பஸ்ஸுக்குக் காத்து நிற்பவரிடம் ஸார் ஃபிகர் பாக்கீங்களா என்று காதைக் கடித்துக் கொண்டிருந்தார். எல்லார் கண்களிலும்

சோகப்பட(ல)ங்களே தெரிந்தன. இவையெல்லாம் கொரோனா காலத்திற்கு முன் நடந்தவை. அப்போது குறிப்பிட்ட தொழிலின் குறிப்பிட்ட சிலரே பாதிக்கப்பட்டார்கள்.  ஆனால் இந்தக் கொரோனா பல தொழில்களையும் இப்படிச் சிதைத்துப் போட்டிருக்கிறது. எத்தனையோ தொழில்களை இழுத்து மூட வைத்திருக்கிறது. அந்தக் காலத்தில் ‘Waqt'  என்றொரு இந்திப் படம் வந்தது. ஒரே வினாடி பூகம்பத்தில் பெரிய பணக்காரக் குடும்பம் ஒன்று தாறுமாறாகச் சிதைந்து, குடும்பத்தினர் என்னவெல்லாம் ஆகவோ உருக்குலைந்து போவார்கள். குடும்பத்தலைவர் பால்ராஜ்  சஹானி என்று நினைவு, பைத்தியமாக அலைவார். அது படம்தானே, நிஜத்தில் அப்படியெல்லாமா நடக்கும் என்று நினைத்திருக்கிறேன். ஆனால் பட்ட காலிலேயே படும் என்பது போல வறுமையின் பிடியிலிருப்பவர்களுக்கும், வாழ்க்கையின் பலமட்டங்களில் இருபவர்களுக்கும் இப்போது இந்தக் கொள்ளை வியாதியால் மேலும் வறுமையும் இருண்மையும் சூழக் காத்திருக்கிறதோ காலம் என்று அஞ்ச வைக்கிறது.

‘Waqt'  படத்தின் ஆரம்பத்தில், "The Moving finger writes on…'' என்றும்  ‘‘And Having written it moves on'' என்று முடிவிலும்  காண்பிப்பார்கள் (எழுதிச் செல்லும் விதியின் கை / எழுதி எழுதி மேற்செல்லும்'')  இப்போது என்ன முடிவு காத்திருக்கிறதோ... எழுதியெழுதி

மேற்செல்லுமோ இல்லை நின்று விடுமோ.

ஆகஸ்ட், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com