வரலாற்றை உருவாக்குபவர்களுக்கும் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள மறுக்கும் அரசுக்கும் இடையிலான போராட்டக் களத்தின் பெயர் கூடங்குளம்.
அணுஉலைக்கெதிரான மக்களின் போராட்டம் 400 நாட்களை கடந்திருக்கிறது. கடந்த 10ஆம் தேதி காவல்துறையினர் மக்களை வேட்டையாடிய சம்பவத்-துக்குப் பிறகு இடிந்தகரை பகுதிக்கு சென்றிருந்-தோம். அங்கே ஒரு வருட போராட்ட அனுபவங்களைப் பற்றி சிலரிடம் கேட்டோம்..
எஸ்.ஜோசப் (64, மீன்பிடித் தொழிலாளி):
“ பொதுமக்கள் பலரும் தொடக்கத்திலேயே போராட்டம் நடத்தாமல் ஏன் இப்போது போராடுகிறீர்கள் என்ற கேள்வியை தொடர்ந்து கேட்டு வருகின்றனர். அவர்-கள் அனைவரும் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். இந்தப் போராட்டம் 1988ல் அணுஉலை ஒப்பந்தம் போடப்-பட்ட நாளில் இருந்தே நடந்து வருகிறது. அப்போது செய்தி நிறுவனங்கள் பெரியதாக இல்லை என்பதால் மக்களிடம் பரவலாகச் சென்றடையவில்லை. 1989ம்; ஆண்டு மே 1ம் தேதி கன்னியாகுமரியில் மிகப்பெரிய போராட்டம் நடத்-தி-னோம். அந்தப் போராட்டத்தில் எல்லாப் பகுதி மீனவர்களும் கலந்துகொண்டனர். அன்று துப்பாக்கி சூடும் நடத்தப்-பட்டது. கோவளம் பகுதி மீனவர் ஒருவர் பலியானார். எனக்கு போலீஸ் தடியடியில் காயம் ஏற்பட்டது. பிறகு ரஷ்யாவில் ஏற்பட்ட பிளவால் இங்கே இந்தத் திட்ட வேலைகள் எதுவும் நடக்கவில்லை. இனி வராது என்ற நம்பிக்கையில் இருந்தோம். பிறகு மீண்டும் பணிகளைத் தொடங்கினர். அடுத்து உடனடியாக மீனவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். புகுஷிமா விபத்திற்கு பிறகு எங்கள் போராட்டத்தை நாங்கள் இன்னும் வலுபடுத்தினோம். தற்போது ஊடகங்கள் அதிகம் என்பதால் எங்கள் போராட்டம் பரவலாகக் கவனம் பெற்றிருக்-கிறது. தமிழ்-நாட்டின் அடுத்த தலைமுறை நன்றாக வாழ வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். அதற்காக எவ்வளவு கஷ்டங்களையும் தாங்க நாங்கள் தயாராக இருக்கிறோம.
ஜி.அமலா (54):
“என் கணவர் மீன்பிடித் தொழில் செய்கிறார். எங்களுக்கு நான்கு பையன்கள் ஒரு பெண். காலையிலேயே வீட்டில் சமையல் செய்துவிட்டு ஒரு டம்ளர் காப்பியும் குடித்து-விட்டுப் போராட்ட பந்தலுக்கு வந்து உட்கார்ந்து விடுவேன். பிறகு இரவு தான் வீட்டிற்கு செல்வேன். அதன்பிறகு தான் சாப்பாடு. கடந்த ஒரு வருடமாக என் வேலை இதுதான். இதனால் கை, கால் வலி எல்லாம் வந்துவிட்டது. ஆனாலும் பரவாயில்லை; இந்த அணுஉலையை மூடும் வரை நாங்கள் ஓயமாட்டோம். கடந்த வருடம் சோதனை ஓட்டம் என்ற பெயரில் அணுஉலையை இயக்கினர். அதன் சத்தம் வீடுகளை-யும் எங்கள் காதுகளையும் அதிர்வடையச் செய்தன. சுனாமி காலனியில் மொத்தம் 450 வீடுகள் இருக்-கின்றன. அப்போது கர்ப்பமாக இருந்த சுமார் 15 பெண்-களுக்கு அபார்ஷன் ஆகி-விட்டது. இது யாருக்காவது தெரியுமா? ”
டி. லவினா (29 மாற்றுத் திறனாளி ):
“ நாங்கள் இந்த ஒரு வருடத்தில் எந்த பஸ்சை-யாவது கொளுத்துனோமா? ஏதாவது வன்முறையில் இறங்-கினோமா? பிறகு ஏன் எங்கள் மீது இந்த வன்முறை? கடந்த பத்தாம் தேதி போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை போட்டவுடன் அனைவரும் கலைந்து சென்றனர். என்னால் நடக்க முடியாது என்பதால் மெதுவாக ஊன்றுகோல் உதவியுடன் சென்றேன். ஊதா நிறச் சட்டை அணிந்திருந்த ஒரு போலீஸ்காரர் என் கையை பிடித்து இழுத்தார் ‘ஏன் உதயகுமார் கூட தான் போவீயா எங்க கூட.....’ன்னு
அசிங்கமா பேசினார். அப்போது காக்கி சட்டை அணிந்த போலீசார் வந்து அவளை விட்டு விடு பிரச்சனை பெரிதாகிவிடும் என்றனர். அதன்பிறகே கையை விட்டார்.”
இளங்கோ (40):
“நான் 1988ல் இருந்து அணுஉலைக்கெதிரான போராட்டத்தில் பங்கெடுத்து வருகிறேன். எங்களிடம் உழைத்துச் சேர்த்த பணம் இருக்கிறது. நாங்கள் ஆறு நாட்கள் கடலுக்கு செல்கிறோம். ஒரு நாள் ஒரு லட்சமும் கிடைக்கும் பத்தாயிரமும் கிடைக்கும். அல்லது கிடைக்-காமல் கூட போகும். நாங்கள் வாரம் சம்பாதிக்கும் பணத்-தில் பத்தில் ஒரு பங்கை கோவிலுக்கு காணிக்கையாக தருவோம். எங்கள் கோவில் தேர், ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வலம் வரும். கடந்த முறை நாங்கள் 50 லட்சம் ரூபாய் செலவு செய்து கோவில் திருவிழாவை கொண்டாடினோம். அடுத்த-முறை நிச்சயம் ஒரு கோடி ரூபாய் செலவாகலாம். எங்களிடம் பணமே இல்லாதது போல் வெளிநாட்டில் இருந்து பணம் வருவது போல் பேசுகின்றனர். முப்பது வருடங்-களுக்கு முன்பே எம்.எஸ்.விஸ்வநாதன் கச்சேரி வைத்து திருவிழாவை கொண்டாடியவர்கள் நாங்கள். எங்களிடமா பணம் இல்லை? ”
ஆண்டனி கெபிஸ்டன் (35 புகைப்படக்கலைஞர்):
முதலில் எங்கள் ஊர் பிரச்சனையைச் சொல்கிறேன். இங்கே குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடையாது. லாரிகள் மூலம் சில தனியார் ஆட்கள் தினந்தோறும் குடி
நீர் கொண்டு வருவார்கள். அதுதான் இன்று வரை எங்கள் தாகம் தீர்த்து வருகிறது. ஒரு குடம் இரண்டரை ரூபாய் விலை, இப்போது 3 ரூபாய்க்கு விற்கிறார்கள். அடுத்து சரியான சாலை வசதி கிடையாது. இன்றைக்கு கஷ்டப்-பட்டால் நாளை நமது தலைமுறை நன்றாக வாழும் என்ற நம்பிக்கையில் தான் தொடர்ந்து போராடி வருகிறோம். ”
செல்சன்: (ஊர்க்கமிட்டி உறுப்பினர்)
“கண்ணீர்ப் புகைக்குண்டுகளில் இருந்து கிளம்பிய துகள்-கள் பாய்ந்ததால் ஐந்து நாட்கள் நாகர்கோவிலில் ஒரு தனி-யார் மருத்துவமனையில் இருந்தேன். என்னால்அதிகமாக பேச முடியவில்லை. இந்தச் செய்தி எந்த ஊடகங்களிலும் வெளிவரவில்லை. நிச்சயம் இறந்துவிடுவேன் என்று தான் நினைத்தேன். ஏனெனில் பெரிய கண்ணாடி துண்டு என் கழுத்தினுள் நுழைந்துவிட்டது. ஒரே ரத்தம். இது மறு பிறப்புதான். உதயகுமார் அறவழி என்ற சொன்ன ஒரே காரணம் தான் நாங்கள் அமைதி காத்து நிற்கிறோம்.“
இனிதா (42, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ):
“இன்று நேற்று அல்ல. 1988ல் இருந்தே அணுஉலைக்-கெதிரான போராட்டத்தில் பங்கெடுத்து வருகிறேன். அப்போது கன்னியாகுமரியில் நடந்த போராட்டத்தில் போலீஸ் தடியடியில் தப்பி பிழைத்து முட்டம் கிராமத்தில் தெரிந்தவர்கள் வீட்டில் ஓர் இரவு முழுவதும் இருந்தேன். இப்போது தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதால் சில பிரச்சனைகள் வருகின்றன. எனக்கு அல்சர், கண்பார்வை மங்கல் என பிரச்சனைகள் ஏற்பட்டுவிட்டது. என் மீது 62 வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதில் தேசதுரோகக் குற்றச்சாட்டும் உள்ளது. இங்கே உதயகுமார் இல்லை என்ற கவலை எங்களுக்கு இல்லை. ஏனெனில் இங்குள்ள ஒவ்வொருவரும் உதயகுமார்களாக, உதயகுமாரிகளாகவே மாறிவிட்டனர்.”
அக்டோபர், 2012.