மன அழுத்தமென்பது இப்போது ஒரு பரவலான சொல்லாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இன்று அது பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம். மனிதர்கள் தங்கள் மனச்சுமையிலிருந்து விடுபடுவதற்காக, எதையோ ஒன்றை நோக்கி எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது எதையாவது ஒன்றை வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள்.
டெல்லி லோதி கார்டனில் ஒரு அதிகாலையில் அமர்ந்திருந்தபோது திடீரென நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் சிரிக்கும் சத்தத்தைக் கேட்டுத் திடுக்கிட்டேன். ஒரு யோகா குரு தனக்கு முன்னால் அமர்ந்திருந்தவர்களைச் சிரிப்பு யோகாவில் ஈடுபடுத்திக்கொண்டிருந்தார். தனியாக அழுவதும்கூட சிரிப்பைப் போலவே மன அழுத்தத்திலிருந்து விடுபடும் ஒரு வழிமுறைதான். ஆனால், நாம் அதைக் ‘கண்ணீர் யோகா’ என்று சொல்வதில்லை. சினிமா, தொலைக்காட்சி, விளையாட்டு, ஷாப்பிங், பட்டிமன்றங்களில் போய்க் கைத்தட்டுவது, உடற்பயிற்சி செய்வது, இசைக் கச்சேரிகளுக்குப் போவது, டாஸ்மாக்கில் தினமும் குடிப்பது, தவறாமல் பிரார்த்தனைகளில் ஈடுபடுவது, பேஸ்புக்கில் குடியிருப்பது, போர்னோ (ணீணிணூண) படங்கள், கார்ப்பரேட் சாமியார்கள், திடீரெனத் தோன்றும் ஒரு போராட்டத்தில் அது என்னவென்றே தெரியாமல் போய் இணைந்துகொள்வது எல்லாமே மனிதர்கள் தங்கள் தனிமை உணர்ச்சியிலிருந்தும், மன அழுத்தத்திலிருந்தும் விடுபடுவதற்கான ஒரு முயற்சிதான்.
இந்த மன அழுத்தமென்பதை நான் என் பால்யத்திலேயே கண்டுகொண்டுவிட்டேன். என் நெஞ்சின் ஒரு இருண்ட அறைக்குள் அதுவொரு சிலந்திபோல நுழைந்தது. அந்தச் சிலந்தி மெல்ல ஊர்ந்து வருவதை என் குழந்தைமையின் கண்களால் கண்டேன். அப்போது அதன் பெயர் தெரியாது. வாழ்நாளெல்லாம் அதனுடன்தான் இருக்கப்போகிறேன் என்றும் தெரியாது. என்னுடனேயே அதுவும் சேர்ந்து வளர்ந்தது. எது எனக்குத் துக்கத்தை உண்டாக்குகிறது என்று அப்போது தெரியாது. இப்போதும் தெரியாதுதான். வகுப்பறைகளில் தனியனாய் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்திருக்கிறேன். அப்போது எங்கள் வீட்டில் ஒரு டேப் ரிக்கார்டார் இருந்தது. பின்னிரவில் அதன் ஒலி நாடாக்கள் முடிவில்லாமல் ஓடிக்கொண்டே இருந்திருக்கின்றன. அந்த நாளில் அழுத்தங்கள், துக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்தோடும்வரை அந்தப் பாடல் வரிகளைக் கேட்டுக்கொண்டே இருப்பேன். துக்கத்தின் கடைசித் துளி கரைந்தது எனத் தோன்றும் கணத்தில் களைத்துத் தூங்கிப்போய்விடுவேன்.
அப்போது ‘சிப்பிக்குள் முத்து’ படம் வந்தத் தருணம். அதில் “துள்ளித் துள்ளி நீ பாடம்மா... நீ கண்ணீர்விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா...” என்ற பாடலை எத்தனையோ இரவுகளில் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு இருந்திருக்கிறேன். சினிமாப் பாடல்களைக் கேட்டு கண்ணீர் விடுபவர்களை எங்கெங்கும் காணலாம். ஒரு காம்பவுன்ட் சுவரில் எழுதப்பட்டிருக்கும் பைபிள் வாசகத்தைக் கண்டாலே எனக்குக் கண்ணீர் வரும். மனிதத் துக்கத்தின் கடல் மிகப்பெரியது. இந்தத் துக்கத்தின் கடலை வடியச் செய்வதற்கு நமக்கு ஆயிரம் பாதைகள் வேண்டும். என் வாழ்க்கையில் நான் செய்த அனைத்து நற்செயல்கள் மற்றும் தீய செயல்களுக்குப் பின்னே இருப்பது இந்தத் துக்கத்தைத் தாண்டும் முயற்சிதான். இனம்புரியாத மன அழுத்தம், இனம்புரியாத துக்கம். துயரத்தின் தாவரங்கள் வெட்ட வெட்ட வளர்கின்றன. அந்த இருட்டைக் கண்டு நான் பயந்திருக்கிறேன். யாராவது வந்து என்னை அணைத்துக்கொள்ள மாட்டார்களா எனக் கேவிக்கொண்டிருந்திருக்கிறேன்.
முதன்முதலாக மனநல மருத்துவரைத் தேடிச் சென்றபோது, என் மனதின் விசித்திரமான சதுரங்கக் கட்டங்களைத் திறந்து காட்ட இயலாமல் தடுமாறினேன். என் துயரத்திற்குக் காரணமானவர்களை நான் காட்டிக் கொடுக்க மறுத்தேன். மருத்துவர் எனக்கு மருந்துகளை அளித்தார். எந்நேரமும் என்னை நெருக்கிக்கொண்டிருந்த ஒரு மாய இரும்புக்கரம் சற்று தளர்ந்ததுபோல் இருந்தது. நினைவுகளற்ற, சொற்களற்ற ஒரு நீளச் சமவெளியில் நான் மின்விளக்கையோ அல்லது திரைச்சீலையையோ வெகுநேரம் பார்த்தபடி நாள் முழுக்க அங்கேயே அமர்ந்திருப்பேன். நான் என்னை சலனமற்ற ஒரு திடப்பொருளாக உணரத் தொடங்கினேன். ஆம், மனநல சிகிச்சை என்பது உங்களைத் திரவ நிலையிலிருந்து திட நிலைக்கு இட்டுச் செல்கின்றது. அது ஒரு நீரோடையைக் கூழாங்கல்லாக மாற்றுகிற ரசவாதம். என் மேசையின் மீதிருந்த வெண்கலச் சிலைக்கும் எனக்குமிடையே எந்த வித்தியாசத்தையும் நான் காணவில்லை. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் காலையில் கல்லாகக் கிடந்த என்னை உயிர்ப்பித்துக்கொள்ள வேண்டுமென்று தோன்றியது. என் வாழ்வுக்கு, அதன் சவாலுக்கு முழுமையாகத் திரும்ப விரும்பினேன். மாத்திரைகளை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டேன். செயல் ஒன்றே சிறந்த சிகிச்சை என ஒரு அசரீரி மனதில் கூறியது. எதுவுமே இல்லாத ஒரு வெற்றிடத்திலிருந்து. உயிர்மை இதழையும், உயிர்மை பதிப்பகத்தையும் ஆரம்பித்தேன். எனக்குத் தேவைப்பட்டதெல்லாம் செயல் என்னும் மருந்து. ‘நிற்காதே ஓடு’ என்பதுதான் எனக்கு நானே பிறப்பித்துக்கொண்ட கட்டளை. எந்தத் தருணத்தில் அந்தச் சாபத்தை எனக்கு நானே கொடுத்துக் கொண்டேனோ அன்றிலிருந்து அதற்கு எந்தப் பரிகாரமும் இல்லை. இந்த ஓட்டம் முடிவற்றதாக நீண்டுகொண்டிருக்கிறது.
ஓடுகிறவர்கள் திரும்பிப் பார்ப்பது இல்லை. ஓடுகிறவர்களுக்குத் தன்னிரக்கம் கொள்ள அவகாசமில்லை. ஓடுகிறவர்கள் தங்கள் உடலின் கனத்தையோ, மனதின் கனத்தையோ தாங்கிப் பிடிப்பதற்கு முயற்சிக்கமாட்டார்கள். ஆம், துக்கத்திலிருந்து மன அழுத்தத்திலிருந்து விலகுவதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது நம்மை நாமே கைவிடுவதாகும். நமது சாரமென்று எதை நம்புகிறோமோ அதைக் கைவிடுவதாகும். எது உங்களுடைய வாழ்க்கையின் மகத்துவமானது என்று நம்புகிறீர்களோ அதுதான் உங்களுடைய துயரமாக மாறுகிறது. உங்கள் கனவுகளின் பாறைகளுக்குக் கீழ்தான் நீங்கள் நசுங்கிப் போகிறீர்கள். நான் என்னை எப்பொழுதெல்லாம் கைவிட முடிகிறதோ, எனது இந்த மனதைக் கைவிட முடிகின்றதோ அப்பொழுதெல்லாம் துக்கமற்றவனாக இருந்திருக்கிறேன்.
மனிதர்கள் ஏதேனும் ஒரே ஒரு லட்சியத்தை நோக்கி ஓடும்போது மட்டுமே பெரும் வீழ்ச்சிகளைச் சந்திக்கிறார்கள். இந்த லட்சியங்களை அடைந்த பிறகு, அடையும் வீழ்ச்சியோ அதைவிடப் பயங்கரமானது. நான் எப்போதும், பத்துத் திசைகளில் நகர விரும்பியிருந்திருக்கிறேன். ராவணனைப் போல பத்துத் தலைகளால் வாழ விரும்பியிருந்திருக்கிறேன். ஒரே நேரத்தில் வெவ்வேறு இலக்குகளை நோக்கி நகருதல் என்பது வாழ்க்கையின் முன்னால், நாம் மேற்கொள்ளக்கூடிய ஒரு தற்காப்புக் கலை. வாழ்தல் என்பது ஒரு சுழல் வட்டப் பாதை. நீங்கள் ஒரு நேர்கோட்டின் வழியாக அதைக் கடந்து செல்ல முடியாது. நாம் எப்போதும் அந்தத் தவறைச் செய்கிறோம்.
நான் என்னுடைய எத்தனையோ பயணங்களைப் பாதியிலேயே கைவிட்டுவிட்டுத் திரும்பியிருக்கிறேன். எத்தனையோ கனவுகளிலிருந்து பாதியில் எழுந்து வந்திருக்கிறேன். ஒரு காதலின்மீது கசப்பின் நிழல் விழத் தொடங்கும்போது நான் பின்வாசல் வழியாக வெளியேறி இருக்கிறேன். ஒரு போர்க்களத்தில் தொடர்ந்து யுத்தம் செய்பவன் வீரன் அல்ல. எப்போது ஒரு யுத்தத்தைக் கைவிடுவதென்று அறிந்திருப்பவன்தான் உண்மையான போராளி. அப்படித்தான் எந்தவொரு லட்சியமும் எனக்குத் துயரமாக மாறுகிறபோது அதிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு வந்திருக்கிறேன். வாழ்க்கையில் கைவிட முடியாது என்று ஒன்று இருக்கிறதா? நிராகரிக்கவே முடியாது என்று ஒன்று இருக்கிறதா? இவ்வாறு நம்மிலிருந்தே நம்மை நாமே விடுவித்துக்கொள்வதிலிருந்துதான், துயரத்திலிருந்தான நமது விடுதலையின் பாதை ஆரம்பமாகிறது.
ஆனால், பல சமயங்களில் நமக்குத் துக்கத்தை ருசிக்கும் ஒரு ஆசை வந்துவிடுகிறது. எல்லோரும் துயரம் கசப்பானது என்றுதானே நம்புகிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. துயரத்திற்கு ரகசியமான ஒரு இனிப்புச் சுவை உண்டு. ஒரு நாய் தன் வாலைத் துரத்துவதுப் போல. பல சமயங்களில் நாம் நம் துயரத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறோம். அந்தத் துயரம் நமக்குப் பிடித்திருக்கிறது. ஏனெனில், அந்தத் துயரத்திற்குள் நாம் எப்போதும் யாரிடமோ நீதிகேட்டுப் போராடிக்கொண்டே இருக்கிறோம். நீங்கள் எப்போதும் உங்கள் துயரத்தின் வழியே உங்களுக்கு நீதி கிடைக்குமென்று நம்புகிறீர்கள் அல்லது அந்தத் துயரம்தான், நீதிக்காக நீங்கள் நடத்துகிற போராட்டமாக உங்களுக்குத் தோன்றுகிறது. ஆனால், உங்கள் குரல் உங்களுக்கேகூட சரியாகக் கேட்பதில்லை. உங்களது துயரத்தின் பனிப்பொழிவில், உங்கள் முகமே உங்களுக்குத் தெரிவதில்லை. துயரத்தின் வழியே நீங்கள் கேட்கும் நீதி என்பது, தண்ணீருக்கு அடியிலிருந்து பாடும் பாடலைப் போன்றது. அது தற்கொலை செய்துகொள்பவர்கள் கேட்கும் நீதியைப் போன்றது. இந்த உலகம் உங்கள் கண்ணீரைத் துடைக்கக் கரங்களை நீட்டாது என்பது மட்டுமல்ல, உங்களுக்கு ஒரு கைக்குட்டையைக் கூடத் தராது என்பதை நீங்கள் புரிந்துகொள்வதற்கு அதிக நேரமாகப் போவதில்லை. நான் அப்படிப் புரிந்துகொள்கிற ஒவ்வொரு தருணத்திலும், என் வாழ்க்கையின் ஒவ்வொரு கிளையிலிருந்தும் இன்னொரு கிளைக்கு ஒரு பறவையைப் போல மாறி அமர்கிறேன்.
அதுவரை அமர்ந்திருந்த கிளையை ஒரு பறவை கைவிடுவது போலத்தான், நாம் நம்முடைய லட்சியங்களையும் கனவுகளையும் கைவிடுவதும். அதற்கு ஏன் மனமுடைந்து போக வேண்டும் அல்லது அந்தக் கிளையே நாம்தான் என்பதுபோல துயரமடைய வேண்டும்? இதைத்தானே பாரதி : “விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்தச் சிட்டுக்குருவியினைப் போலே” என்றார். ‘விட்டு விடுதலை’ என்பது அவ்வளவு எளிய வாக்கியம் அல்ல. விடுதலிலிருந்துதான் விடுதலை தொடங்குகிறது. ஆனால் நாம் எப்போதும் நம்முடைய தோல்விகளின் பட்டியலைத் தொகுக்க விரும்புகிறோம். இந்தத் தோல்விகளின்மீது நமக்கொரு ருசி உண்டாகிறது என்றால், நாம் எப்போதும் அநீதி இழைக்கப்பட்டவர்களாகவே நம்மைத் தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறோம் என்று அர்த்தம். நம்முடைய வாழ்க்கையின் இந்தப் போராட்டங்கள், இந்தத் துயரங்களையெல்லாம் நாம் அதன் வழியே விட்டுவிடுவது நல்லது. என்னைப் பொறுத்தவரை என் துக்கங்களை, நான் என் சொற்களின் அடுப்பில் வைத்து எரித்து விடுகிறேன். எந்நேரமும் எரிந்துகொண்டிருக்கும் அந்த நரக நெருப்பில் நான் அவற்றைத் தொடர்ந்து வார்த்துக்கொண்டிருக்கிறேன். என் சொற்களின் குகைகளுக்குள் என் துயரத்தின் இருளை நான் அடைத்து வைத்துவிடுகிறேன். அது உண்மையில் எனக்கு நானே அளித்துக்கொள்ளும் சிகிச்சை. என்னை நானே மீட்டுக்கொள்ளும் கடைசிப் பிரயத்தனம்.
சொல்கிறேன்; அதனால்இருக்கிறேன்.
அக்டோபர், 2017.