இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் செயற்கைக்கோள் ஏவும் மையத்தின் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையிடம் செயற்கைக்கோள் கேசினி, இந்திய விண்வெளி ஆய்வுகள் பற்றிப் பேசினோம்.
ஒவ்வொரு செயற்கைக்கோளுக்கும் ஒவ்வொரு இலக்கு அளிக்கப்பட்டு அதற்கேற்ப பணிக்காலம் முடிவு செய்யப்படுகிறது. அதுபோல்தான் கேசினிக்கும் அளிக்கப்பட்டு அது தன் செயல்பாட்டை மிகச்சிறப்பாக செய்துமுடித்திருக்கிறது. ஏழு ஆண்டுகள் பயணப்பட்டு சனிக்கிரகத்துக்குச் சென்று அங்கே 13 ஆண்டுகள் பணிபுரிவது என்பது பாராட்டத்தக்க சாதனை. கேசினி மட்டுமல்ல; ஒவ்வொரு செயற்கைக்கோளும் தங்கள் பணிக்காலம் முடிந்ததும் செயலிழக்கச் செய்யப்படுவது வாடிக்கைதான்.
நாம் செவ்வாய் கோளுக்கு அனுப்பிய மங்கள்யான் ஒன்பதுமாதம் பயணம் செய்து அங்கே சென்றடைந்தது. அது ஆறுமாதம் ஆய்வுக்கு உதவினால் போதும் என்று எதிர்பார்த்தோம். அது இரண்டு ஆண்டுகளைத் தாண்டியும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நிலவுக்கு அனுப்பிய சந்திராயன் இப்போது செயலிழந்துவிட்டாலும் வட்டப்பாதையில் சுற்றிவருகிறது. பொதுவாக செயற்கைக்கோள்களில் இருக்கும் எரிபொருள் தீர்ந்தபின்னர் கருவிகள் செயலிழக்கச் செய்ய கட்டளைப் பிறப்பிக்கப்படும். எதிர்காலத்தில் அனுப்பப்படும் செயற்கைக்கோள்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க அவை அப்புறப்படுத்தப்படும். பின்னர் ஆவி போனபின்னால் உடலை என்ன செய்வோம்? எரிப்போம் அல்லது புதைப்போம். அதுபோல் செயற்கைக்கோள்களை அது எந்த கிரகத்தைச் சுற்றுகிறதோ அக்கிரகத்தின் வளிமண்டலத்தில் எரியச் செய்யலாம் அல்லது கிரேவ்யார்ட் சுழற்பாதை என பயனிழந்த செயற்கைக்கோள்களை சுற்றவைக்க ஒரு பாதை உள்ளது. அதில் தள்ளிவிட்டுவிடுவோம் இது புதைப்பது போன்றது. கேசினி சனிக்கோளின் மீது விழுந்தே அழிந்துபோகுமாறு செய்யப்பட்டது.
நம்மைப் பொறுத்தவரை இன்னும் சில ஆண்டுகளில் மங்கள்யான் 2, சந்திரயான் 2 ஆகிய திட்டங்கள் செயல்பட உள்ளன. அடுத்து புதன் கோளை ஆராய செயற்கைக்கோள் அனுப்புவோம். அதற்குள் ஆதித்யா என்ற பெயரில் சூரியனை ஆராயும் கோள் அனுப்பும் திட்டமும் செயற்படுத்தப்படவுள்ளது.
எதிர்காலத்தில் மனிதனை பிறகோள்களுக்கு அனுப்பி வசிக்கச்செய்யமுடியுமா என்று கேட்டால் நிலவின் வழியாக செவ்வாய்க்கிரகத்துக்கு மனிதனை அனுப்பமுடியும் என்று நினைக்கிறேன். ஆனால் இதை தனி நாடாகச் செயல்படுத்த முடியாது. உலகநாடுகள் இணைந்துதான் செய்யவேண்டும். சில தனியார் நிறுவனங்களும் முயற்சி செய்கிறார்கள். ஊர்கூடித் தேர் இழுக்கவேண்டும் என்று சொல்கிறார்கள் அல்லவா? அதுபோல் அந்த குழுவில் நாமும் இணையவேண்டுமானால் நம் திறமையை மேலும் வளர்த்துக்கொள்ளவேண்டும். அதற்காகத்தான் உழைத்து வருகிறோம். நிச்சயமாக இப்படி ஒரு முயற்சி நடக்கும் போது இந்தியாவின் பங்களிப்பும் அதில் கட்டாயம் இருக்கும்.
அக்டோபர், 2017.