அப்போது நான் சட்டக்கல்லூரி மாணவன். அன்புப் பாவலர் அறிவுமதியின் வீட்டுக்கு காலையில் சென்றிருந்தேன். தேனாம்பேட்டையில் இருந்து ஆட்டோவில் பாரதிராஜா அலுவலகம் செல்கிறோம். அங்கே இருந்தார் சௌபா.
அறிவுமதிதான் அறிமுகம் செய்து வைத் தார்.‘... தெரியுமில்ல... நம்ம சௌபா!‘ என்று. தெரியாதவரையும், 'தெரியுமில்ல..' என்று சொல்லி அறிமுகம் செய்வது அவரது பாணி. அதேபோல், 'நம்ம' என்பது அவரது அன்புமொழி.
அறிவுமதி அறிமுகம் செய்து வைத்ததும் வெள்ளைப்பற்கள் உதிர, 'அப்படியா தம்பி' என்றார் அண்ணன். சௌபா என்றதும் 'ஜூனியர் விகடன்' என்றேன். சிரித்தார். 1980களின் இறுதியில் ஜூ.வி.யில் வந்து கொண்டிருந்த பலரது பெயர்களைச் சொன்னேன். 'நீ வக்கீலுக்கு படிக்கிற... ஆனா ஜெர்னலிஸ்டா ஆவ' என்றார்
சௌபா. விகடனில் சேர்ந்து, அங்கிருந்து வெளியேறி மீண்டும் (2008) நான் விகடனுக்குள் வந்தபோது சரியாக போன் செய்தார் சௌபா. ''நீ மறுபடியும் வந்துவிட்டது சந்தோஷம்யா...நாங்கல்லாம் இல்லை... கண்ணனோட நீ இருக்கனும்யா...'' என்றார். இது ஏதோ எனக்கோ, தனிப்பட்ட கண்ணனுக்கோ மட்டும் சொன்னது அல்ல, எழுதத் தெரிந்த, படிக்கத் தெரிந்த, அக்கறையுள்ள, ஆர்வம் உள்ள எல்லாருக்கும் பெரும்பாலும் முதல் போன் சௌபாவுடையதாக இருக்கும். 'படிச்சேன்யா... சூப்பர்.... ஒரு கட்டுரையோட நிறுத்திடாதே... ஒவ்வொன்னும் இப்படி இருக்கனும்' என்பார். இந்தக் குரலை கடந்த கால் நூற்றாண்டு காலமாக பத்திரிகைகளில் எழுதி வந்த அனைவரும் ஏதாவது ஒரு நாளில் எதிர்கொண்டு இருக்கலாம்.
தன்னைத் தைத்த எழுத்தாக இருந்தால், அவர் அழைப்பார்! ஏனென்றால் அந்த எழுத்தை அடையாளம் காணும் பக்குவம் அவருக்குத்தான் இருந்தது. அப்படிப்பட்ட எழுத்தைத் தான் அவரும் எழுதினார்!
சௌபா என்றதும் - அந்தச் செம்மண் தேசத்தில் பெண்ணாய் பிறந்ததற்காக கள்ளிப்பால் ஊற்றிக் கதறிய பிஞ்சுகளின் முகம் நினைவுக்கு வருகிறது!
சௌபா என்றதும் - அந்த வண்டல் மண் தேசத்தில் வயதுக்கு வரவில்லை என்பதால் எருக்கம்பால் ஊற்றி உதிரம் வர வைத்த கொடூர சம்பவம் நினைவுக்கு வருகிறது!
சௌபா என்றதும் - சில தீட்சிதர்கள் இல்லங்களில் பால்மணம் மாறாப் பிஞ்சுகளுக்கு பிஞ்சுத் திருமணம் செய்து வைத்த காட்சிகள் நினைவுக்கு வருகிறது!
சௌபா என்றதும் - கொடைக்கானல் மலைகளின் மரத் தொழிற்சாலைகளில் கொத்தடிமைகளாய் வாழ்ந்து மீட்கப்பட்டவர்கள் முகம் நினைவுக்கு வருகிறது!
சௌபா என்றதும் - குண்டுப்பட்டி சம்பவம் நினைவுக்கு வருகிறது!
சௌபா என்றதும் - சாயல்குடி ஜமீன்தார் நினைவுக்கு வருகிறார்!
& கடந்த கால் நூற்றாண்டு காலத்து புலனாய்வு இதழியலுக்கு பாடமாய் இருக்கத் தகுதியானவை இவை. பல நூறு பேர் பத்திரிகைத் துறைக்கு வந்து எப்படி எழுத வேண்டும், எப்படிச் சொல்ல வேண்டும், என்ன மொழியில் சொல்ல வேண்டும் என்று கற்பிக்கப் பயன்படும் எழுத்துக்களில் ஒன்று சௌபா எழுத்து!
ஜூனியர் விகடனில் அவர் கட்டுரை வருகிறது என்றால் எங்கோ யாரோ தலை உருளும். 'மதுரைச் சிறையில் ஊழல்' என்று எழுதினார். மறுநாள் காலையில் இரண்டு அதிகாரிகளின் வேலை போனது. சாத்தூர் நீதிமன்றத்துக்கு இரண்டு மாதங்களாக நீதிபதி நியமிக்கப்படவில்லை. பாவம் ஊழியர்களுக்கு எப்படி பொழுது போகும்? உடனே ஊழியர்கள் வளாகத்துக்கு உள்ளேயே வேட்டியை விரித்து சீட்டு விளையாடத் தொடங்கினார்கள். அண்ணன் சாத்தூர் போனார். பார்த்தார். படமும் பிடித்தார். வந்தார். எழுதினார். அதற்கு வைக்கப்பட்ட தலைப்பு தான் முக்கியம்: ' மிஸ்டர் நீதிதேவன் ... உட்காருங்க, ஒரு கை குறையுது' என்பதாகும்!
12 பேரின் வேலை போனது. இப்படி பறிப்புப்படலம் அதிகம்!
அதற்காக உயிரூட்டும் படலம் இல்லையா? அவர் சிசு மரணம் குறித்து எழுதிய பிறகுதான் 'தொட்டில் குழந்தைகள் திட்டம்' உதயமானது. எத்தனை குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருக்கும்? அவர்களுக்குத் தெரியுமா நம்மைக் காப்பாற்றியவர் பெயர்
சௌபா என்று?
பிரபலங்கள், விஐபிகள், விளம்பர வெளிச்சத்தில் இருப்பவர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் - இவர்கள் எவர் முகமும் சௌபா கண்ணுக்குத் தெரியாது. புழுதிக்காடுகளில் செம்மண் படிந்த தலைகள், ஓட்டிய கன்னங்கள், உயிர்ப்பசியில் இருக்கும் உதடுகள், சிறுகுடலைத் தின்னும் பெருங்குடல்கள், செருப்பு பார்க்காத கால்கள் தான் அவரது கண்ணுக்குத் தெரியும். அப்படி ஒரு வர்க்கக் கண்ணாடி அவர் வைத்திருந்தார். ஏனென்றால் அவர் வளர்ந்தது மதுரை ‘தீக்கதிர்' அலுவலகம்!
திடீரென ஆனந்தவிகடனில் தத்தனேரி சுடுகாட்டில் இருக்கும் சுதந்திரம் என்பவரைப் பற்றி எழுதினார். ஐ.மாயாண்டி பாரதிக்கு ரெட் சல்யூட் அடித்தார். வரலாறு என்பது மன்னர்களின் வரலாறு அல்ல, மக்களின் வரலாற்றை எழுதுவதே என்பதை தனது கட்டுரைகளின் மூலமாக நிரூபித்துக் கொண்டே இருந்தார். கற்றுக் கொடுத்தார்.
இலக்கிய இதழ்கள், பல்சுவை இதழ்கள் தொடர்கள் போடலாம். க்ரைம், புலனாய்வு இதழ்கள் எதற்காக தொடர் போட வேண்டும்? அது என்ன ஃபார்முலா? ஐம்பதுகளைத் தொட்டவர்கள் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். உங்களது பள்ளி& கல்லூரிக் காலத்தில் தொடக் கத்தில் நீங்கள் ஜூனியர் விகடன் படித்தவராக இருந்தால், கி.ராஜநாராயணனின் 'கரிசல் காட்டு கடுதாசி' நினைவுக்கு வரும்! வேகாத வெயிலில் சௌபாவும் பாரதிகிருஷ்ணகுமாரும் கோவில்பட்டியில் போய் இறங்கி நிறைய கடலை மிட்டாயும் கொஞ்சம் பூவும் வாங்கிக் கொண்டு ஆளுக்கு ஒரு சைக்கிளில் இடைசெவலுக்கு போய் கி.ரா.வைப் பார்த்து எழுத வைத்தது தான் 'கரிசல் காட்டு கடுதாசி'. கி.ரா.எழுத, ஆதிமூலம் ஓவியங்களில் வெளியான அந்தத் தொடர் இதழியல் தமிழுக்குள் ஏற்படுத்தியது மாபெரும் இரசாயன மாற்றம் என்றால், அதற்கு அடித்தளம் இட்டது சௌபா.
சிறுகதை, நாவலின் அழகியலே, கட்டுரையிலும் பூத்து நின்றது. இன்று சிலர் தங்கள் கட்டுரைத் தொகுப்பை ‘நாவல் தான்' என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்!
சிறையில் இருந்து வெளியே வருகிறார் தியாகு. சந்திக்கிறார் சௌபா. சிறை அனுபவங்களை எழுதச் சொல்கிறார். இந்த தகவல் துணை ஆசிரியர் ராவ் அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. இதிலிருந்து பிறந்தது தான் சுவருக்குள் சித்திரங்கள், கம்பிக்குள் வெளிச்சங்கள் என்ற இரண்டு தொடர்கள். தமிழில் எழுதப்பட்ட சிறை இலக்கியமாக அது ஆனது! ( சி.ஏ.பாலனின் தூக்குமர நிழலில் நூலுக்கு அடுத்த சிறை இலக்கியம் இதுதான்!)
பறித்தலும் - கொடுத்தலுமான கதாநாயகத் தன்மைக் கதைகள் தான் இன்று சினிமாக்காரர்களின் சிந்தனை. இதன் மற்றுமொரு தொடக்கமாக இருந்தது சௌபாவின் 'சீவலப்பேரி பாண்டி'. அதைப் படம் எடுக்கக் கிளம்பியவர்களும் அதிகம். அதைப் போல எழுதக் கிளம்பியவர்களும் அதிகம். அதை அபகரிக்கக் கிளம்பியவர்களும் அதிகம். சமூக அவலங்களை எழுதி அம்பலப்படுத்திய சௌபாவே சட்டப்போராட்டம் நடத்தித்தான் மீண்டு வந்தார். கிடைத்த பணத்தில் கொடைக் கானல் மலை அடிவாரத்தில் 15 ஏக்கர் நிலம் வாங்கித் தோட்டம் அமைத்து, விவசாயம் பார்க்கத் தொடங்கினார். பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், திரையுலகத்தினர், கவிஞர்கள், சமூகப் போராளிகளுக்கு தென் மாவட்ட கலைப் பண்பாட்டு மையம் போல இருந்தது அந்தத் தோட்டம்!
மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஆர்.பாலகிருஷ்ணன் மகள் திருமணத்துக்கு புதுக்கோட்டை போய்விட்டு நானும் ரா.கண்ணனும், புகைப்படக் கலைஞர்கள் ராஜசேகரும், கார்த்திகேயனும் சௌபா தோட்டத்துக்கு வந்தோம். எட்டுமணி நேரம் உட்கார்ந்த இடம் நகராமல் அரைநூற்றாண்டு காலத்தைப் பேசித் தீர்த்தோம். அதில் ஒரு இடத்தில் கூட விவாதம், மோதல், கருத்து மாறுபாடு இல்லை. நாங்கள் பேசும் போது அவர் கேட்பார். அவர் பேசும்போது நாங்கள் கேட்போம். அவை அத்தனையும் எழுதினால், ‘மதுரைப் பாண்டி' என்று குறுநாவல் தான் எழுத வேண்டும். க.சீ.சிவக்குமார் மறைந்தபோது ரமேஷ் வைத்யா, 'தடம்' இதழில் எழுதினார்.
'முள்ளுக்குள் கிடக்கும் கள்ளிப்பழம் போலத் தான் சோகங்களுக்குள்ளேயே அவன் சந்தோஷம் கொண்டிருந்ததும்' என்று எழுதி இருப்பார். அப்படித்தான் முள்ளுக்குள் கிடக்கும் கள்ளிப்பழம் போன்ற கதைகள் அவை. எல்லோருக்கும் தெரிந்தது, அவரது எழுத்துக்கு சமூகம் வழங்கிய பாராட்டு. ஆனால், ‘அவன் புகழ் அடைவதன் மூலமாக' அவன் சக மனிதர்களால் அடைந்த வலிகளைச் சொன்னார். வார்த்தைகள் இந்த இடத்தில் வர மறுக்கிறது.
‘‘...... பய எல்லாம் எழுதி அது நல்லா இருக்குன்னு பாராட்ட வேண்டியதா போச்சே'' என்று அவர் காதுபடச் சொல்லிய மனிதர்களும் இருந்திருக்கிறார்கள். நாங்கள் நால்வரும் உட்கார்ந்து இருக்கிறோம்.
சௌபா மட்டும் நின்று கொண்டு இருக்கிறார்.
சொல்கிறார். சொல்லிக் கதறுகிறார். ஆறுதல் படுத்துகிறார் கண்ணன். இப்படி ஒரு வேதனையை உடலுக்குள் தாங்கி ஒருவன் இருபத்தைந்தாண்டு காலம் வாழ்ந்ததே பெரிது. சௌபா இறந்த போது நினைவேந்தல் கூட்டம் நடத்தினார் தமயந்தி. பேசினால் உடைந்துவிடக்கூடும் என்பதால் எழுதி வைத்துக் கொண்டு வாசித்தேன். கவிதாபாரதிக்கு மதுரை அருகே விபத்து நடந்தபோது தானே அடிப்பட்டது போலத் துடித்துக் கிடந்தார் சௌபா. 'பொட்டல் வெளியில் அள்ளிப் போட்டாலும் அங்கு ஒரு வனாந்தரத்தை வளரச் செய்யும் அற்புதம் கொண்டவர்' என்று எழுதினார் கவிதாபாரதி. கரு.பழனியப்பன், தேனி ஈஸ்வர், சமுத்திரக்கனி இப்படி ஒரு பெருங்கூட்டம் அவருக்கு உண்டு. அவர் இறந்தபோது பதிவுகள் எழுதிய பலரும் தங்கள் எழுத்தை எந்தெந்த சூழலில் எல்லாம் சௌபா பாராட்டினார் என்பதைத்தான் எழுதி இருந்தார்கள்.
தான் எழுதுவது மட்டுமல்ல, தன்னைப் போலவே மற்றவர்களை எழுத வைப்பதும், ‘எழுதவிடுவதும்'தான், ஊக்கப்படுத்துவதும் ஒரு எழுத்தாளனின் கடமைதான்! அந்த வகையில் பத்திரிகையாளர்களை உருவாக்கிய பத்திரிக்கைப் பல்கலைக் கழகமாக சௌபா இருந்தார்!
இந்தத் தொடர் சின்னக்குத்தூசியில் தொடங்கியது. சௌபாவில் முடிகிறது. பத்திரிகையாளரில் தொடங்கி பத்திரிகையாளரில் முடிவது எனக்கு மகிழ்ச்சியையே தருகிறது. ஆனால் அது திட்டமிட்டதல்ல. திட்டமிடாததே சரியாய் நடக்கும் என்பார் ஓஷோ. பிடித்தமாதிரி நடந்திருக்கிறது.
சின்னக்குத்தூசி ஒரு தலைமுறை என்றால் சௌபா இன்னொரு தலைமுறை. அவர்களைப் போல் யாரும் இல்லை என்று தேடவேண்டாம். நாம் நம் தலைமுறை மனிதர்களாகவே இருப்போம். 'காமராசரைப் போல் உண்டா? கக்கனைப் போல் உண்டா? என்று இன்று எழுதும் எவனும் 'தினமணி' ஏ. என்.சிவராமனோ, 'தினசரி' சொக்கலிங்கமோ அல்ல. இந்த மனிதர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது குறைந்தபட்ட நேர்மையை, குறைந்தபட்ச உண்மையை. இந்த சமூகம் எதிர்பார்ப்பது குறைந்தபட்ச கருணையை, குறைந்தபட்ச மனிதாபிமானத்தை. இந்த முகங்கள் இன்னமும் நினைவில் இருக்கக் காரணம் இவர்களது சாதியா, மதமா, பதவியா, பணமா, இவர்கள் செய்த உதவிகளா, கொடுத்த உற்சாகமா, இவர்களது எழுத்தா, பேச்சா, வாங்கிய பட்டங்களா? எதுவுமில்லை.
காற்றைப் போலப் பொதுவாய் இருந்தார்கள். புயலாய் அடங்கியும், தென்றலாய் தழுவியும்!
நேற்றைய மூச்சுக்காற்றுக்கு நான் நன்றி
சொல்வது இல்லை. ஆனால் நேற்றைய காற்று என்னை உயிர்ப்பித்தது. இத்தொடரில் வந்தவர்கள் அனைவரும் எனது நேற்றைய மூச்சுக்காற்றே!
அவர்கள் அவர்களே! வணக்கம்!
ஆகஸ்ட், 2020.