செக்கச் சிவந்த மனிதன்!

அவர்கள், அவர்களே!
இன்குலாப்
இன்குலாப்
Published on

இந்திய அமைதிப்படையை விமர்சித்து இன்குலாப் எழுதிய கட்டுரையை எஸ்.வி. இராஜதுரையின் ‘ரோஸா ஓக்ஸம்பர்க் படிப்பு  வட்டம்' சிறு நூலாக வெளியிட்டு இருந்தது. அந்தச் சிறு புத்தகத்தின் பெயர், ‘புறாச் சிறகு போர்த்திய பருந்துகள்'. இயல்பில் இன்குலாப், ‘புரட்சிச் சிறகு போர்த்திய பூ'. இவ்வளவு மென்மையான மனிதனுக்குள் இருந்தா, இவ்வளவு வன்மையான வார்த்தைகள் பிறக்கின்றன என்பதை நம்ப முடியாது. நட்பு வட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது மயிலிறகுச் சொற்களால் வருடுவார். மேடையில் ஏறினால், ‘போடா மயிறு' என்பதைப்போல் பேசுவார். எழுதிய வார்த்தைக்கும், வாழ்ந்த வாழ்க்கைக்கும் வித்தியாசம் இல்லாமல் வாழ்ந்த அவரிடம் பார்த்த வித்தியாசம் இது ஒன்று தான். சிலர் தனியாகப் பேசும் போது கர்ஜிப்பார்கள். ஒலிபெருக்கி முன்னால் போனதும், பூனையாகி விடுவார்கள். அந்த ரகம் அல்ல இன்குலாப்.

திருவல்லிக்கேணி ஜானி ஜான்கான் தெருவில் (இன்று நக்கீரன் அலுவலகம் இங்கு தான் உள்ளது!) நடந்து செல்லும்போது அந்தக் கைத்தட்டல் என்னை நிறுத்தியது. தெருவில் இருந்தல்ல, ஒரு வீட்டின் மாடிச் சாளரத்தில் இருந்து. நிமிர்ந்து பார்த்தால், ‘தோழர்' இன்குலாப். மாடியில் இருந்து எதிர்த்திசையில் பார்த்தால், கீழே ஒரு தேநீர்கடை. வீட்டுக்கு வந்த தோழருக்கு டீ சொல்கிறார். குறுகலான அந்தப் படியில் ஏறி எது வீடு... எது வாசல் என்று தெரியாமலேயே தயங்கி நின்றபோது, அவரே வந்து அழைத்துச் சென்றார். அதாவது கண்டுபிடிக்கக்கூட முடியாத அளவுக்கு குறுகலான வீடு. உலக ஏகாதிபத்தியங்களின்

சிண்டைப் பிடித்து ஆட்டிய கவிஞன் வாழ்ந்த ஒண்டுக்குடித்தன வீடு.

'வாங்க... டீ சாப்பிட்டுட்டே பேசுவோம்' என்றபடி மீண்டும் சாளரத்தைத் திறந்து கைதட்டி தேநீர்

சொல்கிறார் எனக்கும். இன்குலாப் என்றால்,

சட்டை அணியாத லுங்கி அணிந்தபடி... கைதட்டிய அந்த முகம் தான் எனக்கு முதலில் தோன்றும். ஒரு விதத்தில் பார்த்தால் எனது எழுத்துக்கு கைப்பிடித்து விட்ட எழுத்தாணிகளில் ஒருவர் இன்குலாப்.

பதினோறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். அந்தக் காலகட்டத்து ‘தராசு' இதழ் தான் போராட்டக்காரர்களின் எழுத்துக்களமாக இருந்தது. இளவேனில், இன்குலாப் போன்றவர்கள் அதில் எழுதி வந்தார்கள். ‘பகத்சிங்கும் இந்திய அரசியலும்' என்ற சுப.வீரபாண்டியனின் நூலை விமர்சித்து ‘ஜனசக்தி'யில் அறந்தை நாராயணன் எழுதிய விமர்சனத்துக்கு எதிர்வினையை ‘தராசு' இதழில் இன்குலாப் எழுதியிருந்தார். இப்படி ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்று அப்போதுதான் தெரியும். அந்த விமர்சனங்கள் மிக நீண்டவை என்பதால், இங்கு சொல்லவில்லை. இன்குலாப்பின் சொற்கள் என்னுள்ளத்தில்

தைத்ததால் இங்கு சொல்கிறேன்.  இளவேனில், இன்குலாப் ஆகிய இருவர் மொழி நடையும், அவர்கள் சொல்ல வந்த கருத்தை தாண்டிய வசீகரம் கொண்டவை. சென்னைக்கு வந்த நான், நண்பன் விஜயகுமாரோடு புதுக்கல்லூரிக்குச்

சென்று இன்குலாப்பையும், சி.ஐ.டி.நகர் வீட்டுக்குச் சென்று இளவேனிலையும் பார்க்கக் காரணமானது அந்த எழுத்துநடை தான். இன்குலாப்புடன் பழகப்பழக எழுத்தைத் தாண்டிய அவரது வாழ்வியல் வசீகரித்தது. மார்க்சிஸ்ட்டாகப் பேசலாம். எழுதலாம். ஏன், ஸ்டாலின் போல் பேசலாம். லெனின் போல் எழுதலாம். மார்க்ஸ் போல் வாழ முடியுமா? மார்க்சிஸ்ட்டாக வாழ்ந்த

மார்க்சிஸ்ட் இன்குலாப் மட்டும்தான். அவரோடு படித்த கா.காளிமுத்து, பெரிய பதவிகளில் இருந்தார். படித்த பலர் அரசியலில் இருந்தார்கள். எதையும் கேட்டதில்லை. இன்குலாப்புக்கு செய்ய பலரும் காத்திருந்தார்கள். எவரிடமும் இவர் எதன் பொருட்டும் போனதில்லை. கவிஞர் இசாக் வற்புறுத்தலின் பேரில் வெளிநாட்டுப் பயணத்தை இன்குலாப் மேற்கொண்டபோது, அவரோடு பள்ளியில் படித்து இன்று பணக்காரர்களாக இருந்த பலரும் தங்கள் வீட்டுக்கு அழைத்தபோது செல்ல மறுத்துவிட்டு, ‘வெறுங்கையோடு' திரும்பி வந்தவர் இன்குலாப். அவரைப்போல் எழுதலாம். அவரைவிட வேகமாக எழுதலாம். ஆனால் அவரைப்போல் ‘கொஞ்சமாகக்கூட' வாழ முடியாது.

வெளிநாடு சென்றிருந்தபோது, ஒருவர் வீட்டில் தங்க வைக்கப்பட்டார். அந்த வீட்டின் உரிமையாளர், தலித் மக்கள் மீது ஒரு விமர்சனம் வைத்தார். அதை கடுமையாக எதிர்த்தார் இன்குலாப். அந்த நபரும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார். இறுதியாக இன்குலாப், ‘நீங்கள் சொன்னதைத் திரும்பப் பெறாவிட்டால் இப்போதே இந்த வீட்டைவிட்டு வெளியேறி விடுவேன்' என்று நள்ளிரவு ஒரு மணிக்கு கர்ஜித்தவர் இன்குலாப். இதையெல்லாம் தமிழ்நாட்டு மேடைகளில் சொல்லி தன்னை தலித் போராளியாகக் காட்டிக் கொள்ளாதவர் இன்குலாப்.

அவருக்கும் ஜெயமோகனுக்கும் சேர்த்து ஒரு விருது அறிவிக்கப்பட்டது. இன்குலாப் எழுத்தை ஏற்கமாட்டேன் என்று ஜெயமோகன் அறிவித்தார். அவரை விமர்சித்து நான், ‘இனி' இதழில் எழுதினேன். இன்குலாப்பிடம் காட்டினேன். ‘ஜெயமோகன் இப்படிச் சொல்கிறார் என்றால் நான் சரியாக இருக்கிறேன் என்று தானே பொருள்' என்றார். ‘உங்கள் எழுத்துகள் பிரச்சாரம் மட்டுமே என்கிறார்களே?' என்று வருத்தப்பட்டேன். ‘ஆமாம்!' என்றவர், ‘என்னால் இந்தளவுதான் பிரச்சாரம் செய்ய முடிகிறது. இன்னும் கொஞ்சம் அதிகமாக

பிரச்சாரம் செய்ய வேண்டும்' என்று சிரித்தார். ‘இன்குலாப் எழுத்து பற்றி கவலைப்பட வேண்டியதில்லை' என்று

அசோகமித்ரன் ஒருமுறை சொன்னார். அதுபற்றி கேட்டபோது, ‘நம்முடைய கவலைகள் வேறு. அவர்களின் கவலைகள் வேறு' என்றார் இன்குலாப்.

கல்லூரி காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் இன்குலாப். அவரது அண்ணன், திராவிட இயக்கக் கொள்கை கொண்டவர் என்பதால், இன்குலாப்பும் அப்படியே வளர்ந்தார். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டமும், 1967 தேர்தலும் அவரை உயிர்த்துடிப்பான தி.மு.க.காரராகவே வைத்திருந்தது. 1968 டிசம்பர் 25- கீழ்வெண்மணி படுகொலை அவரை கம்யூனிஸ்ட் ஆக்கியது. மார்க்

சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காரராக மலர்ந்தார். 1969

நக்சல்பாரி எழுச்சி அவரை சி.பி.எம். கட்சிக்குள் இருந்த ‘எம்.எல்.' ஆக ஆக்கியது. 1975 அவசர நிலை பிரகடன காலத்தில் முழு மார்க்சிஸ்ட் - லெனிஸ்ட்டாக ஆனார். தலைமறைவு மனிதர்களாக இருந்து, பின்னர் காவல்துறையால் கொல்லப்பட்ட கன்னாமணி, மச்சக் காளை போன்றோரின் நண்பர் இவர். பி.வி.சீனிவாசன், சன்னாசி போன்றோரின்  அறிமுகமும் உண்டு. நக்சல்பாரி எழுச்சித் தலைவரான

சாரு மஹூம்தாரின் படைப்புகளை முதன்முதலில் தமிழுக்கு கொண்டு வந்தவர் இன்குலாப். நக்சல்பாரி இதழான ‘மனிதன்' இல் இவரது படைப்புகள் வெளிவந்தன.

1980-களின் தொடக்கத்தில் ஈழத்தில் இருந்து வந்த ஒப்பாரி ஓலமும் - சுதந்திரத் தாகமும் தேசிய இனப் பிரச்சனைக்கு இவரை நோக்கித் தள்ளியது. ஈழத்தில் நடப்பது தேசிய இனப்போராட்டமே என்று முதலில் கணித்து ஏற்றுக் கொண்ட விரல்விட்டு எண்ணக்கூடிய கம்யூனிஸ்டுகளில் இன்குலாப் ஒருவர். ‘லெனின், ஸ்டாலின் பேசிய தேசிய இனப்

பிரச்சனையை நம்ம ஊர் கம்யூனிஸ்ட்டுகள் ஏன் பேச மறுக்கிறார்கள்?' என்று கேட்டபோது, ‘நம்மூர் கம்யூனிஸ்ட்டுகளுக்கு தூரப்பார்வை மட்டும்தான் உண்டு. கிட்டப்பார்வை கிடையாது' என்றார் இன்குலாப். எங்கோ நடப்பதை விடுதலைப் போராட்டம் என்பார்கள், அருகில் நடப்பதை ஒப்புக் கொள்ளமாட்டார்கள் என்ற பொருளில் சொன்னார்.

இன்குலாப்
இன்குலாப்

தேசிய இனப்பிரச்சனை அவரை தந்தை பெரியாதை நோக்கித் தள்ளியது. ‘ஈரோட்டுப் பாதை எவ்விடம் சேர்க்கும்?' என்ற தத்துவார்த்தக் கவிதையை குறுவெளியீடாக ‘மண்' இதழின் சார்பில் அண்ணன் அறிவுமதி கொண்டுவர அதைத் தூக்கி விற்ற காலம் மறக்க முடியாதது. ‘ஈரோட்டுப்பாதை லெனினிடம் சேர்க்கும்' என்றார் இன்குலாப். பெரியாரை நிலப்பிரபுத்துவ வாதியாக கம்யூனிஸ்ட் சிந்தனையாளர்கள் கண்டுபிடித்துச் சொன்னபோது, அவரை புரட்சியாளராகவும், அவரே தமிழ்த் தேசியத்தின் தொடக்கம் என்றும் சொன்னவர் இன்குலாப். பெரியாருக்கு பிந்தைய திராவிட இயக்கங்கள் மீது கடுமையான விமர்சனம் அவருக்கு இருந்தது. பெரியார் மீது இல்லை. 'என்னுடைய இடதுசாரித் தன்மை என்பது பெரியாருடைய பார்ப்பனீய எதிர்ப்போடு ஒன்றுபடும் போதுதான் கூர்மையடைகிறது. தலித்தியம் இணைந்ததாக இருந்தால்தான் அது இடதுசாரி இலக்கியம்' என்றார் இன்குலாப். மார்க்சியம் - பெரியாரியம் - அம்பேத்காரியம் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியவை என்பதை என்னுள் விதைத்தவர்கள் எஸ்.வி. இராஜதுரை, கவிஞர் இன்குலாப், பேராசிரியர் க. நெடுஞ்செழியன், பேராசியர் சுப.வீரபாண்டியன், ‘தலித் முரசு' புனிதப்பாண்டியன்.

மார்க்சியம் , பெரியாரியம் , அம்பேத்காரியம் மூன்றும் இணைந்து பயணிக்க வேண்டும் என்றதால், மூன்று இயக்கத்தாரும் இன்குலாப்பை கொண்டாடியிருக்க வேண்டும். அப்படி நேரவில்லை இன்குலாப்புக்கு. 'தனக்கு மட்டுமானவராக' இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் அவர் அனைத்து மக்களுக்குமானவராகவே வாழ்ந்தார். மிக நீண்ட காலத்துக்குப்பிறகு ‘கலைமாமணி' விருது பெற்றார். அதை அவர் ஏற்றுக் கொண்டதே பெரிய செய்தியாக இருந்தது. அந்த விருது அறிவிப்பு வந்த வாரமே, ஏதோ ஒரு பேச்சுக்காக நீதிமன்றத்துக்கு வர அழைப்பும் வந்தது. இரண்டையும் பார்த்துக் கொண்டே இருந்தார். ஈழப் போராட்டம்

உச்சத்தைத் தொட்டபோது, ‘கலைமாமணி' விருதை திருப்பிக் கொடுத்துவிட்டார். வைரமுத்து விருது வழங்கியபோது, ‘ஏற்கமாட்டார்' என்றே நினைத்தோம். ஏற்றுக்கொண்டார். ‘நான் எனது கொள்கையை ஏற்பவர்களால் கூட புறக்கணிக்கப்படுகிறேன். இந்தப் புறக்கணிப்பை உடைக்க இந்த விருதை ஏற்கிறேன்' என்றார். ‘நான் எப்போதும் நானாகவே இருப்பேன்' என்றார்.

அவர் அவராகவே இருந்ததற்கு ஒரு உதாரணம். ஜெயகாந்தனின் அரசியல் மீது இன்குலாப்புக்கு விமர்சனம் உண்டு. ஜெயகாந்தனின் அரசியலை ஏற்கவேமாட்டார். ஆனால் ஜெயகாந்தன் கதைகள் மீது மோகம் உண்டு. ஜெயகாந்தனுக்கு ‘ஞானபீடம்' விருது கிடைத்தபோது மகிழ்ந்தவர் இன்குலாப். அவருக்கு பாராட்டுக் கடிதம் அனுப்ப நினைத்தபோது, ஒரு செய்தி

கிடைத்தது. காஞ்சி சங்கராச்சாரியாரைச்

சென்று ஜெயகாந்தன் சந்தித்து ஆசி பெற்றதை கேள்விபட்டதும், தனது பாராட்டுக் கடிதத்தை இவர் அனுப்பவில்லை. பொதுவாக இலக்கியவாதிகள், கொள்கை சமரசத்தில் போய்விடுவார்கள். ஆனால் இன்குலாப் போன்ற ஒரு சிலர் தான் கொள்கைத் தெளிவோடு இருந்தார்கள்.

இவ்வளவு சரியாக அவர் இருக்கக்காரணம், எவர் தயவும் வேண்டி நிற்காதது தான். அவர் மட்டுமல்ல, அவரது வழித்தோன்றல்களும் அப்படியே வளர்க்கப் பட்டிருந்தார்கள். ‘சாகித்ய அகாடமி' விருது வழங்கப்பட்டபோது, இன்குலாப் இருந்திருந்தால்கூட இப்படி ஒரு முடிவெடுத்திருப்பாரா, இவ்வளவு ஆக்ரோஷமாக அறிக்கை வெளியிட்டிருப்பாரா என்று

யோசிக்கும் அளவுக்கு மனைவியும், மகளும் விருதை நிராகரித்தார்கள்.

எழுதமாட்டேன்

ஒரு வரி கூட

நீ ஒப்பும் படி.

என் எழுத்திலும்

அதிரும் என் பறை ஒலி -

மேட்டிமைத் திமிறும்

உன் சபை வாசலிலும் கூட

நில்லவே நில்லாது

என் மயிரின் நிழலும் & என்று இன்குலாப் எழுதிய வரியை அவரது வார்ப்புகளான

செல்வமும், இன்குலாப்பும், ஆமினாவும் வழிமொழிந்து நின்றார்கள். வாழ்க்கை இணையான கமருன்னிஸாவும் அப்படியே சொன்னார். யாருக்கு வாய்க்கும் இத்தகைய புரட்சிகர குடும்பம்?

இஸ்லாமியராகப் பிறந்தவர் சாகுல்ஹமீது. இன்குலாப் என்ற பெயர் தாங்கி, தமிழனாகவே வாழ்ந்தார். மூத்த மகனுக்கு செல்வம் (அநேகமாக சர் ஏ.டி. பன்னீர்செல்வம் நினைவாக இருக்கலாம்!) என்று பெயர் வைத்தார். சாகுல் ஹமீது மகன்

செல்வமாக எப்படி இருக்கமுடியும் என்று அந்தக் காலத்திலேயே பிரச்சனை வந்ததாம். தர்காக்களில் பேய் ஓட்டுதலுக்கு எதிராகத்தான் அவரது முதல் கவிதை இருந்தது. எல்லா மதங்களிலும் இருக்கும் புரோகிதக் கூட்டத்தை எதிர்த்தார். ‘எனது பகுத்தறிவு என்பது நாத்திகம் மட்டுமல்ல' என்று சொல்லிக் கொண்டார். மதச்சார்பு நடவடிக்கைகள் அவரிடம் எப்போதும் இருந்தது இல்லை. அதேநேரத்தில், ‘நான் இப்படியாக்கும்' என்று சொல்லித்திரியும் நபரும் அல்ல இன்குலாப். இயல்பாய் இருப்பதே இயல்பு என்று நினைப்பார். இயல்பாய் இருப்பதாய் காட்டிக் கொள்வது செயற்கைத்தனம் என்றும் நினைப்பார். ‘சிவப்பு சிலருக்கு உதட்டுச்சாயம், இன்குலாப்புக்கு காயத்திலிருந்து வடிகிற ரத்தம்' என்றார் அப்துல் ரகுமான். ரத்தம் வடிவதைப் பார்த்தாலே காயப்படும் மனம் இன்குலாப்புடையது.

1997 - ஆம் ஆண்டு ‘குங்குமம்' இதழில் ‘அருஞ்சொற் பொருள்' என்ற தொடர் எழுதினேன். பிரபலங்கள் தங்களுக்குப் பிடித்த ஒரு பொருள் பற்றிச் சொல்வது. பிரபஞ்சன், ‘காபி' பற்றி சொன்னார். ஓவியர் மருது, ‘பிரஷ்' பற்றி பேசினார். அருள்மொழி, ‘மைக்' பற்றிச் சொன்னார். இன்குலாப் எதைப்பற்றி பேசினார் தெரியுமா? ‘பூக்கள்' பற்றி!

இது என்ன பூர்ஷ்வா புத்தி என்றுகூட நான் அன்று நினைத்தேன். ‘‘புரட்சியாளர்கள் ரசனையற்றவர்கள் அல்ல. தத்துவார்த்த மோதலைக்கூட ‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்' என்றுதான் மாவோ சொன்னார். அழகை ரசிக்கும் மனுச இயல்பை முதலாளித்துவ சமூகம் வணிகமாக மாற்றிவிட்டது'' என்று சொன்னார் இன்குலாப். ‘'மனித சமூகம் வணிக சமூகமாக மாறிய பிறகும் அழகை ரசிப்பதை விட்டுவிடாது'' என்று நம்புவதாகச் சொன்னார். மானுட விடுதலையை சமூக அழகியலாகப் பார்த்த புரட்சியாளன் இன்குலாப்.

‘மனுசங்கடா... மனுசங்கடா...' என்பது அவரது புகழ்பெற்ற பாட்டு. ‘மனுசன்டா.. இன்குலாப்

மனுசன்டா' என்று சொல்ல வைத்ததே அவர் பெற்ற பாராட்டு. மூக்கடைத்த குரலால், நிறுவனமயப்பட்ட எல்லா அதிகாரப் பீடங்களையும் சில்லு

சில்லாய் உடைக்க முயற்சித்தவர் இறுதிவரை

சோர்வே அடையவில்லை. கல்லூரிப் பருவத்தில் அழகர் மலையில் கையை கீறிக்கொண்டு தமிழக விடுதலைக்காக கையெழுத்துப் போட்டதாக இன்குலாப் ஒருமுறை சொன்னார். ஒரு சொட்டு அல்ல, மொத்த ரத்தமும் சொட்டுச் சொட்டாய் விழ விழ தமிழக விடுதலைக்காய் உதிர்ந்த உருவம் அது. அவர் சினமும் சிரிப்பும் நம்மைச் செதுக்கும் உளிகள்!

நவம்பர், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com