சீனா: எல்லைச் சச்சரவு!

சீனா: எல்லைச் சச்சரவு!
Published on

இந்திய - சீன எல்லைப் பிரச்சினை கடந்த 70 ஆண்டு காலமாக தொடர்ந்து வருகிறது.

1962 - ல் நடந்த இந்திய சீனப் போருக்குப் பின், இரு நாட்டுத் தலைவர்களும் தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் எடுத்தும், 22 முறை பேச்சு வார்த்தைகள் நடத்தியும், இன்று வரை இரு நாடுகளின் ஒப்புதலுடன் எல்லை முழுமையாக வரையறுக்கப் படவில்லை. ஆகவே அவ்வப்போது இருநாடுகளின் எல்லைப் படைகளுக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உண்டாவது புதிதல்ல.

எனினும் கடந்த பத்து ஆண்டுகளாக, முக்கியமாக பிரதமர் மோடி பதவிக்கு வந்த பின்னர், இந்திய - சீன உறவை பலப்படுத்த பல முயற்சிகள் எடுக்கப் பட்டுள்ளன. எல்லையில் பாதுகாப்புப் படைகளுக்கு இடையே ஏற்படும் தகராறுகள் மோதலாக மாறுவதைத் தவிர்க்க உடன்பாடுகள் கையெழுத்தாகி செயல்பாட்டில் உள்ளன.

தற்போது, உலக அளவில் கோவிட் வைரஸ் தாக்குதலால்  வணிக பொருளாதார, நடைமுறைகள் சீர்குலைந்துள்ளன. இதற்கு சீனாவும் இந்தியாவும் மற்ற தெற்காசிய நாடுகளும் விலக்கல்ல. இந்த இரு ஆசிய வல்லரசுகளும் கோவிட் தாக்குதலால் பெரும் பொருளாதார அழுத்தத்தில் மூழ்கியுள்ளன.

இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் மே மாத முதல் வாரத்திலிருந்து லடாக் எல்லையில் ஐந்து இடங்களிலும், சிக்கிம் மாநிலத்தின் வடக்கு எல்லையிலும் இந்திய சீனப்படைகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு பதட்ட நிலை உருவாகியுள்ளது. இதற்கு காரணம் என்ன?

வழக்கமாக எல்லையில் உள்ள இருநாட்டுப் படைத் தளபதிகளும் தங்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி பதட்ட நிலையைத் தவிர்ப்பார்கள். அந்த முயற்சி பலிக்காவிட்டால் இருநாட்டு வெளியுறவு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக சூழ்நிலை ஏற்பட வழிவகுப்பார்கள்.  ஆனால் அத்தகைய முயற்சிகள் இதுவரை பலித்ததாகத் தெரியவில்லை.

லடாக் பகுதியில் முக்கியமாக பங்காங்க் சோ என்ற ஏரியை ஒட்டிய எல்லையில் இத்தகைய பதட்டமான சூழ்நிலை ஏற்கனவே இரு முறை ஏற்பட்டதுண்டு. அதற்கு முக்கிய காரணம் சென்ற நான்காண்டுகளாக இந்தியா தனது எல்லைப் பகுதிகளில் 61 இடங்களில் கிடப்பில் போடப்பட்டிருந்த சாலை அமைப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவதாகும். அதை சீனா தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. ஆனால் சீனத் தரப்பில் அவ்வாறு எல்லை வரை  சாலைகள் கட்டப்பட்டுள்ளன.

மேலும் எல்லையில் இந்தியப் படைகளை தேவையான போது  உடனுக்குடன் விமான மூலம் அனுப்ப இந்தியா, அமெரிக்காவிடமிருந்து ராட்சத விமானங்களை வாங்கியுள்ளது. இதனால் எல்லையில் இந்திய படைபல வலிமை அதிகமாகியுள்ளது. மேலும், சீன&பாகிஸ்தான் பொருளாதார மேம்பாட்டு ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தான் ஆதிக்கத்தில் உள்ள இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் சீனா அமைத்துவரும் பெருவழிச்சாலை மற்றும் ரயில் பாதைகளை இந்தியா முழுமையாக எதிர்க்கிறது.

தற்போதுள்ள பதட்ட நிலையில், இரு நாடுகளும் லடாக் எல்லையில் ஐந்து இடங்களில் ஏறக்குறைய பத்தாயிரம் வீரர்களை போருக்கான தயார் நிலையில் குவித்துள்ளன. இது இரு நாடுகளுக்கும் இடையே போர் நிகழும் அபாயத்தை அதிகரித்துள்ளது.

லடாக் பகுதியைப் போல் அல்லாமல் சிக்கிம் பகுதியில் இந்திய சீன (திபெத்) எல்லையில் இருநாடுகளுக்கும் பெருமளவு பிரச்சினை இல்லை. ஆகவே சிக்கிமின் வடக்கு எல்லையில் நகு&லா (தென் கிழக்கு சிக்கிம் எல்லையில் உள்ள நாது&லா அல்ல) கணவாய் பகுதியில் இம்முறை இருபடை வீரர்களுக்கும் நேரடி மோதல் ஏற்பட்டது வியப்பை அளித்துள்ளது.

கடந்த 2017 ஆண்டு ஜூன் மாதம் சிக்கிம் -சீனா (திபெத்)-பூடான் எல்லையின் முச்சந்தியான டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் பூடானின் எதிர்ப்பை மீறி பூடான் எல்லைவரை புதிய சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. அதைத் தொடர்ந்து ஏறத்தாழ மூன்று மாதங்கள் இரு நாட்டுப் படைகளும் இழுபறி நிலையில் தொடர்ந்து எதிர்த்து நின்றன.

இதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே சுமூகமான சூழ்நிலையை மீண்டும் உண்டாக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி-சீன அதிபர் ஷீ ஜிங் பிங் ஊஹான் நகரில் நேரடியாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதுபோன்ற சூழ்நிலை உண்டாவதைத் தவிர்க்க இரு நாடுகளுக்கும் பல்வேறு அளவில் உறவை வலுப்படுத்த முடிவெடுத்தனர்.

இம்முறை அத்தகைய உயர் மட்ட சந்திப்பு சாத்தியமா? இந்தக் கேள்விக்கு விடையளிப்பது எளிதல்ல.

சீனாவின் அடிப்படைக் குறிக்கோள்களில் நாட்டின் பாதுகாப்பும், எல்லையின் சீரான நிலையும்  முக்கியமானவை. சீனாவின் ஒரே நாடு இரு செயல்முறைகள் என்ற திட்டத்தின் கீழ் ஹாங்காங் மற்றும் தைவான் நாட்டையும் சீனா தன் பகுதி என்று கருதி செயல் பட்டு வருகிறது. இதை தைவான் ஓரளவு ஒப்புக் கொண்டது. ஆனால் தைவானில் தற்போதை அதிபர் ட்சாய் தேர்ந்தெடுக்கப் பட்ட பின், தைவானின் முழுமையான சுதந்திரம் பெருமளவில் பேசப்படுகிறது. இதை அமெரிக்கா ஆதரிக்கவே சீன&தைவான் உறவில் பெரும் பதட்டம் நிலவுகிறது.அது போலவே சீன&ஹாங்காங் உறவும் இழுபறியில் உள்ளது.

சீனாவின் நாடாளுமன்றமான தேசிய மக்கள் பேரவை கூட்டம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.  அந்தக் கூட்டத்தில் ஹாங்காங் மக்கள் நடத்தும் போராட்டங்களை ஒடுக்க சீன அரசுக்கு முழு அதிகாரம் அளிக்கும் சட்டம் தீர்மானிக்கப் பட்டுள்ளது. தைவான் கோவிட் தாக்கத்தை எதிர்த்து வெற்றிகரமாக செயல் பட்டதை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக உலக சுகாதார கட்டமைப்புக் கூட்டத்தில் பங்கு பெற முயற்சித்த போது அதை சீனா வலுவாக எதிர்த்தது. அப்போது தைவானுடன் எந்த நாடும் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று சீனா மீண்டும் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை  விடுத்தது. 

தென் சீனப் பெருங்கடலில் சீனா அண்டை நாடுகளான மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான், ஜப்பான், இந்தொனேசியா ஆகியவற்றுடன் தனது கடற்படையை உபயோகித்து அந்தப் பெருங்கடல் தனக்கே சொந்தம் என்று ஆதிக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் இந்திய எல்லையில் சீன படைக்குவிப்பு இந்தியாவுக்கு விடுக்கும் ஒரு எச்சரிக்கை என்றே தோன்றுகிறது. ஆகவே தற்போதுள்ள லடாக் எல்லைப் பதட்ட நிலை, பல மாதங்கள் நீடித்தாலும்  போராக மாறும் என்று தோன்றவில்லை.

ஏனெனில்  அமெரிக்காவுடன் நடந்து வந்த  சீன வணிகம் பெருமளவு குறைந்து போன பின்பு, இந்திய வணிகத்திலும் பொருளாதாரத்திலும் பெருமளவில் பங்கு பெற வேண்டிய கட்டாயம் அந்நாட்டுக்கு அதிகரித்துள்ளது.

இரண்டாவதாக இந்திய-பசிபிக் பெருங்கடலில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் ‘‘குவாட்'' பாதுகாப்பு கட்டமைப்பு உருவாகி வருகிறது. அதில் இந்தியா அரை மனதுடன் பங்கேற்று வருகிறது. சீனாவின் அழுத்தம் அதிகரித்தால் இந்தியா குவாட் அமைப்பில் முழுமையாக ஈடுபடும் அபாயம் உள்ளது. அது சீனாவின் எல்லைப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கலாம். ஆகவே சீனா இந்தியாவைப் பொறுத்தவரை அதிகம் சாடினாலும் அடக்கியே வாசிக்கும் என்பது என் அனுமானம்.

ஜூன், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com