சிறுவாணி சீற்றம்

சிறுவாணி சீற்றம்
Published on

கோவைக்கு மேற்கே 35 கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடுக்குகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது ஆனைகட்டி. இதன் அருகே இருக்கும் சித்தூர் வெங்கக்கடவில் அணைகட்ட கேரள அரசு 400  கோடி ரூபாயை ஒதுக்கி இருப்பது தமிழக மேற்குப் பகுதி மாவட்ட மக்களுக்கு அச்சத்தை உருவாக்கி உள்ளது.  இது ஒன்றும் புதிய திட்டம் அல்ல. இங்கே 30

ஆண்டுகளுக்கு முன்பே  கேரள அரசு   அணைகட்ட திட்டம் தீட்டியிருக்கிறது. 2000 ஏக்கர் நிலத்தை அரசு ஆர்ஜிதம் செய்ய உத்தேசித்து 480 ஏக்கர் நிலத்தை எடுத்து மலைவாழ் மக்களை அங்கிருந்து வெளியேற்றியிருக்கிறது.

சித்தூர் பிராஜக்ட் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு நின்று போன அந்தப்பணியையே இப்போது அட்டப்பாடி பள்ளத்தாக்கு பாசனத் திட்டம் என்றபெயரில் இப்போது தூசி தட்டி வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது. வெங்கக்கடவில் 450 மீட்டர் நீளமுள்ள பிரம்மாண்ட அணையும், அதனை தாண்டி நான்கு கி.மீ இடைவெளிக்குள் பனிரெண்டுக்கும் மேற்பட்ட தடுப்பு அணைகளும் எழுப்பப்பட இருக்கின்றன. 

‘‘இந்த அணை மட்டும் எழுந்தால் அதை தாண்டி சில கி.மீ தொலைவில் செல்லும் பவானி நதிக்கு செல்லும் முக்கிய ஆற்று நீர் சுத்தமாக தடைபட்டுவிடும். ஏற்கனவே வெங்கக்கடவுக்கு மேலே சில மைல்  தொலைவில்தான் சிறுவாணிக்கு குறுக்காக தமிழக தேவைக்காக காமராஜர் ஆட்சி காலத்திலேயே அணை எழுப்பட்டது. அதன்மூலம்தான் கோவை மாநகராட்சியின் பழைய நகராட்சி பகுதிக்கான குடிநீர்த்திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த அணையின் செயல்பாடு முழுக்க கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகளின் வசம் உள்ளது.

அங்கேயே இப்போதெல்லாம் அணை வறண்டுவிடும் நிலை  ஏற்பட்டுள்ளது. இங்கே அணை அமைந்தால் இந்த குடிநீர்த்திட்டமும் கேள்விக்குறியாகி விடும். தவிர புதிய அணை மற்றும் புதிய தடுப்பணைகளால் சிறுவாணி வழிப்பாதை மீண்டும் தடுக்கப்பட்டால் பவானி நதியின் நீராதாரம் குறைந்து  பில்லூர் அணை நிலையும் சிக்கலாகிவிடும். இதே பவானி நதிக்கு மேலாக சுமார் பதினைந்து கி.மீ தொலைவில்தான் 2004-ஆம் ஆண்டு முக்காலி என்ற இடத்தில் ஒரு பிரம்மாண்ட அணையும், தடுப்பணைகளும் கட்ட திட்டமிட்டது. அதுவும் நம் நீண்டகால எதிர்ப்பால், மத்திய அரசு சுற்றுச்சூழல் ஒப்புதல் கொடுக்கப்படாததால் கைவிடப்பட்டது. அது அமைந்திருந்தால் நிச்சயம் பவானி நதிநீர்  பில்லூருக்கே எட்டாமல் போயிருக்கும். அதை விட பலமடங்கு பெரிய அணையையே இப்போது அமைக்கிறது கேரள அரசு.  நாங்கள் சித்தூர் பகுதியில் அணைகட்ட இருக்கும் பகுதிக்கு சென்று பார்த்து  அங்குள்ள மூன்று தலைமுறை மக்களிடம் பேசியபோது ஒரு நாள் கூட எங்களுக்கு குடிநீர் இல்லை என்ற நிலை வந்ததில்லை. எதற்காக அரசு இங்கே அணை கட்டுகிறது என்றும் புரியவில்லை என்றார்கள். பின் ஏன் அணை? எங்களுக்கும் புரியவில்லை’’ என்கிறார் இது தொடர் பாகப் போராடிவரும் கோவை மாவட்ட  ம.தி.மு.க செயலாளர் ஈஸ்வரன்.

அகழியைச் சேர்ந்த அலோசியஸ் என்பவர் கருத்து  அப்பகுதி மக்களின் பிரச்னையை வெளிப்படுத்துகிறது.  ‘‘முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள விவசாய மக்கள் அணை வருவதாக சொல்லி  வெளியேற்றப்பட்டார்கள். அவர்களுக்கு ஒரு சிறிய தொகையை கொடுத்தது அரசாங்கம். இப்போது வரை அணை வந்தபாடில்லை. ஆனால் ஒவ்வொரு நிமிஷடமும் இங்கே அணை வரப்போகிறது என்று  சொல்லிச் சொல்லியே மக்களை பீதியில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறார்கள் எந்த நேரம் தங்களது நிலம் எடுக்கப்படுமோ என்ற பீதியில் இன்னமும் 1600 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யும் மக்கள் பீதியுடன்  இருக்கிறார்கள். எங்களைப்பொறுத்தவரை ஒன்று நிலத்தை எடுத்து அணைகட்ட வேண்டும். இல்லாவிட்டால் அணைக்காக ஏற்கனவே எடுக்கப்பட்ட நிலங்களை உரிய விவசாயிகளிடமே கொடுத்துவிட்டு  அணைகட்டும் வேலையை அரசு கைவிடவேண்டும்’ என்றார்.

முல்லைப் பெரியாறுக்கு பதிலடியா சித்தூர் அணை? கேள்வி  மேற்கு பகுதி தமிழக மக்களிடம் உள்ளது.  

செப்டெம்பர், 2012.

logo
Andhimazhai
www.andhimazhai.com