சிம்மக்குரலோனை அசத்திய சித்திரக்குரலோன்!

பேராசிரியர் நன்னன்
பேராசிரியர் நன்னன்ஓவியம் : ஜீவா
Published on

இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கும் போது, இதில் ஓர் ஆங்கிலச் சொல், சமற்கிருதச் சொல்கூட வந்துவிடக்கூடாது என்று என் உள்ளம் சொல்கிறது என்றால், அது தான் பேராசிரியர் நன்னனின் பாடம்!

சொலல் வல்லான் மட்டுமல்ல வெல்லும்
சொல் கொண்ட ஆற்றலாளன். அவரை திராவிட இயக்கத்தவராக நான் தெரிந்து கொள்ளும் முன்பு, சென்னைத் தொலைக்காட்சியில் தமிழ்ப் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார். எவரையும் எள்ளிநகையாடும் தமிழ்ச் சமுதாயம் அவரையும் எள்ளியது. 'நன்னனை மாதிரி பேசுங்க' என்பது பலகுரல் போட்டிகளில் ஒன்றாக மாறி இருந்த காலம் அது. சட்டக் கல்லூரி மாணவர் விடுதியில் என் நண்பர் குமாரதேவன் எல்லார் மாதிரியும் பேசுவார். நன்னன் மாதிரியும் பேசுவார். பெரியார் திடலில் நடந்த வாசகர் வட்டக் கூட்டங்களில் தான் நன்னனின் அரசியல் பாடங்களை அதிகம் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. இலக்கண சுத்தமாக தமிழ் நடத்துவது போலவே இலக்கண சுத்தமான அரசியலும் பேசுவார். எவர் தழுவலும் இல்லாத தன் பகுத்தறிவாக அவை இருக்கும். பொதுவாக கொஞ்சம் எட்ட நின்று மனிதர்களை கவனிக்கும் மனம் கொண்டவன் என்பதால் அவரோடு நெருங்கவில்லை. கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்திருக்கிறேன். கூட்டத்தில் நின்று அவரது பேச்சைக் கவனித்து வந்திருக்கிறேன்.

காலம் கடந்தது. விகடனில் பணியில் இருக்கிறேன். திடீரென்று ஒரு செல்பேசி அழைப்பு. 'திருமாவேலன் ஐயா இருக்காங்களா?'என்றது அந்தக் குரல். பேசுவது நன்னன் என காதோரக் கன்னம் உணர்த்தியது. உடனேயே,'ஐயா! நல்லா இருக்கீங்களா?' என்றேன். அவர் பேசவில்லை. அமைதியாகி விட்டார்.
சிறிது நேரம் கழித்து, 'திருமாவேலன் ஐயா இருக்காங்களா?' என்றார். 'ஐயா
சொல்லுங்கள்! பேராசிரியர் நன்னன் தானே பேசுவது.. நான் தான் திருமாவேலன்' என்றேன். 'என்னை உங்களுக்கு தெரியுமா?' என்றார் குழந்தையாக.

'உங்களைத் தெரியாவிட்டாலும் உங்கள் குரலை அறியாதா தமிழ்நாடு? வாரியார் குரலும் உங்கள் குரலும் மறக்க முடியாதது' என்றேன். அவரது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

'நாம் சந்தித்திருக்கிறோமா?' என்றார். 'நான் சந்தித்திருக்கிறேன். நீங்கள் சந்தித்ததில்லை' என்றேன். 'நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள் என்பதைச் சொல்லத்தான் அழைத்தேன். நன்றாகப் பேசவும் செய்கிறீர்களே?' என்றார். 'உங்களைப் போன்றவர்களது கூட்டங்கள் கேட்டதால் வரும்
செவிச்செல்வம்' என்றேன். 'நன்றாக எழுதுகிறீர்கள். எங்களையும் விமர்சிக்கிறீர்கள். அது பற்றி நேரில் பேசுவோம்' என்றவர், தான் நடத்தும் விழாவில் பங்கேற்றுப் பேசுவதற்கு என்னை அழைத்தார்.

'நீங்கள் அழைத்தது பெருமையாக இருக்கிறது. ஆனால் பொதுவாக நான் விழாக்களில் பங்கேற்பது இல்லை' என்றேன். 'இது புத்தக வெளியிட்டு விழா தான்' என்று சொன்னார். நான் அமைதியாக இருந்தேன். சில நொடிகள் கழித்து, 'உங்கள் முடிவை நான் மாற்ற விரும்பவில்லை' என்று
சொன்னார். அன்போடு செல்பேசி அணைந்தது.

பேராசிரியர் நன்னன்
பேராசிரியர் நன்னன்ஓவியம் : ஜீவா

சில நாட்கள் கழித்து நன்னன் பேசினார். 'ஐயா!' என்றேன். 'வணக்கம்! நன்னன் பேசுறேன். இந்த 'மற்றும்' என்ற சொல்லைப்  பயன்படுத்தாதீர்கள்' என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார். நான் எழுதியதையோ அல்லது நான் திருத்தியதையோ வாசித்துக் கொண்டு இருக்கிறார் என்று மட்டும் அறிந்து கொண்டேன்.

இன்னொரு முறை தொடர்பு கொண்டார். 'எழுத்தையும் எண்ணையும் சேர்த்து எழுதக்கூடாது' என்றார். கொஞ்சம் விளக்கமாக சொல்லச் சொன்னேன். 'இந்த இதழில், 2000 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது' என்று எழுதி இருக்கிறீர்கள். 'இரண்டாயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது' என்று தான் எழுத வேண்டும். கூடுதலாகச் சொல்ல நினைத்தால், 'இரண்டாயிரம்' என்று எழுதிவிட்டு அடைப்புக்குறிக்குள் 2000 ஆயிரம் என்று சொல்லிக் கொள்ளுங்கள். '2000 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது' என்று சொல்வது தவறு. எழுத்தோடு எண் எப்போதும் சேராது' என்றார் நன்னன்.

இப்படி எழுது, இப்படி எழுதாதே என்பதை விளக்குவதற்காகத் தான் அவரது உரையாடல்கள். ஒருமுறை கூட தன்னைப் பற்றிய செய்தி போடுவதற்காக அவர் பேசியது இல்லை. என்னை ஒரு விழாவுக்கு அழைத்தார் அல்லவா? நான் கலந்து கொள்ளாத விழா பெரிய அளவில் நடந்தது. அது குறித்த செய்தி போடவும் அவர் சொல்லவில்லை. இதுதான் நன்னன்.

அவரது இயற்பெயர், திருஞானசம்பந்தன். நன்னன் என்று தமிழ் மன்னன் பெயரைச் சூட்டிக் கொண்டார். என்னளவில் நன்னன் என்பது அவருக்கு காரணப் பெயர். அந்தளவுக்கு அவர் நல் மனிதன்.

அவர் மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். இலக்கியத்தில் 'முலை' என்ற சொல் இயல்பானது. ஆனால் ஆசிரியர்கள் 'முலை' எனச்
சொல்லாமல் முகை அல்லது நகில் என்று சொல்வார்களாம். இவரும் இருபால் பிள்ளைகள் வகுப்பில் இருப்பதால் நயம்பட உரைத்திருக்கிறார். குறும்பான ஒரு மாணவர் எழுந்து, 'அய்யா என் புத்தகத்தில் முலை என்று இருக்கிறது. உங்கள் புத்தகத்தில் முகை என்று இருக்கிறதா? எது  சரி?'என்று கேட்டிருக்கிறார். மாணவரின் குறும்பை நன்னன் அறிந்தார். 'ஒருவகை நாகரிகம் கருதி நான் அந்த சொல்லை வகுப்பில் தவிர்த்தேன்'  என்று இவர் சொல்லி இருக்கிறார். ஆனாலும் அந்த மாணவர் எதிர்வாதம் செய்துள்ளார்.

சில நாட்கள் கழிந்ததும் நன்னனுக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்தது. அதிலும் 'முலை' விவாதம் இருந்தது. 'பெண் பேராசிரியர்களே அதைக் கூச்சம் இல்லாமல் சொல்லும் போது உங்களுக்கு என்ன?' என்று அந்தக் கடிதம் கேட்டது. அந்தக் கடிதம் எழுதியவர் தனது பெயரைக் குறிப்பிடவில்லையாம். மாணவனின் கையெழுத்து பேராசிரியருக்குத் தெரியாதா? அந்த மாணவர் தான் எழுதியதாக உணர்ந்தார். மறுநாள் வகுப்பில் அந்த மாணவனின் பெயரைச் சொல்லாமல் சிறிது விளக்கம் சொல்லி இருக்கிறார்.

சில ஆண்டுகள் கழிந்தது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் உதவிப் பேராசிரியருக்கான நேர்முகத் தேர்வு. கல்லூரிக் கல்வித் துறை சார்பில் நன்னன் அவர்கள் அந்த தேர்வுக் குழுவில் உட்கார்ந்து இருக்கிறார். அந்த 'முலை' மாணவர், இப்போது உதவிப் பேராசிரியர் பணிக்காக வந்திருக்கிறார். நன்னனும் அந்த மாணவரும்  பார்த்துக் கொள்கிறார்கள். அண்ணலும் நோக்கினார். அவரும் நோக்கினார். என்ன பேசுவது?

நான்கு பேர் தேர்வுக் குழுவில் இருந்துள்ளார்கள். தனக்கு நிச்சயம் வேலை கிடைக்காது என்று மிரண்டார் அவர். கேள்விகளுக்கு சரியாக பதில் தரவும் இல்லை. உடலில் நடுக்கம் ஏற்பட்டும் உள்ளது. உடனே அவருக்கு அருகில் சென்ற நன்னன், 'தண்ணீர் குடியுங்கள், தெரிந்த பதிலைச் சொல்லுங்கள்' என்று சொல்லி இருக்கிறார். அதன்பிறகு அந்த மாணவர் பதில் அளிக்கத் தொடங்கி இருக்கிறார். அவர் சென்றபிறகு, 'மிகத் திறமையானவர், என்னிடம் படித்தவர் தான், அவரை தேர்வு செய்யலாம்' என்று நன்னன் சொல்லி இருக்கிறார். அந்த மாணவரே தேர்வு ஆனார். இன்று எங்காவது பேராசிரியராக நன்றாக இருப்பார்.

 நன்னன், பேரைப் போலவே நடந்து கொண்டவர். எழுத, பேச மட்டுமல்ல, வாழக் கற்றுக் கொடுத்த பேராசிரியர் அவர்.

தொடக்கப் பள்ளி ஆசிரியராக இருந்தவர் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக உயர்ந்தார் என்றால், அதற்கு இந்தப் பேருள்ளம் தான் காரணம். இரண்டு மகள்கள், ஒரு மகன் அவருக்கு. மறைந்து விட்ட மகன் நினைவாகத் தான் ஆண்டுதோறும் விழா எடுத்து வந்தார். அதனை புத்தக வெளியீட்டு விழாவாக மட்டுமல்லாமல், பாராட்டுப் புகழ் விழாவாக மட்டுமல்லாமல் ஏழை மாணவர்களுக்கு உதவி நிதி வழங்கும் விழாவாக நடத்தினார். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு நிதி தரும் விழாவாக நடத்தினார். அவரது மறைவுக்குப் பிறகும் அவரது குடும்பத்தினர் நடத்தி வருகிறார்கள். கடந்த மாதம் கூட நிதியளிப்பு விழா நடந்தது. நல்லதைப் படிப்பது மட்டுமல்ல, நல்லவனாக வாழ்வது தான் நன்னன் உணர்த்திய அறம்.

சென்னை பெரியார் திடலில் நடந்த புத்தக சங்கமம் விழாவில் 'எதைப் படிப்பது?' என்ற தலைப்பில் பேச வந்திருந்தார், நன்னன். எதைப் படிப்பது என்பதற்கு அவர் சொன்னதே, 'உன்னைப் படி' என்பது தான். தன்னைப் படிக்காதவர் எவரையும் படிக்க முடியாது. தன்னைப் படிக்காதவருக்கு எந்தப் புத்தகமும் புரியாது என்பது மட்டுமல்ல, புரிந்தும் என்ன பயன்? எவ்வளவு படித்த பிறகும் சிலர் மண்டூகங்களாய் இருக்கவும் எது காரணம்? தன்னைப் படிக்காதது தானே?

தன்னைப் படி என்று சொன்னவர் மட்டுமல்ல தன்னைப் படித்தவர் நன்னன். ஓர் அரங்குக்குள் வந்தார். வந்ததும் ஏதோ சொன்னார். 'குறை
சொல்வதாக நினைக்காதீங்க.. வயசு ஆகிவிட்டதா? எதையும் குறை சொல்லத் தான் தோன்றுகிறது. மாத்திக்கிறேன்' என்றார். எதுவும் தன்னிலிருந்து தொடங்க வேண்டும் என்றவர் அவர். 'நல்லாரைக் காண்பதும் நன்றே நல மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே' என்ற அவ்வை வாக்குக்குப் பொருத்தமானவர் நன்னன்.

அவருக்கெல்லாம் குறைந்தது மூன்று மணிநேரம் கொடுத்தால் தான் அவரது சிந்தனையை நாம் முழுமையாக உள்வாங்க முடியும்.

படித்ததைச் சொல்வது அல்ல அவரது பேச்சு. தனது பட்டறையில் உரசிப்பார்த்ததைச் சொல்லிக் கொண்டே இருப்பார். அவர்
சொல்வது எல்லாம் எங்கும் படித்துத் தெரிந்து கொள்ள முடியாததாக இருக்கும். ஒருவரை ஒருவர் பார்த்தால் வணக்கம்  என்று சொல்கிறோம் அல்லவா? அப்படி வணக்கம் சொல்லக்கூடாது, தமிழ் இலக்கியத்தில் வணக்கம் இல்லை, வாழ்த்து தான் சொல்ல வேண்டும் என்பார். 'நமஸ்காரம் ஆரிய வழக்கம்' என்பார். 'கைத்தறி நெசவாளர் துயர் துடைப்பதற்காகத் தான் துண்டு போடுவதை மேடையில் அதிகமாக்கினார் அண்ணா' என்பார். பறையை அடிக்கும் போது அந்த ஒலிக்கு, பாடல்கள் இருப்பதாக பாடிக் காண்பித்தார். மறைமலையடிகள் பேச்சு கீச்சுக்குரலில் மென்மையாக இருக்கும் என்பார். காசுப் பிள்ளை நோய்வாய்ப்பட்ட நிலையிலும் வகுப்பறைக்கு அவரை தூக்கிக் கொண்டு வருவார்கள். உற்சாகமாக பாடம் எடுப்பார்  என்பார். இந்த காசுப்பிள்ளை தான் பேராசிரியர் அன்பழகனுக்கும் நாவலர் நெடுஞ்செழியனுக்கும் நன்னனுக்கும்  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர். 'இவர் பெயர் எம்.எல்.பிள்ளை என்பார்கள்.
சட்டத்தில் எம்.எல்.படித்த முதல் ஆள் இவர் தான்' என்பார்.

சோறு ஆக்குகிறார், கீரை கடைகிறார், முறுக்கு பிழிகிறார், இட்லி அவிக்கிறார், வடை தட்டுகிறார் என்று ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் அதற்குரிய குணத்தோடு சொல்வார். எல்லாமே வயிற்றுக்குத்தானே போகிறது என்று நாம் ஒரே மாதிரி சொல்லிக் கொண்டு இருப்பதைக் கண்டிப்பார்.'நன்னனின் முகபாவம் எனக்குப் பிடிக்கும், அவர் தொலைக்காட்சியில் பாடம்  நடத்தும்போது எதிரே ஏராளமான மாணவர்கள் இருப்பது போல இருக்கும். எனக்குப் பிடித்த நடிகர் நன்னன் தான்' என்று சொன்னவர் சிவாஜி. சிம்மக்குரலோனை அசத்திய சித்திரக்குரலோன் நன்னன்.

பேராசிரியர் அன்பழகனைப் பேச அழைத்துச் செல்ல  அண்ணாமலைப் பல்கலைக் கழக விடுதிக்கு வருகிறார் அவரது அப்பா கல்யாணசுந்தரம் என்ற மணவழகர். அன்றைய தினம் அன்பழகனுக்கு ஒரு தேர்வு இருக்கிறது. அவர் தான், 'திருஞானசம்பந்தனை அழைத்துச்  செல்லுங்கள்' என்கிறார். அப்படிச் சென்றவர் தான் பெரியாரின் கூட்டத்தில் பேசி நன்னன் ஆனார். திறமை
சாலிகளை பார்த்தால், 'என்னோடு வந்து விடுகிறாயா?' என்று அழைத்துச் செல்லுதல் அய்யாவின் வழக்கம். அப்படிக் கிளம்பியவர், சில காலத்தில் தப்பித்து கல்வித் துறைக்குள் நுழைந்து... கல்வித் துறையில் இருந்து ஓய்வு பெற்றதும் மீண்டும் பெரியார் திடலுக்குள் வந்தது தான் நன்னனின் வாழ்க்கை.

இதையெல்லாம் அவர் இருக்கும்போது போய் அவருக்கு முன்னால் பேசியிருக்க வேண்டும் என்ற வருத்தம் வருகிறது. வருத்தம் தமிழ்ச் சொல்லா புலவரே?

செப்டெம்பர், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com