1993 இன் இறுதி நாட்கள். கொச்சி நகரத்திற்குச் சென்றேன். அங்கே 'வெளி' எனும் இடத்தில் ஒருவாரம் நீளும் தேசிய இசை விழா நடந்துகொண்டிருந்தது. அந்த கிறிஸ்துமஸ் இரவில் ஆர்.டி. பர்மனின் இசை நிகழ்ச்சி. பர்மனை எப்படியாவது சந்திக்கவேண்டும். இரண்டு நிமிடங்கள் போதும். மகிழ்ச்சியற்று வறண்டுபோன எனது பால்யத்தின் பள்ளிக்கூடப் பகல்களை உயிருள்ள பாடல்களால் நனைத்து ஆறுதலளித்ததன் நன்றிக்கடனுக்கு ஒரேயொருமுறை அவரைச் சந்திக்கவேண்டும். கொச்சியின் ஒரு நடுத்தர விடுதியில் அவர் தங்கியிருக்கிறார் என்பதை அறிந்து அங்கே சென்றேன். 'நான் ஆர்.டி.பர்மனின் தீவிர ரசிகன், அவரை ஒருகணம் பார்க்கவந்தேன்' என்று சொன்னபோது 'ஓய்வெடுக்கிறார், அறைக்குச் செல்ல யாருக்கும் அனுமதியில்லை' என்றார்கள். எதாவது ஒரு நேரத்தில் அவர் வெளியே வருவாரே, பார்த்தே தீர்வேன் என்ற அடத்துடன் அவ்விடுதியின் வரவேற்பறை நுரைமெத்தை ஒன்றில் சென்று அமர்ந்தேன். பலமணிநேரம் அங்கேயே இருந்தேன்.
அவ்வப்போது 'இங்கே ரொம்ப நேரம் இப்டி ஒக்காரக் கூடாது' என்று என்னை அதட்டித் துரத்த முயன்றனர் விடுதி அலுவலர்கள். ஆனால் நான் அமர்ந்த இடத்திலிருந்து அசையவேயில்லை. 'இப்டி ஒரு பையன் வந்திருக்கிறான். ஒரேயொரு நிமிசம் அவரப் பாத்தாப் போதும் அப்டீன்னு அவர்ட்ட
நீங்க கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ். முடியாதுன்னு அவரே சொன்னாருன்னா நான் போயிடறேன்,' என்று அவர்களிடம் மன்றாடினேன். காலையிலிருந்தே அன்னம் தண்ணியில்லாமல் நான் அங்கே அமர்ந்திருப்பதைப் பார்த்து இரக்கப்பட்டாரோ என்னவோ விடுதி மேலாளர்களில் ஒருவர் அறைத் தொலைபேசியில் ஆர்.டி. பர்மனிடம் விஷயத்தைச் சொன்னார். 'அறைக்கு வரச் சொல்லுங்கள்' என்று உடனடியாக பதில் வந்தது.
கொச்சியின் மிகப்பெரிய தங்கும் விடுதிகளில் ஒன்றல்ல அது. அதனுள்ளேயே ஒரு சாதாரண அறையில்தான் அவரைத் தங்க வைத்திருந்தனர். அக்காலத்தில் ஆர் டி பர்மன் வியாபார மதிப்பற்ற ஓர் இசையமைப்பாளர். சில ஆண்டுகளாக அவருக்குப் பெரும் படங்களோ பெருவெற்றிப் பாடல்களோ எதுவும் இருக்கவில்லை. எந்தவொரு முக்கியத்துவமும் இசைக்குத் தரப்படாத மூன்றாந்தரப் படங்களுக்கு இசையமைக்கும் கட்டாயத்திற்கு ஆளாகியிருந்தார். தமிழில் பூ மழை பொழியுது, உலகம் பிறந்தது எனக்காக, தெலுங்கில் ராக்கி, சின்னி கிரிஷ்ணுடு, அந்தம் என யாருமே பெரிதாகக் கேள்விப்படாத சில படங்களுக்கு இசையமைத்தார். அந்தம் என்ற படத்தில் அவர் மூன்று இசையமைப்பாளர்களில் ஒருவர்! ஹிந்தியில் ஆர் .டி. பர்மனின் காலம் முடிந்து அன்னு மல்லிக்கின் காலம் வந்து விட்டிருந்தது. இதையெல்லாம் யோசித்து வருந்தியவண்ணம் அவரது அறைக் கதவைத் தட்டினேன். தீஸரீ மன்சில், யாதோம் கி பாராத், ஷோலே, ஹம் கிஸி ஸே கம் நஹி, ஷான் என முந்நூற்றுக்கும் மேலான படங்களுக்கு இசையமைத்து பல பதிற்றாண்டுகள் ஹிந்தி வெகுஜன இசையின் உச்ச நட்சத் திரமாக விளங்கிய மகா கலைஞன் இதோ எனது கண்முன்னே!
தூயவெள்ளை பைஜாமா, சாம்பல் வண்ணக் குர்தா, சதுரச் சட்டவடிவமுள்ள பெரிய மூக்குக் கண்ணாடி. பார்த்தவுடன் நான் குனிந்து அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினேன். என்னைப் பிடித்து எழுப்பி அறைக்குள் அழைத்து அமரவைத்தார். அவரது முகத்தையே உற்றுப் பார்த்துகொண்டிருந்தேன். அந்தப் புன்னகையில் ஏதோ ஒரு சோகம் பரவியிருப்பதாக எனக்குத் தோன்றியது. 'நீங்கள் இசைக் கலைஞனா இல்லை பாடகனா?' என்று என்னிடம் கேட்டார். 'பத்து வயதிலிருந்து உங்கள் பாடல்களை நேசிக்கும் ஓர் எளிய ரசிகன்' என்று ஒருவழியாகச் சொன்னேன். வேறு எதுவுமே என்னால் சொல்ல முடியவில்லை. அவரைப் பார்த்தவண்னம் மௌனமாக அமர்ந்திருந்தேன்.
'சாப்பிட்டீங்களா?' என்று கேட்டார். நான் தலையாட்டினேன். 'தேநீர் குடிக்கலாமே' என்றார். வேண்டாம் என்றேன். மேற்கொண்டு அவருமே எதுவும் பேசவில்லை. என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். உளச்சோர்வுடைய சிரிப்பு. சில நிமிடங்கள் மௌனமாகக் கடந்துபோயின. இதற்குமேல் அவருக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது என்று எழுந்தேன். 'எப்போதாவது மீண்டும் சந்திப்போம்' என்று என்னை ஆரத் தழுவினார். கைகுலுக்கி அவருக்குப் பிரியாவிடை சொன்னேன். பின்னால் அந்த அறைக்கதவு அடைத்தபோது எனது கண்களிலிருந்து மாலைமாலையாகக் கண்ணீரடர்ந்தது. அதற்கு பத்தாவதுநாள் ஆர்.டி. பர்மன் இவ்வுலகையே விட்டுச் சென்றார்.
நினைவு தெரிந்த காலத்திலிருந்தே கேட்டறிந்த இசைத் துறைப் பிரபலங்கள் பலரை நேரில் சந்திக்கும் வாய்ப்பை மேக்னா சௌண்ட் இசை நிறுவனத்தின் மேலாளர் வேலை எனக்களித்தது. 1950களிலிருந்து மலையாளத்தில் மிகப் பெரிய இசையமைப்பாளராக விளங்கி தமிழிலும் காவல் தெய்வம், கஸ்தூரி திலகம், துலாபாரம், அந்தரங்கம் போன்ற பல படங்களுக்கு இசையமைத்த தேவராஜன் மாஸ்டரை அவர் இறுதியாக இசையமைத்த படங்களில் ஒன்றின் ஒலிப்பதிவு நேரத்தில்தான் சந்தித்தேன். ஒரு படத்தின் இசை விநியோக உரிமையை வாங்கும் முன் அப்பாடல்களைக் கேட்டு அவை வியாபாரமாகுமா என்று பரிசீலிக்கும் பொறுப்பு என்னுடையது. ஆனால் அன்றைக்கு நான் அங்கே சென்றது மாஸ்டரை நேரில் சந்திப்பதற்கே. அவர் எனது இசை ஆதர்சங்களில் ஒருவர் அல்லர் என்றாலும் மலையாளத்தில் இதிகாச நாயகனாக மதிக்கப்படுபவர். வணக்கம் வைத்து என்னை அறிமுகப்படுத்தியதும் ''என்ன, பாட்டு கேக்க வந்தியா?'' என்று கேட்டார். ''இல்ல மாஷே.. உங்களப் பாக்கத்தான் வந்தே'' என்றேன். ''எதுக்கு? இன்னிக்கு உனக்கு வேறு வேல எதுவும் இல்லியா?'' என்று கேலியான தொனியில் கேட்டவாறு அவர் தனது வேலையைத் தொடர்ந்தார். எங்கள் முதல் சந்திப்பு இப்படித்தான் நிகழ்ந்தது என்றாலும் பிற்பாடு பலமுறை சந்தித்தபோதெல்லாம் என்னை அன்புடனேயே நடத்தினார் தேவராஜன் மாஸ்டர்.
மாஸ்டரின் நேரடிச் சீடராகவும் மலையாளத்தின் பிரபல இசையமைப்பாளராகவுமிருந்த ஜான்சன், ஜான்சனின் சீடராகயிருந்த இசையமைப்பாளர் ராஜாமணி மற்றும் அக்கால மலையாள சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் எஸ். பி. வெங்கடேஷ், ஔஸேப்பச்சன், வித்யாசாகர் போன்றவர்களிடமெல்லாம் ஒரு பாடலாசிரியராவதற்கான எனது விருப்பத்தை பலவீனமாகத் தெரிவித்துப் பார்த்தேன். அவர்கள் யாருமே அதைப் பொருட்படுத்தவில்லை. நான் செய்துவந்த வேலையின் உயர் படிநிலையும் மதிப்பும் தடுத்ததால் யார் முன்னும் இறங்கிச் சென்று வாய்ப்புக் கேட்கவும் முடியவில்லை. 'கேசட் விக்கிற வேலை செய்யறவன் அதைச் செய்யணும். பாட்டெழுத எறங்கக் கூடாது. இந்தப் பாடலாசிரியர்கள் தொல்ல தாங்க முடியலயே பகவானே' என்றார் 'ஏழிசை கீதமே' இசையமைப்பாளர் ரவீந்திரன். அவருடனும் சிலகாலம் நான் மிகவும் நெருக்கமாக இருந்திருக்கிறேன்.
ஒருமுறை அவரது இல்லத்திற்குச்
செல்லும்போது அங்கே நடிகர் ரவிக்குமார் நின்றுகொண்டிருந்தார். எனது பால்யத்திலும் பதின்பருவத்திலும் வந்த எண்பதுக்கும் மேலான படங்களில் கதாநாயகன், துணை நாயகன், எதிர் நாயகன், வில்லன் என நடித்துத் தள்ளிய நடிகர். தமிழில் ஸ்ரீதேவியின் 'அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய்' பருகி அவர் நடித்த பாடல் 'இளமை எனும் பூங்காற்று'. பகலில் ஓர் இரவு படத்தின் அப்பாடலையும் காமக் கிளர்ச்சியின் உச்சமான அக்காட்சியையும் யாரால் மறக்க முடியும்! பிரேம் நஸீருக்குப் பின் பெண்மை கலந்த ஆணழகு அளவுக்குமேல் கொண்டிருந்தவர் ரவிக்குமார். நாளிதழ் சினிமா விளம்பரங்களிலிருந்து அவரது புகைப்படங்களைக் கத்தரித்து வீட்டுச் சுவரில் ஒட்டிவைத்த குழந்தைக் காலங்கள் என் நினைவில் ஓடின. ஆனால் அவருடன் பேசியபோது ஆச்சரியப்பட்டுப்போனேன். அவருக்கு மலையாளமே சரியாகப் பேச வரவில்லை.
திரைப்படங்களில் கேட்டது அவர் குரலே அல்ல! அடுத்த அறையிலிருந்து யாருடனோ பேசும் இசையமைப்பாளர் ரவீந்திரனின் குரலை அப்போதுதான் உற்றுக் கவனித்தேன். அந்த குரலைத்தானே ரவிக்குமாரின் குரலாகத் திரைப்படங்களில் கேட்டேன்! ''ரவியேட்டா.. இந்த ரவிக்குமார் சாருக்கு நீங்கதானா சினிமாவுல டப் பண்னீங்க?'' ''ஓ.. அது தெரியாதா ஒனக்கு? இவன் வெறும் உடலு. நாந்தான் உசுரு. அதான்டா எங்க உறவே..''. பிறப்பால் மலையாளி என்றாலும் தமிழ் மட்டுமே தெரிந்திருந்த ரவிக்குமாரை மலையாளத்தில் புகழ்பெற்றத் திரைநடிகனாக்கியது இசையமைப்பாளர் ரவீந்திரனின் பேசும் குரல்.
-யா ரஹ்மான்
எங்கள் நிறுவனம்தான் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் பாடல்களை ஹிந்தியில் வெளியிட்டது. அதன்வழியாகத்தான் நவீன காலகட்டத்தின் இசை நாயகனாக ஏ.ஆர். ரஹ்மான் இந்தியா முழுவதும் முதன்முதலில் புகழ்பெற்றார். பின்னர் தமிழில் ரஹ்மானின் புதியமுகம், திருடா திருடா படங்களின் இசைத் தொகுப்புகளும் தெலுங்கில் சூப்பர் போலீஸ் எனும் படத்தின் பாடல்களும் எங்கள் நிறுவனத் தால் வெளியிடப்பட்டன. ரோஜாவிற்கு ஆறாண்டுகளுக்கு முன்பே ரஹ்மான் இசையமைத்து மலேசியா வாசுதேவனும்
சித்ராவும் பாடிய 'டிஸ்கோ டிஸ்கோ' எனும் தமிழ் தனிப்பாடல் தொகுப்பினை நாங்கள் வெளியிட்டிருந்தோம். பின்னர் 1991ல் சுபா & செட் மி ஃப்ரீ எனும் பெயரில் ரஹ்மானின் ஆங்கிலத் தனிப்பாடல் தொகுப்பையும் வெளியிட்டோம். ஆனால் அப்போது அவருடைய பெயர் ரஹ்மான் அல்ல ஏ.எஸ். திலீப் குமார். 1994இல் ஒலிநாடாக்களின் அமைப்பு, தயாரிப்பு, விநியோகம் போன்றவை குறித்து உருவான சில சிக்கல்களும் கருத்து மோதல்களும் ஏ ஆர் ரஹ்மானையும் எங்கள் நிறுவனத்தையும் பிரித்தன. இதனால் எங்களுடனான எல்லா உறவுகளையும் அவர் முறித்துக்கொண்டார்.
இந்தியத் திரையிசையை வருங்காலங்களில் ஆட்டிப் படைக்கப்போகும் கலைஞன் ரஹ்மான் என்பதில் எனக்குச் சந்தேகமே இருக்கவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு மலையாள சினிமா இசையில் அதுவரை யாருமே முயலாத அணுகுமுறைகளை முன்னெடுத்த ஆர்.கே. சேகரின் மகன்தானே அவர். ரஹ்மான் அதுவரைக்கும் உருவாக்கிய பாடல்கள் அனைத்தும் நீடித்து நிற்கப்போகும் ஒரு பாட்டுக்காலத்தின் வரவைத்தான் அறைகூவின. ரஹ்மானை நமது நிறுவனத்திற்கு எப்படியாவது திரும்பக் கொண்டுவந்தே ஆகவேண்டும். அதற்கு என்ன வழி என்று மண்டை காய்ந்து நான் யோசித்துக் கொண்டிருக்கும்போது இடிவிழுந்ததுபோல் அந்த அசம்பாவிதம் நடந்தது. முன்னமே நாங்கள் வெளியிட்டிருந்த 'செட் மீஃப்ரீ' எனும் ரஹ்மானின் ஆங்கில ஒலிநாடாவை 'ஏ ஆர் ரஹ்மானின் முதல் சர்வதேச இசைத் தொகுப்பு' என்ற பெயரில் மீண்டும் வெளியிடுவதற்கு எங்கள் நிறுவனம் முடிவெடுத் தது. அதன் பொறுப்பினை முற்றிலுமாக என்னிடம் ஒப்படைத்தனர்.
இசையமைப்பைப் பற்றியும் ஒலியமைப்பின் சாத்தியங்களைப் பற்றியுமான தனது புரிதல்கள் பண்படாத ஒரு காலகட்டத்தில் ரஹ்மான் வெளியிட்ட ஓர் இசைத் தொகுப்பு அது. சமகாலத்தில் அவர் செய்துகொண்டிருக்கும் உலகத்தரமான ஒலியமைப்புக்கு எந்தவகையிலுமே ஒத்துவராதது. தனது இசைவாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் அப்படி ஒரு ஒலிநாடா வெளிவருவதை ரஹ்மான் விரும்பவோ அனுமதிக்கவோ மாட்டார் என்பதை நான் அறிந்திருந்தேன். மட்டுமல்லாமல் ஏ.எஸ்.திலீப் குமார் என்ற பெயரில் வெளியான அப்பாடல்களை ஏ.ஆர். ரஹ்மான் எனும் பெயரில் வெளியிடுவதற்கு அவரது அனுமதி பெறவேண்டுமே.
இவ்விஷயங்களை நிறுவனத்தின் உரிமையாளர்களிடம் சொல்லிப் புரியவைக்கப் படாத பாடுபட்டேன். ஆனால் டூயட், காதலன், ரங்கீலா, முத்து என இந்திய இசைத் தொழில் வணிகத்தின் உச்சத்திற்குச்
சென்று கொண்டிருந்த
ஏ ஆர் ரஹ்மான் எனும் பெயரை உடனடியாக விற்றுப் பணமாக்கவேண்டும் என்பதை மட்டும் குறியாகக்கொண்டிருந்த அவர்களுக்கு எனது அறிவுரைகள் எதுவும் தேவைப்படவில்லை. 'சொன்ன வேலையைச் செய்யடா' என்று எனக்குச் சொல்லாமல் சொன்னார்கள். அவ்வாறாக நான் வடிவமைத்த புது அட்டைப் படமும் பாட்டு வரிசையுமாக 'ஏ.ஆர். ரஹ்மானின் முதன்முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம்' வெளியானது.
ஏ. ஆர். ரஹ்மான் எனும் பெயரை வைத்து எதை வெளியிட்டாலும் லட்சக்கணக்காக விற்கக் கூடிய அந்தக் காலகட்டத்திலும் 'செட் மீ ஃப்ரீ' எந்தவொரு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. ஒட்டுமொத்தமாகப் பதினெட்டாயிரம் பிரதிகள் விற்பனையாயின. பத்து லட்சம் பிரதிகள் விற்பனையானதற்கான 'பிளேட்டினம் டிஸ்கி'னை ஹிந்தி ரோஜா வழியாக முதன்முதலில் தனக்கு வாங்கித்தந்த 'மேக்னா சவுண்ட்' தன் வாழ்க்கையில் ரஹ்மான் மிகவும் வெறுக்கும் ஒரு பெயராக மாறியது.
இத்தகைய கடுமையான பல கருத்து வேறுபாடுகளைத் தாங்கிக்கொண்டுதான் ஐந்தாண்டுகாலம் அங்கே வேலை செய்தேன். இருந்தும் உலகம் முழுவதுமிருந்து வரும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட பலப்பல இசைகளை அளவில்லாமல் கேட்கும் வாய்ப்பினை எனக்கு வழங்கியது அந்த வேலைதான். அதே வேலை வழியாகத்தான் எம்.எஸ். வி, டி. எம். எஸ், பி. பி. எஸ், மலேசியா வாசுதேவன், ராஜ்குமார், ஜிக்கி என நான் ஆராதித்த பலரின் நேரடி அறிமுகம் எனக்குக் கிடைத்தது. குன்னக்குடி வைத்தியநாதன், சுதா ரகுநாதன், ஓ.எஸ். தியாகராஜன், தலேர் மெஹந்தி, அன்னு மல்லிக், மனோ, உண்ணி மேனன், உண்ணி கிருஷ்ணன், ஸ்ரீநிவாஸ், சுஜாதா, சித்ரா போன்றவர்களுடன் சேர்ந்து பணியாற்றவும் முடிந்தது. பிற்காலத்தில் தெலுங்கு சினிமா இசையின் ஏ ஆர் ரஹ்மான் என்று அழைக்கப்பட்ட தேவிஸ்ரீ
பிரசாத்தை முதன்முதலில் அடையாளம் கண்டு அவருக்கான ஆரம்பகால வாய்ப்புகளை அளிக்கவும் முடிந்தது.
ஓர் அங்குலம், அரை அங்குலம், கால் அங்குலம் ஒலிச் சுருள்களில் நிகழ்ந்துகொண்டிருந்த ஒலிப்பதிவு தொழில்நுட்பம் 'ஏ டேட்ட்' எனப்படும் சிறு ஒலிப்பேழைக்கு மாறுவதைக் கண்டேன். அத்தொழில்நுட்பம் ஓரிரு ஆண்டுகளிலே காலாவதியாகி எல்லாமே ஒட்டுமொத்தமாகக் கணினிக்குள் புகுந்த காலகட்டத்திற்கும் சாட்சியானேன். புகைப்படங்களைக் கையால் கத்தரித்தெடுத்து மற்றதையெல்லாம் கையால் வரைந்து உருவாக்கிக்கொண்டிருந்த அட்டைப் படங்களும் காகித விளம்பரங்களுமெல்லாம் கணநேரத்தில் கணினியில் மலரும் ஃபோட்டோஷாப் காலம் வருவதை முன்னமே கண்டு அதைப் பயன்படுத்தினேன். 1997 ஏப்ரல் மாதத்தில் அதாவது எனது திருமணம் முடிந்து இரண்டாவது மாதத்தில் நான் மேக்னா
சௌண்டிலிருந்து விடைபெற்றேன்.
கம்பெனியிலிருந்து எனக்கு வரவேண்டியிருந்த மொத்தப் பணத்திற்கும் ஒலிநாடாக்களையும் இசைத்தகடுகளையும் வாங்கிப் பொதிந்து பெட்டிகளாக பத்திரப்படுத்தி வீட்டிற்குக் கொண்டு வந்தேன். இனிமேல் ஒருபோதும் அவற்றை வாங்க முடியாது என்ற பதற்றமும் என்றைக்குமாகக் கைவிட்டுப் போகாமல் சிலவற்றையாவது பிடித்து வைக்கலாமே என்ற பேராசையும்தான் அப்படியெல்லாம் என்னைச் செய்ய வைத்திருக்கக் கூடும். 'வேலையை விட்டுவிட்டேன்' என்று நான் சொல்லும்போது எல்லாவற்றையும் இழந்துவிட்ட ஒருத்தியைப் போல் என்னை வெறித்துப் பார்த்த என் மனைவியின் முகம் ஒருபோதும் என்னால் மறக்க முடியாதது.
(அடுத்த பகுதியில் நிறைவுறும்)
நவம்பர், 2019.