சித்த மருத்துவம்

Published on

நிலவேம்பு  ஒரு மலிவான எளிதில் கிடைக்கக்கூடிய மிகச் சிறந்த மூலிகை என்றும் அதற்கு போதிய ஆதரவு வேண்டுமென்றும்” இந்தியாவின் மருந்தியல் துறையின் தந்தை மற்றும் முதல் மருந்தியல் பேராசிரியர் கர்னல் டாக்டர் ஆர்.என் சோப்ரா

நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தனது நெடிய ஆய்வுக்குப் பின் கூறியுள்ளார்.  தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது டெங்குவை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் சார்பில் நிலவேம்புக் குடி நீர் வழங்கப்பட்டு வருகிறது. நிலவேம்பு குடிநீர் பற்றிய விவாதங்களால் மக்கள் மத்தியில் குழப்பமும் எழுந்துள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறளில் மருந்து என்ற அதிகாரம் உள்ளது. அதற்கு முன்பு தோன்றிய சங்க இலக்கியங்களிலும் மருந்து என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு உள்ளது. எனவே தமிழ் மருந்துவம் தாய் மருத்துவமாகும். மிகவும் தொன்மையானதும் கூட.

வங்காளத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே நிலவேம்பு, சீரகம், ஏலக்காய் கொண்டு தயாரிதத ”ஆலூயி” என்ற மருந்து வீட்டுக்கு வீடு பயன்படுத்தப்படும் குழந்தை மருந்தாக இருந்துள்ளது.

 அனுமான அடிப்படையில் மருந்து கொடுப்பது நவீன மருத்துவத்தின் ஒர் அங்கம்தான். அப்படியிருக்க நிலவேம்பு  குடிநீர் வழங்குவதை ஏன் எதிர்க்கவேண்டும்.  நிலவேம்பு குடிநீர் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் என்று எந்த ஆய்வாளரும் கூறவில்லை. நிலவேம்பின் ஒரு வேதியில் கூறை வைத்து விலங்கியல் சோதனைகள் அடிப்படையில் எடுத்துக்காட்டுவது ஏற்கமுடியாத ஒன்று.  நிலவேம்பு குடிநீர் ஒன்பது பொருட்கள்  கொண்ட ஒரு கூட்டுமருந்து. ஏதாவது ஒரு சிறு பக்கவிளைவு இருந்தாலும் பிற மருந்து அம்மருந்தை சமன்படுத்தும்.  பிரிட்டிஷ் ஆட்சியின் போதே மலேரியாவைக் குணப்படுத்தும் கொய்னாவைவிட சிறந்த மருந்தாக நிலவேம்பு கருதப்பட்டது.

சென்ற நூற்றாண்டு தொடக்கத்திலேயே இதன் மூலப்பொருட்கள் பிரிக்கப்பட்டு ஆய்வுக்கு  உட்படுத்தப்பட்டன. ஆக இனிதான் நிலவேம்புக்கு ஆய்வு செய்யவேண்டும் என்ற நிலை இல்லை.

டாக்டர்  சோப்ரா மற்றும் டாக்டர் நட்கர்ணி போன்ற இந்திய மருத்துவ விஞ்ஞானிகள் நிலவேம்பின் செயல்களை விளக்கியுள்ளார்கள். அதற்குப் பக்க விளைவுகள் உண்டு என்று ஒரு வார்த்தை கூட கூறவில்லை.  மேலும் நிலவேம்பு குடிநீர் மூலிகைத் தேயிலை வகையைச் சார்ந்தது. நாம் வாழ்நாள் முழுவதும் புத்துணர்ச்சிக்காக காப்பியும் தேநீரும் பயன்படுத்துவதை விட சில தினங்களே பயன்படுத்தப்படும் நிலவேம்புகுடிநீர் எப்படி கெடுதல் செய்யும்.?

ஒரு மருந்தின் செயல் மற்றும் தீயச்செயல் இருக்கும் தூரத்தை நாம் குணமாக்கும் குறியீடு என்கிறோம். பெனிசிலின் மருந்தின் குணமாக்கும் குறியீடு 1:1000  அதாவது ஒரு பங்கில் நோயை குணமாக்கும் பென்சிலின், ஆயிரம் பங்கு கொடுத் தால் தான் நச்சுத்தன்மையை காட்டும். அதுபோலதான் சித்தமருத்துவத்தின் குடிநீர் வகைகளும். மலேரியா பரவலாகக் காணப்படும் காலத்தில் மலேரியா உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் குளோரொகுயின் மாத்திரை கொடுப்பதில்லையா? மலேரியா என்றால் அது குணப்படுத்தும், அது இல்லையென்றால் காய்ச்சல் குணப்படும்.

நிலவேம்பு குடிநீர் ஏதாவது ஒரு நாள் அல்லது தொடர்ந்து ஐந்து நாட்கள் பருகுவதால் மலட்டுத்தன்மை வரும் எனக்கூறுவது அடிப்படை மருந்தியல் அறிவின்றி கூறுவதாகும்.  இதை குடிநீரோடு நிறுத்திக் கொள்ளாமல் மருந்து மாத்திரை டானிக் போன்ற வடிவிலும் தயாரிக்க அரசு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவேண்டும். வீட்டுக்கு வீடு நிலவேம்பு பயிரிடத் தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும். மஞ்சள்காமாலை, சோரியாசிஸ் போன்ற நோய்களுக்கு மக்கள் சித்த மருத்துவர்களைத் தேடுகிறார்களோ அதுபோல டெங்கு போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கும் சித்தமருத்துவர்களை அணுகி மருத்துவமனைகளிலே தங்கி சிகிச்சை எடுக்கும் அளவுக்கு மருத்துவமுறைகளை மாற்றி அமைக்கவேண்டும்.

 (மருத்துவர் ஜோசப். திருநெல்வேலி சித்த மருத்துவக்கல்லூரியின் முன்னாள் மருந்தியல் துறை பேராசிரியர். சந்திப்பு: ம.கண்ணன்)  

நவம்பர், 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com