சிதம்பர நினைவுகள்

Published on

‘கேரளாவில் அவன் நம்மள மாதிரி. இலக்கியத்துக்காகவே வாழ்பவன்’ தன்னுடைய எக்காளமிட்ட சிரிப்பில் எதையெதையோ பொதிந்து வைத்து பாலசந்திரன் சுள்ளிக்காடைப் பற்றி ஜே.கே. சொன்னது இன்று மாதிரியே இருக்கிறது. காலம்தான் ஒரு அதிவேக விரைவு ரயில் வண்டி மாதிரி எத்தனை சீக்கிரம் ஓடிவிடுகிறது.

எதையாவது எழுத வேண்டுமென்று மனசுக்குள் வெப்பசலனம் அதிகமானபோது மழைநீராய் எனக்குள் பெய்தவர் மலையாளக் கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு.

சிதம்பர நினைவுகள் என்ற பாலசந்திரனின் வாழ்வனுபவங்களின் தொகுப்பை மொழிபெயர்க்க ஆரம்பித்ததே ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட நிமிடம்தான். ஸ்ரீபதி பத்மநாபா மொழிபெயர்த்து அவரே பெருமிதப்பட்டுக் கொள்ளக்கூடிய அளவுக்கு தரமாய் வந்திருந்த  ‘ஆரண்யம்’ என்ற, மிக குறைந்த வெளியீடுகளே வந்த சிற்றிதழில் வெளியான பதிவை வாசித்தபின் நடத்திய நீண்ட பயணத்தில் என்னென்னவோ நிகழ்ந்திருந்தது.

பாலன் குடும்ப நண்பராயிருந்தார். எங்கள் வீட்டு மனிதனாய் இரண்டு நாட்கள் தங்கிப் போனார். திருவண்ணாமலை முற்றம் நிகழ்ச்சியில் பேசினார். அந்த மலையாள கவிதை அனுபவத்தை நான் தமிழில் எழுதி தினமணியில் அட்டைப் படக் கட்டுரையாக பிரசுரம் பெற்று கவனம் பெற்றேன். மெல்ல மெல்ல திக்கித்திக்கி அக்கா மகளிடம் மலையாளம் வாசிக்கக் கற்றிருந்தேன். இப்படியான ஆரோக்கியமான நிகழ்வுகள் அளித்த உற்சாகத்தில் பாலனின் “சிதம்பர நினைவுகள்” புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை மொழிபெயர்த்தேன். எனக்கு வீட்டிலேயே தராசு முள் சற்றும் பிசகாத விமர்சகராகவும் இருக்கும் பவா அதைப் படித்துவிட்டு மொழிபெயர்ப்பு நன்றாக வந்திருப்பதாகவும் தமிழ் மொழி நல்ல முறையில் கைகூடி வருவதால் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால் நன்றாக எழுதலாம் என்று சொன்னதும் எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்தது. அப்படியே அந்த புத்தகம் முழுவதையும் எழுதி முடித்திருந்தேன். அதற்குள் ஒரு வருடம் என்னிலிருந்து விடை பெற்றிருந்தது.

ஆனால் அந்த ஒரு வருடம் எனக்கு பல வருடங்களையும் புதிர்களையும் அற்புதங்களையும் நிகழ்த்திக் காட்டிக் கொண்டேயிருக்கிறது. முழுக்க முழுக்க உண்மையை அதன் மிக அருகில் நின்று நிர்வாணமாய், இதோ பார் இவ்வளவுதான் நான் என தோலுரித்து நின்றது.

 நான் கவிஞன், கல்லூரிகளில் சிறப்பு விருந்தினர், பன்னாட்டு கவியரங்குகளில் மலையாள மொழியை பிரதிநிதித்துவப்படுத்துபவன், அற்பன், வீட்டிற்கு வரும் விற்பனைப் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சிப்பவன், சாப்பிட வழியில்லாமல் திருவோணத்தன்று பிச்சையெடுத்தவன், பசி பொறுக்க முடியாமல் ரத்தம் விற்றவன், அந்த பணத்தை பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் உடன் ரத்தம் விற்க வந்தவனின் தங்கைக்கு மருந்தும் அவன் அம்மாவிற்கு தோசையும் வாங்கிக் கொடுத்துவிட்டு வெளியேறியவன், அதே நேரத்தில் நோபல்விருது எத்தனை தவறாக கொடுக்கப்படுகிறதென்பதை நோபல் அரங்கிலேயே பேசுபவன் என அடுக்கிக் கொண்டே போகும் சம்பவங்களின் உண்மை நம்மை நேராக இதயத்தை சென்று தாக்கும். தமிழ் வாசகப்பரப்பில் சிதம்பர நினைவுகள் என்ற புத்தகம் பலப்பல விதங்களில் தாக்கம் செய்தது. கண்ணீர் மல்க வரும் கடிதங்களும், தொலைபேசி உரையாடல்களும், மேலதிகமாக அந்த புத்தகத்தில் வரும் ஏழைக் கவிஞருக்கு பண உதவியும் வீடு கட்டியும் உதவிய தமிழ் வாசக மனங்களை என்னவென்று சொல்வது?

இந்த புத்தகத்தை ஒரு சேர படிக்க நேர்ந்து, நெஞ்சு வெடித்துவிடும் முன் கவிஞரை போய் பார்க்க வேண்டுமென்று எர்ணாகுளத்திற்கு பஸ் ஏறின தமிழ் வாசகர்களில் சிலரை நானறிவேன். ஆனால், ‘இல்லை மன்னிக்க வேண்டும், நீங்கள் பார்க்க வந்த பாலன் இப்போது இல்லை, இந்த வாழ்வில் மீந்திருப்பது ஒரு ட்ரஷரி எம்ப்ளாயி மட்டுமே. வருகிறேன்’ என்று அறைக்குள் போன நேர்மையை மீண்டுமாய் தரிசித்துவிட்டு அவர்கள் திரும்பி வந்தார்கள். அந்த நேர்மையை எப்போதும் அவர் உயிர் மூச்சு போல இறுக்கி பிடித்தபடி வாழ்கிறார். அது நம்மைக் கேள்வி கேட்கிறது. மனசாட்சியை உலுக்குகிறது. யாருக்கும் தெரியாமல் மன அடுக்குகளில் அழுந்தியிருக்கும் கசடுகளை பாரம் கொள்ள வைக்கிறது.

எழுதுவது போலவே வாழும் அந்த கவிஞனை கேரள மக்கள் எங்கள் கவிதைக்கு வயது ஐம்பது என்று அவர் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். கேரளாவிலேயே அவர் வீட்டில் போய் சந்திக்க ஆசைப்பட்டு, இளந்தூறல் பிசுபிசுத்த எர்ணாகுளம் பஸ் ஸ்டாண்டில் போய் ‘பாலசந்திரன் சுள்ளிக்காடு வீடு’ என ஆட்டோக்காரரைக் கேட்டவுடன் ‘நம்ம பாலன்ட வீடல்லே வரு’ என ஆட்டோவில் கூட்டிக்கொண்டு போனார்கள். இந்த புத்தகத்தில் நான் அனுபவித்த எந்த நெருப்புமற்று என் ஸ்நேகிதனாய் தன் காதல் மனைவி கவிஞர். விஜியலக்ஷ்மியோடு வரவேற்று தமிழ்நாட்டிலயிருந்து வந்திருக்கறதினால இட்லியும் பருப்பு சாம்பாரும் வச்சிருக்கேன் ஷைலஜா சாப்பிடுங்க என்றதிலிருந்து ஆரம்பித்து, சிதம்பர நினைவுகளில் சில பகுதிகளை மீண்டும் அவர் குரலில் வாசித்துக் காண்பித்து அதன்  வழி பல செய்திகளைப் பகிர்ந்து, நேரம் போனது தெரியாமல் பேசிக் கொண்டிருந்ததால் சமைக்க மறந்து எல்லோருமாய் வெளியே போய் சாப்பிட்டுவிட்டு பஸ் ஏறி உட்கார்ந்த போது, ஜன்னலுக்கு வெளியே நின்று கையைப்பிடித்து,  “எப்போழும் விளிக்கணம்ட்டா” (அடிக்கடி பேசணும்) என்ற பாலனிடம் பேசிக்கொண்டேயிருக்கிறேன்.

பாலன் - விஜியலக்ஷ்மியின் ஒரே மகனின் திருமணத்திற்கு கேரளாவின் அரசியல், கலை, இலக்கியத்தின் உச்சத்திலிருப்பவர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். பார்க்க பார்க்க வியப்பாயும் ஆச்சர்யத்தின் உச்சத்துக்கும் போய்விட்டோம் நாங்கள். எந்த உதவியாளருமற்று வந்திருந்த கேரள மந்திரிகளும் முன்னணி நடிக நடிகைகளும் மிக மிகச் சாதாரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிகவும் ரிலாக்ஸாக தங்கள் சக நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தது தமிழ்நாட்டை தவிர்க்க முடியாமல் ஞாபகப் படுத்திக்கொண்டேயிருந்தது. ஆனால் அவ்வளவு பேருக்கும் ஃப்ரைடு ரைஸ், கொஞ்சம் சிப்ஸ், பாயசம் என எளிமையானதொரு விருந்து தயாராகயிருந்தது எங்களை மேலும் ஆச்சரியப்படுத்தியதைப் பார்த்த பாலன்,  “இன்று காலைல கல்யாணம் முடிந்தவுடன் மிகப் பிரமாதமான அசைவ விருந்து ஏற்பாடு செய்து மணமக்களே நேரில் போய் பக்கத்திலிருக்கும் அனாதாஸ்ரமத்தில் கொடுத்துவிட்டு மாலை மூன்று மணி வரை அவர்களோடு இருந்துவிட்டுதான் வந்தார்கள். அப்பறம் இங்க வந்திருக்கிறவங்கெல்லாம் எப்பவும் நல்ல சாப்பாடுதானே சாப்பிடறாங்க, இன்னக்கி ஒரு நாள் சாதாரணமான சாப்பாடு சாப்பிடட்டுமே” என்றார். இந்த பதில் என் மீதி ஆயுசுக்கும் என்னை மாற்றியிருக்கிறது. எளிமையிலிருந்துதான் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

பாலசந்திரனின் மிக முக்கியமான ஒரு கவிதையோடும் எல்லாவற்றிற்குமான நன்றியோடும் இந்த பகுதியிலிருந்து நான் விடைபெறுகிறேன்.

ஜான் எங்கே?
பொங்கும் கடல்களின்
கலைகளின் ஊடே
சோகத்துடன் காலம்காலமாய்
அலைந்துவிட்ட நான்
இப்போது தேடுவது ஒரு மனிதனை -
ஜான் என்று வேதாகமங்களில் குறிப்பிடப்பட்ட
பசியற்ற நிழலற்ற
விலாசமற்றவனை.

நாள் இறந்து கொண்டிருக்கிறது.
நகரத்தின் சோகமான விழிப்பு
சோடிய இரவில்
கொட்டிக் கொண்டிருக்கிறது.
வடிவங்களின் ஒரு நதி.
உடைந்துபோன அமைப்புகளின் திட ஓடை.

வெட்கமற்ற என் கண்கள்
வாழ்வின் பைத்தியக்கார உருவகத்தை
ஜனன மரணங்களின் போக்குவரத்தில்
தேடுகின்றன.

கரிபடிந்த
உயிர்க்கூற்றியல் படிக்கட்டுகளில்
ஏறுகின்றன
ரசாயனச் செய்திகள்.

வீடு எண். 20
அதே அறை
மெழுகுவர்த்தி தனியாக எரிகிறது.
என் கிரகங்களை ஒரு காலத்தில்
அவற்றின் பாதைகளிலிருந்து
கலைத்துத் தள்ளிய
மேரி

கண்களில் கதிர்களுடன்
எரியும் வேட்கையாலான
தீராத ஆசைப்படுக்கையில் கிடக்கிறாள்.
மெலிதாகக் கேட்கிறேன்:

“ஜான் எங்கே”
“போ, போ, ஜானைப் பாதுகாப்பவளா நான்!”

அதே சாராயக்கடை.
நரகத்தின் புனித நீரை
வழங்கும் அந்த
அயோக்கியனைக் கேட்கிறேன்:

“இன்று ஜான் வந்தானா?”

தெரிந்தவர் கிளாஸ் ஒன்று
கொடுக்கிறார் சிரித்துக் கொண்டே:

“இவ்வளவு காலம் எங்கே போனாய்
கவிஞனே!
அந்தச் சாத்தானின் ரத்தத்தைத் தான் குடி”

“ஜான் வந்தான்
உல்லாசப் பாடல் ஒன்றின் நடுவே,
போனான்
எப்போது என்று தெரியாது

தடுக்கியவுடன் நிறுத்திவிட்டு
“அவனை பாதுகாப்பவர்களா நாங்கள்?”
அதிர்ந்துபோய் ஒரு வாய்
நேராகக் குடித்தேன்.

இறங்கும் பாதரசம்
தொண்டையில்
எரிந்தும் புதைந்தும்.

ஆங்கிலத்தில் : சச்சிதானந்தன்.
அப்புறம் தமிழில் : நாகார்ஜூனன்

ஜூலை, 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com