சாரு பதில்கள்

Published on

கேள்வி: PK? தரணீஷ்வர், புதுதில்லி.

பதில்:  நீங்கள் கேட்ட பிறகுதான் போய்ப் பார்த்தேன்.  அட்டகாசமான படம்.  வெளி கிரகத்திலிருந்து பூமிக்கு வரும் ஆமிர் கான்.  பூமிக்கு வந்த அடுத்த நிமிடம் அவருடைய ரிமோட் தொலைந்து விடுகிறது.  திரும்பவும் அவர் தன் கிரகத்துக்குப் போகிறாரா என்பதே கதை.  ரகளை செய்திருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி.  ஏற்கனவே முன்னா பாய் எம்பிபிஎஸ், த்ரீ இடியட்ஸ் போன்ற நல்ல படங்களைக் கொடுத்தவர். 

ஆமிர் கானின் நடிப்பும் பிரமாதம்.  முதல் பத்து நிமிடங்களில் அவர் நிர்வாணமாகவே நடித்திருக்கிறார்.  (அவருடைய கிரகத்தில் மனிதர்கள் ஆடை அணிவதில்லையாம்.)  அந்த தைரியம் இங்கே கமலைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.  இந்தியா முழுவதும் சக்கை போடு போடுகிறது பிகே.  வசனங்களில் தியேட்டரே குலுங்குகிறது.  அத்தனை கிண்டல், கேலி.  படத்தில் எனக்குத் தெரிந்த இரண்டே குறைகள், நீதி போதனையைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்; இசை இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம்.  இந்தப் படத்தைத் தமிழில் எடுத்துக் கெடுத்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்.   

கேள்வி: தனி மனித சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பிரான்ஸும் காலனி ஆதிக்கத்தில் ஈடுபட்டுள்ளது. ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஏன் இந்த முரண்பாடு?  சிறந்த இலக்கியமும் சினிமாவும் உருவாக்கப்படும் லத்தின்அமெரிக்க நாடுகளிலும் குற்றம் அதிக அளவில் நடை பெறுகிறது. சிறந்த இலக்கியங்களால் நல்ல சமுகத்தை உருவாக்க முடியும் என்ற வாதத்தை மேற்கண்டவை சந்தேகிக்கவைக்கின்றனவே?  

-சக்தி கணபதி.

பதில்: உங்கள் கேள்வியை மிக முக்கியமானதாகப் பார்க்கிறேன்.  ஃப்ரான்ஸ் காலனி ஆதிக்கத்தில் ஈடுபட்டது.  ஆனால் அவர்கள் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறார்கள்.  இன்று பாரிஸ் நகரில் ஒரு காலத்தில் ஃப்ரான்ஸின் காலனியாக இருந்த அல்ஜீரியர்கள் பெருமளவில் இருக்கிறார்கள்.  அல்ஜீரியர்கள் மட்டும் அல்ல; பல ஆஃப்ரிக்க நாட்டு மக்களுக்கும் ஃப்ரான்ஸ் புகலிடம் தந்துள்ளது.  இந்தியாவில் இலங்கை அகதிகள் மாட்டுக் கொட்டடியைப் போன்ற இடங்களில் அடைக்கப்பட்டார்கள்.  ஆனால் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் எல்லா நாட்டு அகதிகளும் நல்ல வசதியோடு வாழ்கிறார்கள். 

ஆனால் உங்களுடைய இரண்டாவது கேள்வி இன்னமும் என்னை உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சினைதான்.  கொடுங்கோலன் ஜாரின் ஆட்சியில்தான் தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, துர்க்கனேவ், ஆண்டன் செகாவ் போன்ற மேதைகள் வாழ்ந்தனர்.  கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில் எல்லோருக்கும் ரொட்டித் துண்டும் வோட்காவும் கிடைத்தது.  ஆனால் இலக்கியம் வெளியேறி விட்டது. 

லத்தீன் அமெரிக்க நாடுகளில் நிலவும் அதி பயங்கரமான வறுமைதான் அங்கே நடக்கும் குற்றச் செயல்களுக்குக் காரணம்.  அதை இலக்கியமும் சினிமாவும் பதிவு செய்து கொண்டிருக்கிறது.  அவ்வளவுதான்.  ஆனால் இலக்கிய வாசிப்பு உடைய லத்தீன் அமெரிக்க சமூகத்திற்கும் இலக்கியமே அறியாத தமிழ் சமூகத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், அங்கே உள்ள இலக்கியம், சினிமா வாயிலாக நமக்கு எல் சால்வதோர், டொமினிகன் ரிபப்ளிக், பெரூ, மெக்ஸிகோ, பொலிவியா என்று அந்த நாடுகளின் கலாச்சாரமும், அரசியலும், அரசியல் போராட்டங்களும் நமக்குத் தெரிய வருகின்றன. 

ஆனால் - இந்த ஆனால் மிக முக்கியமானது - நம்முடைய அண்டை நாடான ஸ்ரீலங்காவில் நடந்த தமிழர் போராட்டம் உலகில் எங்கேயும் தெரியாமல் போனது.  சே குவேராவின் படம் இங்கே சீமானின் டி ஷர்ட்டில் இருக்கிறது.  திருமாவளவனின் கட்சிப் பதாகைகளிலும் பேச்சிலும் இருக்கிறது.  ஆனால் ஒரு தமிழனின் படம் - படத்தை விடுங்கள், பெயராவது லத்தீன் அமெரிக்கனை அடைந்திருக்கிறதா?  

சே குவேராவின் பெயர் நமக்குத் தெரிகிறது.  அவர் எழுதிய புத்தகங்கள், கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகின்றன.  ஆனால் தமிழின் விடுதலைப் போராளிகளின் பெயர் அங்கே போய்ச் சேராததற்குக் காரணம் என்ன? நம்முடைய தலைவர்களிடம் வரலாறு, மனித குல விடுதலை போன்றவை குறித்த தரிசனம் இல்லை.  இவர்களில் பெரும்பாலோர் வெறும் போர் வீரர்களாக மட்டுமே தேங்கி விட்டார்கள்.  இதற்குக் காரணம், இங்கே வாசிப்புப் பழக்கம் இல்லை. 

கூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோவின் நண்பர் கார்ஸியா மார்க்கேஸ்.  இங்கே கருணாநிதியின் நண்பர் வைரமுத்து.  வித்தியாசம் தெரிகிறதா?  லத்தீன் அமெரிக்க நாடுகள் வறுமையில் இருந்தாலும், குற்றங்கள் அதிகம் என்றாலும் பாப்லோ நெரூதா அங்கே ஒரு கவிதை வாசித்தால் அவரைக் கேட்க மூவாயிரம் பேர் திரண்டார்கள்.  இங்கே ஒரு சினிமா நடிகனுக்குத்தான் அவ்வளவு கூட்டம் கூடுகிறது.  லத்தீன் அமெரிக்காவின் வறுமை பொருளாதார வறுமை.  ஆனால் தமிழகத்தின் வறுமை கலாச்சார வறுமை. (பொருளாதார வறுமை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.)

ஆனால் பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு அடைந்துள்ள ஸ்காண்டிநேவியன் நாடுகளான நார்வே, ஸ்வீடன், டென்மார்க் போன்ற நாடுகளில் வாழ்ந்தால் என்னால் இலக்கியம் படைக்க முடியுமா என்று சந்தேகமாகவே உள்ளது.  உங்கள் கேள்வியைப் பற்றி இன்னமும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன். 

கேள்வி: இதை என் சொந்தப் பிரச்சினையாகக் கூட எடுத்துக் கொள்ளுங்கள். சினிமாவை ரசிக்கும் போது எளிதில் குவியும் கவனம் புத்தகம் படிக்கும்போது மட்டும் குவிய மறுப்பதன் உளவியல் என்ன? புத்தகங்கள் மீது சிறு வயதிலிருந்தே நமக்கு ஏற்படுத்தப்பட்ட செயற்கையான ஒவ்வாமையின் நீட்சியா இது? புனைவன், தர்மபுரி.

பதில்:   நீங்களே பதிலையும் சொல்லி விட்டீர்கள்.  எல்லாவற்றுக்கும் பழக்கம்தான் காரணம்.  எனக்கு புத்தகங்களை விட சினிமா பார்க்கும் போதுதான் கவனம் குவிய மறுக்கிறது.  அதிலும் தமிழ் சினிமா என்றால் கவனமே காணாமல் போய் விடுகிறது. 

கேள்வி: உங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ பகடி செய்து எழுதும்பதிவுகளை நீங்கள் படித்திருக்கிறீர்களா?  படித்திருப்பின் ஒரு எழுத்தாளராக/சகமனிதராக உங்கள் எதிர்வினை என்னவாக இருக்கும்?

கிருஷ்ண சந்தர், மதுரை.

பதில்: நாம் அதிகம் நேசிக்கும் ஒருவரைத்தான் நம்மால் பகடி செய்ய முடியும் என்பது என் கருத்து.  எனவே என்னைப் பகடி செய்யும் எதையும் என்னால் ரசிக்க முடிகிறது.  சமீபத்தில் ஜன்னல் இதழில் ஜெயமோகன் என்னைப் பகடி செய்து எழுதியிருந்ததை ரசித்தேன்.  ஆனால் பலரும் என் மீது தீவிரமான வெறுப்பும் துவேஷமும் கொண்டு என்னைத் திட்டுவதாக எண்ணித் தம்மையே ரத்தம் வழிய வழிய பிறாண்டிக் கொள்கிறார்கள். அவர்கள் மீது நான் பரிதாபம் கொள்கிறேன். (www.andhimazhai.com - ல் இடம் பெறும் சாரு பதில்கள் பகுதியிலிருந்து இங்கே கொஞ்சம். வாசகர்கள் q2charu@andhimazhai.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கேள்விகளை அனுப்பலாம்)

பிப்ரவரி, 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com