சவால்களே வாய்ப்புகள்!

உலகம் உன்னுடையது : Moneyதர்கள்
Published on

சீனாவின் தகவல் தொடர்புதுறை நிறுவனங்களில் உச்சத்திலிருப்பது டென்செண்ட் நிறுவனம். ஏறக்குறைய வாட்ஸ் அப் போன்று தகவல் பரிமாற பயன்படும் வீ சேட் செயலியை உருவாக்கிய நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் தலைவர் மா ஹுடெங்  உலக பணக்காரர்களில் 46 வது இடத்திலிருக்கிறார். சொத்து மதிப்பு ஏறக்குறைய 117600 கோடி ரூபாய்!

போனி மா என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் சீனாவின் ஹைனன் தீவில் 1971 ல் பிறந்தவர். 1993 ல் சென்செய்ன் பல்கலையில் சாப்ட்வேர் எஞ்சினியர் பட்டம் பெற்று சீனா மோஷன் டெலிகாம் டெவலப்மெண்ட் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். இண்டர் நெட்  பக்கங்களை உருவாக்குவதிலும் அதன் தொழில் நுட்பத்துறையிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்த மா தொழில் நுட்ப புரட்சிக்கு சீனா தயாராகிவிட்டதை உணர்ந்திருந்தார். அதிக காலம் தாமதிக்கவில்லை. நான்கு நண்பர்களுடன் இணைந்து 1998 ல் பங்கு சந்தையில் ஈட்டிய 72 லட்ச ரூபாய் முதலுடன் டென்செண்ட் நிறுவனத்தை தொடங்கிவிட்டார்.

ஆரம்ப காலகட்டங்களில் அனுபவமுள்ள ஆட்களின் குறைவினாலும், குறைவான முதலீட்டினாலும் மா பல வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது. இண்டர் நெட் பக்கங்களை வடிவமைப்பது, தொழில் நுட்ப வளர்ச்சி என்று எல்லா வேலைகளையும் செய்தார். 1999 ல் ஓரளவிற்கு நிலை பெற தொடங்கியவுடன் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான திட்டங்களை வகுக்கத் தொடங்கினார். முதன் முதலில் இன்ஸ்டண்ட் மெசேஜ் சர்வீஸை (IMS) இலவசமாகக் கொடுக்கத் தொடங்கியது டென்செண்ட். மா யூகித்தது சரியானது. இலவச சர்வீசை ஒரே ஆண்டில் 50 லட்சம் பேர் பயன்படுத்த தொடங்கினர். ஆனால் இந்த வெற்றியே டென்செண்ட்டிற்கு தலைவலியானது. இவ்வளவு அதிகமான பயனீட்டாளர்களை சமாளிக்குமளவிற்க்கு சர்வர்கள் அவர்களிடம் இல்லை. மா IMS ஐ விற்றுவிடலாம் என்று முடிவெடுத்தார். ஆனால் சரியான விலைக்கு வியாபாரமாகாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அந்த சமயத்தில் சில அமெரிக்க முதலீட்டாளர்கள் டென்செண்ட்டில் பணத்தை முதலீடு செய்ய முன்வர நிறுவனம் தலை நிமிரத் தொடங்கியது.

வருவாயை பெருக்க மதிப்பு கூட்டு சேவை பொருட்களை அறிமுகப்படுத்தினார் மா. 2004-ல் டென்செண்ட் 74 சதவீத பயனீட்டாளர்களைக் கொண்டு சீனாவின் முதல் பெரிய IMS சர்வீஸ் நிறுவனமானது. மா வை வியாபார உலகம் திரும்பிப் பார்க்க தொடங்கியது. டைம் பத்திரிகையின் அங்கீகாரமும் அதில் ஒன்று.

2004 ல் பங்குகளை வெளியிட்டபோது டென்செண்ட் சில மாதங்களிலேயே 60 சதவீதம் உயர்ந்து பங்குதாரர்களுக்கு அதிக லாபத்தைக் கொடுத்தது. ஆனால் மா இதில் திருப்திப்பட்டுவிடவில்லை. இதன் நோக்கமே பணப்பரிவர்த்தனையை அதிகரித்து இன்னும் அதிகமான இணைய சேவை பொருட்களை அதிகப்படுத்தி மைக்ரோசாப்ட், யாகூ போன்ற பன்னாட்டு போட்டியாளர்களை சமாளிக்க வேண்டும் என்றார். மின் வணிகம், இணைய விளையாட்டு செயலிகள் என்று டென்செண்டின் பயன்பாட்டாளர்களுக்கு சேவைகளை தொடர்ந்து அதிகப்படுத்திக் கொண்டே இருந்தார் மா.

மா ஒரு பேட்டியில், ‘ வியாபாரத்தில் உறுதியுடன் இருப்பது என்பது நம்முடைய எண்ணங்களில் உறுதியாக இருப்பது அல்ல. புது வாய்ப்புகள் வரும்போது அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். எங்களுக்கு வரும் பிரச்னைகளை வெற்றிக்கான வாய்ப்புக்களாகவே நாங்கள் பார்க்கிறோம்’ என்றிருக்கிறார்.

மாறும் உலகத்திற்கேற்ப எண்ணங்களையும் தொழில் உத்திகளையும் மாற்றிக்கொண்டு முயற்சித்தால் மா வின் பாதையில் இங்கும் வெற்றியடையலாம்.

***

பணமொழி

பணத்தோடு இருக்கும் மனிதன் எந்த வகையிலும் குறிக்கோளோடு இருக்கும் மனிதனுக்கு ஈடாக முடியாது

-  டாயில் பிரன்சன்.

மே, 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com