சர்க்கரையின் நிறம் சிவப்பு!

சர்க்கரையின் நிறம் சிவப்பு!
Published on

அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலையில் பேராசிரியையாக பணிபுரியும்  அவர் கடந்த ஆறு ஆண்டுகால நண்பர். அடிக்கடி காபி குடிக்கும் அவர் சர்க்கரையை சேர்த்துக்கொள்வதில்லை. ஐஸ்கிரீம், சாக்லெட் மற்றும் சர்க்கரையால் செய்யப்பட்ட எதையும் தொடுவதில்லை.

விநோதமான இந்த செய்கையை தொடர்ந்து கவனித்தபோது அவருக்கு நீரிழிவு நோய் இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது. ஒருமுறை உணவருந்தி முடித்தபின் ''டெசர்ட் சாப்பிடலாமா?'' என்றேன்.  ''நோ'' என்று உரக்கச் சொன்னார். அமைதியாக அவரை பார்க்க, ''சர்க்கரை எங்கள் இனத்தின் எதிரி'' என்றார்.

''ஆப்பிரிக்காவிலிருந்து எங்கள் மூதாதையர் உலகம் முழுக்க அடிமைகளாக கடத்தப்பட்டு விலங்குகளைவிட கேவலமாக நடத்தப்பட்டதற்கு சர்க்கரை தான் காரணம்,'' என்று தொடங்கி நீண்ட நேரம் பேசினார்.

1425 - இல் சிசிலியில் இருந்து மேடெய்ராவிற்கு ஹென்றி தி நேவிகேட்டர் கரும்பு நாற்றை கொண்டு சென்ற முதல் குறிப்பு அறியப்படுகிறது. கொலம்பஸ் 1493&இல் சென்ற இரண்டாவது கடல்பயணம், மேடெய்ராவிலிருந்து அட்லாண்டிக் கடலைக் கடந்தபோது தான் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு கரும்பு பயிர் பரவியது. பெரும்
செல்வந்தர்களுக்கும் ராஜ வம்சத்தினருக்குமான பயன்பாட்டு பொருளாக சர்க்கரை (Sugar) இருந்தது.

ஐரோப்பாவில் குறிப்பாக போர்ச்சுகல், ஸ்பெயின், பிரிட்டன், இத்தாலியை சார்ந்த வியாபாரிகள் உலகெங்கும் கரும்பு விளைச்சலையும், சர்க்கரையை பெருக்குவதற்கான உத்தி
களையும் வகுத்தனர்.

கரும்பை பயிரிடுவது, அறுவடை செய்வது,
சர்க்கரையாக்குவது எல்லாம் கடுமையான உடலுழைப்பை வேண்டும் செயலானதால் என்ன செய்வதென்று யோசித்த முதலாளிகளுக்கு, பின்தங்கிய நாடுகளின் மனிதர்கள் ஞாபகத்துக்கு வந்தது.

அப்போது, வெள்ளைத் தங்கம் என்றழைக்கப்பட்ட
சர்க்கரையின் மூலம் லாபம் சம்பாதிக்கும் ஆசை தான், உலகின் மிகப்பெரிய அடிமைகள் உலகம் ஏற்படக் காரணமாயிற்று.

உலகில் அதிகமான மனிதர்கள் அடிமைகளாக, தேசம் விட்டு தேசம் கடத்தப்பட்டது கரும்பு வளர்ப்பதற்காகவும், சர்க்கரை உற்பத்திக்காகவும்தான். ஆப்பிரிக்கர்கள் மேற்கிந்திய தீவுகள், பிரேசில், அமெரிக்காவிற்கும், இந்தியர் ஃபிஜி நாட்டிற்கும், ஹவாய் தீவிற்கு ஜப்பானியர்களும், ஆஸ்திரேலியாவிற்கு தென்கடல் தீவு மக்களும் அடிமைகளாக நாடு கடத்தப்பட்டுள்ளனர். சுமார் நானூறிலிருந்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த அடிமை கதைகள் இரத்தத்தால் எழுதப்பட்டவை.

1570 - வாக்கில் வருடத்திற்கு 2000 ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவிற்கு அடிமைகளாக  அழைத்து வரப்பட்டனர். இந்த எண்ணிக்கை 1600 - களின் ஆரம்பத்தில் 7000 - ஆக உயர்ந்து 1790 - களில் வருடத்திற்கு 80,000 ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவிற்கு கடத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

16 - ஆம் நூற்றாண்டில் இது மிகப்பெரிய நெருக்கடியை கடத்தப்பட்ட மனிதர்களுக்கு ஏற்படுத்தியது.  நியூயார்க்கின் ஜனத்தொகையில் 20 சதவீதத்திற்கு மேல் அடிமைகளாக அழைத்துவரப்பட்டவர்கள் இருந்தனர். எனவே எதிர்ப்புப் போராட்டம் வெடித்துவிடக்கூடாதென்று நியூயார்க் பொதுச்சபை, ''மூன்றுக்கும் மேற்பட்ட அடிமைகள் ஒன்றுகூடினால் அது சட்டவிரோதம்'' என்று 1730 - ஆம் ஆண்டு சட்டம் இயற்றியது.

எதிர்ப்பைத் தெரிவிக்க முயன்ற அடிமை மனிதர்களின் துன்பத்தை வார்த்தைகளில் அடக்க முடியாது. கரும்பு/சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்ட மனிதர்கள் (அடிமைகள்) தங்கள் முதுமையை சந்திக்க வாய்ப்பில்லாமல் மரணத்தை முத்தமிட்டனர்.

பலமுறை போராட்டங்கள் வெடித்து அடங்கியிருக்கின்றன. அடங்கமறுத்தவர்களின் பெயர்கள் மரணமடைந்தவர்களின் பட்டியலில் சேர்ந்தது. இந்த மனிதர்களின் வலியை, கதையை தெரிந்துகொள்ள ஆசைப்படுவர்கள் பின்வரும் புத்தகங்களை படிக்கலாம்.

1. The Sugar Masters: Planters and Slaves in Louisiana's Cane World-- --& Richard Follett 

2. Twelve Years a Slave-  Solomon Northup

3. Big Sugar: Seasons in the Cane Fields of Florida

- Alec Wilkinson

4. Sugar: The World Corrupted From Slavery to Obesity

- James Walvin

5. Soul by Soul: Life Inside the Antebellum Slave Market- Walter Johnson

அமெரிக்காவின் ''தி நியூயார்க் டைம்ஸ்'' பத்திரிகை தற்போது ''அமெரிக்க அடிமைத்தன தொடக்கத்தின் 400&ஆம் ஆண்டு'' என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள் வெளியிடத் தொடங்கியுள்ளது.

கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட தோழி தான் இந்த இருண்ட உலகத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். இவற்றை தெரிந்துகொண்டபின் மனதில் சர்க்கரையின் நிறம் வெள்ளை அல்ல சிவப்பு என்று பதிந்துவிட்டது.

டிசம்பர், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com