இளநிலை கால்நடை மருத்துவம் படித்த பின் நான் வேலைக்குச் சேர்ந்தது பல்கலைக்கழகம் சார்பாக நாமக்கல்லில் தொடங்கப்பட்டிருந்த கோழியின ஆராய்ச்சி மையம். அங்கே ஆய்வு உதவியாளராக அமர்த்தப்பட்டேன். அது 1980, மார்ச். ஓர் உண்மையைச் சொல்லவேண்டும். கல்லூரியில் படிக்கும்போது எனக்கு கோழியின அறிவியல் மீது பெரிதாக ஆர்வமில்லை. தேர்வுகளில் கோழி பற்றி கேள்விவந்தால் சாய்ஸில் விட்டுவிடுவேன். இப்படிப்பட்ட நிலையில் கோழிக்கென்றே தனிப்பட்ட ஆய்வு மையத்தில் வேலைக்குச் சேர்ந்தது எதிர்பாராத நிகழ்வு. இன்றுவரை சுமார் 42 ஆண்டுகள் கோழித் தொழிலிலேயே பயணிக்கிறேன்.
வேலைக்குச் சேர்ந்த மறுநாளே எனக்கு கடும் பரிசோதனை காத்திருந்தது. என்னையும் உடனிருந்த நண்பரையும் விட்டுவிட்டு எங்கள் தலைமைப் பேராசிரியர் ஏதோ வேலையாக வெளியே சென்றார். கோழிப்பண்ணையாளர்கள் கோழிகளை போஸ்ட்மார்ட்டம் செய்வதற்காகக் கொண்டு வருவார்கள். அவர்களிடம் பொருத்தமான ஆலோசனைகள் சொல்லி அனுப்புங்கள் என சொல்லிவிட்டுப்போனார்.
கோழிகளுக்குப் போஸ்ட்மார்ட்டமா என உதறல் எடுத்தது. யாரும் கொண்டு வரக்கூடாதே என எங்கள் ஊர் சாமிகளை எல்லாம் வேண்டிக்கொண்டிருந்தேன். எந்த சாமி இந்த சமயத்தில் உதவிக்கு வரும்? கோழிகளை எடுத்துக்கொண்டு பண்ணைக்காரர்கள் வந்து விட்டனர். சரி கொடுங்க பார்த்துட்டு சொல்றேன் என்று கோழிகளை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தேன். எப்படி அவற்றை போஸ்ட்மார்ட்டத்துக்காக அறுப்பது என்று கூடத் தெரியாது. என் நண்பரும் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர். அவரும் நீயே பார்த்துச் சொல்லு; எனக்கும் ஒன்றும் தெரியாது என கையை விரித்தார்.
அந்த மையத்தில் இருந்த ஓர் உதவியாளர் எங்கள் இருவரையும் பார்த்துவிட்டு அருகில் வந்தார். இப்படித்தான் சார் அறுப்பார் என்று எங்களுக்குக் கற்றுத்தந்தார். உள்ளுறுப்புகளை எல்லாம் பார்த்தாலும் இது எதனால் இறந்தது? என்ன நோய் என்று சொல்லத் தெரியவில்லை. எப்படி பண்ணையாளரை அனுப்பிவைப்பது என்று புரியவில்லை.
அவரை நைசாக அழைத்து பேச்சுக்கொடுத்தேன். அவர் இரு நாட்களுக்கு முன்பு வந்து எங்கள் பேராசிரியரைப் பார்த்து சென்றுள்ளார். பேராசிரியரும் ஒரு மருந்து சீட்டு எழுதிக்கொடுத்திருந்தார். அதை வாங்கிப் பார்த்தேன். அவர் எழுத்து ஒன்றுமே புரியவில்லை. கிர்ரென்று தலை சுற்றியது. சமாளித்து, ‘இதே மருந்துகளை வாங்கிக் கொடுங்கள். ஒன்றும் பெரிய பிரச்னை இல்லை. ரெண்டு நாள் கழித்து வாருங்கள்' என அனுப்பிவைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.
பேராசிரியர் திரும்பியதும் நடந்ததைக் கேட்டு சிரியோ சிரி என சிரித்து வைத்தார். பிறகு கோழிகளை எப்படி பி.எம். செய்வது என்று அவர் சொல்லித்தந்தார். அதுமட்டுமல்லாமல் தினமும் வீட்டுக்கு வந்ததும் புத்தகங்களை படித்துவிட்டு மறுநாள் போய் அறுத்துப் பார்ப்பேன். எல்லா நோய்ப் பாதிப்பும் ஒரே அறிகுறியுடன் இருப்பதுபோல் தோன்றியது. அப்புறம் பண்ணையாளர்கள் நிறைய கேள்விகள் கேட்க, அவற்றுக்குப் பதில் சொல்வதற்காகவே நிறைய படிக்க ஆரம்பித்தேன். தினமும் சில மணி நேரம் இது தொடர்பாக வாசித்தேன். பண்ணைகளுக்கு ஆய்வுக்குச் செல்லும்போது கற்றுக்கொண்டேன். அது நாமக்கல், சுற்றுவட்டாரத்தில் கோழிப்பண்ணைகள் வேகமாக உருவாக ஆரம்பித்திருந்த காலம். பெரும்பாலும் முட்டைக் கோழிகள். அப்பகுதியில் மொத்தமாகவே சில லட்சம் கோழிகள் இருந்திருக்கலாம். இன்றைக்கு முட்டைக்கோழிகள் மட்டுமே சுமார் ஐந்து கோடிக்குமேல் என்ற எண்ணிக்கையில் உள்ளன. நவீன தானியங்கி முறைகள் உள்ளன. இதெல்லாம் இப்பகுதி மக்களின் கடின உழைப்பால் உருவானவை.
இதன் பின்னர் வேலையில் தொடர்ந்துகொண்டே முதுநிலை கோழி அறிவியல் படிக்கும் வாய்ப்பு கிடைக்க அதையும் படித்து முடித்தேன். பிறகு கோழிகள் ஆய்வு மையத்திலேயே துணைப்பேராசிரியராகப் பணிபுரிந்தேன். அதன் பிறகு புதிய அனுபவங்களைப் பெறும் விருப்பத்தால் இந்த வேலையைத் துறந்து தனியார்துறைக்குச் சென்றுவிட்டேன்.
முதலில் எனக்கு ஒரு குஞ்சுபொரிப்பகப் பண்ணையில் உற்பத்தி மேலாளராக பணி கிடைத்தது. அங்கே போனபிறகுதான் மேலும் சில விஷயங்கள் புரிந்தன. நாம் முன்பு உற்பத்திக்குறைவு, தீவனம் சாப்பிடாமை போன்ற குறைகளுடன் வரும் பண்ணையாளர்கள் பலருக்கு மிக எளிதாக தீர்வு சொல்லிவிட்டோம். ஆனால் நாமே பொறுப்பெடுத்துச் செய்யும்போது எதுவும் சரியாக வரவில்லையே என்று தோன்றியது. என்னதான் முதுநிலை, பிஎச்டி எல்லாம் படித்தாலும் கோழிகளிடம் பருப்பு வேகாது. கோழியைப் புரிந்துகொண்டு அதற்கு என்ன தேவையோ அதைக் கொடுத்தால்தான் அது திருப்பி நமக்குத் தரும் என உணர்ந்தேன். இதை அடுத்து மேலும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.
1986 வாக்கில் நாமக்கல்லில் இருந்து பண்ணையாளர்களை நான் பணிபுரிந்த நிறுவனம் சார்பாக ஹைதராபாத் அழைத்துச் சென்று அங்குள்ள பண்ணைகளைக் காண்பிக்கும் ஏற்பாடு செய்தோம். அங்கு பிரமாண்டமான பண்ணைகள் உண்டு. அங்கு உயர்த்தப்பட்ட தளங்களில் கூண்டுகள் வைத்து கோழிகளை வளர்ப்பார்கள். அதுவரைக்கும் நாமக்கலில் இருந்து வந்த ஆழ்கூள முறையும் தரைமட்ட கூண்டு வளர்ப்பு முறையும் இந்த பயணத்துக்குப் பின்னரே மாறியது. அதே சமயம் பண்ணையாளர்கள் தாங்கள் வளர்க்கும் கோழிகளின் எண்ணிக்கையையும் உயர்த்தி சில ஆயிரங்களில் இருந்தவர்கள் ஐம்பதாயிரம் முதல் சில லட்சங்கள் வரை என்ற எண்ணிக்கையையும் தொட ஆரம்பித்தனர். இது கோழிப்பண்ணைத் தொழிலில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனவும் கூறலாம்.
இதெல்லாம் முட்டைக் கோழிகள். இதன் பின்னர்தான் பிராய்லர் கோழிகள் வளர்ச்சி ஏற்பட்டது. ஆயினும் அவை இப்போதிருப்பதுபோல் ஐந்து வாரங்களில் வேகமாக வளர்ப்பை அல்ல. இரண்டு கிலோ எடையைப் பிடிக்க 12 வாரங்கள் ஆகும். அப்போதிருந்த பிராய்லர் கோழியினங்களே ஆரம்ப கட்டத்தில்தான் இருந்தன. பிறகுதான் இண்டெக்ரேஷன் முறையில் பிராய்லர் கோழித்தொழில் பெரிய அளவில் வளர்ந்தது.
இதற்கான விதை பல்லடம் பகுதியில்தான் போடப்பட்டது. அங்கே தனியார் நிறுவனம் ஒன்று முட்டைக்கோழிகள் வளர்க்க பண்ணையாளர்களுக்கு குஞ்சுகள் வழங்கி இருந்தது. ஆனாலும் பல காரணங்களால் இந்த கடனை பண்ணையாளர்களிடம் இருந்து வசூலிக்க முடியவில்லை. எனவே அந்நிறுவனம் தான் வைத்திருந்த பிராய்லர் கோழிகளை சம்பந்தப் பட்ட பண்ணையாளர்களுக்கு அளித்து வளர்த்துக் கொடுத்து கடனை கழித்துக்கொள்ளமாறு கேட்டுக்கொண்டது. தீவனம், நிர்வாக ஆலோசனையை அவர்களே அளித்தனர். இப்படித்தான் இண்டெக்ரேஷன் என்ற முறை வளர்ச்சி அடைந்தது.
92&93 சமயத்தில் ஐபிடி என்ற நோய் பிரச்னை பெரிதாக உருவானது. அப்போது வழக்கத்தில் இருந்த தடுப்பூசிகளைக் கொண்டு நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கான தீர்வைக்காண கடுமையாக உழைத்தோம். பல பண்ணைகளில் மாதிரிகள் சேகரித்து ஆய்வுகள் நடத்தி தீர்வு கண்டோம்.
ஐபிடி நோய் வந்தபோது பண்ணையாளர்களிடம் தர்மசங்கடமான சூழல்களை சந்திக்கநேரிடும். இந்நோய்ப் பரவலுக்குக் காரணமாக தூய்மையான வழிமுறைகளை கடைபிடிக்காதது, அருகில் இருந்த பண்ணையிலிருந்து நோய்ப்பரவல் போன்றவற்றைக் காரணமாக சொல்வோம். ஒருமுறை ஒரு மலை அடிவாரத்தில் புதிதாக ஒருவர் முட்டைக்கோழி பண்ணை தொடக்கினார். ஐந்து கிமீ தொலைவில் எங்கும் வேறு கோழிப்பண்ணைகள் இல்லை. நாங்கள் கொடுத்த தடுப்பூசி அட்டவணையையே பின் தொடர்ந்தார். அதே ஆலோசனைகளைப் பின்பற்றினார். திடீரென போன் வந்தது. உடனடியாக பண்ணைக்கு வாருங்கள் கோழிகள் செத்துக்கொண்டிருக்கின்றன என்று அவர் அழைத்தார். நாமக்கல்லில் இருந்து சுமார் 30 கிமீ தள்ளி உள்ள அவர் இடத்துக்குச் சென்றோம். அங்கே பெரும் துயரம்! எட்டு, அல்லது பத்து குஞ்சுகள் மட்டுமே நிற்கின்றன. மீதி எல்லாம் செத்துவிட்டன. அந்த பண்ணையாளரின் முகத்தைப் பார்த்துப் பேசும் வலிமையே எங்களுக்கு இல்லை. புதிதான தனித்து இருக்கும் பண்ணையில் எப்படி நோய்ப்பரவல் ஏற்பட்டது என புரியவே இல்லை. பிறகு எங்கள் நிறுவனத்திடம் பேசி அவருக்கு இலவசமாகவே மீண்டும் குஞ்சுகளை வழங்கினோம்!
பண்ணையாளர்களே சில விஷயங்களை கண்டுபிடித்து நோய்ப்பரவலைத் தடுக்க கடைபிடிப்பது உண்டு. அவற்றில் பல நமது அறிவியலால் விளக்கவே முடியாது. சில சுவாரசியமாகவும் இருக்கும். ஐபிடி நோய் வந்தால் நன்றாக இருக்கும் குஞ்சுகளைத்தான் முதலில் தாக்கும். அதனால் குஞ்சுகளுக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு அரை வயிற்றுக்குத்தான் தீவனம் வழங்குவார்கள். ஆனால் ஐபிடி வரும்போது அவை சாகாது. பிழைத்து சமாளித்துக்கொள்ளும்! அப்புறம் ஜம்மென்று வளர்த்துவிடுவர்.
ஐபிடி நோய், பண்ணையில் ஒரு பக்கமாக தாக்க ஆரம்பிக்கும்போது, நோய் தாக்கிய குஞ்சுகளை நன்றாக இருக்கும் குஞ்சுகளுக்கு நடுவில் போட்டுவிடுவார்கள். இந்த குஞ்சுகள் எல்லாம் ஏற்கெனவே அரை தீவனத்தில் தான் இருக்கும். இந்த நோய் வேகமாகப் பரவி பெரிய அளவில் இழப்புகளை ஏற்படுத்தாமல் போய்விடும். இப்படியும் பல இடங்களில் நடந்துள்ளது.
பொள்ளாச்சியில் ப்ராய்லர் தாய்க்கோழிப் பண்ணை ஒன்றை எங்கள் நிறுவனம் சார்பாக லீசுக்கு எடுத்திருந்தோம். ஆறுவார குஞ்சுகள் அதில் இருந்தன. ஆழ்கூள முறையில் குஞ்சுகள் வளர்க்கப்பட்டன. வாரம் ஒருமுறை அங்கு செல்வது வழக்கம். அங்கு சென்று பார்த்துவிட்டு குஞ்சுகள் ஆரோக்கியமாக இருப்பதாக மேலாளரிடம் சொல்லிவிட்டு திரும்பிக் கொண்டிருக்கிறேன். வழியிலேயே செல்போனில் அழைப்பு. சார் திடீரென குஞ்சுகள் எல்லாம் விழுந்து விழுந்து செத்துக்கொண்டிருக்கின்றன என்றார் மேலாளர். இப்போதுதானே பார்த்துவிட்டு வந்தோம் என்ன ஆச்சு என்று உடனே இரவிலேயே சென்று பார்த்தோம். ஆய்வு செய்தால் காக்சிடியோசிஸ் என்ற நோய். உடனே சிகிச்சைக்கான மருந்துகளை கொடுத்தோம். என்ன கொடுத்தாலும் உடனே சரியாகாது. அந்த மருந்து இரண்டு நாள் கழித்த பின்னால் இருக்கும் நோய்க்கிருமிகளைத்தான் தாக்கும்! இரண்டு மூன்று நாட்கள் கழித்து ஒருவழியாக சில இழப்புகளுக்குப் பின் நோய் கட்டுப்பாட்டுக்கு வந்தது!
இன்னொரு முறை அதேபோல் காக்சிடியோசிஸ் தாக்குதல் வந்தது. அதற்கு சிகிச்சை செய்துள்ளனர். ஆனால் கேட்கவில்லை. கோழிகள் எல்லாம் தலையை சுற்றிச்சுற்றி விழுந்து இறக்கின்றன என பண்னை மேலாளர் கதறினார். காக்சிடியோசிஸ் வந்தால் இதுபோல் நரம்பு சம்பந்தப்பட்ட நோய் அறிகுறி இருக்காதே என உடனே போய்ப்பார்த்தோம். என்ன மருந்து கொடுக்கிறீர்கள் என்று கேட்டபோது சல்பா மருந்து ஒன்றைச் சொன்னார்கள். இது ஏன் கொடுக்கிறீர்கள்? வழக்கமாக கொடுக்கும் ஆம்ப்ரோலியம் கொடுத்தால் என்ன? என்றேன். இல்லிங்க சார், இந்த ஏரியாவில் இந்த மருந்துதான் கொடுக்கணும் சார் என்றார்கள். கொடுத்தவர்கள் டோஸ் கொஞ்சம் அதிகமாகக் கொடுத்துள்ளனர். அதனால் பிரச்னை ஏற்பட்டுள்ளது எனப் புரிந்தது. மேலும் போஸ்ட்மார்ட்டம் செய்து பார்த்ததில் இன்னொன்றும் புரிந்தது. இந்த மருந்தால் எதிர்ப்பு சக்தியும் குறைந்து ராணிக்கெட் நோயும் சேர்ந்து ஒன்றாக வந்துவிட்டது புரிந்தது. நல்லவேளையாக அதற்கான தடுப்பூசி(லசோட்டா) பண்ணையில் இருந்தது. உடனே இந்த தடுப்பூசியை கொடுத்தோம். காலையில் நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது! எல்லா பறவைகளும் சரியாகிவிட்டன. அதிலிருந்து அந்த குறிப்பிட்ட சல்பா மருந்து கொடுத்தால் கைவசம் ராணிகெட் தடுப்பூசி வைத்திருக்கவேண்டும், மறுநாளே அதையும் வழங்கவேண்டும் என்று கடைப்பிடிக்க ஆரம்பித்தோம்.
சத்துணவு முட்டையில் ஒருமுறை பிரச்னை ஏற்பட்டது. ஒரு பள்ளியில் கெட்டுப்போன முட்டைகொடுத்துவிட்டதாகவும் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. என்ன ஆனது என்று ஆய்வு செய்தோம். அந்த பள்ளியில் கொடுக்கப்பட்ட முட்டையை சேலத்தில் ஒரு குளிர் சாதன நிலையத்தில் சேமித்து வைத்து பிறகு எடுத்து வந்திருக்கிறார்கள். அங்கு போனோம். மீதி இருந்த முட்டைகளை எடுத்து முகர்ந்துபார்த்தால் ஒரு துர்நாற்றம் வீசியது. அதை அவித்துப் பார்த்தாலும் வாந்தி உருவாக்கும் மணம்தான் வரும். இது எப்படி ஏற்பட்டது என பல நூல்களை ஆய்வுக்கட்டுரைகளை ஆராய்ந்தோம். ஒரே ஒரு ஆய்வுக்கட்டுரை மட்டும் முட்டைகளை ஆப்பிள் போன்ற பழங்களுடன் சேர்த்து சேமித்து வைத்தால் அந்த மணத்தை முட்டைகளும் பெற்றுக்கொள்ளும் என்று கூறியது. மீண்டும் அந்த சேமிப்பு நிலையத்தை அடைந்து விசாரித்தோம். உண்மை தெரிந்தது. முட்டைகளுடன் ஆப்பிள் பழங்களையும் சேமித்து வைத்துள்ளனர். அந்த முட்டைகளை எடுத்துச் சென்று அவித்து கொடுத்தபோது மோசமான மணம் வீசி உள்ளது! இந்த பிரச்னை வந்தபோது பெரிதாக செய்தி வெளியிட்ட பத்திரிகைகள் காரணத்தைக் கண்டுபிடித்துச் சொன்னபோது கண்டுகொள்ளவில்லை என்பதுதான் பரிதாபம்!
சுமார் பத்து பதினைந்து ஆண்டுகள் இருக்கலாம். மைக்கோப்ளாஸ்மா எனும் நோய்த்தொற்றுக்கு ஒரு வித மருந்து தீவனத்துடன் கலந்து கொடுப்பார்கள். இது வழக்கமகச் செய்யப்படுவதுதான்! அப்போது நான் வேலை பார்த்த நிறுவனத்தில் சுமார் 20 லட்சம் தாய்க்கோழிகள் இருந்தன. பெரிய நிறுவனம். சித்தூர் பகுதியில் இருந்த ஒரு பண்ணைக்கு வழக்கம்போல அந்த குறிப்பிட்ட நோய்க்கான மருந்து கலந்த தீவனம் கொடுக்கப்பட்டது. மறுநாள் அந்த பண்ணையிலிருந்து கோழிகள் வரிசையாக செத்துவிடுகின்றன என்று தகவல் வந்தது. என்ன காரணம் என்று புரியவில்லை. அந்த தீவனம் கொடுத்த பின்னர்தான் இந்த சாவுகள். ஆனால் பக்கத்துப் பண்ணைகளில் சென்ற வாரம் இதே தீவனம் வழங்கப்பட்டபோதும் கோழிகளுக்கு ஒன்றும் ஆகவில்லை. இருப்பினும் சந்தேகத்தின் பேரில் இந்த தீவனம் அரைக்கப்பட்ட மில்லில் பரிசோதித்தோம். அப்போதுதான் தெரிந்தது ஒரு குறிப்பிட்ட வேறொரு மருந்து கலக்கப்பட்ட தீவனத்தை இதற்கு முன்பாக அரைத்துள்ளனர். அந்த மருந்துக்கும் இந்த மருந்துக்கும் ஒத்துவராது (ஐணஞிணிட்ணீச்tச்ஞடிடூடிtதூ). பொதுவாக அரவைமில்லை நன்றாகக் கழுவிவிட்டுத்தான் புதிய தீவனத்தை அரைப்பார்கள். இதைக் கவனிக்காமல் செய்ததால் கோழிகளுக்கு ஒத்துவராமல் போய் விட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு வழியாக அந்த பண்ணையில் சிகிச்சை கொடுத்து நஷ்டத்தைக் குறைத்தோம். தீவன ஆலைக்கும் முறையான வழிமுறைகளை உருவாக்கினோம்!
எப்போதெல்லாம் இந்த கோழித்தொழில் பெரும் பிரச்னைகள் சந்திக்கிறதோ, அதன் பின்னர் இது மிகுந்த வீரியத்துடன் மீண்டு வரும் என்பதுதான் எதார்த்தம்! இதுதான் நான் இந்த 40 ஆண்டுகளில் கண்ட அனுபவத்தின் சாரம்!
மார்ச், 2022